பொய்யை எதிர்த்துக் கண்டித்தோர் கடைந்தெடுத்த மற்றுமொரு பெரும் பொய்!

-அப்துர் றஹ்மானின் சொந்தப்புத்தி பற்றிக் கேட்பவர்களிடம் அந்தப்புத்தி அனுவளவேனும் இருக்கிறதா?-

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற புனித ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்த பொதுமக்களிடம் ‘PMGG இன் கடத்தல் நாடகம்’ என்ற தலைப்பில் காத்தான்குடி மண்ணின் மானம் காக்கப் புறப்பட்டிருந்த முகவரி குறிப்பிடாத ஆர்ப்பாட்டக்காரர்களால் மொட்டைத் துண்டுப்பிரசுரமொன்று விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

வழமையாக இத்தகைய முகவரியற்ற துண்டுப் பிரசுரங்களை ‘வார உரைகல்’ கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாத போதிலும் ‘போலி முகத் திரையைக் கிழிக்க முன் வந்த’ இந்த உத்தம புத்திரர்கள், அண்மையில் நான் எனது சொந்தப்பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ள ஆட்டோ முச்சக்கர வண்டியை PMGGயினரே வாங்கித் தந்துள்ளதாக அப்பிரசுரத்தில் அபாண்டமொன்றைத் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர்களின் இப்பொய்யான குற்றச்சாட்டிற்கு நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

எனக்கு வெலிகந்தைப் பிரதேசத்தில் மஹாவலிதென்ன என்னும் மஹாவலிக் கிராமத்தில் அரை ஏக்கர் காணியும், இரண்டரை ஏக்கர் வயல் நிலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது இந்த ஊருக்கே தெரிந்த ஒரு விடயமாகும்.

அக்காணியையும், வயலையும் ஒருவரிடம் பராமரிக்குமாறு கையளித்து விட்டு அவர் தந்த 2,50,000 ரூபாவைக் கொண்டுதான் இப்போது நான் ஓடிக்கொண்டிருக்கின்ற ஆட்டோவை வாங்கியுள்ளேன்.

இவ்வாறு நான் காணியை விற்றதும், அப்பணத்தில் ஆட்டோவை வாங்கியதும் இப்போதும் மஹாவலித்தென்ன கிராமத்தில் தமது காணிகளில் குடியிருந்து வருகின்ற நமது காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களுக்கும், குறிப்பாக மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப் கே.எம். அலியார் என்பவருக்கும் தெரிந்த விடயமாகும்.

உண்மை இப்படியிருக்க, PMGGயின் பொய்யை அம்பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில பெயரில்லா முண்டங்களால் வெளியிடப்பட்ட அத்துண்டுப் பிரசுரத்தில் ‘PMGGயினர் எனக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்திருப்பதாக’ படு பொய்யான அவதூறொன்றை இட்டுக்கட்டித் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் கீழ்த்தரமான முறையில் என்னை ஒளித்திருந்து அடிக்கின்ற, பெயர் முகவரி குறிப்பிடத் துணிவில்லாமல் மொட்டைப் பிரசுரம் வெளியிடுகின்ற அயோக்கியர்கள் நமதூரில் நிறையவே இருக்கின்றார்கள்.

அவர்களின் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்களே இவர்கள் எத்தகைய பரிசுத்தமானவர்கள் என்பதை இக்காத்தான்குடிச் சமூகத்திற்கு நிரூபிக்கப் போதுமானதாகும்.

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நான் வாங்கிய ஆட்டோ முச்சக்கரவண்டியைப் பற்றி தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் இவ்வாறு அபாண்டமாகக் குற்றம் சுமத்தி மொட்டைப் பிரசுரம் வெளியிட்ட இந்த அயோக்கியத்தனமான  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்,

அஸாம் செய்த முறைப்பாடு தொடர்பில் ஒரு வாரத்திற்குள்ளாகவே விசாரித்தறிந்து உண்மையைக் கண்டறிந்து தம்மால் தெரிவிக்கப்பட்ட சந்தேகத்திற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட PMGGயினருக்கும் இடையிலுள்ள அறிவியல் ரீதியான வேறுபாட்டையும், வித்தியாசத்தையும் இதன்மூலமும் காத்தான்குடி மக்கள் நன்குணாந்து கொள்ள முடியும்.

அஸாமின் இக்கடத்தல் நாடகம் தொடர்பான விடயத்தில் PMGGயானது, அவரது முறைப்பாட்டினை மூலமாக வைத்து ஆரம்பத்தில் நகரசபைத் தரப்பினர் மீது ஒரு சந்தேகத்தைத்தான் தெரிவித்திருந்தது.

ஆனால் அவர்களின் சந்தேகத்தைப் பொய் எனத் திரித்துக் கூறியதுடன் உண்மையை ஊருக்கு அம்பலமாக்குகிறோம் என்று புறப்பட்ட இக்கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட அயோக்கியர்கள் என்மீது இப்படி ஒரு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தியுள்ளனர்.

இது இவர்களின் மனச்சாட்சியில்லாத மிருகத்தனத்தையும், அதிகார வெறிமிக்க காட்டு மிராண்டித்தனத்தையும் மேலும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

நகரசபைத் தரப்பினர் மீது முதலில் சந்தேகம் தெரிவித்திருந்த PMGG அமைப்பினர் பின்னர் உண்மை தெரிய வந்தவுடன் பகிரங்கமாகவே சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டது.

இவ்வாறுதான் நமது நகரசபையின் சர்வாதிகாரத் தவிசாளர் முன்னர் என்னைக் கொலை செய்வதாக தொலைபேசியில் மிரட்டியதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுத்தபோது மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வைத்து பகிரங்கமாக என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

மன்னிப்புக் கேட்பது என்பது மகா பாரதூரமான ஒர விடயமாகும்.

மனிதனிடம் இயற்கையாகக் குடிகொண்டுள்ள அன்னிய்யத் என்கிற நான் எனும் அகங்காரம், நப்ஸானிய்யத் என்கிற மனோ இச்சை, கிப்ரிய்யத் என்கிற பெருமைத் தனம் போன்றவற்றையெல்லாம் துச்சமாகக் கருதி நான் ஒரு இறையடிமை என்ற உணர்வுடன் வாழ்பவர்களாலேயே மன்னிப்புக் கேட்கவும் முடியும், மன்னிப்பை வழங்கவும் முடியும்.

மனிதர்களாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் மன்னிப்பு என்ற அருட்கொடையை அழ்ழாஹ்விடமிருந்தும், அடியார்களிடமிருந்தும் எந்தநாளும் எதிர்பார்த்தவர்களாகவே இவ்வுலகில் வாழ வேண்டும். ஏனெனில் நமது மரணம் எப்போது நிகழும் என்பது நம்மில் எவருக்கும் தெரியாமலிருப்பதால்.

இங்கே தனது தவறை உணர்ந்ததும் PMGG மன்னிப்புக் கேட்டது அழ்ழாஹ்வுக்குப் பயந்தே தவிர இவர்களின் அரசியல் அதிகாரத்திற்குப் பயந்தல்ல.

ஆனால் நகரசபையின் சர்வாதிகாத் தலைவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டது சட்டத்தின் தண்டனைக்குப் பயந்தே தவிர அவரது மனச்சாட்சிக்குப் பணிந்தல்ல.

அப்படி தன் மனச் சாட்சியின்படி என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் விரும்பியிருந்தால் அதை மண்முனைப்பற்று சமரசசபையிலேயே அவரால் கேட்டிருக்க முடியும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிச் செயலாளர் ஏ.எம். மாஹிர் ஹாஜியார் பொலிஸ் நிலையத்தில் வைத்தே இறுதியில் தனது தவறையுணர்ந்து மன்னிப்புக் கோரியது அவரது மனச்சாட்சியின் தூண்டுதலினால் ஆகும்.

இப்படி மன்னிப்புக் கேட்பதிலும், அதைக் கொடுப்பதிலும் பல படித்தரங்கள் உள்ளன.

நாம் ஒரு மனிதனுக்கு அநியாயம் செய்தால் அதனை அந்த அடியான் மன்னிக்கும் வரை தான் மன்னிக்க மாட்டேன் என்றும், அதேபோல் தனது கட்டளைகளுக்கு மாறாக நடக்கின்ற அடியார்களின் பாவங்களில் இணை வைத்தல் எனும் குப்ரிய்யத்தைத் தவிர ஏனையவற்றை தான் விரும்பியவர்களுக்கு மன்னிப்பதாகவும் அழ்ழாஹ் கூறியுள்ளான்.

இதிலிருந்து மன்னிப்பின் மகத்துவத்தையும், அதன் அவசியத்தையும் நாமெல்லாம் நன்குணர வேண்டும்.

நாம் பிறர் செய்கின்ற தவறுகளை பெருமனதுடன் மன்னித்தால்தான் நமது தவறுகளையும் அழ்ழாஹ் நம்மீது இரக்க மடைந்து மன்னிப்பான்.

நாம் நம்மிடத்தில் மன்னிப்புக் கோருபவர்களை மன்னிக்காமல் அவர்களைத் தண்டித்தே தீருவோம் என்கிற இறுமாப்புடன் வாழ்வோமாக இருந்தால் எமது இறைவனும் நமது பாவங்கள் தொடர்பில் மிக இறுக்கமாகவே இம்மையிலும் மறுமையிலும் நம்முடன் நடந்து கொள்வான்.

எனவே இந்த விடயத்தில் நகரசபைத் தரப்பும், பிரதியமைச்சர் தரப்பும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தரப்பும் அழ்ழாஹ்வை மறந்து, அவனது அறவுரைகளை மறந்து தமது வரட்டு கௌரவங்களைப் பேணி PMGGயை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் காழ்ப்புணர்வுடன் அவர்களின் அடிவருடிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குள்ள அரசியல் அதிகாரங்களைத் துஷ்பிரயோகமாகப் பிரயோகித்து தெருவெங்கும் கறுப்புக் கொடிகளைக் கட்டி அவதூறான துண்டுப்பிரசுரத்தை ஜும்ஆவுக்காக வந்திருந்த மக்கள் மத்தியில் வெளியிட்டு மோசமான வார்த்தைகளைக் கொண்ட சுலோக அட்டைகளை எழுதித் தூக்கிப் பிடித்துக் கொண்டு கொளுத்தும் வெயிலில் நின்று கூப்பாடு போட்டு தமது கடுப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

இதற்குள் என்னையும் புரியாணியில் தொட்டுக் கொள்ளும் சட்னிபோல் சற்றே தொட்டுக் கொண்டுள்ளனர்.

அவ்வளவுதான் அவர்கள் நடாத்தி முடித்த கடந்த வாரக் கறுப்புக் கொடிப் போராட்டத்தின் உச்ச பட்ச பலனாகும்.

இதன் மூலம் இவர்கள் மன்னிப்பின் வாசத்தைக் கூட நுகராத பழிவாங்கும் மனோநிலை கொண்ட துரியோதனர்கள் என்பதையே முழு உலகுக்கும் பறைசாற்றிக் கொண்டனர்.

சர்வாதிகாரத் தவிசாளர் சட்டத்தியின் பிடியில் இருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தில் வைத்து என்னிடம் மன்னிப்புக் கேட்டபோது நான் அந்த நீதித்தலத்தின் மகிமையை உணர்ந்து இவ்வாறானதொரு விசாரணை நாளில் அழ்ழாஹ்வின் மன்னிப்பை நானும் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடனேயே அவரை மன்னித்தேன்.

தன்னை விடவும் அற்பமான ஒரு அடியானிடம் இவ்வாறு இவ்வுலகில் தான் மன்னிப்பைப் பெற்றவன் என்கிற உணர்வையும், உயர் பண்பையும் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வின் மூலம் என்னால் அவரிடம் காண முடியாது போய்விட்டது.

இதன் மூலம் இவ்வூர் மக்கள் அனைவருக்கும் அவர் தந்தை போலிருந்து தன் மக்கள் செய்கின்ற தவறுகளை மன்னித்து அனைவரையும் அரவணைத்துக்கொண்டவராக தனதூர் நிர்வாகத்தைச் சிறப்புடன் நிர்வாகிக்க வேண்டிய தலைமைத்துவப் பண்பும், பொறுப்பும் அவருக்கு அறவே இல்லை என்கிற பேருண்மை மீண்டும் இந்த மண்ணில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போது நகரசபை உறுப்பினராக இருக்கின்ற ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா அவர்களின் மாமா மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எம். இப்றாஹீம் அவர்கள் நமது காத்தான்குடி பட்டின ஆட்சி மன்றத் தலைவராக இருந்த சமயத்தில் (1972 – 1974) நடந்ததொரு சம்பவம் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

அக்காலத்தில் சிறிய தள்ளு வண்டிகளில்தான் நமதூரிலுள்ள மலகூடக் கழிவுகளை அன்றாடம் அப்புறப்படுத்துவார்கள். அந்நேரத்தில் நான் 17 வயது விடலைப் பருவத்தவனாக இருந்தேன்.

எமது வீட்டு மலகூடத்தின் கழிவினை அகற்ற வந்த கேசவன் ஐயா என்ற தமிழ் நகரசுத்தித் தொழிலாளிக்கும் எனக்குமிடையில் வாய்த் தர்க்கமொன்று ஏற்பட அந்த ஆத்திரத்தில் நான் அவரை அடித்து விட்டேன்.

எனது தாயாரும், சகோதரிகளும் நான் அடித்தது பிழை என்றும் அவரிம் மன்னிப்புக் கேட்குமாறும் என்னை வலியுறுத்தினார்கள். நானும் அவரை அடித்தது தவறுதான் என்பதை சற்று நேரத்திற்குள்ளாக மானசீகமாகவே உணர்ந்து கொண்டேன்.

என்னால் பாதிக்கப்பட்ட பட்டின சபைப் பணியாளர் கேசவன் ஐயா அப்போதே பட்டின சபைக்குப் போய் முறைப்பாடு செய்திருந்தார்.

அவரது முறைப்பாட்டைக் கேட்ட சேர்மன் இப்றாஹீம் ஹாஜியார் என்னைப் பிடித்துக் கொண்டு வரும்படி அலுவலக அதிகாரி ஒருவரை அனுப்பியிருந்தார். அவருடன் நான் சென்றபோது சேர்மன் அவர்கள் எனது தவறை உணர்த்தி என்னை மன்னிப்புக் கேட்கும்படி அறிவுறுத்தினார்.

சேர்மன் அவர்கள் கூறியதற்கமைவாக சபைப் பணியாளர்கள் முன்னிலையில் அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டேன். அவரும் என்னைப் பெருமனது கொண்டு மன்னித்தார்.

இன்றும் கூட அவரது பிள்ளைகள் என்னைக் காணுகின்ற போதெல்லாம் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து என்னுடன் மிக மரியாதையடன் நடந்து கொள்கின்றனர். நானும் அவ்வாறே அவர்களுடன் கண்ணியமாக உறவாடி வருகின்றேன்.

இந்த கேசவன் ஐயாவுக்கு இருந்த மன்னிக்கும் மனப்பாங்கு கூட எமது முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் என்று சொல்லப்படும் பிரதியமைச்சர், தவிசாளர், கிழக்கு மாகாண உறுப்பினர், சம்மேளன முக்கியஸ்தர் அஷ்ஹாபியா பஷீர் ஹாஜியார் போன்றவர்களிடம் இன்று காணப்படாமலிருப்பது குறித்து நான் கவலையும், வெட்கமும் அடைகின்றேன்.

மாத்திரமல்ல, எனது இரத்தமும், வியர்வையும், பொருளாதாரமும் நிறையவே சிந்திய கடுமையும்,  கொடுமையும், பயங்கரவாத அச்சுறுத்தலும் நிறைந்த  சுமார் 17 வருட காலப் பராமரிப்பின் மூலம் அரசாங்கம் எனக்கு உரிமை வழங்கிய எனது சொந்தக் காணியை கள்ளத்தனமாக அன்றி அவ்வூர் மக்களும், பள்ளிவாசல் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வர்வாகங்களும் அறிய பகிரங்கமாகக் கையளித்து நான் வாங்கியுள்ள ஆட்டோவுக்கு PMGG இயக்கத்தவர்களை உரிமையாளர்களாக்கிய இவர்களின் மோடத் தனமான அபாண்டமான குற்றச்சாட்டையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவர்கள் தூக்கிப்பிடித்திருந்த சுலோக அட்டைகளில் ‘பூவிக்கு பூஜை செய்யும் றகுமானுக்கு சொந்தப் புத்தியே கிடையாதா?’ என்ற வசனம் கொண்ட ஒரு அட்டையைத் தூக்கிப் பிடித்திருந்ததையும் கண்ணுற்றேன்.

றகுமானுக்கு சொந்தப்புத்தி உள்ளதா? இல்லையா? என்பதற்கு முன்னர் இவ்வாறு அடடை தூக்கி ஆர்ப்பாட்டம் செய்த இவர்களுக்கு அந்தப் புத்தி அணுவளவேனும் இருக்கிறதா? என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.

அஸாம் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில் PMGG தெரிவித்திருந்த சந்தேகம் பொய் என்பதை வலியுறுத்த இத்தனை ஆராவாரம் செய்த இந்தக் கறுப்புக்கொடிக் கும்பல், இதற்கு முன்னர் அதே PMGGயினர் நகரசபையின் சர்வாதிகாரத் தவிசாளர் மீதும், பிரதியமைச்சர் மீதும், அவர்களின் சில்லறை ஆதரவாளர்கள் மீதும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் உண்மையானவையே என ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் இதனை மாத்திரம் பெரிதாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நாங்கள் உண்மையாளர்கள் என நிலை நிறுத்த முன்வந்தனரா? என வினவ விரும்புகின்றேன்.

இந்த மறுதலையான உண்மையைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத சொந்தப் புத்தியற்றவர்களாகத்தான் அன்றைய கொளுத்தும் வெயிலில் கூடி நின்று தொண்டை காயக் கூப்பாடு போட்டுக்கொண்டு சுலோக அட்டைகளையும் தூக்கிப்பிடித்து நின்றோம் என்பதையாவது புரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் இவர்களுக்கு உண்டா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இந்கரத்தின் தவிசாளராக இருந்த அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை அவர்கள் தேசிய பாதுகாப்பு நிதியாக பல இலட்சம் ரூபாவை நமது மக்களிடம் இருந்து அறவிட்டுக் கொண்டு அதனை முழுவதுமாக ஏப்பம் விட்டார் என்று ‘வார உரைகல்’ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியபோது இந்த அட்டை தூக்கிகளுக்கெல்லாம் நமதூரின் தன்மானம் பறக்கிறது என்ற ஞானம் பிறக்கவில்லையா?

ஊரின் தவிசாளர் சட்டவிரோதமாக எருமை மாடுகளை அறுத்து சஹர் சாப்பாடு போடுகிறார் என்று ‘வார உரைகல்’ கூறியபோது இவர்களுக்கெல்லாம் ஊரின் மானம் உயரப் பறந்தது தெரியவில்லையா?

ஏழைகளின் செலிங்கோ சேமிப்புப் பணங்களை பிரதிமைச்சரின் மனைவி கடனாக எடுத்துக் கொண்டு நம்மவர்களை ஓட்டாண்டிகளாக்கிய போது ஊரின் மானம் பற்றிச் சிந்திக்க இந்தச் சொந்தப் புத்தியாளர்களுக்கு மூளை வேலை செய்யவில்லையா?

சுனாமிக் காணிக் கொள்வனவு விடயத்தில் தெரிவிக்கப்பட்ட சந்தேகங்கள் தொடர்பாக சம்மேளனம் செய்த விசாரணை அறிக்கையை வெளியிடச் செய்து உண்மையில் நடந்ததைக் கண்டறிவதற்கும், ஊரின் மானத்தைக் காப்பாற்றுவதற்கும் இந்தச் சொந்தப்புத்திக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட மன்னர்களுக்கு இன்றுவரை எண்ணம் பிறக்கவில்லையா?

கள்ளக் கையெழுத்துப் போட்டு வெள்ள நிவாரணம் பெற முற்பட்ட பள்ளித் தலைவரைப்பற்றி பக்கம் பக்கமாக ‘வார உரைகல்’ எழுதிய வேளைகளில் எல்லாம் இச்சுயபுத்திக் கோட்பாளர்கள் எங்கே காணும் பதுங்கியிருந்தார்கள்?

கலாச்சார மண்டபத்தில் நமது இஸ்லாத்திற்கு எதிரான அனாச்சாரங்கள் எல்லாம் உலமாக்களின் மேற்பார்வையிலேயே அரங்கேறுகிறது என்று ‘வார உரைகல்’ ஒப்பாரி வைத்தபோது, இஸ்லாமிய நகரத்தினதும், மக்களினதும் மானம் காக்கப் புறப்பட்ட இக்கறுப்புக்கொடி கதறல்காரார்கள் எங்கே ஒழித்திருந்தார்கள்?

காத்தான்குடி உலமாக்களுக்கு முதுகெலும்பில்லை என்று சம்மேளனத் தலைவர் கூறியபோது அது இந்தச் சொந்தப்புத்தித் தன்மானதாரிகளுக்கு கேவலமாகத் தெரியவில்லையா?

சம்மேளனப் பொதுப் பணத்தை மோசடி செய்த இப்றாஹீம் ஹாஜியாருக்கே அதைத் திருப்பிக் கொடுக்குமாறு தன்னிச்சையாக ஆர்டர் போட்ட சட்டத்தரணியைப் பார்த்து ‘எப்படி அப்படி உங்களால் கொடுக்கச் சொல்ல முடியும்? அது என்ன உங்களின் பொக்கட் பணமா? அல்லது இந்த ஊரின் பொதுப்பணமா?’ என்று கேட்பதற்கு இச்சொந்தப்புத்திக்காரர்களுக்கு ஏன் இன்று வரை துணிவு வராமல் இருக்கிறது?

கூவாக்காட்டு வீடமைப்புத் திட்டதிற்காக காங்கேயனோடைப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்த காணியை சட்டவிரோதமாக ஈரான் நாட்டுத் தூதுவருக்கு எழுதிக் கொடுத்ததை ‘வார உரைகல்’ ஆதாரபூர்வமாக அம்பலப் படுத்தியபோது ஊரின் மானம் காக்க முன்வராமல் யாரைப் பூஜித்துக் கொண்டு இச்சொந்தப் புத்திக் கும்பல் பதுங்கு குழியில் இருந்தது?

மட்டக்களப்புக்கு வருகைதந்த ஸ்ரீஸ்ரீ அவர்களை நமது மண்ணின் மெகா மைந்தன் சாஷ்டாங்கம் செய்து சந்தித்து அவரின் அருளாசியை வேண்டி  அன்றைய பஜனை மஜ்லிஸில் மஞ்சளங்கி போர்த்தியவராக அமர்ந்திருந்ததை ‘வார உரைகல்’ அம்பலப்படுத்தியபோது இஸ்லாமிய நகரின் தனித்துவத் தன்மானம் காக்கப் புறப்பட்ட இந்த சுயபுத்தியாளர்கள் அவரவர் வீடுகளில் யாரைப் பூஜித்துக் கொண்டு மௌன விரதத்தில் இருந்தார்கள்?

என்னால் இன்னும் இவர்களைப் பார்த்து ஏராளமாகக் கேட்க முடியும்.

எமதூரின் இன்றையத் தலைவர்களின் வரலாறுகள் தொடர்ந்து வாசிக்க இனிக்காது என்பதால் இத்தோடு விட்டேன். இன்னும் இவர்கள் தொட்டால் தொடர்கதையாகவே நியாயங்களை விவரிக்க வேண்டி வரும்.

கறுப்புக் கொடி கட்டவும், கல்லெறி நடாத்தவும் இக்காத்தான்குடியில் இன்று வரையும் அசைக்க முடியாத வல்லுநர்களாக கடந்த 25 ஆண்டுகளாகவே நிலைத்திருப்பவர்கள் யார் என்பது எமது மக்களுக்குத் தெரியும்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமா பண்டார நாயக்கா அம்மையாரைக்கூட ஹெலிகொப்டரில் இருந்து கீழே இறங்க வர முடியாதளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதை இந்த மண்ணில் தொடக்கி வைத்த ஆரம்பிப்பாளர்கள் யார்? என்பதும் யாவருக்கும் புரியும்.

இவர்கள்தான் கடந்த வாரம் அத்தனை நேர்த்தியாக சகல மின்கம்பங்களிலும் கறுப்புக் கொடிகளைக் கட்டி ஊருக்கும், அயலவர்களுக்கும் புதினம் காட்டியிருந்தார்களே தவிர பொதுமக்கள் எவரும் PMGGயினால் தெரிவிக்கப்பட்ட சந்தேகம் மீது ஆவேசம் கொண்டு ஒரு கறுப்புப் புள்ளியைத்தானும் இந்த ஊரில் இட்டதாக என்னால் அறிய முடியவில்லை.

அவ்வாறு இது பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து மேற்கொண்ட கண்டனப் பேரணிதான் என்றால் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தியாகச் செறிந்து வாழும் இவ்வூரில் ஆயிரம் பேராவது முன்னே வந்து நின்று தங்களின் முகத்தையும், குரலையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டாமா?

ஏனைய ஆளுந்தரப்பு, அரச தரப்பு நகரசபை உறுப்பினர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

தவிசாளர் கதிரைக்கு வழிவகுத்து இன்றைய சர்வாதிகாரத் தலைவரை ஆட்சியில் அமர்த்திய அப்துர் றவூப் மௌலவி தரப்பு ஆதரவாளர்கள் எங்கே சென்றார்கள்?

சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் நூற்றுக்கணக்காண அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரும் எங்கேதான் ஓடி மறைந்தார்கள்?

குறைந்தபட்சம் அன்றைய தினம் விநியோகிக்கப்பட்ட மேற்படி பிரசுரத்தில் கண்டனவாதிகள் சார்பாக பொலீசாரிடம் மகஜர் கையளிக்கவென துணிச்சலுடன் முன்வந்த சம்மேளன முக்கியஸ்தர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். பஷீர் (அஷ்ஹாபியா) அவர்களாவது துணிந்து  தன் பெயரைக் குறிப்பிட்டிருக்கக் கூடாதா?

இவையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்!

இந்தக் கடத்தல் நாடகம் குறித்து ஆரம்பத்திலிருந்தே எந்தச் செய்திகளையும் வெளியிட்டிராத ‘ஊர்த் தலைவர்களின் புகழ்மட்டும் பாடும் ஊதுகுழல்’ இணையதளமான காத்தான்குடி இன்போ இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்புப் பிரசு ரத்தை மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது ஏன்? எவ்வளவு தொகையை வாங்கிக் கொண்டு இப்பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டார்கள்?

நான் ‘வார உரைகல்’லில் செய்தி வெளியிட்டால் PMGGயிடம் காசு வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதாகக் குற்றம் சுமத்தும் இந்த ஆளுநுதரப்பின் புகழ்பாடும் ஊதுகுழல் இணையதளம், PMGG நடாத்திய பத்திரிகையாளர் மாநாடுகளையும், அஸாம் கடத்தப்பட்ட செய்தியையும் முற்றாக இருட்டடிப்புச் செய்து வந்த நிலையில் எப்படித் திடீரென இப்பிரசுரத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

பூவியின் காட்டில் PMGGயின் மழை பொழிவதாகக் ஒப்பாரி வைக்கும் அவர்கள், அவர்களின் காட்டில் ஆளுந்தரப்பினரின் பெருமழை பொழிவதை இப்போதாவது ஏற்றுக் கொள்வார்களா?

கடந்த வெள்ளிக்கிழமை நான் தாக்கப்பட்டதாகவும், எனது இரண்டு பற்கள் உடைந்ததாகவும் முந்திக் கொண்டு பொய்ச் செய்தியை வெளியிட்டது ஏன்?

ஊடக தர்மவான்களான அவ்விணையதளத்தினரின் இந்தப் பக்கச்சார்புச் செய்திச் சேவை குறித்து நான் கேள்வி எழுப்பி விடக் கூடாது என்பதற்காகவா? அல்லது அப்படியொரு செய்தியை அவசரமாக வெளியிட்டு எனக்கெதிரான காழ்ப்புணர்ச்சியான விமர்சனங்களை வெளியிட்டு ஆறுதலடையும் நோக்கிலா?
 
என்னை PMGGயின் ஊதுகுழல் என்று குற்றஞ்சாட்டும் காத்தான்குடி இன்போ வாசகர்களே..

இனியாவது உங்களின் இன்போ இந்த ஊர்த் தலைவர்களின் புகழ் மட்டும் பக்கவாத்தியம் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

ஆக, அஸாமின் இக்கடத்தல் நாடக விடயத்தில் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராகவும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் PMGG பொய் சொல்லி ஊருலகத்தைக் குழப்பி விட்டது என்று சொல்ல வந்த இந்தக் கறுப்பு மனிதர்கள், இவ்விடயத்தில் அறவே சம்பந்தப்படாத ‘வார உரைகல்’ ஆசிரியரான என்னையும் சம்பந்தப்படுத்தி கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை.

-Vaarauraikal  Vol: 212  Date: 17.02.2012-

    • shifna
    • பெப்ரவரி 22nd, 2012

    very nice questions which you asked well done

    • anfas
    • பெப்ரவரி 23rd, 2012

    oru poykku oru pally kalattuvathaaha irunthaal karuppuk kodik kaararhalukku oru pallum irukkaathu
    தமழில்: ஒரு பொய்க்கு ஒரு பலலைக் கழட்டுவதாக இருந்தால் கறுப்புக் கொடிக்காரர்களுக்கு ஒரு பல்லும் இருக்காது

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.