Archive for the ‘ நூல்விமர்சனம் ’ Category

அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் மரணித்தாரா? மரணிக்கவில்லையா?

Asshaheed-Story-1-புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-

‘அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் மரணித்து விட்டார் என்று யாரும் சொல்லக்கூடாது’ என காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் மர்சூக் அஹ்மத் லெப்பை தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதியன்று வெளியிட்டு வைக்கப்பட்ட ‘அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் வாழவும் பணியும்’ எனும் நூலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்திருக்கின்றார். Continue reading

காத்தான்குடி சம்மேளனம் வெளியிட்ட அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியாரின் வரலாற்று நூலில் வரலாற்றுத் தவறு!

As-Shaheed-Ahmed-Lebbe-Book-பொறுப்பு வாய்ந்தவர்களை பதிலளிக்கக் கோருகின்றார் புவி றஹ்மதுழ்ழாஹ்-

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ‘அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் வாழ்வும் பணியும்’ என்ற அன்னாரது வாழ்க்கை வரலாற்று நூல் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி காத்தான்குடியில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நூல் வெளியீட்டுக்குழுவின் ஆலோசகராக சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், மூத்த பட்டதாரியுமாகிய சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல்.அப்துல் ஜவாத் பி.ஏ., எல்.எல்.பி அவர்களும், தலைவராக ‘கவிமணி’ அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்களும், செயலாளராக மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.எல்.ஏ. கபூர் பி.காம், பொருளாளராக பிரதேசக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம். சுபைர் பி.ஏ ஆகியோருடன் பின்வரும் பிரமுகர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். Continue reading

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் செய்தி மடல் – ஓர் கண்ணோட்டம்

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் (IFCEC), பெண்களுக்கான இக்ரஃ இஸ்லாமிய அழைப்பு மையம், பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை ஆகிய அமைப்புக்களின் அரையாண்டுப் பணிகள் பற்றிய சுருக்க விபரங்களைத் தாங்கிய செய்தி மடல் (NEWS LETTER) கண்கவர் வண்ணப்பதிப்பாக 4 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

‘எங்களால் இயலுமானதைச் செய்வோம் என்பதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்வோம்’ என்ற தலைப்புச் சுலோகத்துடன் CARE  கெயர்: ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி… என்ற பிரதான தலைப்புச் செய்தியுடன் இந்த 02வது செய்தி மடல் வெளிவந்துள்ளது.

நாம் வாழுகின்ற காத்தான்குடியானது சன அடர்த்தி மிக்க நகரம் என்ற வகையில் இங்கு நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மிகக் குறுகிய நிலப்பரப்பினுள் பாரிய சனத்தொகையினர் வாழும் சூழலானது பல்வேறு பௌதீக மற்றும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்ற அதே நேரம் கடந்த பல வருடங்களாக எம்மவர்களின் உள ஆரோக்கியத்திலும் இப்புறச்சூழல்களானது கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தொடங்கும் தலைப்புச் செய்தியானது, Continue reading

நூல் விமர்சனம்: ‘அந்நிக்காஹ்’ (விவாகம்) ஷரீஅத் சட்ட விளக்கம்

எழுத்துலகில் இன்னுமோர் நூல் அக்கரைப்பற்று மண்ணில் அவதாரம் பெற்று வாசகர் கரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அக்கரைப்பற்று உலமா சபையின் சங்கைமிகு தலைவரும்,  கிழக்கிலங்கை அறபிக் கல்லூரியின் அதிபராயிருந்த வருமான அஷ்ஷெய்க் அல் ஆலிம் அல் ஹாஜ்  எம்.எம்.ஏ. அப்துல் லத்தீப் (பஹ்ஜி) அவர்களின் எண்ணத்தில் தரித்து கைவண்ணத்தில் வெளியாகி யிருக்கும் இந்நூலின் தலைப்பு ‘அந்நிக்காஹ்’ விவாகம் (ஷரீஅத் சட்ட விளக்கங்கள்) என்பதாகும்.

‘எவருக்கு அல்லாஹ் நன்மையை  நாடுகின்றானோ அவருக்கு சன்மார்க்க விளக்கத்தைக் கொடுப்பான்’ என்ற நபிமொழியின் ஆரம்பத்தோடு முழுக்க முழுக்க அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும்,  முதுபெரும் இமாம்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் சுமார் முந்நூற்று முப்பத் தாறு பக்கங்களைக் கொண்டதாகும்.

அஸ்ஸெய்யித் மௌலானா மௌலவி எஸ்.வை. அஹ்மத் (பஹ்ஜி) அவர்களின் அறிமுகத்தோடும், திஹாரிய ஹஸனிய்யா அறபுக் கல்லூரியின் அதிபரும், சிறீ லங்கா ஷரீஆ கவுன்சிலின் உப தலைவரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவருமான உஸ்தாத் ஏ.எல்.எம். றிழா மக்தூமி B.A (ஹஸனி) அவர்களின் மதிப்புரையோடும், மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரியின் அதிபரும், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவருமான அல் ஆலிம் A.W.M.  றியாழ் (பாரி) அவர்களின் ஆசியுரையோடும், கத்தார் இஸ்லாமியப் பல்கலைக் கழக இணைப் பீடாதிபதி கலாநிதி அல்ஹாஜ் எம்.எம். தீன் முஹம்மத் (அல் அஸ்ஹரி) அவர்களது அணிந்துரையோடும், அக்கரைப்பற்று ஜின்னாஹ் வெளியீட்டகத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூலின் சிறப்புத்தரம்பற்றி  மேற்சொன்ன கல்விமான்களும், உலமாக்களும் அறிமுக உரை, அணிந்துரை, ஆசியுரை, மதிப்புரை ஆகியவற்றில் வழங்கியிருக்கும் தகைமைச் சான்றுகள் சாட்சி பகர்வனவாய் உள்ளன. இதனை, இந்நூலை வாசிப்போர் எவராலும் விளங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அந்தளவுக்கு தகுதிமிக்க நூல்களின் தொகுதியில் இதுவும் இடம்பிடித்து நிற்பது மிகுதியான கூற்றல்ல.

எழுத்துலகில் திருமணம் சம்பந்தமான நூற்கள் எத்தனையெத்தனை கோணங்களில் வெளியிடப்பட்டிருப்பினும்கூட சன்மார்க்கச் சட்ட விளக்க அடிப்படை யில் வெளியிடப்பட்ட தமிழ் மொழியிலான நூல்கள் மிகமிக அரிதென்றே கூற  வேண்டும். பொருளியல், சமூகவியல், உளவியல், உடலியல், சுகாதாரவியல், பாலியல், சனத்தொகை கோட்பாட்டியல் போன்ற பரிமாணத்  தளங்களில் நின்று திருமணம் சம்பந்தமான நூற்கள் பல வெளிவந்திருகின்ற நிலையில் ஷரீஆவை அடிப்படையாகக் கொண்டமைந்த நூற்கள் இல்லை என்ற வெற்றிடத்தை இன்ஷா அல்லாஹ் இந்நூல் ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன். அந்தளவிற்கு தேடல்களின் தொகுப்பாய் இந்நூல் தேறியிருக்கின்றது.

இந்நூலின் மற்றுமோர் விஷேடம் என்னவென்றால் விவாகத்தை மட்டும் இது விளக்குவதாய் அமையவில்லை. விவாகத்தோடு தொடர்புபட்ட தலாக்,  இத்தா போன்ற மார்க்கக் கடமைகளையும் தீர்க்கமாக விளக்கியிருக்கின்றது. திருமணம் என்பது வெறுமனே ஒரு சடங்கு என்ற தப்பான அனுமானத்திற்கு அப்பால் திருமணம் என்பது  ஒரு இபாதத் எனும் வணக்க வழிபாடு என்ற யதார்த்தத்தை இஸ்லாமிய மூலாதாரங்களை ஆதாரங்களாகக் கொண்டு இந்நூலை ஆவணப்படுத்தியிருக்கின்றார். இவ்வாறான ஆதாரச் சுருதிகளின் அடித்தளத்தில் நின்று ஆக்கப்பட்டிருக்கும் இந்நூல் இளைஞர், யுவதி, வயோதிபர், விதவை என்ற வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் படிக்கக்கூடிய விடயங்களைத்தாங்கி நிற்கின்றது. இது அந்நூலின் தனிச்சிறப்பு. மற்றும் இஸ்லாமிய சகோதரர் அல்லாத பிறமதச் சகோதரர்களும் படித்துப் பயன் பெறக்கூடிய முன்மாதிரிகள் இந்நூலில் முன் வைக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகத்தில் பொதிந்துள்ள சிறப்பம்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக உச்சரித்துக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு இந்நூல் அர்த்த புஷ்டியான விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. இந்நூலாசிரியர் அல்குர்ஆன், அல்ஹதீஸ் மற்றும் இமாம்களின் கருத்துக்களை தேடித் தெளிந்து எழுதிய தோடு மட்டும் நின்று விடாமல் வாசகர்கள் இலகுவாய் விளங்கிக் கொள்வதற்கான எத்தனங்கள் இரண்டை மேற்கொண்டிருக்கின்றார்.  ஒன்று, அவர் இந்நூலில் பிரயோகித்திருக்கும் எளிய மொழி நடை. மற்றொன்று உரையாடல் வடிவிலமைந்த வினாவுக்கு விடை கொடுக்கும் பாணியிலான விளக்கம். எம்மொவ்வொருவர் உள்ளத்திலும் உதிக்கின்ற வினாக்களை விவாகம் சார்ந்த சந்தேகங்களையெழுப்பி அவற்றிற்கான விடைகளையும் கொடுத்திருக்கின்றமை வாழைப்பழத்தின் தோலை உரித்து வாசகர்களுக்குக் கொடுக்கும் வரப்பிரசாதமாகக் கொள்ள முடியும்.

முந்நூற்று முப்பத்தாறு பக்கங்களைக்கொண்ட இந்நூலில் அறுநூறு பக்கங்களில் எழுதக்கூடிய காத்திரத் தன்மைகள் காணக் கிடைக்கின்றன. உள்ளடக்கத்தோடு மட்டும் இந்நூலின் உயர்ந்த தன்மையை மதிப்பிட்டுவிட முடியாது. இந்நூலின் வெளித் தோற்றமும்கூட மிகக் கச்சிதமாகக் காட்சி தருகின்றது. ஆம்! நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அச்சமைப்பு, அட்டை வடிவம் என்பன மெச்சும்படியாய் மேலோங்கிக் காணப்படுகின்றன.

விவாகம் என்கிற தமிழ்ப்பதம் பொதுவில் திருமணம், கலியாணம் என்கின்ற கருத்தைக் குறித்து நின்றாலும் முஸ்லிம்களின் திருமணத்திற்கு மட்டும் அது பரிச்சயமான ஒரு பதம் என்கிற ஒரு பிரமை எம் எல்லோரிடத்திலும் உள்ளது. அதனடிப்படை யில்தான் இந்நூலிற்கு இத்தலைப்பை இந்நூலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார் போலும். ஆம்! விவாகம் என்ற சொல்லை வாசித்ததும் எடுத்த எடுப்பிலேயே அதனை இஸ்லாமியத் திருமணம் என்று எம்மெல்லோராலும் எண்ணத் தோன்றுவது அத் தலைப்பின் தனிச்சிறப்பாகும். எனினும் ஆசிரியர் நூலின் அட்டையில் ‘ அந்நிக்காஹ்’ என்ற அறபுப் பதத்தையும் வெளிக்காட்டுவதன் மூலம் இது முஸ்லிம்களின் திருமணம் சம்பந்தமான நூல்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இந்நூல் வாங்கிவாசிப்பதற்கு மட்டுமன்றி தூய்மை யான வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருந்து எம் இல்லறத்தை நல்லறமாகவும் மாற்றவழிவகுக்கின்றது. மேலும் இந்நூல் திருமணம் செய்தோர்கள்,  செய்யவுள்ளோர்கள், விவாகரத்துச் செய்தோர்கள், விதவைகள் போன்றோரிடமிருந்து வரும் வினாக்களுக்கு விடையளிக்கும் தோரணையிலும் தோற்றம் பெற்றிருக்கின்றது.

அவற்றோடு மட்டும் இந்நூலின் முக்கியத்துவத்தை மட்டுப்படுத்தி விடமுடியாது. இன்று நாட்டின் கிராமப் புற மக்களுக்கு மத்தியில் விவாகம் சார்ந்த விழிப் புணர்வுகள் ஏற்படுத்தப்படாது இருக்கின்ற குறைவை இந்நூல் நிச்சயமாக நிவர்த்தி செய்யும்.  இந்தவகை யில் இந்நூலானது சகல பள்ளிவாசல்களிலும், ஒவ் வொரு காதி நீதிபதி காரியாலயங்களிலும், விவாகப் பதிவாளர்களிடமும், நூல் நிலையங்களிலும்,  விவாகத்தை நடாத்தி வைக்கின்ற ஒவ்வொரு கதீப்மார் களின் கைகளிலும் கை நூலாக இருக்க வேண்டிய தொன்றாகும்.

நேர்த்தியான பௌதீகக் கட்டமைப்பையும் காத்திர மான உள்ளடக்கத்தையும் 336 பக்கங்களைக் கொண்டதுமான இந்நூலின் விலை 300.00 ரூபா என்றால் சமகாலத்தில் அது ஓர் வியப்பான விடயம் தான். ஆம்! எவ்விதமான இலாப நோக்கமுமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மத்தியில் விவாகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மனதிற்கொண்டு அந்த மகத்தான பணியை இந்நூலாசிரியர் அஷ்ஷெய்க், அல் ஆலிம், அல் ஹாஜ் எம்.எம்.ஏ. அப்துல் லத்தீப் (பஹ்ஜி) அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார் என்றால் அது மிகையான கூற்றல்ல. அல்லாஹ் அவர் பணியைப் பொருந்திக்கொள்ள வேண்டும்.

உலமாக்கள் என்போர் வெறுமனே பயான் செய்பவர்களாக மட்டும் இருந்து விடாது தரமான எழுத்தாளர்களாகவும் மிளிர முடியும் என்பதை நிரூபித் துக் காட்டுவதாய் அமைந்துள்ள இந்த நூலின் உள்ளடக்கமான 150 விடயங்களும் 37 உசாத் துணை நூல்களிலிருந்து நூலாசான் அவர்களால் தேடியெடுக்கப்பட்டவை என்பது இலேசான காரியம் அல்ல. நூலாசான் அவர்களின் பாரிய முயற்சியின் பயனாக வெளிவந்திருக்கும் இச்சீரிய நூலானது நாம் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் என்பதில் இரண்டாம் பட்சமான கருத்திற்கு இடமேயில்லை.
 
விவாகம் சார்ந்த விடயங்களை ஒரே பார்வையில் அறிந்து கொள்வதற்குகந்த நூலாக ‘விவாகம்’ (அந் நிக்காஹ்) என்ற இந்நூல் விளங்குகின்றது.
விமர்சகர்: ‘அக்கரையூர் அப்துல் குத்தூஸ்’

‘சுவைத்திரள்’ 15வது ஆண்டிதழ் கிடைக்கப் பெற்றோம்!

suvai1 மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்புத் தமிழகத்தைத் தளமாகக் கொண்டு வெளிவரும் நகைச்சுவை இதழான ‘சுவைத் திரள்’ தனது பதினைந்தாவது வருடாந்த இதழை வலு கச்சிதமாக வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தாலும், இயற்கை அனர்த்தங்களாலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புச் சுமையாலும் அன்றாடம் கஷ்டப் படுகின்ற தமிழ்பேசும் மக்களை தங்கள் கவலைகளை மறந்து மனம் விட்டுச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற இச்சிரிப்புச் சஞ்சிகையானது, அச்சு ஊடக வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமானது; தனித்துவமானது; தனக்கான வாசகர் வங்கியை எக்காலமும் அங்கிங்கென கட்சி தாவாது தன்னகத்தே நிலையாகக் கொண்டிருப்பது.

சிரிப்பு, மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒளடதமாகும். தனியாக இருந்து வாய்விட்டுச் சிரிப்பதிலும், குடும்பத்துடன் சேர்ந்து குதூகலித்துச் சிரிப்பதிலும், நண்பர்கள் – உறவினர்களுடன் சேர்ந்து விமர்சித்துச் சிரிப்பதிலும் பல்வேறு குணபாடுகள் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படுகின்றன. வாய் விட்டுச் சிரித்தபின் சிந்தப்பதால் கிடைக்கும் அறிவு பசுமரத்தாணிபோல் நம் இதயங்களில் பதிவாகியும் விடுகின்றன. காலச்சக்கரத்தால் அழிக்க முடியாதவாறு அந்நகைச்சுவைகள் நம் வாழ்க்கையில் அவ்வப்போது தலைகாட்டி பல்வேறு படிப்பினைகளையும் தருகின்ற அருமருந்தாகவும் பயன்பட்டுக் கொண்டிருப்பதானது நிதர்சனமாகும்.

இதன் ஆசிரியரான ‘இலக்கியச்சுடர்’ திக்கவயல் திரு.சி. தர்மகுலசிங்கம் ஐயா அவர்கள், வயதால் முதிர்ந்தாலும் அவரது ஈடற்ற நகைச்சுவையால் இன்றும் அவர் இளமையோடிருப்பது மாத்திரமன்றி,  ‘தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கொப்ப தன் தமிழ்பேசும் சமூகத்தையும் என்றும் இளமையுடன் வைத்திருக்கவே இவ்வரிய பணியை பதினைந்து ஆண்டுகளாக விடாத்தொடராக மேற்கொண்டு வருகிறார் என்றே நான் கருதுகின்றேன். ‘துன்பப்படுவோன் சிரித்து மகிழல்’ என்கிற உயரிய சுலோகத்தையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு உழைத்துவரும் அவரது பணி தமிழ்கூறும் நல்லுலகால் என்றென்றும் மதிப்பிழந்து போகாது என்பது திண்ணமாகும்.

பதினைந்தாவது வருடாந்த இதழானது கண்கவர் வண்ண அட்டையுடன் 64 உள்ளகப் பக்கங்களுடன் மிகச் சிறப்பாகவும் சிரிப்பாகவும் மலர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! மிக ஆச்சரியமான விடயம் என்னவெனில், இந்த ஒளடதத்தின் விலை 50 ரூபா என்பதுதான்! அறுபத்து நான்கு பக்கங்களையும் சுவைத்து முடித்துவிட்டு ஒரே வரியில் இதனை விமர்சிப்பதென்றால் ‘ஆஹா! அபாரம்!!’ என்றே சொல்லலாம்.

நீங்களும் இதன் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சியும், சிரிப்பும் தாண்டவமாடும். சிந்திப்பும் அதிகரிக்கும் என நான் கருதுவதால் உங்கள் நலன் கருதி முகவரியைத் தருகின்றேன். சந்தாக்கள் ஏற்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆர்வலர்கள் தொடர்புகொண்டு தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள என்ன வழி? என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதோ முகவரி: ‘சுவைத்திரள்’, இல:24/1, பொன் தொழிலாளர் வீதி, மட்டக்களப்பு (ஸ்ரீலங்கா-30000) தொலைபேசி: 077- 900 4811.