ஐ.தே.கட்சி தலைமை அங்கீகரித்த ஷாபியை ஏற்றுக் கொள்வதாக காத்தான்குடி மத்திய குழு ஏகமனதாகத் தீர்மானம்! பெரும் குழப்பத்தில் முடிந்த இறுதி நாள் இப்தார் நிகழ்வு!!

UNP Ifthar 05.07.2016ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் எம். ஹாசீம் அவர்களால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியதாக நேற்று (05.07.2016) செவ்வாய்க்கிழமை மாலை ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த புனித றமழான் மாதத்தின் இறுதி நாள் இப்தார் நிகழ்வானது, பெரும் குழப்பத்தில் முடிவடைந்தது.

Shafi-&-Kabeer-Hasim-horz-1எனினும், கட்சியின் பொதுச் செயலாளரினால் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஷாபியையும் இணைந்துக் கொண்டு காத்தான்குடி கொத்தணிப் பிரிவில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என மத்திய குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.

நேற்று (05.07.2016) மாலை நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வு, ஐ.தே.க. காத்தான்குடி கொத்தணிப் பிரிவின் அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபாவின் இல்லத்தில் மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் அவர்களால் வழங்கப்பட்ட மேற்படி கடிதம் தொடர்பிலான கருத்துக்கள் சபையில் பரிமாறப்பட்டன.

இறுதியில், ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடத்தினால் புதிய அங்கத்தவராக உள்வாங்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம். ஷாபியையும் இணத்துக் கொண்டே காத்தான்குடி கொத்தணிப் பிரிவில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்ற பிரேரணையை அங்கு சமூகமளித்திருந்த மத்திய குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் முனாப் மௌலவி முன்மொழிந்தார். அதனை சமூகமளித்திருந்த மத்தியகுழு அங்கத்தவர்கள் ஏகமனதாக அங்கீகரித்தனர்.

இந்நிலையில் மத்திய குழு அங்கத்தவரல்லாத, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் சிலரும் அங்கு வருகை தந்தனர். இவர்கள் உள்ளே வந்து அமராமல் வெளி வராந்தாவில் போடப்பட்டிருந்த கதிரைகளில் உட்கார்ந்து கொண்டதால், இப்தார் உணவுப் பொருட்களைப் பரிமாறுவதில் வீட்டுக்காரான அமைப்பாளர் முஸ்தபாவுக்கு சங்கடம் ஏற்பட்டது.

அவர் பல தடவைகள் உள்ளே போதியளவு இடமிருக்கிறது. வந்து அமருங்கள் என அழைத்தும் அவர்கள் அவசரமாகப் புறப்பட்டுச் செல்ல இருப்பவர்கள் போன்று வெளி வராந்தாவிலேயே அமர்ந்திருந்தனர்.

இதன்போது அமைப்பாளர் முஸ்தபா, ஐ.தே.கட்சியினால் புதிதாக உள்வாங்கப்பட்ட அங்கத்தவர் ஷாபியுடன் இணைந்து தம்மால் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்தார்.

இதனை மறுத்த மத்திய குழுவின் பிரச்சாரச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், நமது கட்சியுடன் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் இம்மாவட்ட அமைப்பாளர் ஷாபி இணைந்து கொண்டிருப்பதால் பிராந்தியத்தில் கட்சியின் பலமே அதிகரித்துள்ளது. அமைப்பாளரான உங்களால் அவரையும் சேர்த்துக் கொண்டு செயற்பட முடியாவிட்டாலும், கட்சியின் வளர்ச்சியை இப்பிரதேசத்தில் அதிகரிக்க விரும்பும் மத்திய குழு நிர்வாகிகளான நாங்கள் அவரையும் சேர்த்துக் கொண்டு செயற்படுவதாக இங்கே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

பிரச்சாரச் செயலாளரின் இக்க்ருத்தினை அங்கிருந்த மத்திய குழுத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர். தேசிய மட்டத்தில் நமது கட்சியின் பலத்தை அதிகரிக்க தலைவரும், பொதுச் செயலாளரும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் அவரது மாவட்ட அமைப்பாளர்களையும், தொகுதி அமைப்பாளர்களையும் உள்வாங்கிச் செயற்படுவதற்கு முன்வந்திருப்பதைப் போன்று நமது காத்தான்குடிப் பிரதேசத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்சியின் பலத்தை அதிகரிக்க நாமும் அவ்வாறே செயற்பட வேண்டும் என்ற கருத்தை பலரும் அங்கு வலியுறுத்தினர்.

இச்சந்தர்ப்பத்தில் பைஷர் என்பவர், ‘வந்தான் வரத்தான்களின் கருத்துக்களையெல்லாம் இங்கே கேட்டுக் கொண்டிருக்காமல் பள்ளிக்குச் சென்று தொழுங்கள்’ என்று கூறினார்.

இதையடுத்து, அவர் சுட்டிக்காட்டிய ‘வந்தான் வரத்தான்கள்’ யார்? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது.

இங்கே கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களே செயலாளரும், அமைப்பாளரும் அழைத்ததன் பேரில் சமூகமளித்துள்ளனர். தெருவால் போன எவரும் உள்ளே வரவில்லை. எனவே, பைஷர் என்பவர் பிரயோகித்த ‘வந்தான் வரத்தான்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு மத்திய குழுவின் செயலாளரும், அமைப்பாளர் முஸ்தபாவும்தான் பதில் கூற வேண்டும் என தலைவர் அலியார் வலியுறுத்தினார்.

செயலாளர் எம்.பி.ஏ. கையூம், தான் மத்திய குழு உறுப்பினர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுத்ததாக உறுதிப்படுத்தியதையடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தது யார்? என்ற கேள்வி மத்திய குழு உறுப்பினர்கள் மத்தியில் எழுந்தது.

அமைப்பாளர் முஸ்தபா நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனும், அதன் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானுடனும் இரட்டை முக உறவைக் கொண்டு செயற்பட்டு வருபவர் என்பது வெளிப்படையாக எல்லோரும் அறிந்த விடயமாகையால் அவர்தான் NகFGGயின் ஆதரவாளர்களையும் இந்நிகழ்வுக்கு திட்டமிட்டு அழைத்திருக்க வேண்டும். அவரது வீட்டில் இந்த இப்தார் நிகழ்வை நடாத்தவுள்ளதாகவும், இதன்போது கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷீமால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாகவும் ஊடகங்கள் மூலம் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தமையால் அவ்வாறானதொரு இறுதித் தீர்மானத்தை எடுக்காமல் கூட்டத்தைக் குழப்ப வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்துடனேயே அமைப்பாளர் முஸ்தபா NFGGயின் ஆதரவாளர்களையும் இங்கே அழைத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுவடைந்தது.

இதனால் தலைவர் அலியார் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் பைஷரின் கருத்தை வன்மையாகக் கண்டித்தனர்.

அமைப்பாளர் முஸ்தபாவோ பைஷரின் கருத்தைப் பகிரங்கமாகக் கண்டித்து, ‘வந்தான் வரத்தான்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை வாபஸ் வாங்குமாறு அவரிடம் வலியுறுத்தாமல் கண்துடைப்பான சமாதான நடவடிக்கைகளிலேயே நேரத்தைக் கடத்தினார்.

இதனால் உறுப்பினர்கள் பலரும் அந்நிகழ்வில் வழங்கப்பட்ட ஈத்தம்பழப் பொதிகளையும் பெறாமல் புறக்கணித்து விட்டு பெரும் அதிருப்தியுடன் அமைப்பாளர் முஸ்தபாவின் வீட்டிலிருந்து வெளியேறினர்.

இவ்விடயத்தில் கொத்தணி அமைப்பாளர் முஸ்தபா எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துக்கொள்கின்ற போதிலும், தானும் சக மத்திய குழு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் முன்னாள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஷாபி அவர்களையும் அரவணைத்துக் கொண்டே இப்பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி நடவடிக்களைத் தொடரவுள்ளதாகவும், இதற்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் தலைவர் கே.எம்.எம். அலியார் தெரிவித்தார்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: