கலாநிதியின் காழ்ப்புணர்ச்சியை கொப்பளிக்க கல்வியாளர்கள் களமமைக்கிறார்களா?

13442259_613987312108454_7141759289620895801_n-AL. முஹம்மது நியாஸ்:

காத்தான்குடியில் கொள்கை ரீதியாக பிளவுபட்டுள்ள ஏகத்துவ அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக கூறிக்கொள்கின்ற ‘அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்குமான சமூக அமைப்பினர்’ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் குறித்த ஒரு தரப்பினரை மாத்திரம் இலக்கு வைத்து கடுமையான விமர்சன உரை நிகழ்த்திய கலாநிதி UL. அஹ்மத் அஷ்ரப் அவர்களுடைய செயற்பாட்டினால் தாங்கள் பாரியளவில் அதிருப்தியடைந்துள்ளதாக காத்தான்குடியின் தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 01. 07. 2016 அன்று வெளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள அல் ஜுமைரா வளாகத்தில் இவ்வமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுக்கு காத்தான்குடியிலுள்ள அனைத்து தஃவா அமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் (2015) இதே அமைப்பினர் நடாத்திய இதுபோன்றதொரு இப்தார் நிகழ்வில் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்த்திய சிறப்புரை கணிசமான ஏகத்துவ அமைப்புக்கள் மத்தியில் பாரியளவு அதிருப்தியையும், மனக்கிலேசத்தையும் ஏற்படுத்திருந்தது.

இதன்காரணமாக இவ்வருடம் இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்து அதற்கான அழைப்பை விடுத்திருந்த ”அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்குமான சமூக அமைப்”பினரிடம் தாருல் அதர் அத்தஅவிய்யா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய இரண்டு அமைப்புக்களும், கடந்த வருடம் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்களின் உரையினால் தமக்குள் ஏற்படுத்தியிருந்த அந்தக் கசப்புணர்வை எடுத்துக்கூறி அவ்வாறானதொரு நிலைமை இம்முறையும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காகவும், தங்களின் அமைப்பினுடைய ”ஏகத்துவ அமைப்புக்களை ஒருங்கிணைக்கின்ற தூய நோக்கம்” சிதைந்து விடக்கூடாதென்னும் நன்னோக்கிலும் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தும் பொறுப்பை பிறிதொரு மார்க்க அறிஞருக்கு வழங்குமாறு இவ்வமைப்புகள் இரண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தன.

ஆரம்பத்தில் இவ்வேண்டுகோளையும், அதிலுள்ள நியாயமான காரணத்தையும் சரி கண்ட இந்த இப்தார் ஏற்பாட்டுக் குழுவினர்; இவ்வேண்டுகோள் தொடர்பான தமது சாதகமான கருத்தினைத் தெரிவித்துவிட்டு, பின்னர் கலாநிதி அஷ்ரப் அவர்களுக்கே இம்முறையும் சிறப்புரை நிகழ்த்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

ஏற்பாட்டுக் குழுவினரின் இந்த நிலைப்பாடு காரணமாக, இந்த வருடமும் புனிதமான ரமழான் மாதத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கும் நன்னோக்கில் தாருல் அதர் அத்தஅவிய்யா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய இரண்டு அமைப்புக்களும் குறித்த இப்தார் நிகழ்வுக்கு சமூகமளிக்காமல் புறக்கணித்தன.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்கள், தாருல் அதர் அத்தஅவிய்யா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய இரண்டு தஃவா அமைப்புக்கள் மீதும் மிகவும் மோசமான முறையில் தன்னுடைய விமர்சனங்களை கருத்துக்களாக வெளியிட்டுள்ளார்.

தலைப்பிறை விவகாரம், பஜ்ருடைய நேரம் மற்றும் ஏனைய மார்க்க ரீதியான மஸாயில்கள் குறித்த இரு அமைப்புக்களுடைய ஒருமித்த நிலைப்பாடுகள் பற்றி மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளாலும், ஒரு பொதுவான சபைக்குரிய நாகரீகமற்ற சொல்லாடல்களாலும் அவர் விமர்சித்துத் தள்ளியுள்ளார்.

பொதுவான பார்வையில், தமது கருத்துக்கு மாற்றுக் கருத்தினைக் கொண்டுள்ள அமைப்புக்களை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் பல்வேறுபட்ட மார்க்க ரீதியான நிலைப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு பொதுப்படையான ஒற்றுமைப் பயணத்தில் காலடி எடுத்து வைப்பதற்காக இப்தார் என்னும் இறையருள் பொருந்திய நற்செயலுக்காக சமூகமளித்துள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்களை உள்ளடக்கியுள்ள ஒரு கண்ணியமிக்க சபையில் எத்தகைய விடயங்களை, எவ்வாறான தொனியில் முன்வைக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூடத் தெரியாத கலாநிதி அஹ்மத் அஷ்ரப், என்ன நோக்கத்திற்காக இந்த நிகழ்வுக்குச் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டார்? என்ற நியாயமான கேள்வி இங்கே தவிர்க்க முடியாமல் எழுந்துள்ளது.

மாத்திரமன்றி, கடந்த வருடமும் இதே அமைப்பினர் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்த இப்தார் நிகழ்வில் இதே கலாநிதி அஷ்ரப் ஆற்றிய சிறப்புரையின்போது முன்வைத்த விடயங்களால் காத்தான்குடியிலுள்ள கணிசமான ஏகத்துவவாதிகளுக்கு மத்தியில் மிகப்பாரியளவிலான அதிருப்திகள் தோற்றம் பெற்றிருந்த விடயம் இந்த இப்தார் ஏற்பாட்டுக் குழுவினரிடத்தில் முறையாகவும், நேரடியாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

அவ்வாறு குறித்த விடயம் நன்கு தெரிந்திருந்தும் கூட கலாநிதி அஹ்மத் அஷ்ரபுக்கே சிறப்புரை நிகழ்த்தும் வாய்ப்பையும், சக ஏகத்துவ அமைப்புக்கள் மீதான அவரது தனிப்பட்ட குரோதத்தைக் கொப்பளிப்பதற்கான களத்தையும் வழங்கியுதவிய இந்த ‘அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்குமான சமூக அமைப்’பினருடைய ‘ஏகத்துவ அமைப்புக்களுகிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்’ தூய(?) கோஷம் இப்போது சந்தேகத்திற்குரியதாக நோக்கப்படுகிறது.

ஏனெனில், கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அண்மைக் காலமாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் மீதும் அதன் முன்னணி உலமாக்கள் மீதும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ந்தேச்சையாகக் கொப்பளித்து வருகின்ற அவரது தனிப்பட்ட குரோத உணர்வின் விகிதாசாரத்தை ஒட்டுமொத்த காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகமுமே நன்கறிந்துள்ளது.

அதனை மக்கள் பொதுமக்கள் மத்தியில் அடையாளம் காண்பித்து கடந்த 24. 06. 2016 அன்று ‘காலாவதியாகிப்போன கலாநிதி அஷ்ரப்’ என்னும் தலைப்பில் அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் விரிவானதொரு ஆக்கமும் இணையதளங்களிலும், உள்ளுர் ஊடகத்திலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டு அதன் மூலம் அவருடைய உள்நோக்க சுயரூபமும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதன் மூலம் கலாநிதி அஷ்ரபுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்வுக் குரோதத்தைக் கொப்பளிக்கின்ற கீழ்த்தரமான செயற்பாடுகள்,  நடவடிக்கைகள் அனைத்துமே நமதூரும், உலகமும் நன்கு தெரிந்திருந்தும்; அந்தக் காலாவதியாகிப்போன கலாநிதி அஷ்ரபையே மீண்டும் இவ்வருட இப்தார் நிகழ்விலும் சிறப்புரையாற்ற இந்த ஏற்பாட்டுக் குழுவினர் நியமித்ததில் இருந்து, ‘இந்த இப்தார் ஏற்பாட்டுக் குழுவினரும் வெளி வேஷத்தில் தமது ஒற்றுமைக் கோஷம் என்ற போலி நோக்கத்தை உதட்டளவில் ஏந்திக்கொண்டு, உள்ளார்ந்த ரீதியாக
ஊரிலுள்ள பிரதான ஏகத்துவ அமைப்புக்களை நயவஞ்சகத்தனமாகக் காறி உமிழ்ந்து பழிவாங்கும் சதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா?’ என்கிற கேள்வி மிகச்சாதாரணமாகவே எழுந்திருக்கின்றது.

அத்தோடு இந்தளவுக்குப் பாரிய பொருளாதார செலவுகளையும், பிரயத்தனங்களையும் மேற்கொண்டு நமதூரிலுள்ள ஏகத்துவ அமைப்புக்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப முயற்சிக்கின்ற இந்த ‘அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்குமான சமூக அமைப்பு’,  அதை வருடத்துக்கொருமுறை நடாத்துகின்ற இப்தார் நிகழ்வோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் இதுவரை சாதித்திருப்பதுதான் என்ன?

மேலும் இந்த ஏகத்துவ அமைப்புகளுக்கிடையிலான ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, அதற்காக மிகவுமே கவலை கொள்வதாகக் கூறிக்கொள்கின்ற இக்கல்வியாளர்கள், காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகத்தின் பிரதிநிதித்துவ அமைப்புக்களான தாருல் அதர் அத்தஅவிய்யா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய இரண்டு அமைப்புக்களில் தங்களுடைய வாராந்த ஜும்ஆ கடமைகளையேனும் நிறைவேற்ற நாட்டம் கொண்டிருப்பவர்களா? எனக் கேள்வியெழுப்பினால் அதற்கான பதிலும் வெறும் பூஜ்ஜியமாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு வருடத்திற்கொரு தடவை மாத்திரம் ‘ஆண்டுக்கத்தம்’ ஓதுவது போன்று, அதுவும் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் என்றொரு காழ்ப்புணர்வாளரை சிறப்புரையாளராகக் கொண்டு ஏனோதானோவென்று நடாத்தப்படுகின்ற இவ்வாறான இப்தார் நிகழ்வுகளால் மாத்திரம் இந்தக் காத்தான்குடிச் சமூகத்தினுள்ளே எந்தவிதமான ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்? என்கிற வினாவையும் எழுப்புகின்றது.

மேலும் ஏகத்துவ கொள்கையோடு எவ்வகையான தொடர்புமில்லாததுடன்,  தனக்கெனக்கென்றும் யாதொரு கொள்கையுமில்லாமல் ஏகத்துவ அமைப்புக்களை எதிர்ப்பதையும், களங்களும் வளங்களும் கிடைகின்றபோது அவ்வமைப்புகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு கொப்பளிப்பதையும் மாத்திரமே முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற கலாநிதி அஷ்ரப் போன்ற பட்டவர்த்தனமாக பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள சுயநலச் சந்தர்ப்பவாதிகளையும், காழ்ப்புணர்வாளர்களையும் தமது கைவசம் வைத்துக்கொண்டும், அவர்களுடைய முதுகுகளை வருடிக்கொடுத்து இதமளித்துக்கொண்டும் ஏகத்துவ சமூகத்தை இவர்களால் எக்காலத்திலும் ஒன்றிணைத்து விடவும் முடியாது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான உதட்டிலொன்றும், உள்ளத்தில் வேறொன்றுமாய் வெற்று ஒற்றுமைக் கோஷத்துடன் வெளிக் கிளம்பிய சில ஓரவஞ்சனையாளர்களால் காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகம் எவ்வாறு துண்டாடப்பட்டது?  ஏகத்துவ அமைப்புக்களின் நிருவாகிகள், உலமாக்கள்; இப்பிரதேச அரசியல்வாதிகளாலும், ஏனைய சிவில் சமூகத் தலைமைத்துவங்களாலும் எவ்வாறு விலைகொடுத்துக் கொள்வனவு செய்யப்பட்டார்கள்? என்பதெல்லாம் நமக்கு முன்னுள்ள வரலாற்றுப் பாடமாக இன்றுவரைக்கும் இருந்தும் வருகிறது.

எனவே வெறுமனே ‘ஏகத்துவ அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமை’ என்னும் அர்த்தமற்ற கோஷங்களையெல்லாம் புறந்தள்ளிக் கடாசிவிட்டு,  இக்காத்தான்குடிச் சமூகத்திற்குப் பிரயோசனமளிக்கின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இதன் பின்னராவது மேற்கொள்வதே இவ்வூரின் கல்வியாளர்கள் எனப்பறைசாற்றிக் கொள்கின்ற இவ்வமைப்பாளர்களுக்கு சிறந்தது, இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளது என்பதை எனது இறுதியான ஆலோசனையாக முன்வைக்கிறேன்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: