இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் செய்தி மடல் – ஓர் கண்ணோட்டம்

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் (IFCEC), பெண்களுக்கான இக்ரஃ இஸ்லாமிய அழைப்பு மையம், பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை ஆகிய அமைப்புக்களின் அரையாண்டுப் பணிகள் பற்றிய சுருக்க விபரங்களைத் தாங்கிய செய்தி மடல் (NEWS LETTER) கண்கவர் வண்ணப்பதிப்பாக 4 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

‘எங்களால் இயலுமானதைச் செய்வோம் என்பதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்வோம்’ என்ற தலைப்புச் சுலோகத்துடன் CARE  கெயர்: ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி… என்ற பிரதான தலைப்புச் செய்தியுடன் இந்த 02வது செய்தி மடல் வெளிவந்துள்ளது.

நாம் வாழுகின்ற காத்தான்குடியானது சன அடர்த்தி மிக்க நகரம் என்ற வகையில் இங்கு நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மிகக் குறுகிய நிலப்பரப்பினுள் பாரிய சனத்தொகையினர் வாழும் சூழலானது பல்வேறு பௌதீக மற்றும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்ற அதே நேரம் கடந்த பல வருடங்களாக எம்மவர்களின் உள ஆரோக்கியத்திலும் இப்புறச்சூழல்களானது கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தொடங்கும் தலைப்புச் செய்தியானது,

இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எல்லாவகையான பௌதீக அபிவிருத்திகளையும் இம்மக்களின் உள ஆரோக்கியத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஏறுமுக நிலமையானது தகர்த்து அவற்றை பிரயோசனமற்றதாகவே ஆக்கிவிடும் என்ற எதிர்வுகூறலை முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்கின்றது.

இதற்கு மாற்றீடாக அல்லது இத்தாக்கத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கெயர் என்னும் கட்டமைப்பிலான சமூக உளவள அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை மிக விரைவில் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்ல செய்தியை இச்செய்தி மடல் நமக்கு முன்னறிவிப்பும் செய்துள்ளது.

நம் சமூகச் சிந்தனையாளர்களில் முன்னணி வகிக்கின்ற ஒருவரான அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி அவர்களைப் பணிப்பாளராகக் கொண்டியங்கும் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் 150 சிறார்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வைப் பற்றிய வண்ணப் படங்களுடனான சின்னஞ் சிறிய செய்தியொன்று பென்னம்பெரிய செய்தியொன்றை நமது சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதையும் முன்பக்கத்திலேயே அவதானிக்க முடிகின்றது.

இன்று வளர்ந்தவர்களான நம்மில் பெரும்பாலானோர் திருமணம், மருதோன்றி, கருத்தரங்கு, கலாசார விழா, அரசியல் பிரச்சாரம் போன்ற நிகழ்வுகளின்போது தொழுகையின் நினைவற்றவர்களாக அல்லது பின்னர் தொழலாம் என்ற பிற்படுத்தும் பொடுபோக்குடன் தம் பணிகளிலேயே முங்கிச் செயற்பட்டு வருவதைக் காணும் நாம்,

இந்தப் பிஞ்சு மனிதங்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலும் கடற்கரையில் பொழுது போக்கச் சென்ற அந்த உல்லாசப் பொழுதிலும் தொழுகையின் வேளை வந்து விடவே வல்ல அல்லாஹ்வை அஞ்சிப் பயந்து அவனுக்கு தலை தாழ்த்தி சுஜூதில் அடிபணிந்து கிடக்கின்ற தொழுகைக் காட்சி ‘சிறுவர்களால் பெரியோர் மாற்றம் பெறும் கால வருகைக்கு’ கட்டியம் கூறுவதாகத் தெரிகின்றது.

இரண்டாம் பக்கத்தை விரித்தால் IFCEC கழகத்தின் ஏழாவது மாநாட்டுப் படங்களும், செய்திக் குறிப்பும் நம் பார்வையை ஈர்க்கின்றன.

கழக ஆலோசகரும், எம் சமூக நல்லாசானுமான ‘வித்தியாகீர்த்தி’ கவிஞர் எம்.எம். அமீர்அலி, நெதர்லாந்து தூதரக அதிகாரி சகோதரர் கே.எம். நவாஸ் முஹம்மட், கழகத்தின் தலைவரும், ரஜரட்ட மருத்துவ பீட மாணவருமான சகோதரர் எம்.எஸ்.எம். நுஸைர் ஆகியோர் பேசும் படங்கள் அங்கு காணப்படுகின்றன.

ஒரு பாத்திரத்தை வைத்துச் சமைப்பதற்கு மூன்று கற்கள் அவசியமாவது போன்று இச்சமுதாய மாற்றத்திற்கு அவசியமான மூன்று மைல் கற்களாக பெண்களுக்கு இக்ரஃவும், ஆண்களுக்கு இஃப்செக் உம், சிறார்களுக்கு பிஸ்மியுமாகச் சேர்ந்து எம்மத்தியில் செயலாற்றுகின்ற இம்முத்தரப்பு அமைப்புக்களினதும் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பங்குபணியாற்றியமைக்கான ‘அஸ்ஹாப் 2009’ விருதுகளை…

சகோதரர் ஏ.சீ.ஏ. றிப்கான் (சமூக அபிவி ருத்திக்கான தேசிய நிறுவகம் – கொழும்பு பல்கலைக் கழகம்) அவர்கள் ‘வித்தியாகீர்த்தி’ அவர்களிடமிருந்தும்,

சகோதரி எஃப். றிஃப்கா றஹ்மத் (பிரயோக விஞ்ஞான பீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கள்  திருமதி நஸ்லியா நவாஸ் முஹம்மட் அவர்களிடமிருந்தும் பெறுகின்ற படங்களும்,

நிகழ்வு இடம்பெற்ற காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் அரங்கு நிறைந்த பிரமுகர்கள், பார்வையாளர்களையும், சமூக மாற்றத்திற்கான கலாசார நகைச்சுவை நிகழ்வாக நடைபெற்ற நாடகத்தின் காட்சியொன்றையும் இப்பத்தி பதிவு செய்துள்ளது.

அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி) அவர்களினால் இப்பிரதேசம் தழுவிய ரீதியில் தாய்மார்கள் சகோதரியில் மத்தியில் வாராந்தம் நடாத்தப்பட்டுவருகின்ற அல்குர்ஆன் விளக்க வகுப்புக்கள் பற்றிய சகோதரிகள் பலருக்கும் பயனளிக்கக்கூடியதான நேரசூசி ஒன்றும் இதே பக்கத்தில் காணப்படுகின்றது.

எமது பிரதேசத்தில் 2009ம் ஆண்டு க.பொ. த சாதாரண பரீட்சைக்குத் தோற்றி உயர் கல்வியைத் தொடரவிருந்த மாணவிகளுக்கான ஊக்குவிப்புக் கருத்தரங்கு ஒன்றை பெண்களுக் கான இக்ரஃ இஸலாமிய அழைப்பு மையம் நடாத்தியிருந்த செய்தியுடன் அதை நடாத்த வேண்டியதற்கான காரண அவசியமும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது பெண் மாணவிகள் உயர் கல்வி கற்பது தொடர்பில் அநாமோதய துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டதன் காரணமாக மாணவிகளின் உளநிலை பாதிக்கப்பட்டு தமது உயர் கல்வியைத் தொடருவதில் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்திருந்த வேளையிலேயே இக்ரஃ அமைப்பு இம்மாணவிகளுக்கான இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்து அவர்களுக்கான உளவள ஊக்கத்தை அளித்ததுடன், இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களையும் அவர்களுக்கு எடுத்தியம்பி அவர்களின் கல்விப் பாதையில் காணப்பட்ட கற்கள், முட்களை அப்புறப்படுத்தி வழிகாட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் பக்கத்திற்குச் சென்றால் நமது மண்ணில் நடைபெற்று நம்மில் பலருக்கும் மறந்து விட்ட பல நகழ்வுகளின் நினைவலைகள் அங்கே மீளவும் புதுப்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.

தமிழகப் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் காத்தான்குடி வருகை,

இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் நடாத்திய இஸ்லாமியக் கண்காட்சியில் தமது பங்களிப்பை வழங்கிய  IFCEC கழக அங்கத்தவர்களைப் பாராட்டிய நிகழ்வு,

இக்ரஃ பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி செயலணி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இக்ரஃ அமைப்பினர் வழங்கிய விரிவுரை நிகழ்வு என இப்பக்கத்தில் நடந்தவை நினைவூட்டல்கள் நிறைந்துள்ளன.

நான்காம் பக்கத்தில் கழகத் தலைவரின் செய்தி ‘அமீரிடமிருந்து…’ எனும் தலைப்பில் விரிந்துள்ளது.

அதில் தனது பாடசாலைக் காலம் தொடக்கம் இன்றைய பல்கலைக்கழகக் காலம் வரை,  IFCEC கழகத்தின் அங்கத்தவராக இணைந்தது முதல் இன்று அதன் அமீராக இருந்து வழி நடாத்தும் காலம் வரையும் தான் அடைந்த பயன்பாட்டு அனுபவங்களை இரத்தினச் சுருக்கமாக நம்மோடு பகிர்ந்து கொண்டு இவ்வாறான கட்டமைப்புக்கள் சமூக மாற்றத்திற்கு அவசியமென்பதையும், அவற்றின் பணிகள் இடைநடுவில் முடங்கிவிடாமல் நீண்டு தொடர்வதற்கு சமூக வள்ளல் பெருமக்களின் திறந்த மனமும், விரிந்த கையும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

மொத்தத்தில் இச்சிறு செய்தி மடலும் கூட நம் பிரதேசத்தின் ஒரு சமூக ஆவணமேயாகும்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக