Archive for the ‘ மரண அறிவித்தல்கள் ’ Category

புதிய காத்தான்குடியின் தோற்றத்திற்கு முன்னின்ற றம்ளார் ஜே.பி. காலமானார்!

rmalar-jp1 புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும், புதிய காத்தான்குடி கிராமோதய சபையின் தலைவருமான ஜனாப் மீராசாஹிபு ஆதம்லெப்பை (றம்ளார் ஜே.பி) அவர்கள் கடந்த 03ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் போதனா வைத்தியசாலையில் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). மரணிக்கும்போது அவருக்கு வயது: 64.

கிழக்காசியாவிலேயே குறைந்த நிலப்பரப்பில் கூடுதலான சனத்தொகை கொண்ட காத்தான்குடியுடன் இணைந்திருந்த புதிய காத்தான்குடிப் பிரதேசத்தை தனியாகப் பிரித்து ஒரு குடியேற்றப் பிரதேசமாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளையும் அப்போதைய அரசியல் தலைவர்களுடன் இணைந்து இவர் மேற்கொண்டார்.

ஆரம்பத்தில் பதுரியா தைக்காப் பள்ளிவாசலாக இருந்த இன்றைய பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயலில் புதிய காத்தான்குடி மக்களின் நலன் கருதி ஜும்ஆவை ஆரம்பிக்கவும் இவர் கால்கோளாகத் திகழ்ந்தார். அப்பள்ளிவாயலின் தலைவராக ஒரு தசாப்த காலமும், செயலாளராக இன்னுமொரு தசாப்த காலமுமாக மொத்தம் இருபது வருட காலம் இவர் இப்பள்ளிவாயலிலேயே இறையில்ல சேவையை ஆற்றியுள்ளார்.

பதுரியா வித்தியாலயம் உருவாகுவதற்கும் இவர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கான மையவாடி நிலத்தை மீட்டெடுப்பதற்காக இவர் மட்டக்களப்பு நீதி மன்றத்தில் பல வழக்குகளைப் பேசி அதில் வெற்றியும் கண்டார். தீவிர ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரான இவர் பரீட் நகர், றிஸ்வி நகர் போன்ற புதிய குடியேற்றக் கிராமங்களை உருவாக்குவதற்கும் முன்னின்று செயலாற்றினார்.

10.05.1944ல் காத்தான்குடி முதலாம் குறிச்சியில் மர்ஹும்களான மீராசாகிபு-சௌரியத்தும்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர், இளமைக்காலத்தில் வலம்புரி சைக்கிளோட்ட வீரராக இம்மாவட்டத்தில் பிரகாசித்தார். ‘வார உரைகல்’ பத்திரிகையின் அபிமான வாசகரான இவரது மண்ணறை வாழ்வும், மறுமை வாழ்வும் அருளாக அமைய வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக!