காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி இணைப்புச் செயலாளர் பிரதம ஆசிரியருக்கு பகிரங்க எச்சரிக்கை
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான செயலாளர் மாஹிர் ஹாஜியார் ‘வார உரைகல்‘ பிரதம ஆசிரியரை பொலிசாரின் முன்னிலையிலேயே பலமாக அச்சுறுத்தி பகிரங்கமாக எச்சரித்தார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.45 மணிக்கு இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றது. இதுபற்றிய விவரமாவது:
காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவராக மாஹிர் ஹாஜியார் இருந்து வந்தார். இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான இணைப்புச் செயலாளருமாவார்.
இந்த வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கணக்கறிக்கையில் காணப்பட்ட குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் குறித்தும், இவ்வமைப்பின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்காக காத்தான்குடி பிரதேச செயலாளரின் பணிப்புக்கமைய சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தரினால் இரண்டு தடவைகள் கூட்டப்பட்டிருந்த பொதுச்சபைக் கூட்டங்களிலும் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுடன் தலைவர் என்ற வகையில் இவர் நடந்து கொண்ட முறைகேடான அச்சுறுத்தும் விடயங்கள் குறித்தும் ‘வார உரைகல்’ தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
இறுதியாக கடந்த 01.01.2012ல் கூட்டப்பட்ட இரண்டாவது பொதுச்சபைக் கூட்டத்தில் தலைவர் என்ற வகையில் இவர் நடந்து கொண்ட விதம் குறித்து அவ்வமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கூட்டாகவும், தனியாகவும் எழுத்து மூலம் காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் தெரிவித்திருந்த முறையீடுகள் பற்றி கடந்த 13.01.2012ல் வெளிவந்த ‘வார உரைகல்’லின் 207வது பதிப்பில் ‘கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பில் தொடர்ந்து வரும் ஊழல், மோசடி, கள்ளக்கணக்கு, சண்டித்தனம்’ எனும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இச்செய்தியையடுத்து காத்தான்குடி பிரதேச செயலாளர் இந்த மாஹிர் ஹாஜியார் தலைமையிலான மேற்படி அமைப்பின் நிர்வாக சபையை இரத்துச் செய்ததுடன் புதிய இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரிகளையும் பணித்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி பத்திரிகைச் செய்தி தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகவும், இச்செய்தியால் மேற்படி வலது குறைந்த மாணவர்களுக்கு கிடைக்கும் பொதுமக்களின் உதவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிரான முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
அம்முறைப்பாடு தொடர்பில் இன்று 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு காத்தான்குடி பொலிசார் கேட்டிருந்தனர். அதற்கமைய இன்று மாலை அவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு மாஹிர் ஹாஜியாரும் சமூகமளித்திருந்தார்.
அதன்போது அங்கு கடமையிலிருந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தினால் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகளுக்கு ஆஜராகும் பொலிஸ் சார்ஜன்ட், மாஹிர் ஹாஜியாரிடம் ‘பத்திரிகையில் வெளிவரும் செய்திகள் தொடர்பாக வழக்குகளைப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாமென்றும், அவ்வாறான செய்திகளால் பாதிக்கப்படுபவர்கள் சிவில் நீதிமன்றத்தில் தனிப்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என ஆலோசனை கூறுமாறு தம்மை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கடந்த கடந்த 18ம் திகதி புதன்கிழமையன்று அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்து அதற்கமைய அவரின் முறைப்பாடு தொடர்பில் தம்மால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதென்றும், தனிப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் மூலம் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று மாஹிர் ஹாஜியாருக்கு அறிவுறுத்தினார்.
அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மாஹிர் ஹாஜியார், ‘தான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிச் செயலாளர் என்றும், தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவனை (பிரதம ஆசிரியரை) தனது ஆட்களை வைத்தே அடித்து இவனின் கையைக் காலை உடைத்துப் பாடம் படிப்பிக்க முடியும் என்றும், தான் இவனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவே பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளதாகவும் அந்த நேரத்தில் கடமையிலிருந்த சக பொலிஸ் உத்தியோகத்தர்கள், அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் குறித்த பொலிஸ் சார்ஜனிடம் மிகவும் சப்தமாகவே எச்சரிக்கும் தொனியில் கர்ஜித்தார்.
இதனால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் இவரது விவகாரத்தை நிலையத்தின் உதவிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கொண்டு சென்றார். அவரது மேலதிக அறிவுறுத்தலின் பின் இணக்கத்திற்கு வந்து தன்னால் செய்யப்பட்ட முறைப்பாட்டை சிவில் நீதிமன்றம் நடவடிக்கைக்குட்படுத்தி நிவாரணம் பெறுதுவதற்கு உடன்பட்டு பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப் புத்தகத்தில் கையொப்பமிட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.
இதன் பின் குறித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிச் செயலாளர் எனத் தன்னைப் பொலிஸ் நிலையத்தில் பிரகடனப்படுத்திய காத்தான்குடி 06ம் குறிச்சி தாருஸ்ஸலாம் வீதியில் வசிக்கும் மாஹிர் ஹாஜியார் என்பவர் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுப் பகுதியில் அன்றைய தினம் பிற்பகல் 04:30 மணிக்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகித்து அவரது அடியாட்களைக் கொண்டு என்னை அடிக்கவும், எனது கையைக் காலை உடைக்கவும் முடியும் என எச்சரித்துத் தெரிவித்த பகிரங்க அச்சுறுத்தல் தொடர்பாக தான் முறைப்பாடு ஒன்றைச் செய்ய வேண்டுமென குறித்த பொலிஸ் சார்ஜனிடம் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுமுழ்ழாஹ் கேட்டுக் கொண்டார்.
அதற்கவர், தற்போது சிறு குற்றப்பிரிவுக்கான பொறுப்பதிகாரி அவர்கள் கடமையில் இல்லையெனவும், நாளை (23.01.2012 திங்கட்கிழமை) காலை 09:00 மணிக்கு வந்து அதுதொடர்பாக அவரிடம் தெரிவித்து முறைப்பாடு செய்யுமாறும் கூறினார்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிய பிரதம ஆசிரியர், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரணசிங்ஹ அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிசார் மற்றும் பொதுமக்கள் முன்பாக இடம்பெற்ற இந்த பகிரங்க அச்சுறுத்தல் விடயம் குறித்து விவரித்ததுடன் இதுதொடர்பில் தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அதனைச் செவியேற்ற பொறுப்பதிகாரி அவர்கள், தான் விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்துள்ளதாகவும், நாளைக் காலையில் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டைச் செய்யுமாறும் பிரதம ஆசிரியருக்குத் தெரிவித்துள்ளார்.

No trackbacks yet.