உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே… அங்கம்:01

“VAARAURAIKAL”  Vol: 171  -11.02.2011- Page:03

மார்ச் 17ம் திகதி நடைபெறவுள்ள காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் 06ம் இலக்க சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களுடனான நேர்காணல்

காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் ஆறாம் இலக்க சுயேட்சைக்குழுவாக ‘வாள்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களுடன் ‘வார உரைகல்’ நேர்காணல் ஒன்றை நடாத்தியது.

‘அல்பா நஸார்’ என இப்பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் எப்போதும் சமூகப் பணிகளில் தன்னை வரிந்து பிணைத்துக் கொண்டு வலியவே முன் வந்து நிற்பவர்.

பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைக் களத்தின் போதும், சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த அவலக் காலத்தின் போதும், ஈமானியப் புரட்சி எமதூரில் வெடித்து ஆன்மீகப் போராட்டத்திற்கு நம் சமூகம் திரண்ட பொழுதுகளின் போதும், இதனிடையே ஏற்பட்ட படுவான்கரை இடம்பெயர்வின் போதும், இவ்வருடத் தொடக்கத்திலிருந்து எமது மக்களை இன்னமும்தான் ஆட்டி வாட்டி வரும் பெரு மழை வெள்ளத்தின்போதும்… என எல்லா இடர்துயர்க் காலங்களிலும் இந்த இனிய சகோதரர் தனது நண்பர்கள் குழாத்துடன் நடு வீதிக்கு இறங்கி சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது நமது பிரதேசம் அறிந்த வரலாறு.

அந்த வரிசையில் தற்போது நாமெல்லாம் எதிர்கொள்ளும் நகரசபைத் தேர்தலிலும் இவர் தமது இளைஞர் குழுவை ‘ஐக்கிய மக்கள் ஒன்றியம்’ என்ற கட்டமைப்புக்குள் கருவாக்கிக் கொண்டு 6ம் இலக்க சுயேட்சைக் குழுவாகக் களம் இறங்கியுள்ளார்.

‘வர்த்தகத் துறையிலும், சமூக சேவைகளிலும் ஆர்வங்காட்டி வந்த நீங்கள் ஏன் இம்முறை இந்த உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் கால் பதித்தீர்கள்?’ என்று சாதாரணமாகவே அவரிடம் நான் கேட்டதும் நீண்ட விளக்கமொன்றையே அவர் கூறி முடித்தார்.

அவரது விளக்கத்தில் அநேகமான விடயங்கள் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை நமது காத்தான்குடி சமூகத்தினரால் அவசியம் அறிந்து கொண்டு தீர்ப்பளிக்கப்பட வேண்டியதாகையால் அதனை ‘உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே..’ என்ற தலைப்பில் இங்கே தருகின்றோம். தொடர்ந்து அவர் கூறியிருப்பதை நீங்கள் வாசியுங்கள்:

2006ம் ஆண்டு நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் இறுதிக்கட்ட வேலைகள் நம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் டெலிகொம் அலுவலகத்தில் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

எனினும் நானும், எனது நண்பாகளான ‘தாஜ்’ தௌபீக் ஹாஜியார், அஸ்பர் போன்ற நண்பர்களும் இதில் ஆர்வங்காட்டாமல் எமது பாட்டில் சற்று விலகியே இருந்து வந்தோம்.

பிரதியமைச்சர் அவர்களிடமிருந்து எமக்கு அடிக்கடி தகவல் வந்து கொண்டிருந்தது. ‘அல்பா’ இளைஞர் குழுவினர் இப்படி விலகி நின்றால் எப்படி தேர்தல் பணிகளை முன்னெடுப்பது? என்ற கேள்வி அங்குள்ளவர்களிடம் பரவலாக எழுந்திருப்பதாகவும் எமக்குத் தகவல் வந்த வண்ணம் இருந்தது. எமது இளைஞர் குழுவில் இருந்தும் ஒரு வேட்பாளரை டெலிகொம் அலுவலகம் எதிர்பர்த்துக் கொண்டிருந்தது.

நானும், தௌபீக் ஹாஜியாரும் ஏனைய நண்பர்களும் இந்த நிலைமை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தோம். எமது நண்பரான ‘லக்ஸ்பிரே’ அஸ்பர் ஒரு கட்டிலில் சோர்ந்து போய் படுத்துக் கொண்டிருந்தார்.

அந்நேரம் அவர் ‘லக்ஸ்பிரே’ ஏஜென்ட் நஜீம் ஹாஜியாரிடம் செய்து வந்த ரைவர் வேலையையும் இழந்திருந்தார். அதனால் அவருடைய தனிப்பட்ட நாளாந்தக் குடும்பச் செலவுகளுக்கும்கூட அவர் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நாங்கள் எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்தோம். எங்களது இளைஞர் குழுவின் சார்பில் நண்பர் அஸ்பரையே வேட்பாளராக நியமிப்பது எனத் தீர்மானித்தோம். அதுபற்றி அவரிடம் விருப்பத்தைக் கேட்டோம்.

வாழ்க்கையே வெறுத்துப் போன மாதிரி அந்தக் கட்டிலில் முகங்குப்புறப் படுத்துக் கிடந்த அவர் எமது முடிவைக் கேட்டு மெல்லத் தலையைக் கிளப்பினார்.

இதுவரை காலமும் நாமெல்லாம் தியாகத்தோடு மேற்கொண்டு வந்த சமூகப் பணிகளை அதே தூய்மையான வழியில் மேற் கொள்வதாக எமககு வாக்குறுதியளித்தார்.

அவரது பெயரை எமது இளைஞர் குழு சார்பாக வேட்பாளர் பட்டியலில் சோக்குமாறு நான் தௌபீக் ஹாஜியாரிடம் கூறி அவருடன் அஸ்பரையும் டெலிகொம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.

தௌபீக் ஹாஜியார் பிரதியமைச்சரிடம் அஸ்பருடன் சென்று எமது முடிவைத் தெரிவித்தார். பிரதியமைச்சர் மீண்டும் ஒரு முறை எமது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டு பட்டியலில் இடப்பட்டிருந்த றஹீம் மௌலவியின் பெயரை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு அஸ்பருடைய பெயரைச் சேர்த்துக் கொண்டார். இப்படித்தான் எமது இளைஞர் குழுவின் அன்றைய அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

தேர்தல் அதிகாரிகளால் எமது வேட்பாளர் பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டு டெலிபோன் சின்னமும் வழங்கப்பட்டது.

நாங்கள் தனித்துவமாக எமது இளைஞர் வேட்பாளர் அஸ்பரின் வெற்றிக்காக உழைக்கக் களம் இறங்கினோம். உண்டியல்கள் குலுக்கி சில்லறைகள் சோத்து அவரை ஊர்வலமாக அழைத்து வந்து இந்த ஊரெங்கும் அறிமுகப்படுத்தினோம்.

வீடு வீடாகச் சென்று அவரது இலக்கத்திற்காக வாக்குப் பிச்சை கேட்டோம். எங்கள் கால்கள் வலிக்க வலிக்க இந்த ஊரின் மூலைகள் முடுக்குகள் எல்லாம் சென்று அவரை வெல்ல வைப்பதற்காக நாம் கடுமையாக முயற்சித்தோம்.

வாக்களிப்பு முடிந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. எமது வேட்பாளர் எஸ்.எச். எம். அஸ்பர் 2116 விருப்பு வாக்குகளைப் பெற்று எமது பட்டியலில் நான்காவது ஸ்தானத்திற்கு வந்திருந்தார்.

எமது டெலிபோன் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற 6 உறுப்பினர்களில் அவரும் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். நாமும் மிக்க மகிழ்ச்சியுடன் எமது இளைஞர்கள் மட்டத்தில் வெற்றி விழா ஏற்பாடொன்றை சிறிய அளவில் ஏற்பாடு செய்திருந்தோம்.

அதில் எமது இளைஞர் பிரதிநிதி அடைந்த வெற்றி எமது சமூகப் பணிகளுக்கு மக்கள் அளித்த கௌரவமான அங்கீகாரம் என நன்றி கூறினோம்.

ஊழல், இலஞ்சம், மோசடிகள் இல்லாத மக்களுக்கான சமூக வேலைத் திட்டங்களை எமது பிரதிநிதி அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். அவ்வாறு மக்கள் நலன் சார்ந்த எமது பிரதிநிதியின் சேவைகளுக்கு நாம் என்றென்றும் தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக நிற்போம் என்பதாகவும் அக்கூட்டத்தில் நாம் அவருக்கு வாக்களித்தோம்.

ஆனால், எமது கோரிக்கைக்கும், வரவேற்புக்கும் பதிலளித்துப் பேசிய கௌரவ நகரசபை உறுப்பினர் அஸ்பர் அவர்களின் பேச்சு எம்மை யெல்லாம் அதிர்ச்சியடையச் செய்தது. எமது நம்பிக்கை நிறைந்த உள்ளங்களை உடைத்து சுக்கு நூறாக்கியது.

‘சமூகப்பணி.. சமூகப் பணி என்று சதா காலமும் உண்டியல்கள் குலுக்கிக் கொண்டு பிச்சை எடுத்துச் செயற்பட முடியாது. நாம் ஆயிரம் ஆயிரமாகச் செலவழித்து பொது வேலைகள் பார்க்க வேண்டுமென்றால் நாமும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல இலட்சங்களை உழைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொதுப் பணிகளில் நீண்ட காலத்திற்கு நம்மைப் போன்றவர்களால் நிலைத்து நிற்க முடியாது…’ என்ற பாணியில் அவர் பேசிக் கொண்டு சென்றது எமது தலைகளை எல்லாம் தொங்கச் செய்தது.

அன்று ‘லக்ஸ்பிரே’ ஏஜென்டில் சாரதி வேலையும் இல்லாது கட்டிலில் அவர் முகங் குப்புறப் படுத்துக் கிடந்த காட்சி எங்கள் அனைவரது மனத் திரைகளிலும் மீண்டும் ஓடியது.

எமது இலட்சியம் நிறைந்த உழைப்பினால் அவரது தலை நகரசபை உறுப்பினர் என்று நிமிர்ந்தபோது அவரது வெற்றிக்காக உழைத்த எங்களின் தலைகள் அதே கட்டிலில் அன்று முகங் குப்புறக் கவிழ்ந்து கிடந்தன.

நாம் பிறந்த இமமண்ணுக்கும், எமது மக்களுக்கும் ஒரு போலியான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று எமது மனச்சாட்சி எங்களை உறுத்தியது.

இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்வது என்று அன்றே நாங்கள் சிந்திக்கத் தொடங்கினோம்.

எப்படி இந்த உழைக்கும் நோக்குள்ள அரசியல் அதிகாரத்தை ஒழித்துக் கட்டலாம் எனச் சிநிதித்தோம்.

வழி தெரியவில்லை. அன்றைய வெற்றி விழாவுடன் அவருடனான எமது உறவும் அறுந்தொழிந்தது.

ஆட்சி அதிகாரம் அவருக்கு எங்களாலேயே வழங்கப்பட்டு விட்டது. கொடுங்கோல் மன்னனின் கைகளில் ஒரு கொலை வாளைக் கொடுத்து விட்ட குற்ற உணர்வு அன்று மாத்திரமல்ல.. கடந்த ஐந்தாண்டு காலமாகவே இந்த ஊரில் அவரால் இழைக்கப்பட்ட அத்தனை அட்டகாச அதிகார வெறிச் சம்பவங்களின்போதும் எம்மை வாட்டி வதைத்தது.           

(பேட்டி தொடரும்)

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக