வரலாற்றிலிருந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாடம் படிக்க வேண்டும்!

-கேர்ணல் கதாபி – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பற்றி ஒரு கல்லூரி மாணவன் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரை-

சமகாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வரலாறு என்பது ஒரு கசப்பான பாடமாக இருப் பினும் அதனை அரசு ஒரு கட்டாய பாடமாக ஆக்கியுள்ளதற்கு மிக முக்கியமான அடிப்படை நோக்கம் ஒன்றிருக்கின்றது.

கடந்த கால வரலாறுகளை அறிவதன் மூலமே தனது நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான சிறந்த படிப்பினைகளைப் பெற்று தன்னை நன்கு வளப்படுத்திக் கொள்ள வேண்டு மென்பதே அந்நோக்கமாகும்.

எனினும், கடந்த கால வரலாறுகளை ஒருபுறம் வைத்து விட்டுப் பார்த்தாலும் சமகால நிகழ்வு களில் இருந்தும் யார்யாரெல்லாம் படிப்பினைகள் பெறவேண்டியவர்களாக இருக்கின்றனரோ அவர்களும்கூட இந்நிகழ்வுகள் பற்றி கிஞ்சிற்றும் சிந்தியாது செயற்பட்டு வருவது வளரும் தலைமுறையினரான எமக்கு பெரும் கவலையைத்தான் அளிக்கின்றது.

அண்மையில் எனக்கு ஒரு நல்ல கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.

அதில் லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாபியையும், அவருடைய ஆட்சி பற்றியும், இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது கலீபாவான ஹழ்றத் உமர் இப்னு கத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களையும், அவரது ஆட்சி பற்றியும் ஒப்பீடு செய்து எழுதப்பட்டிருந்தது.

ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருந்த அவர்களில் கலீபா உமர் இப்னு கத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களைப் போலவே ஒவ்வொரு ஆட்சியாளரும் ஆட்சி செய்ய வேண்டும் என கட்டுரையாளர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த இடத்தில்தான் லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாபியின் வாழ்க்கையும், ஆட்சியும் நமதூரிலுள்ள யாருடனாவது ஒத்துப் போகின்றதா? என்று நான் சிந்தித்துப் பார்த்தபோது பின்வருவனவெல்லாம் என் ஆழ்மனதிலிருந்து அலையென எழுந்து வந்தது.

அவற்றை ‘வார உரைகல்’ மூலமாக வாசகர் மன்றத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்குமாகச் சமர்ப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இதனை வரையத் துணிந்தேன்.

ஆபிரிக்க மக்களின் விடுதலைத் தாகம் என்பது இன்று நேற்று உருவான ஒன்றல்ல.

காலனித்துவ ஆட்சியில் அம்மக்கள் வாழ்ந்தபோதே அவர்கள் சுதந்திரமான ஒரு வாழ்க்கைக்காகக் கனவு கண்டார்கள். இந்தச் சுதந்திரக் கனவுப் பக்கங்களில் உலக வரலாறு எழுதி வைத்திருக்கின்ற ஒரு பெரும் போராளிதான் உமர் முக்தார் எனப்படுகின்ற உருவத்தில் நம்மைப் போன்ற ஒரு மனிதனாகும்.

இத்தாலியப் படைகளுக்கு எண்ணை வளங்கொண்ட இஸ்லாமிய நாடான லிபியாவை ஒருபோதும் தாரை வார்க்க முடியாதென தனது இறுதி மூச்சு வரைக்கும் கொள்கைப்பற்றுடன் போராடிய ஒரு சுதந்திரப் போராளி.

அவரது சமூக விடுதலைப் போராட்ட வாழ்க்கையை எந்தவொரு முஸ்லிமாலும் இலகுவில் மறந்து விட முடியாது. அந்தவகையில் ஆபிரிக்காவின் சுதந்திரத்திற்கான அடிக்கற்களில் ஒன்று லிபியாவில்தான் இடப்பட்டது எனலாம்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில், எமது முஸ்லிம்கள் அரசியல் முகவரியற்றவர்களாக இருந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரவு வரலாற்றில் அலாதியானது.

‘முஸ்லிம்கள் எங்களிடம் அபிவிருத்திகளைப் பற்றி எதுவுமே கேட்கக் கூடாது. நாம் அதற்காகப் புறப்பட்டவர்களும் அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக மட்டுமே போராடும்’ என்று அதனுடைய ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அன்று இந்த மக்களுக்குச் சொன்ன சுபச் செய்தியை இன்று நான் இந்த இடத்தில் மீட்டிப் பார்க்கின்றேன்.

இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலில் உருவாக்கப்பட்டதும் நமது இக்காத்தான்குடி மண்ணில்தான் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

லிபிய வரலாற்றில் அந்நாட்டு மக்கள் வறுமையிலும், கொடுங்கோலர்களின் அடக்குமுறை ஆட்சியிலுமாக தினந்தினம் பெரும் துன்பப்பட்டு இறந்து கொண்டிருந்தபோது கடாபி என்றொரு வீர இராணுவ அதிகாரி, ஒரு உண்மை முஸ்லிம் இளைஞன் இரத்தம் சிந்தாப் புரட்சியொன்றின் மூலம் அந்நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி அம்மக்களின் உள்ளத்தில் ஒழிந் தும், உறைந்தும் கிடந்த விடுதலை வேட்கையைத் தீர்த்து வைத்தபோது முழு லிபிய சமூகமுமே அவனை தமது தலைகளில் தூக்கி வைத்துக் கொண்டு பெருமிதமடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அதிகாரங்களுக்கு அஞ்சிப்பயந்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும், அரசியல் முகவரியைப் பெறுவதற்காகவும் வீறுகொண்டெழுந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பாதையில் எவருமே கால் வைக்கத் திராணி அற்றிருந்த காலகட்டத்தில் ஹிஸ்புல்லா என்ற வீர இளைஞன், சமூக சேவகன் தன்னுயிரையும் துச்சமென மதித்து காத்தான்குடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த அரசியல் களத்தில் குதித்தபோது முழுக் காத்தான்குடிச் சமூகமும் அந்த இளைஞனை தமது தலைமேல் தூக்கி வைத்துப் போற்றிப் பேராதரவும் வழங்கியது.

லிபியாவில் புரட்சி ஏற்பட்டு உலகையே வியக்க வைத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் கதாபியின் ஆட்சி நன்றாகத்தான் இருந்தது.

மக்களின் வளமான வாழ்வுக்கு அவன் வித்திட்டு இருந்தான். அச்சமற்ற அடிமைத்தனமற்ற ஒரு நல்லாட்சி அம்மண்ணில் கோலோச்சியதாக வரலாறு கூறுகின்றது.

1989களில் முதல் தடவையாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் எமது மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லா காலடி பதித்த வேளையில் நமதூர் அடைந்த பெருமையையும், நமது மக்களின் மன மகிழ்வையும் அழகு தமிழ் மொழியில் இங்கு வர்ணித்துக் கூறிட வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது.

தான் பிறந்த மண்ணுக்கு மாத்திரமன்றி இம் மாவட்டம் முழுவதற்கும் அவர் இன மத பாகு பாடின்றி சேவைகளை வழங்கியதுடன் நமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக தலைவர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்நாட்டின் உச்ச அவையில் ஓங்கியொலிக்கும் குரலாகவும் அவர் திகழ்ந்தார்.

லிபியாவைப் போலவே ஆரம்பத்தில் அவரது அரசியலும், ஆட்சியதிகாரமும் நன்றாகத்தான் நமது மண்ணிலும் இருந்ததாக நான் படித்துப் பார்க்கின்ற வரலாறுகள் தெரிவிக்கின்றன.

காலப்போக்கில் தனக்கெதிராகக் குற்றஞ் சுமத்திய இளைஞர்களின் கருத்துக்களை ஜீரணித்து ஏற்றுக் கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரவும், இளைஞர் சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளியாமலும் சர்வாதிகாரத் தோரணையில் அவ்வாறான இளைஞர் சமூகத்தை கதறக் கதறக் கேர்ணல் கதாபி என்று கொண்றொழிக்கத் தொடங்கினாரோ அன்று தொடங்கியது லிபிய மக்களின் எதிர்ப்பு.  தம் ஏக தலைவன் மீதான பெரும் வெறுப்பு.

இந்த எதிர்ப்புணர்வும் வெறுப்புணர்வும் தங்களின் தலைகளில் தூக்கி வைத்துப் போற்றிப் புகழ்ந்த அந்தத் தலைவனை தமது காலடியில் போட்டு உதைத்துத் துவைத்து ஒதுக்கித் தள்ளும் வரைக்கும் அம்மக்களுக்குத் தணியவே இல்லை.

இதுபோலவே, என்று தனது பதவிக்காக தலைவரின் முன்னிலையிலும், ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையிலுமாக அழ்ழாஹ்வின் இல்லத்தில் வைத்து தான் செய்த சுழற்சிமுறைப் பிரதிநிதித்து ஒப்பந்தத்தை – சத்தியத்தை ஹிஸ்புல்லா துரோகத்தனமாக மீறினாரோ,

தாங்கள் நோன்பு நோற்று இரத்தம் சிந்தி தியாகங்கள் பல புரிந்து தமது சமூக அரசியல் முகவரிக்காகத் தோற்றுவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நீதிமன்றத்திற்கு வழக்காட இழுத்தாரோ,

தனது அரசியல் அதிகார இருப்புக்காக பிரதேச வாதப் புற்று நோயை இம்மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விதைத்தாரோ அன்று ஏற்பட்ட அவர் மீதான இம்மக்களின் கோபக்கனல் இருபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டியும் இன்றும் தகித்துக் கொண்டு வளர்ந்து வருகின்றதேயன்றி அது சற்றும் தணிந்ததாகத் தெரியவில்லை.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மிக்க கௌரமான பார்வையைக் கொண்டிருந்த இக்காத்தான்குடியின் வரலாற்றில் ஹிஸ்புல்லா உருவாக்கியுள்ள இந்த அவமானச் சின்னமான வாக்குறுதியை மீறிய அரசியல் அதிகாரமானது 25 ஆண்டுகளைத் தாண்டி இன்னமும் அழிக்கப்படாமல் இருப்பது இந்த மக்களின் மனதில் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது.

இந்த உண்மையை அரும்கூட இன்று வரையிலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மெது மெதுவாகத் தொடங்கிய கேர்ணல் கதாபி மீதான எதிர்ப்பலைகள், அவன் புனித தீனுல் இஸ்லாத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த போது சுனாமிப் பேரலைகளாக மாறின.

புனித அல்குர்ஆனை மறுதலித்து தனது ‘பசுமைப் புத்தகத்தை’ பின்பற்றுமாறு கட்டளையிட்டான். நோன்பைப் பரிகசித்தான். ஹஜ்ஜை ஏளனம் செய்தான். தனது சர்வாதிகாரத்தைக் கட்டவிழ்த் தான். அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாகவே மீறினான். தனக்கு எதிராக முளை விடும் சின்னஞ்சிறிய லிபியப் பிஞ்சுகளையும் அம்முளையிலேயே கிள்ளிக் கொல்லுமாறு கட்டளை பிறப்பித்தான்.

ஒரு நாளல்ல.. இருநாட்களல்ல.. 40 ஆண்டுகள் லிபிய மக்கள் பொறுமை காத்தனர். அனைத்துக் கொடுமைகளையும், அட்டகாசங்களையும் தம்முள் தாங்கிக் கொண்டனர். சகித்து நடந் தார்கள்.

ஏன் தெரியுமா? அவர்கள் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று நம்பிய மக்கள். அதைவிட தமக்கு கடாபி செய்த மிகப் பெரிய சுதந்திர உபகாரத்தை மறக்காத மக்கள்.

ஆனால் அவன் அரசியல் அதிகார சுகபோகத்தில் வயப்பட்டு அளவுக்கதிகமாகவே எல்லை மீறிச் சென்றபோது அம்மக்கள் பொறுமை விலங்கொடித்து வீரா வேசமாக வெடித்துக் கிளம்பி னார்கள்.

எந்தக் கதாபியை லிபிய சமூகத்தினர் உலகம் வியக்கும் வண்ணம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினரோ அதே லிபிய சமூகம் அதே மண்ணில் அவனின் அகங்காரத் தலையை வீழ்த்தி தம் கால்களாலேயே அவனை உதைத்து ஒதுக்கித் தள்ளிவிட்ட சமகால வரலாற்றை உலகம் பதிவு செய்து வைத்துள்ளது.

அரசியல் அதிகார சுகங்களால் ஆரம்பகாலக் கொள்கை கோட்பாடுகளை எல்லாம் காற்றில் பறக்கிவிட்டு மக்களை அதிகாரத் தோரணையில் அடக்கியாள முற்படுகின்ற போக்கை நமது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் வரலாற்றிலும் என்னால் அவதானிக்க முடிகின்றது.

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை முட்டாள்களாக்கி இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாத அரசியலை முதலில் ஆரம்பித்து வைத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் முகவரியாகச் தேசிய மட்டத்திலும், சர்வதேச அரங்கிலும் பரிணாமம் பெற்று விளங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தான் விரும்பிய தலைமைப்பதவி கிடைக் காததால் கட்சி தாவி கூட்டைக் குலைத்தார்.

நமது மக்களுக்கான அரசியல் சேவகனாக ஆரம்பத்தில் திகழ்ந்த அவர் பின்னர் தனக்கு தேர்தல் காலத்தில் அவசியப்படும் பிரமாண்டமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி மூலங்களை வழங்கும் பணம் படைத்த செல்வந்தர்களுக்கும், கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கும் தொழில் வருமான வாய்ப்புக்களை வழங்கும் ஒரு அரசியல் வியாபாரியாக மாறினார்.

நமதூரின் இளைஞர்களையும், சிறுவர்களையும், மாணவ சமூகத்தையும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், கொடிகள் தோரணங்கள் கட்டுவதற்கும், கல்லெறிதலுக்குமாகப் பிழையாக வழி நடாத்தி வருவதுடன் அவரது பிள்ளைகளை மாத்திரம் கொழும்பிலும், கண்டியிலுமாக உயர் தரக் கல்லூரிகளில் இணைத்து கௌரவமாக் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றார்.

இத்தனையும் செய்து வந்து இறுதியாக எமது மக்களின் ஈமானிலும், இறைவனின் ஏகத்துவ மார்க்கத்திலும் கை வைக்கவும் அவர் துணிந்து விட்டார்.

தீனுல் இஸ்லாத்தையும், இஸ்லாமிய வாழ்வின் பாரம்பரிய ஒழுங்குகளையும் வெறும் சடவாதப் பொருட்களாக இம்மக்கள் நோக்கும் வகையில் தனது ‘இஸ்லாமிய நகரம்’ என்ற பிரேமையை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றார்.

அழ்ழாஹ்வின் இல்லங்களுக்குச் சொந்தமான வக்புச் சொத்துக்களை அரசாங்கச் சொத்துக்களாக நீதிமன்றங்களுடாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளவும் இப்போது முற்பட்டு வருகின்றார்.

எமது மண்ணின் பாரம்பரியத்தைப் பறை சாற்றி நின்ற இஸ்லாமிய கலாசார மண்டபத்திலிருந்து ‘இஸ்லாமிய கலாசாரத்தை’ திட்டமிட்டு நீக்கி விட்டு தனது பெயரை அதில் சொருகியுள்ளார்.

அடுத்த சந்ததியினருக்கும் இந்த ஆனாச்சாரங்களெல்லாம் இஸ்லாத்தில் ஆகுமான செயற்பாடுகளேதான் என்பதற்கு ஆதாரமாக நடந்தேறிய தேசிய பாதுகாப்புத் தினத்தில் அத்தனை அரை குறை ஆடை தாங்கிகளின் நடனங்களையும் எமது மூத்த ஆலிம்களையும் முன்னே இருத்தி வைத்து அம்மண்டபத்தில் அரங்கேற்றியுள்ளார்.

மொத்தத்தில், தான் சொல்வதைத்தான் இந்த ஊரே கேட்டு நடக்க வேண்டும். தன் பேச்சுக்கு அப்பால் இம்மண்ணில் எவனும் மூச்சு விடவும் கூடாது என்ற தன்னிலைவாதத் திமிர் மனப்பாங்கோடுதான்  இம்மக்கள் அவருக்கு அளித்திருக்கின்ற கௌரவமான அரசியல் அதிகாரத்தை இம்மக்கள் மீதே துஷ்பிரயோகமாகப் பிரயோகித்து வருகின்றார்.

‘அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சுங்கள்’ என்று ஆண்டாண்டு காலமாக இம்மக்களுக்கு உபதேசித்து இறையச்சத்தை வலியுறுத்தி வந்த எமது மதிப்புக்குரிய உலமாக்களையே இன்று அவர் தனது அதிகாரக் கடைக்கண் பார்வையால் வீழ்த்தி குந்தவும், எழவும், கூப்பிடும்போது வரவும், தான் சொல்வதைப்போல் மிம்பர்களில் பேசவும் வைத்திருக்கின்றார்.

எந்தவொரு குற்றச் செயலைச் செய்தாலும் அல்லது இஸ்லாமிய ஷரீஆச் சட்டத்தை மீறும் வகையில் செயற்பாட்டாலும் தனக்கும், தனது அரசியல் சகாக்களும் எதிராக ‘பத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை எமது உலமா சமூகத்திடமிருந்து அபகரித்துள்ளார்.

அவரின் அநீதியான இத்தகைய செயற்பாடுகளைக் கண்டிக்கும் உலமாக்களுக்கு நமது மார்க்கத்தின் உபதேசத்தளமான மிம்பர் மேடைகளில் இடமளிக்க வேண்டாமெனவும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அரச கட்டளை பிறப்பித்துள்ளார்.

மலசல கூடத்தில் நுழையும்போதும் தலையை மறைத்துக் கொண்டு முஸ்லிமென்ற அச்ச உணர்வுடன் நுழையுமாறு வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படை உண்மையை அறவே மறந்து அல்லது மறுதலித்து மாற்றுமதப் பெரியார்களையும், அரசியல் தலைவர்களையும் கைகூப்பி வணங்குகின்ற நவீன கலாச்சாரத்தைத் தோற்றுவித்து  வருகின்றார்.

தனக்கெதிராகக் கருத்துத் தெரிவிக்கின்ற, செய்திகளைப் பிரசுரிக்கின்ற ஊடகவியலாளர்களையும் திட்டமிட்டுக் கருவறுத்தே வருகின்றார்.

தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழை மக்களினதும், பொது நிறுவனங்களினதும் சேமிப்புப் பணங்களை தனது மனைவிக்கு கடனாகப் பெற்றுக் கொடுத்து விட்டு திருப்பிச் செலுத்தாது மறுத்து வருகின்றார்.

கடன் என்று பெற்றுக் கொண்டு அதனைத் திருப்பிக் கொடுக்காது மறுப்பதென்பது இஸ்லாத்தின் பார்வையில் பாரிய நம்பிக்கை மோசடியும், பகற்கொள்ளைக்குச் சமமாமாகும் என்கிற உண்மையை மார்க்கம் படித்த உலமாக்களை வாய் திறந்து சொல்ல விடாமல் தடுக்கின்றார்.

தனது 25 வருடகால அரசியல் சர்வ அதிகார வாழ்வை தனது இறப்பு வரையிலும் இந்த மண்ணில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக தனது அடியாட்களையும், சுட்டு விரல் காட்டினால் சுருண்டு விழுபவர்களையும் உள்ளுர் அரசியல் அதிகார சபைகளிலும், சமூகப் பொது நிறுவனங்களிலும், அழ்ழாஹ்வின் பள்ளிவாசல்களிலும் மக்களின் பிரதிநிதிகள் என்ற மகுடத்தில் அதிகாரத்தில் இருத்தி வருகின்றார்.

காத்தான்குடிக் கல்விச் சமூகத்திற்கு எதிராக எண்ணிலடங்காத செயற்பாடுகளை எல்லாம் நரித்தந்திரமாகச் செயற்படுத்த முற்பட்டுள்ளார். ஆசிரிய சமூகத்தையும், அதிபர் குழாத்தையும் அதிகாரத்தால் அடக்கி வைத்துள்ளார்.

தனது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக காங்கேயனோடை ஹமீதா பீவி போன்ற ஏராளமான ஏழை மக்களை நம்ப வைத்துக் கடைசி நிமிடத்தில் கழுத்தறுப்புச் செய்துள்ளார்.

தன் சுயநல நோக்குக்காகத் தான் கட்சி மாறும் போதெல்லாம் எமது முஸ்லிம் சமூகத்தின் தேவை உரிமை அரசியல் என்றும் அபிவிருத்தி அரசியல் என்றும் மாறி மாறி சாத்தான் வேதம் ஓதிக் காலந்தள்ளி வந்துள்ளார்.

இவையெல்லாம் எனது கற்பனைகள் அல்ல. இதே பத்திரிகையில் கடந்த ஆறாண்டுகளாக பக்கம் பக்கமாக எழுதப்பட்டு வந்த நீண்ட செய்திகளின் சாராம்சமேயாகும்.

பிரதிமைச்சர் ஹிஸ்புல்லா மீது இத்தனை குற்றச் சாட்டுக்களையும் நான் சுமத்தியுள்ள போதிலும் இச்சமூக்திற்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்றும் நான் ஒரேயடியாகச் சொல்லவும் வர வில்லை.

அவர் செய்திருக்கின்றார். பல்வேறு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றார். ஆனால் அவரது சேவைகளை ஒரு தட்டிலும், இச்சமூகத்திற்கு வெளிப்படையாகவும், நயவஞ்ச கமாக மறைமுகமாவும் அவர் செய்திருப்ப வற்றை மறு தட்டிலுமாக வைத்து நாம் நிறுத்துப் பார்க்க முயன்றால் இரண்டாம் தட்டு அறுந்து வீழ்ந்துவிடும் என்பதே உண்மையாகும்.

தனது கால் நூற்றாண்டு கால அரசியல் நிறைவு விழாவை அவர் கொண்டாடவிருக்கின்றார்.

ஆனால் அவருக்கு அரசியல் அரியாசனத்தை இத்தனை காலமாகவும் வழங்கி வருகின்ற நம் மக்களுக்கு இன்று குப்பை கொட்டவும் இடமில்லை. மாடறுப்பதற்கும் வசதியில்லை.

எமதூரின் எல்லைகள் எதுவென 1994ம் ஆண்டு பிறந்த எனக்கும் தெரியாது. என் தந்தையிடம் கேட்டால் அவருக்கும் அது தெரியாது. எனது ஆசான்களும் அவ்வாறு தெரியாதென்றுதான் இன்று வரைக்கும் சொல்கிறார்கள்.

அதனால் கல்லடிக்கும், அரசடிக்கும், தாழங்குடாவுக்கும் A 4 தேசிய நெடுஞ்சாலையில் அந்தந்த ஊர்களின் பெயர்களை அழகாக அடையாளப்படுத்தி ஒளியில் மிளிரும் பென்னம் பெரிய பெயர்ப்பலகைகள் நடப்பட்டிருக்கும் போது நாம் பிறந்த மண்ணான எமது காத்தான்குடிக்கு மாத்திரம் இருபுறத்திலும் எல்லையும் தெரியாது. நமதூரை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகையும் கிடையாது.

ஹிஸ்புல்லா அவர்களுக்கு நாம் தொடர்ச்சியாக வழங்கி வரும் இத்தனை வருட கால அரசியல் பிரதிநிதித்துவத்தில் நமதூரின் எல்லையையும், பெயரையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியாத உரிமை இழப்புக்களைத்தானா நாம்  பலனாகப் பெற்றிருக்கின்றோம்? என்ற கேள்வி என்னைப் போல் இம்மக்களுக்கும் எழுந்தால் தான் அவர்களும் தமதுணவில் உப்பைச் சேர்த்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள் என்பதை நானும் ஏற்றுக் கொள்வேன். இன்றேல் வெறும் குப்பையைச் சப்புகின்றவர்களாகத்தான் அவர்களை என்னால் பார்க்க முடியும். ஏனெனில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையில்’ என எனது ஆசான்கள் எனக்குப் போதித்துள்ளனர்.

கதாபியும் செய்தார். தன்னுடைய மக்களுக்காக எவ்வளவோ செய்தார். அவரும் ‘அழ்ழாஹ்’, ‘அல்ஹம்துலில்லாஹ்’, ‘ அழ்ழாஹு அக்பர்’ என்றெல்லாம்தான் தனது உரைகளுக்கு மத்தியில் அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

ஆனால், மனிதர்களின் அடிப்படையான உரிமைகளிலும், அழ்ழாஹ்வின் மார்க்கத்திலும் ஒருவர் கை வைத்து விட்டால் அவர் எப்பேர்ப்பட்ட மகானாக மன்னராக இருந்த போதிலும் யாரால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?

கேர்ணல் கதாபியின் இவ்வரலாற்றுத் தவறைத்தான் எமது மண்ணின் மைந்தனான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் இப்போது செய்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது.

யாரும் முன்வராத காலத்தில் இச்சமூகத்திற் காகத் தலை கொடுக்க முன்வந்த அவருடைய சேவை அளப்பெரியது. அதற்காகவே நன்றியுணர்வுடன் இக்காத்தான்குடி மக்கள் அவருக்கு இன்னமும் மதிப்பும், கௌரவமும், ஆதரவும் அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

25 வருடங்களாக அவரை இன்னமும் இம்மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதை விட இப்போது பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்வதே பொருத்தமானது.

ஆனால் சமகாலத்தில் அவர் அதனை வேறு வகையாகப் புரிந்து கொள்ளவும் கூடாது. எதிர்காலத்தில் தனது அரசியல் அதிகாரத்தை அற்பத்தனமாகப் பிரயோகிக்கவும் முனையக் கூடாது.

வெகு சீக்கிரத்தில் எம்மக்கள் அவரைக் கண்டு கொண்டு தீர்ப்பளிப்பதற்கு முன்னதாக அவர் தனது இன்றைய நிலவரத்தைச் சரியாக அடை யாளம் கண்டு கொள்ள வேண்டும். இறைவனைத் தவிர எதுவும் நிலைத்திருந்ததாக வரலாறில்லை.

கடந்த கால்நூற்றாண்டு காலமாக அவரின் அரசியலுக்கு முதலீடாகப் பயன்படுத்தி வந்த எமது மக்களின் அறியாமையை இறைவன் படிப்படியாக நீக்கிக் கொண்டு வருகின்றான் என்பதை யார் உணராவிட்டாலும் அவர் நிச்சயமாக உணர்ந்தே இருப்பார் என்பதும் எனது நம்பிக்கையாகும்.

இந்த மக்களின் மறதியும், மடமையும், சுயநலமும் நீக்கப்படும் காலத்தை இவ்வுலகத்தின் சமகால வல்லரசுகள் வீழ்ந்து வரும் வரலாறுகளைப் படித்து வரும் நான் என் கண்முன்னே காணுகின்றேன்.

இறைவனை மறந்தவராக இதுவரை காலமும் அவர் ஆடிவருகின்ற அரசியல் அதிகார ஆட்டத்திற்கு அரை மாத்திரை இட்டு வந்த இறைவன் வெகுவிரைவில் முற்றுப் புள்ளி வைத்து விடுவான் என்றே எனது ஆழ்மனம் அதீத நம்பிக்கையுடன் சொல்கிறது.

அவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. 49ம் அகவையைத் தாண்டிக் கொண்டிருக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு இறைவன் இன்னும் கால அவகாசம் வழங்கிக் கொண்டிருப்பதை யிட்டு நான் அந்தக் கருணையாளனைப் புகழ்கின்றேன்.

அவர் இந்த மண்ணில் சர்வாதிகாரியாக நின்றுகொண்டு அரசியல் நடாத்த நினைப்பதைக் கைவிட வேண்டும். அவர் ஒரு முதுமானிப் பட்டதாரி என்பதும் எனக்குத் தெரியும். உலக வரலாற்றைப் பல்கலைக்கழகங்களில் படித்திராவிட்டாலும் பள்ளிக்கூடங்களிலாவது அவர் படித்திருக்கக் கூடும்.

சர்வாதிகாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை யாரைத்தான் விட்டது?

பெனிடோ முசோலினி முதல் அடல்ப் ஹிட்லரையும் தாண்டி இன்று பென் அலி, ஹுஸ்னி முபாரக் என்று தொடர்ந்து இறுதியாகக் கடாபியையும் தாக்கிய அந்தப் பெரு வியாதி எயிட்ஸை விட மகா கொடியது.

அணுகுண்டை விடவும் அதிக ஆபத்தானது. ஏனெனில் சர்வாதிகாரம் என்பது இறைவனின் ஆட்சிமையில் கை வைப்பதாகும்.

அதனால்தான் அத்தனை சர்வாதிகாரிகளும் அந்தந்த மக்களாலேயே கிழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியதிகாரத்திலிருந்து  கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர் தெளிவாக உணர வேண்டும்.

இந்தக் காத்தான்குடிச் சமூகத்தின் அரசியலில் சூரியோதயம் ஏற்படும் காலம் நெருங்குவதை நான் நுகர்கிறேன். அது அவரின் மாற்றத்தாலும் இருக்கலாம். இறைவனின் கோபத்தாலும் நடக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தலை கவிழும்போது வால் கள் எல்லாம் தானாகத் துடிப்படங்கி வீழ்வது இயற்கையே!

-ஈமானியத்தான்-

 -Vaarauraikal  Vol: 212  Date: 17.02.2012-

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.