‘சுவைத்திரள்’ 15வது ஆண்டிதழ் கிடைக்கப் பெற்றோம்!

suvai1 மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்புத் தமிழகத்தைத் தளமாகக் கொண்டு வெளிவரும் நகைச்சுவை இதழான ‘சுவைத் திரள்’ தனது பதினைந்தாவது வருடாந்த இதழை வலு கச்சிதமாக வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தாலும், இயற்கை அனர்த்தங்களாலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புச் சுமையாலும் அன்றாடம் கஷ்டப் படுகின்ற தமிழ்பேசும் மக்களை தங்கள் கவலைகளை மறந்து மனம் விட்டுச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற இச்சிரிப்புச் சஞ்சிகையானது, அச்சு ஊடக வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமானது; தனித்துவமானது; தனக்கான வாசகர் வங்கியை எக்காலமும் அங்கிங்கென கட்சி தாவாது தன்னகத்தே நிலையாகக் கொண்டிருப்பது.

சிரிப்பு, மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒளடதமாகும். தனியாக இருந்து வாய்விட்டுச் சிரிப்பதிலும், குடும்பத்துடன் சேர்ந்து குதூகலித்துச் சிரிப்பதிலும், நண்பர்கள் – உறவினர்களுடன் சேர்ந்து விமர்சித்துச் சிரிப்பதிலும் பல்வேறு குணபாடுகள் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படுகின்றன. வாய் விட்டுச் சிரித்தபின் சிந்தப்பதால் கிடைக்கும் அறிவு பசுமரத்தாணிபோல் நம் இதயங்களில் பதிவாகியும் விடுகின்றன. காலச்சக்கரத்தால் அழிக்க முடியாதவாறு அந்நகைச்சுவைகள் நம் வாழ்க்கையில் அவ்வப்போது தலைகாட்டி பல்வேறு படிப்பினைகளையும் தருகின்ற அருமருந்தாகவும் பயன்பட்டுக் கொண்டிருப்பதானது நிதர்சனமாகும்.

இதன் ஆசிரியரான ‘இலக்கியச்சுடர்’ திக்கவயல் திரு.சி. தர்மகுலசிங்கம் ஐயா அவர்கள், வயதால் முதிர்ந்தாலும் அவரது ஈடற்ற நகைச்சுவையால் இன்றும் அவர் இளமையோடிருப்பது மாத்திரமன்றி,  ‘தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கொப்ப தன் தமிழ்பேசும் சமூகத்தையும் என்றும் இளமையுடன் வைத்திருக்கவே இவ்வரிய பணியை பதினைந்து ஆண்டுகளாக விடாத்தொடராக மேற்கொண்டு வருகிறார் என்றே நான் கருதுகின்றேன். ‘துன்பப்படுவோன் சிரித்து மகிழல்’ என்கிற உயரிய சுலோகத்தையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு உழைத்துவரும் அவரது பணி தமிழ்கூறும் நல்லுலகால் என்றென்றும் மதிப்பிழந்து போகாது என்பது திண்ணமாகும்.

பதினைந்தாவது வருடாந்த இதழானது கண்கவர் வண்ண அட்டையுடன் 64 உள்ளகப் பக்கங்களுடன் மிகச் சிறப்பாகவும் சிரிப்பாகவும் மலர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! மிக ஆச்சரியமான விடயம் என்னவெனில், இந்த ஒளடதத்தின் விலை 50 ரூபா என்பதுதான்! அறுபத்து நான்கு பக்கங்களையும் சுவைத்து முடித்துவிட்டு ஒரே வரியில் இதனை விமர்சிப்பதென்றால் ‘ஆஹா! அபாரம்!!’ என்றே சொல்லலாம்.

நீங்களும் இதன் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சியும், சிரிப்பும் தாண்டவமாடும். சிந்திப்பும் அதிகரிக்கும் என நான் கருதுவதால் உங்கள் நலன் கருதி முகவரியைத் தருகின்றேன். சந்தாக்கள் ஏற்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆர்வலர்கள் தொடர்புகொண்டு தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள என்ன வழி? என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதோ முகவரி: ‘சுவைத்திரள்’, இல:24/1, பொன் தொழிலாளர் வீதி, மட்டக்களப்பு (ஸ்ரீலங்கா-30000) தொலைபேசி: 077- 900 4811.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக