அரசையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்த கிழக்கு முஸ்லிம்களை காவு கொடுக்கும் ஹக்கீம்

625.167.560.350.160.300.053.800.300.160.90கடந்த வாரம் சம்பூரில் கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கிண்ணியாவில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் ஹக்கீம் உரையாற்றும் போது முதலமைச்சர் எவ்விதமான முன் நிபந்தனையும் இன்றி குறித்த கடற்படை அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பகிரங்கமாக சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை கடந்த 20ம் திகதி பகிரங்கமாக திட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதன்முதலாக இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளதானது; சிங்கள மக்களையும், சிங்கள அரசையும் திருப்திப்படுத்தி விட்டு; கிழக்கு மக்களையும். முதலமைச்சரையும் சிங்கள மக்களிடத்தில் பலிக்கடா கொடுக்கும் செயலாக அமையாதா? இதுவொரு காவு கொடுக்கும் செயலாக அமையாதா ?

அரசுக்குள் கிழக்கு முதலமைச்சர் விடயம் பெரிய விடயமாக பார்க்கப்படவில்லை. ஆனால் மஹிந்த அணியும் இனவாதிகளும் இந்த சம்பவத்தை பெரிதாக்கி விட்டார்கள்.

இந்த நிலையில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று ஹக்கீம் தெரிவித்துள்ள இந்தக் கண்டனத்தின் மூலமாக ஹக்கீம் யானை அடிக்கும் முன்பே தானே அடித்துக் கொல்லுவது போன்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹக்கீமின் இந்தக் கருத்தினால் சிங்கள மக்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் முதலமைச்சரை ஹக்கீம் ஓரங்கட்டப் பார்க்கின்றார் என்பது ஊர்ஜிதமாகின்றது.

மேலும் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.

முதல்வரை கழற்றும் சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்திருந்த ஹக்கீமுக்கு மென்று சாப்பிட முதல்வர் அவல் கொடுத்த கதையாக மாறி விட்டது.

ஹக்கீம் மன்னிப்பு கேட்பது பொருத்தமானது

ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் விடயத்தை பெரிதாக்க விடக்கூடாது என்ற எண்ணம் நோக்கம் இருந்தால் ஹக்கீம் ஏன் பொதுமேடைகளில் இந்த விடயத்தை விமர்சனம் செய்து வர வேண்டும்?

ஒரு உண்மையான பக்குவமான தலைவன் என்றால் அரசின் உயர் மட்டத்தை அணுகி சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியை நேரில் சந்தித்து முதலமைச்சர் சார்பாக அந்தக் கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்று சொல்லி விடயத்தை முடித்திருக்கலாம்.

அப்போது ஹக்கீம் நாடு முழுவதும் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பார். அதை விட்டு முதலமைச்சருக்கும் ஹக்கீமுக்கும் இருக்கும் பனிப்போரை, புகைச்சலை; ஹக்கீம் சந்தர்ப்பம் பார்த்து மேடை மேடையாக விமர்சித்து வருகின்றார்.
உங்கள் உள்வீட்டு புகைச்சலை வெளியில் காட்டி வங்குரோத்து அரசியலை நாறடிப்பதால் முஸ்லிம் அரசியல் மிகவும் கேவலமாகி விட்டது.

சரி, முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஹக்கீம் தனிப்பட விரும்பினால் அதை முதல்வர் நசீரிடம் நேரடியாக சொல்லலாம், கேட்கலாம் இல்லையா? அதை விட்டு போகும் இடமெல்லாம் மேடை மேடையாக தனது கட்சிக்காரனை விமர்சிப்பது கேவலம் இல்லையா?

ஒரு கட்சியின் தலைவனின் லட்சணம் இதுவா? இது அரசியல் நாகரீகமா? ஒரு எதிர்க்கட்சிக்காரனை விமர்சிப்பது போன்று தெருவில் நின்று விமர்சிப்பது என்பது தெருச்சண்டை மாதிரி இல்லையா? இதுவொரு அநாகரீகமான செயலாக இல்லையா?

ஹக்கீம் தனது கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டி முதல்வரையும் அழைத்து இந்த விடயத்தை அலசி ஆராய்ந்து அரசுக்கு தங்கள் நிலைப்பாட்டை சொல்லியிருக்கலாம்.

அதிபர். பிரதமரிடம் அடுத்தகட்ட நகர்வு பற்றி பேசியிருக்கலாம். எதுவுமே இல்லாமல் தன் இஷ்டப்படி போகும் ஊரெல்லாம் தனது கட்சிக்காரனை பௌத்த பிக்குகள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லி வருவது போன்று ஹக்கீம் நடந்து கொள்வது என்பது ஒரு கட்சித் தலைமைக்கு நல்ல விடயமாக படுகின்றதா?

ஹக்கீம் இன்னும் அரசியலில் கற்றுக்குட்டி தானா? பௌத்த பிக்குளையும், சிங்கள மக்களையும், படைகளையும், அரசையும் திருப்திப்படுத்தும் நோக்கோடு முதல்வரை பணிய வைக்கவுமே ஹக்கீம் இதை தெருத்தெருவாக பரப்புரை செய்து வருகின்றார் .

மன்னிப்பு கேட்பதில் ஒன்றும் தவறில்லை. அதில் ஒன்றும் குறைவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.

ஆனால் அதிபர், பிரதமர் முன்னிலையில் கிழக்கு ஆளுநர், முதல்வர், குறித்த கடற்படை அதிகாரி ஆகியோர் விசாரிக்கப்பட்டு யார் மீது குற்றம் உள்ளது என்று கண்டறியப்பட வேண்டும்.

அபோதுதான் இந்த மன்னிப்பு விடயம் பேசப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகம் . அதை விட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹக்கீம் தன்னிச்சையாக மூர்க்கத்தனமாக வீதிகளில் கண்டனம் தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த மன்னிப்பு விடயத்தில் கிழக்கு முதல்வரை ஹக்கீம் பணிய வைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் அடுத்து வரும் முதல்வர்களை படைகள் மதிக்குமா? ஒரு சாதாரண சிப்பாய் கூட மதிக்காத ஒரு கேவலமான பதவியாக முதல்வர் பதவி பார்க்கப்படாதா?

கடந்த காலங்களில் தன்னைக் கேட்காமல் மஹிந்தரிடம் பஷீர் சேகுதாவூத் அமைச்சர் பதவி பெற்று விட்டார் என்று ஹக்கீம் குருநாகல் தொட்டு புத்தளம் வரை பஷீர் சேகுதாவூத்தை தெரு மேடைகளில் வசை பாடி, கண்டனம் தெரிவித்து, பஷீரின் அமைச்சை நக்கல் நையாண்டி பண்ணி வந்தார்.

ஒரு உள்வீட்டுப் பிரச்சினையை வீட்டுக்குள் தீர்த்து வைக்கத் தெரியாது தெரிவில் நின்று மார் தட்டுவது என்பது ஹக்கீமுக்கு கைவந்த கலை.

ஹக்கீம் பயந்து விட்டார்

முதல்வர் நசீர் கிழக்கில் மிக வேகமாக செய்து வரும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் பற்றி ஹக்கீம் பயந்து விட்டார்.

முதல்வர் நசீரின் அரசியல் வளர்ச்சி கண்டு ஹக்கீம் தனது தலைவர் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று பயந்து விட்டார்.

அதனால் ஒரு சந்தர்ப்பத்தை பார்த்து முதல்வரை மாற்றும் எண்ணத்தில் இருந்த ஹக்கீமுக்கு, முதல்வர் நசீர் ஒரு கூர்மையான கத்தியை ஹக்கீம் கையில் கொடுத்துள்ளார்.

ஹக்கீம் இந்த விடயத்தை சுலபமாக தீர்க்கக்கூடிய பல வழிகள் உள்ளன. ஆனால் ஹக்கீம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நசீரை கவிழ்க்கும் எண்ணத்தில் இருந்தால் மிக ஆபத்தான ஒரு பாதையை நோக்கிய பயணமாகும்.

ஆனாலும் ஹக்கீம் கையில் நசீர் அஹமத் கொடுத்துள்ள கூர்மையான கத்தி, ஹக்கீமையும் பதம் பார்க்கும் என்பதை மறந்து ஹக்கீம் கண்ட மாதிரி கண்டனம் தெரிவித்து வருவது ஆபத்தானது .

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: