நவம்பர், 2010 க்கான தொகுப்பு

பச்சை விபச்சாரத்தை இஸ்லாமியத் திருமணம் என சம்மேளனம் பிரகடனம் செய்யப் போகின்றதா?

-காழி நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் எம்.ஏ. கேள்வி-

காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைத் திருமண விவகாரம் தொடர்பாக காத்தான்குடி காதி நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் அவர்கள் ‘ வார உரைகல்’லுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதன் முதல் பகுதி இவ்வாரம் பிரசுரிக்கப்படுகின்றது – பிரதம ஆசிரியர்

தொலைபேசியில் யாராவது ஒருவர் தன்னை ஒரு பெண்ணின் சகோதரன் எனக் கூறிக்கொண்டு ‘வொலி’ கூறினால் அதனை ‘வொலி’யாக ஏற்றுக் கொண்டு திருமணம் செய்யலாம்.

கஃபாவைச் சாட்சியாக வைத்து மஹர் என்ற பெயரில் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து இருவரும் கணவன் மனைவியாக  இருப்போம் என்று கூறினாலும் இதுவும் சட்டபூர்வமான இஸ்லாமியத் திருமணமே என ஒரு மதனியும், ஒரு அரூஸ் ஹாஜியாரும் கூறியதை நமது பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அங்கீகரித்து அரூஸ் + சல்மா ஆகியோர் மேற்கொண்ட விபச்சாரத்தை இஸ்லாமியத் திருமணம்தான் என்று சம்மேளனம் பிரகடனப்படுத்தப் போகின்றதா?

மக்காவிலுள்ள கஃபாவுக்குச் சென்று இவ்வாறு செய்வதற்கு  வசதியற்றோர் நமதூரிலுள்ள பள்ளிவாசலின் முன்னால் நின்று அதனைச் சாட்சியாக வைத்து ஒரு தொகைப் பணத்தை பெண்ணிடம் கொடுத்துச் செய்கின்ற பச்சை விபச்சாரத்தை இஸ்லாமிய திருமணம் என்று ஏற்கலாம்.

இதுதான் நமது சமூத்தின் தலைமை நிறுவனமான சம்மேளனத்தின் தீர்ப்பா?? Continue reading

காத்தான்குடி ப.நோ.கூ.சங்கம் அதன் மறுப்பு விளக்கத்தை ‘வார உரைகல்’லிடம் ஒப்படைக்கவும்

-இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பணிப்பு-

காத்தான்குடி ப.நோ.கூ.சங்கம் தொடர்பாக ‘வார உரைகல்’ வெளியிட்ட செய்திகளில் உண்மைக்குப் புறம்பானவை இடம்பெற்றிருப்பின் அதுதொடர்பான மறுப்பையோ அல்லது விளக்கத்தையோ அப்பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக அனுப்பிவைக்குமாறு இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மேற்படி ப.நோ.கூ.சங்கத் தலைவர் எஸ்.எல்.ஏ. கபூரைக் கேட்டுள்ளது.

இவ்வாறு சங்கத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ள கடிதத்தின் பிரதி இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கமல் லியனாரச்சி அவர்களால் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

PCCSL/09/09/2010 இலக்க 10.11.2010ம் திகதியில் காத்தான்குடி ப.நோ.கூ.ச. தலைவர் எஸ்.எல்.ஏ.கபூர் என்பவருக்கு முகவரியிட்டு எழுதப்பட்ட அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

காத்தான்குடியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ பத்திரிகையில் பிரசுரமாகிய மூன்று செய்திகள் தொடர்பாக 2010.11.01 என்ற திகதியிட்டு தங்களால் அனுப்பப்பட்ட முறைப்பாடு கிடைத்தது.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தொடர்பாக தாங்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம் குறிப்பிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானதாக இருப்பின் அதனை மறுக்கும் வகையில் தங்களால் முன்வைக்கும் விளக்கத்தை, தெளிவுபடுத்தலை அல்லது செய்தியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முன் வைக்கும் மறுப்பை, முறைப்பாட்டுடன் எழுதி அனுப்பியிருக்கவில்லை.

இதுதொடர்பாக நான் ‘வார உரைகல்’ ஆசிரியருடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் தங்களது மறுப்பை அல்லது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

எனவே நீங்கள் அவரைத் தொடர்பு கொண்டு தங்களது மறுப்பை அல்லது விளக்கத்தை ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். -இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம் 05

 

 

 

Dr. ILM. Rifas MBBS  M. Sc (Admin)

 

வைத்தியசாலை மீள் நிர்மாணம் தொடர்பான பணிகள் மிகுந்த தேக்க நிலையை அடைந்த நிலையில் மாவட்ட வைத்திய அதிகாரியான என்னால் செய்யக் கூடிய பணிகளை செய்யத் தொடங்கினேன்.

உதவிச் சுகாதார அத்தியட்சகர் அலுவலகத்திற்கும், மத்திய அமைச்சுக்கும் தொடர்ச்சியாக இது தொடர்பாக அழுத்தங்கள் கொடுப்பதும், நேரடியாகச் சென்று பேசுவதும் மட்டுமில்லாமல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாகத் தொடர்பினைப் பேணிக் கொண்டிருந்தேன்.

இறுதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி திரு. சமண என்பவருடன் தொடர்பு கொண்டபோது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அவர் சொன்னார்.

அதாவது, நேர்வே செஞ்சிலுவைச் சங்கம் நமது காத்தான்குடி வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளதாகவும், ஆனால் கால இடைவெளி நீண்டு விட்டதால் ஏற்கனவே ஒதுக்கியிருந்த 450 மில்லியன் ரூபாய்கள் போதாது என்பதால் புதிய நிதி ஒதுக்கீட்டுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் சில திட்டங்களைக் கைவிட்டு விட்டே நிர்மாண வேலைகளைத் தொடர வேண்டியேற்படும் எனவும் சொன்னார்.

ஆனால் ஒரு சில மாதங்களின் பின் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு கிடைத்திருப்பதாகவும், கட்டிட வேலைகளுக்கான ஒப்பந்தம் தயார்படுத்தப்படுவதாகவும் அவர் எனக்கு அறிவித்தார்.

இந்த வேளையில்தான் நமது காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதியதோர் சிந்தனை எழுச்சியோடும், கருத்துக்களோடும் இளைஞர்கள் அந்த அரசியல் களத்தில் காலடியெடுத்து வைத்தனர்.

இந்த இயக்கத்தின் எழுச்சிமிக்க கருத்துக்களோடு பல உள்ளுர் அரசியல்வாதிகளால் ஒத்துப்போக முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த இயக்கத்தினை எவ்வழியிலாவது ஒழித்துக்கட்ட வேண்டுமெனவும் தருணம் பார்த்திருந்தார்கள். இந்த இயக்கத்தில் நானும் ஒரு அங்கத்தவனாக இருந்தது, இந்த வரட்டுச் சிந்தனை அரசியல்வாதிகளுக்கு வயிற்றெரிச்சலை அதிகரித்து விட்டிருந்தது.

நகரசபைத் தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டு பிரச்சாரங்களும் முடுக்கி விடப்பட்டிருந்தன. இந்தப் பிரச்சார மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்காக கொள்கை கோட்பாடுகள் எதுவும் இல்லாதிருந்த இந்த அரசியல் வியாபாரிகளுக்கு காத்தான்குடி வைத்தியசாலை ஒரு சிறந்த பிடியாக அமைந்தது.

அதன் பின்னர் அவர்கள் அதற்கான கதை, திரைக் கதை, வசனம், டைரக்ஷன் என எல்லாவற்றையும் மேற்கொண்டு பொய்களையும், புரட்டுக்களையும் தாராளமாகக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தனர்.

அரசியலில் புளுகுகளையும், பொய் பேசுவதைமே மூலதனமாகக் கொண்ட நமது அரசியல்வாதி தனது மூலஸ்தானத்திலிருந்து கொண்டு நாளாந்தம் ஒவ்வொரு கதைகளைக் கட்டிவிட அவரது பின்தோன்றல்கள் அதை அள்ளி வந்து ஊர் மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தனர்.

அவைகளை சிலர் நம்பினர். சிலர் நம்ப மறுத்தனர். பலர் குழப்பமடைந்தனர். ஆனால் நமது அரசியல்வாதியோ எதற்கும் சளைத்தவரல்லவே? அவரும் அன்றாடம் புதுப்புதுக் கதைகளையளந்தார். மக்களையும் காடையர்களாக்கி விட விடாமல் முயன்றார்.

அத்தனையும் சுத்தமான பத்தரை மாற்றுப் பச்சைப் பொய்கள்! அழகாக இட்டுக்கட்டப்பட்ட அபத்தங்கள்!! இறைவனை மறந்த இறுமாப்புக் கட்டவிழ்ப்புக்கள்!!

காத்தான்குடிக்கு வைத்தியசாலை வருவதை நான் தடுப்பதற்கு முயற்சி செய்வதாகவும், ஏனைய இனத்தவரோடு சேர்ந்து அதனைத் தடுத்தே விட்டதாகவும், அந்த அரசியல்வாதிதான் அங்கிங்கென ஓடியாடி அதனைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேடைகளில் பீற்றினார். அவரது அரசியல் வாரிசுகளும் அதே பாணியிலேயே அவரைத் தொடர்ந்தனர்.

இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் முதுகெலும்பில்லாதவன்தான் பயப்படுவான். மூளை இல்லாதவன்தான் அவரது கதையளப்புக்களை நம்புவான் எனக் கூறிக் கொண்டு நானும் பிரச்சார மேடைகளில் துணிந்து நின்று தொடர் விளக்கங்களைக் கொடுத்து வந்தேன்.

எனது விளக்கத்தால் மக்களுக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. இன்னமும் வைத்தியசாலை தொடர்பாக மேடைப் பேச்சுக்கள் தொடருமாயின் நமது மக்களுக்கு முழு உண்மைகளும் தெரிய வந்துவிடும் என்றஞ்சிய அரசியல்வாதியும் அவரது எடுபிடிகளும் மேடைப் பேச்சுக்களைத் தவிர்த்து பேனாமுனையால் தமது பொட்டலங்களைக் கட்டவிழ்க்க முயன்றனர்.

முகங் காட்டாத மொட்டைகளும், முகவரி இல்லாத திடீர் இஸ்லாமிய அமைப்புக்களும் காலையிலும் மாலையிலுமாக பிரசுரங்களை வெளியிட்டு ஊரை நிறைத்தன.

உணர்சியைக் கிளறும் சுலோகங்களுடன் பெரும் பெரும் போஸ்டர்கள் சுவரெங்கும் இரவோடிரவாக கைக்கூலிகளைக் கொண்டு ஒட்டப்பட்டன.

‘யஹூதி றஸாராக்கள் வந்து விட்டார்கள்! காபிர்களுடன் சேர்ந்து காத்தான்குடி வைத்தியசாலையைத் தடுத்து விட்டார்கள்!!’

‘நல்லாட்சிக் கூட்டத்திற்கு சாவுமணியடிப்போம்’

‘நோர்வே பணம் தருகிறது! அரசாங்கம் அனுமதி தருகிறது!! இவர்கள் ஏன் தடுக்கிறார்கள்?’ என்றெல்லாம் பலவேறு விதமாக எமது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான சுலோகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஊரில் திரும்பும் திசையெங்கும் ஒட்டப்பட்டு அத்தனை மதிற் சுவர்களையுமே அசிங்கப்படுத்தினர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் போஸ்டர்கள் எழுதப்பட்ட இடமோ மக்கள் போற்றிய ஒரு பிரதான வேட்பாளரின் இல்லத்திலாகும்.

இதற்கு உறுதுணையாக இருந்தவர்களோ இஸ்லாமிய அறிவியற் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதாகக் கூறிய பலர்.  இதில் ஒரு தௌஹீத் பேசும் உலமாவும் அவரின் சகாக்களும் கூட உள்ளடக்கம்.

அவதூறுகளுக்கும், அபாண்டங்களுக்கும் கூட்டம் சேர்த்து உயிரூட்டினர். இம்மையில் இவர்கள் நம்மோடு இணையாவிட்டாலும் மறுமையில் நிச்சயமாக இவர்களும் நம்மோடு சேர்ந்தேதான் விசாரணைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இவற்றையெல்லாம் நாம் அல்லாஹ்விடமே பாரப்படுத்தினோம்.

இந்த வைத்தியசாலை பற்றிய விடயம் ஒன்றுதான் அந்த நகரசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தாரக மந்திரமாக அந்த அரசியல்வாதியாலும், அவரது அடி வருடிகளாலும் அவர்களின் பிரச்சார மேடைகளில் ஒப்பாரிக்கப்பட்டு வந்தன.

அவர்களின் அணியைச் சேர்ந்த இன்னும் சில வேட்பாளர்கள் இதிலுள்ள உண்மைத்  தன்மையினை அறிந்து கொண்டு எம்மை அபாண்டமாக வசைபாடாமல் இறுதிவரை மௌனமாகவே இருந்தனர்.

சில முக்கிய புள்ளிகள் என்னிடம் தனிப்பட்ட ரீதியில் தமது மன வியாகூலங்களை வெளியிட்டு தங்களால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளதாக அவர்களின் கையாலாகத்தனத்தையும் சுட்டிக் காட்டினர்.

இது சூடான தலைப்பாக ஊரெல்லாம் பேசப்பட்டது. வழமைபோல் எமது மக்களும் வெறும் அவதானிகளாகவே இருந்தனர். எந்தவொரு பொதுமகனும் உண்மைய அறிவதற்கு ஆர்வமாய் இருக்கவில்லை.

ஏனெனில் இவ்வூரிலுள்ள எந்தவொரு பொதுமகனும் இந்த ஆஸ்பத்திரி விடயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்கு இன்று வரைக்கும் என்னிடம்  எந்தக் கேள்வியையும் கேட்க முன்வர வில்லை. நமது அரசியல்வாதியின் பொய்யும், புரட்டும் பற்றி அவர்கள் அறிந்திருந்ததாலோ அல்லது நமக்கேன் இந்த வீண் வம்பு என்கிற பொதுப் புத்தியாலோ தெரியாது.

ஆனால் அந்த அரசியல்வாதியோ தனது பேச்சுக்கு புதிது புதிதாக வலுச் சேர்த்துக் கொண்டே இருந்தார். மக்கள் நம்பக்கூடிய வகையில் தினமொரு கதையைக் கட்டவிழ்த்துக் கொண்டே வந்தார். அதற்கு உதாரணமாக அவர் அவிழ்த்தவற்றில் ஒன்றை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஒரு மேடையில் அவர் சொன்னார்:

 ‘டொக்டர் இந்த வைத்தியசாலையை இங்கு வராமல் தடுப்பதற்கு கடுமையாக முயற்சிக்கிறாரு… காலையில என்ன செய்கிறாரு.. நம்ம உதவிப் பிரதேச செயலாளரிடம் கையெழுத்து வாங்க ஓடுறாரு… அவட கையெழுத்த எடுத்துக்கிட்டு மட்டக்களப்பிலுள்ள  RDHS ஒப்பீசுக்கு போறாரு. அங்க போய் கடிதத்தைக் கொடுத்து.. பாருங்க  D.S.க்கும் விருப்பமில்ல.. அதனால ஹொஸ்பிடல்ல நிப்பாட்டுங்க என வேண்டுகோள் விடுறாரு..’

-இப்படி ஏராளமான இட்டுக்கட்டுக்கள் அவரால் அக் காலப்பகுதியில் மூட்டை மூட்டையாக பல பிரச்சார மேடைகளில், பெண்களுக்கான கருத்தரங்குகளில்  அவிழ்க்கப்பட்டன.

இதில் நகைச்சுவையான விடயமென்னவென்றால், அவர் குறிப்பிட்ட அப்பெண் உதவிப் பிரதேச செயலாளரை அதுவரை நான் கண்டது கூடக் கிடையாது என்பதுதான்.

அவ்வாறு அவர் இட்டுக்கட்டிப் பேசியதற்கு அடுத்த நாள் எனது நண்பர் ஒருவருடன் அந்தப் பெண் உதவிப் பிரதேச செயலாளரைச் சந்திக்கச் சென்றேன்.

அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டபோது, ‘ஓ! நீங்கள்தானா அந்த டொக்டர்? நம்மைப் பற்றித்தானே பெரிய பேச்செல்லாம் உங்கள் ஊரில் பேசப் படுகிறதாம்?’ என்றவாறு புன்னகைத்துக் கொண்டே கேட்டார்.

‘ஆமாம். அதுதொடர்பாகத்தான் நாங்களும் உங்களுடன் பேசுவதற்கு வந்துள்ளோம்’ என்று உரையாடத் தொடங்கினோம். அந்த உரையாடலின்போது அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.

‘உங்களது ஊர் மக்கள் ஒரு விடயத்தை யாராவது சொன்னால் அதை அப்படியே நம்பி விடுகிறார்கள். அது உண்மையா? பொய்யா? என விசாரித்துப் பார்ப்பதும் கிடையாது. அதை அப்படியே நம்புவது மட்டுமில்லாமல் அதற்கு தமது கருத்தையும் வெளியிட்டு அதனடிப்படையில் செயற்பட்டும் விடுகிறார்கள்’

இவ்வாறு அவர் கூறியதும் நமது புனித அல்குர்ஆன் சொல்கின்ற ‘கேள்விப்பட்தையெல்லாம் நம்பி விடாதீர்கள்’  என்ற கட்டளைதான் நினைவுக்கு வந்தது. அதுமட்டுமல்ல, ஏனைய சமூகத்தின் நமது சமூகம் தொடர்பான மதிப்பீடும் விளங்கியது.

அதனை நிரூபிக்கும் வகையில்தான் அடுத்த சில நாட்களில் நமது சகோதரர்களும் இங்கு செயற்படத் தொடங்கினார்கள்.

நமது அரசியல்வாதியின் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே கேள்வி பார்வையின்றி குருட்டுத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் உள் வாங்கிக் ஒரு கூட்டம் கற்களோடும், தடிகளோடும் ஒரு பின்னிரவில் எனது வீடு நோக்கிப் படையெடுத்தது. என்னை ஒழித்துக் கட்டுவதாகக் கோஷமிட்டவாறே அக்கூலிக் கூட்டம் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.   

 (உண்மைகள் வெளிவரும்)

செலிங்கோ கடனாளிகளை நரக வேதனையில் இருந்து காப்பாற்ற நமது சம்மேளனமும் ஜம்அய்யாவும் நடவடிக்கை எடுக்குமா?

கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையில் பிரசுரமான ‘செலிங்கோவும் நமது சம்மேளனமும்’ என்ற தலைப்பிலான செய்தியை எமது இணையதளத்தில் வாசித்த நமதூரைச் சேர்ந்த கொழும்மில் வசித்துவரும் சகோதரர் ஒருவர் அச்செய்தி தொடர்பான தனது கருத்துக்களை அவரது மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்துள்ளதுடன் தன்னுடையதும், தனது காத்தான்குடியிலுள்ள குடும்ப உறவினர்களினதும் பாதுகாப்பைக் கருதி தனது பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ வெளிப்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளுக்கமைய அவரது கருத்துக்கள் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஏனைய வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படும்.    -பிரதம ஆசிரியர்

……………………

தற்போது சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சராகப் பதவி வகித்து வரும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவராகப் பதவி வகித்தபோது அப்பதவி அதிகாரத்தை தனது அந்தஸ்தாகப் பிரயோகித்து வழங்கிய  பரிந்துரைகளின் பேரில் அவரது மனைவியின் பெயரில் செலிங்கோ புரொஃபிட் செயார் நிறுவனமானது 83 மில்லியன் அல்லது எட்டுக் கோடி முப்பது இலட்சம் ரூபா நிதியினை அவரது பல் வேறு வியாபார நோக்கங்களுக்காக கடனாக வழங்கியிருந்தது.

இது மூன்று வருடங்களுக்கு முற்பட்ட கதை!

இவ்வுண்மையை ‘சண்டே லீடர்’ பத்திரிகை ‘இந்த வாரம் – விசாரணைக் கூண்டில் ஹிஸ்புல்லாஹ்’ என்ற தலைப்பில் 2009.09.13ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், நவமணி மற்றும் வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகை களும், ‘வார உரைகல்’லும் இவ்விவகாரம் தொடர்பில் வெளிவந்த எல்லா ஆவணங்களுடனும் இப்பெருந்தொகைக் கடனுக்கு தற்போதைய பிரதியமைச்சரான ஹிஸ்புல்லாஹ் பரிந்துரையும், பிணையும் வழங்கியிருந்தார் என்ற உண்மையை நிரூபித்து செய்திகளை வெளியிட்டிருந்தன.

தனது மனைவிக்கு வழங்கப்படுகின்ற இக்கடன் தொகைகளை அவர் திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஏழு நாட்களுக்குள் தான் அதனை மீளச் செலுத்துவதாக செலிங்கோ ப்ரொஃபிட் செயார் நிறுவனத்தின் கடன் பத்திரங்களிலும், அவரால் வழங்கப்பட்ட பரிந்துரைக் கடிதங்களிலும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்  கையொப்பமிட்டிருந்தார். Continue reading

அல்மனார் அறிவியற் கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் விடுமுறை குறித்து பெற்றோர் விசனம்

காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி நிர்வாகம், ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அதன் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரு வார கால விடுமுறை குறித்து பெற்றோர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் கடந்த 11ம் திகதியன்றே ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை என்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மீண்டும் இம்மாதம் 27ம் திகதியே (நாளை) கல்லூரி திறக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதன்படி இப்பெருநாளுக்காக இரண்டு வாரங்கள் இம்மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இன்னும் இரு வாரங்களில் நடைபெறவுள்ள க.பொ.த. (சா/த) பரீட்சையை எதிர்நோக்கும் இக்கல்லூரி மாணவர்கள் இந்நீண்ட விடுமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றார் தரப்பில் கடுமையான விசனங்கள் தெரிவிக்கப்பட்டன. Continue reading

காணாமல் போன நினைவுக்கல் குறித்து பொலீஸில் முறைப்பாடு செய்யத் தயங்குவது ஏன்?

காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் புனித பிரதேசத்திற்கான நுழைவாசல் நினைவுக்கல் கடந்த 04ம் திகதியன்று மாண்புமிகு பிரதமர் தி.மு. ஜயரட்ண அவர்களினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

இந்நிகழ்வு புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சினால் ஒரு உத்தியோகபூர்வமான அரச வைபவமாக அவ்வமைச்சின் செயலாளர் திரு. எச்.பி. கேசியன் ஹேரத் மற்றும் தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் திரு.ஜே.எம்.எல். ஜெயசேகர ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றதுடன் இவ்வைபவம் தொடர்பாக விநியோகிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ்கள் அரச இலச்சினையுடன் அச்சிடப்பட்டும் பரவலாக  விநியோகிக்கப்பட்டன.

நமது பிரதேசத்தின் சகலதுறை அபிவிருத்திப் பணிகளிலும் அயராத முயற்சியெடுத்து வரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் பாரியதொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு நடைபெற்றது. Continue reading

காத்தான்குடி வைத்திய சாலை: உண்மையைப் பேசுகிறது – அங்கம்: 4

Dr.I.L.M. றிபாஸ் MBBS M.Sc (Med. Admin)

கடந்த வாரம்…

… கிடைக்கவிருக்கின்ற இடம் வெறும் 40 பேச்சர்ஸ் அளவிலான காணிதான் என்பதால் மாடிக் கட்டிடங்கள் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று அந்த முடிவுக்கு வருவோ மெனத் தீர்மானித்தோம்.

இந்த வாரம்…

ஆயினும் வைத்தியசாலையொன்று பல மாடிக் கட்டிடங்களாக அமைந்து விட்டால் சரி என்பதையும் தாண்டி, ஒரு வைத்தியசாலைக்குத் தேவையாக இருக்க வேண்டிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு, சத்திர சகிச்சைக் கூட அமைவிடம், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தங்குமிடம் போன்ற பிரச்சினைகளாலும், இவற்றுக்கெல்லாம் மேலாக எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற அபிவிருத்திகளையும், தேவைகளையும் சமாளிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றியும், பல மாடிக் கட்டிடங்களாக அமைகின்றபோது (லிப்ட்) உயர்த்தி வசதிகளிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் எனது கருத்தினை நான் தெரிவித்தேன்.

அதனை அந்த உயர் அதிகாரியும் ஏற்றுக் கொண்டார்.  எனவே மேலதிக இடங்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் பற்றி மேலும் கலந்தாலோசிப்பது எனவும், தற்போதுள்ள இடத்திற்கு அமைவாக வரை படம் ஒன்றினை வரைவது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தின் பின்னர் எனது கருத்துக்களை அந்த அரசியல்வாதியிடம் பகிர்ந்து கொண்டேன்.

அதற்கு அவரும், ‘தற்போது தரும் இடத்தை எடுப்போம். தேவைப்பட்டால் மீதியாகவுள்ள மதரசாவின் காணியையும் பின்னர் எடுத்துக் கொள்ளலாம்’ எனக் கூறியதோடு ‘அருகிலுள்ள பொது விளையாட்டு மைதானத்திலும் தேவையேற்பட்டால் சுவீகரித்துக்  கொள்ளலாம்’ எனக் குறிபபிட்டதுடன் அவரது இந்தக் கருத்தினை சம்மேளனத்திலும் கதைத்துப் பார்ப்போம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி சம்மேளன உறுப்பினர்கள் மத்ரஸா நிருவாகிகளோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இதுபற்றி ஆலோசித்தபோது சம்மேளனத்தின் உப தலைவர் ‘அப்படியெல்லாம் சுவீகரிக்க முடியாது. இவ்வளவு தந்ததே பெரிய விடயம்’ எனக் கடுப்புடன் கூறினார்.

இதன் பின்னர் அரச பொறியியலார்கள் சங்கத்தினால் உத்தேச வைத்தியசாலை தொடர்பான வரை படம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

அது ஆறு மாடிக் கட்டிட அமைவிடத்தைக் கொண்ட ஒரு ஒற்றைக் கட்டிடத் தொகுதி அமைப்பாக இருந்தது. அதில் வைத்தியசாலைப் பிரிவுகள் தொடர்பான குறிப்புகளும் காணப்பட்டன.

கழிவகற்றல், நீர் வழங்கல் தொடர்பான விடயங்கள் அவ்வளவு தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.  இந்த வரைபடம் சுகாதார அமைச்சிற்கு அனுப்பப்பட்டிருப்ப தாகவும், சுகாதார அமைச்சின் ஒப்புதலின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் இடம்பெறுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின் வைத்தியசாலைப் புனர்நிர்மாணம் தொடர்பான வேலைகள் தேக்கமடைந்தன. கவனிப்பாரற்ற நிலைக்கும், கண்டு கொள்ளப்படாத நிலைக்கும் வைத்தியசாலை புனர்நிர்மாண நடவடிக்கைகள் உள்ளாயின.

வாசிக சாலையில் இயங்கும் தற்காலிக வைத்தியசாலையே நிரந்தரமாகி விடுமோ என்கின்ற அச்ச நிலை உருவானது.

நமது அரசியல்வாதியும் புதிய கட்சியில் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்க, நாட்டிலும் அரசியல் மாற்றங்கள் பல நிகழ்ந்தன.

அரசின் பொறியியலாளர் சங்கத்திடமிருந்தோ சுகாதார அமைச்சிடமிருந்தோ நமது அரசியற் பிரமுகரிடமிருந்தோ எந்த சமிஞ்சைகளும் வரவில்லை.

புதிய அரசாங்கம் கரையோரப் பாதுகாப்பு வலயம் என்கின்ற நிலைப்பாட்டினை படிப்படியாக குறுக்கி 100 மீட்டர் என்கின்ற அளவிற்கு கொண்டு வந்தது. ஆயினும் அந்த 100 மீட்டர் என்கின்ற அளவிலும்கூட கண்டிப்பாக இருக்கவில்லை.

காத்தான்குடி தற்காலிக வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியை கட்டித் தந்த மர்லின் நிறுவனம் வேறு ஏதும் வைத்தியசாலைக் கட்டிடங்கள் தொடர்பான தேவைகள் இருப்பின் செய்வதற்கு தயாராக இருந்தது.

ஆனால் காத்தான்குடி போன்ற பெரிய வைத்தியசாலைக்கு முழுவதுமான நிதி ஒதுக்கீடு செய்ய போதுமான நிதி வளம் தங்களிடம் இல்லை எனவும் அது உறுதியாகத் தெரிவித்து விட்டது.

எனவே அவர்களது நிதி ஒதுக்கீட்டை பாவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாலமுனையில் சேதமடைந்திருந்த மத்திய மருந்தகத்தை வேறோர் இடத்தில் கட்டித்தருமாறும்,  அதனை மத்திய மருந்தகம் மற்றும் மகப்பேற்று மனையாகத் தரமுயர்த்தித் தருமாறும்  கோரிக்கையொன்றினை மேர்வின் நிறுவனத்திற்கு அவசர அவசரமாக வெறும் கையெழுத்துப் பிரதியாக வழங்கிவிட்டு, பாலமுனைக்குச் சென்று அங்கு வைத்திய நிருவாகியாகவும், வைத்தியராகவும் தற்காலிகமாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண் வைத்தியரிடம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தினேன்.

அத்தோடு பாலமுனைக் கிராமத்தின் முக்கியஸ்தர்களோடு ஒரு சந்திப்பினையும் ஏற்பாடு செய்து அதில் மேர்லின் நிறுவனத்தினுடனான எனது அனுபவம் தொடர்பாகவும் அவர்களுக்கு விளக்கி அவசரமாக ஒரு காணியைக் கண்டுபிடிக்குமாறும் கூறினேன். 

பின்னர் அதற்கான காணியும் அவ்வூர்ப் பிரமுகர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையும் தரமுயர்த்தப்பட்டதுடன் கட்டிடமும் சுமார் ஒன்றரைக் கோடி ருபாய் செலவில்  கட்டி முடிக்கப்பட்டு திறந்தும் வைக்கப்பட்டது.

அதற்காக நான் எடுத்த நடவடிக்கைகளை எல்லாம் சொல்வதென்றால் அது ஒரு தனிக் கதையாக அமைந்து விடும். அதற்கெல்லாம் பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபராகவுள்ள சகோதரர் அப்துல் ஜவாத் அவர்கள் சாட்சி பகர்வார். 

இங்கு இந்த விடயத்தை நான் குறிப்பிட்டதன் நோக்கம், ஒரு அபிவிருத்தி என்பது அரசியல் தலையீட்டினால்தான் நடைபெற முடியும் என்பதும், அதுவும் தன்னால் மாத்திரம்தான் அதைச் செய்ய முடியும் என்கின்ற தற்பெருமை அரசியல்வாதிகளின் ஏமாற்றுத் தந்திரோபாய அரசியல் வியாபாரத்தின் முகத்திரையை கிழிப்பதற்கான ஒரு உதாரணத்திற்காகவுமேயாகும்.

நமது கதைக்கு மீண்டும் நாம் வருவோம்.

இவ்வாறாக காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்து ஏதும் அரசியல் ஆதாயம் தேட முடியாத தேங்கு நிலையான இடைக்காலம் சுமார் ஒரு வருடம் வரை நீடித்தது.

நமது அரசியல்வாதியும் அவரது அரசியல் காய் நகர்த்தல்களிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். வைத்தியசாலையின் புனர்நிர்மாணமும் முடங்கிப் போய் இருந்தது.

இவ்வேளையில் நமது காத்தான்குடி வைத்திய சாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியொன்று அரேபிய நிறுவனம் ஒன்றினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதனை எப்படியோ மோப்பம் பிடித்த நமது அரசியல்வாதி திடீரென்று ஒரு நாள் என் முன் தோற்றமளித்தார். வழமை போல் பல விளக்கங்கள்  அவர் அளித்தார். அதே வழமை போன்று நாங்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் திறப்பு அந்நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்டிருந்த அரபி ஒருவரால் என்னிடம் கையளிக்கப்பட்டது.

அதனை மீண்டும் என்னிடமிருந்து வாங்கி நமது அரசியல்வாதியும் கையளித்தார். ஒரே திறப்பை இரு முறை பெற்ற நானும் போட்டோவிற்கு போஸ் கொடுத்தேன்.

காத்தான்குடி வைத்தியசாலையின் புனர் நிர்மாணப்பணிகள் தொடர்பாக மீண்டும் வெகு நாட்களுக்குப் பின்னர் நோர்வே செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை அழைத்துக் கொண்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்.

நமது வைத்தியசாலைக் கட்டிடம் தொடர்பான வேலைகள் மீளவும் புத்துயிர் பெற்றன. அப்போது நமது அரசியல்வாதியின் அக்கறையும், தலையீடுகளும் இருக்கவில்லை.

இதனால் பழைய இடத்திலேயே வைத்தியசாலை அமைய வேண்டுமென்று சுகாதார அமைச்சும், நாங்களும் விரும்பினோம்.

விசாலமான நிலப்பரப்பு. ஊருக்கு மத்தியில் இல்லாமல் காற்றோட்டமான அமைதியான சூழல் அமைவிடம் என்கின்ற வைத்திசாலையின் நியமங்களுக்கு அமைவாகவும், ஏலவே அந்த இடம் வைத்திசாலைக்குரிய காணியே என்பதாலும், மத்ரசாவின் காணியைச் சுவீகரிக்கும்போது அதற்குரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்குரிய எந்த ஏற்பாடுகளும் சுகாதார அமைச்சில் இருக்கவில்லை என்பதாலும் வைத்தியசாலையை மீண்டும் பழைய இடத்திலேயே நிறுவுவதெனத் தீர்மானம் மேற்கொள் ளப்பட்டது.

450 மில்லியன் ருபாவினை நோர்வேயின் செஞ்சிலுவைச் சங்கம் ஒதுக்கியது. அதற்கான வரைபடம் மற்றும் ஏனைய வேலைகளில் நானும் ஒரு அங்கத்தவனாக இணைந்து பங்களிப்புக்களைச் செய்தேன்.

அப்போதெல்லாம் நமது அரசியல்வாதிக்கு நமது வைத்தியசாலை பற்றி எந்த ஆர்வமோ அக்கறையோ இருக்கவில்லை. மாறாக எதிர்க் கருத்துக்களும் கூட இருக்கவில்லை.

ஆனால் நகரசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பும் அதன் பின்னரான நிகழ்வுகளும் நமது அரசியல்வாதிக்கு புதிய அரிப்பினை ஏற்படுத்த வைத்தியசாலை தொடர்பாக மீண்டும் அவர் அக்கறை கொண்டார்.

அதன் பின்னர் கதை, வசனம், திரைக்கதை, டைரக்ஷன், தயாரிப்பு என அவரது பாணியில் வைத்தியசாலையை மீளக் கட்டியெழுப்புதல் தொடர்பான விடயங்களிலும் மூக்கை நுழைத்தார். இதனால் மீண்டும் வைத்தியசாலைக் கட்டிட வேலைகளும் இழுபட ஆரம்பித்தன.

(இன்ஸா அல்லாஹ் இன்னும் வரும்)

காழி நீதிபதி காலித் ஹாஜியாரா? கரீம் ஹாஜியாரா?

முன்னாள் காழி நீதிபதி எம்.ரி.எம். காலித் ஹாஜியார் தற்போதும் தனது பெருடன் ‘காழி நீதிபதி’ என்ற பதவி அந்தஸ்தைப் பயன்படுத்தி என்னென்ன தில்லு முல்லுகளைச் செய்து வருகின்றார்? என இந்நாள் காழி நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் ‘வார உரைகல்’ லுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் காழி நீதிபதி, கடந்த செப்டம்பர் மாதம் 29ம் திகதி தனக்கு எழுதியுள்ள அவரது கடிதத் தலைப்பில் அவரது பெயருடன் தான் இன்னமும் மண்முனைப்பற்று, எருவில் போரதீவுப்பற்று மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ‘காழி நீதிபதி’ (Qazi) யாகவே கடமையாற்றும் தோரணையில் அவரது பெயர் முகவரியைக் குறிப்பிட்டுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ள இந்நாள் காழிநீதிபதி அல்ஹாஜ் மஹ்றூப் கரீம்,

இச்செயற்பாடானது அரசாங்கத்தையும், நீதித்துறையையும், பொது மக்களையும், சிவில் சமூக நிறுவனங்களையும் பகிரங்கமாகவே ஏமாற்றிவரும் ஒரு பதவி அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கையாகும் எனவும் குற்றஞ் சாட்டியுள்ளார்.

மேற்படி முறைகேடானதும், சட்டவிரேதமுமான கடிதத் தலைப்பில் காதி நீதிமன்ற விடயங்கள் தொடர்பாக எனக்குக் கடிதம் எழுதியுள்ள அவர், அதில் எந்தவொரு இடத்திலும் என்னைக் காதிநீதிபதி எனக் குறிப்பிடவில்லை என்றும், இதன் மூலம் என்னிடமும் கூட அவரேதான் இன்னமும் காதிநீதிபதியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ள இந்நாள் காதிநீதிபதி ‘வார உரைகல்’லுக்கு விடுத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: Continue reading

செலிங்கோவும் எமது சம்மேளனமும்

காத்தான்குடி பள்ளிவால்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செலிங்கோ வைப்பீட்டாளர் குழு, செலிங்கோ ப்ரொஃபிட் செயரிங் நிறுவனத்தின் காத்தான்குடிக் கிளையில் வைப்புச் செய்த வாடிக்கையாளர்களிடம் தற்போதும் பணம் வசூலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்மேளன செலிங்கோ வைப்பீட்டாளர் குழு முன்னரும் இவ்வாறு பாதிக்கப்பட்ட நமது வைப்பாளர்களிடம் பண அறவீடு செய்து முடக்கப்பட்டுள்ள அவர்களின் வைப்புக்களை மீளப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்திருந்தது.

இருந்த போதிலும், தேசிய ரீதியில் இயங்கி வரும் செலிங்கோ நிறுவனத்தில் வைப்புச் செய்து பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தினால் செலிங்கோ நிதி நிறுவனத்திலிருந்து 83 மில்லியன் என்றளவிலான பெருந்தொகைக் கடனைப் பெற்றுக் கொண்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்து வரும் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி றமீஸா சஹாப்தீன் என்பவரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் விடயமாக அவருக்குப் பிணையாக நின்ற முன்னாள் விமான நிலைய அதிகார சபைத் தலைவரும்,  இந்நாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை சம்மேளனத்திற்கு அழைத்து அவரது மனைவி பெற்றுள்ள கடனைத் திரும்பச் செலுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட நமதூர் வைப்பாளர்களின் வைப்புக்களை மீளளிக்க ஒத்துழைக்கக் கோருமாறு எழுத்து மூலமான வேண்டுகோளொன்றை விடுத்திருந்தபோது..

 சம்மேளன நிர்வாகம், அது செலிங்கோவுக்கும் தனிப்பட்ட கடனாளிக்கும் உள்ள பிரச்சினை எனக் காரணம் கூறி எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்வேண்டுகோளைப் புறக்கணித்திருந்தது. Continue reading

எதிரிகளின் வதந்திகளும் எதிர்கால எண்ணங்களும் – ஆசிரியர் எழுத்து பதிவு: 159

கடந்த மூன்று வாரங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றி உங்களின் அபிமான ‘வார உரைகல்’ வெளியிடப்படாததற்காக முதலில் அன்பு வாசகப் பெருமக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.

இம்மூன்று வாரங்களிலும் ‘வார உரைகல்’ லைப் பெறுவதற்காக விற்பனையாளர்களை நாடிச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய உள்ளுர் வாசகர்களுக்கும், இணையதளத்தில் புதிய செய்திகளைத் தேடி அலுத்துக்கொண்ட இணையதள வாசகர்களுக்கும் ஏற்பட்ட  சிரமங்களுக்காக எனது வருத்தைத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்காலப் பகுதியில் பலவிதமான வதந்திகள் தந்திகளை விடவும் வேகமாக ‘வார உரைகல்’ லுக்கு எதிராக சில விஷமிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும் என்னால் அறிய முடிந்தது.

ஏதோ ‘வார உரைகல்’ வெளியீட்டைத் தடைசெய்ய முயற்சித்து வரும் சில தலைகளுக்கு மூன்று வாரங்கள் அது வெளிவராதது ‘வயிறு ஊதியவனுக்கு காற்றுப் போனால் போல’ ஒரு இடைக்கால ஆறுதலைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Continue reading