உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே… நேர்காணல் தொடர்: 02

“VAARAURAIKAL” Vol:172 -18.02.2011- Page: 03

ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் நேர்காணல்

டந்த வாரம் பிரசுரமான எனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம் தொடர்பான முதலாவது பகுதியை வாசித்த பல நண்பர்களும், ஊர்ப் பிரமுகர்களும் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் என்னுடன் தொடர்பு கொண்டு தங்களது பாராட்டுக்களையும், வரவேற்பினையும், நல்ல பல ஆரோக்கியமான ஆலோசனை களையும் தெரிவித்தனர்.

ஒரு சிலர் மாத்திரம் இவ்வாறு எனது நேர்காணல் தொடர் ஒன்று இத்தேர்தல் காலத்தில் வெளிவரும் என்பதை எதிர்பார்த்திருக்காததால் அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

வேறு சில விஷமிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்கள் அரசியல் இலாபம் தேடுவதாகக் காழ்ப்புணர்வுடனான அவர்களது விமர்சனங்களை எம்மிடம் துணிவுடன் தெரிவிக்காமல் எங்கெங்கோ கூறித் திரிந்தனர்.

எது எவ்வாறாயினும் எமது ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பான எனது நேர்காணலை வாசித்தறிந்த அவர்கள் அனைவருக்கும், எனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிய முக்கியத்துவத்துடன் களம் அமைத்துத் தந்துள்ள ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டவனாக இவ்வாரமும் அத்தொடரில் உங்களோடு உரையாட விரும்புகின்றேன்.

எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள நமது நகரசபைக்கான தேர்தல் களத்தில் எனது தலைமையிலான ஐக்கிய மக்கள் ஒன்றியமும் 6ம் இலக்க சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

இவ்வாறு நாம் போட்டியிடுவதற்கான மிக முக்கியமான பிரதான காரணம், அமையவிருக்கும் இரண்டாவது நகரசபையில் நானும், எனது நண்பர்களான சக வேட்பாளர்களும் இத்தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக அச்சபைக்குச் செல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் அல்ல என்பதை இத்தொடரை வாசிக்கும் அனைவரும் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2006ம் ஆண்டு இக்காத்தான்குடிச் சமூகத்திற்கு நானும் எனது நண்பர்களுமாகச் சேர்ந்து பிரதியமைச்சர் அவர்களின் வழிகாட்டலில் எமது நண்பரான எஸ்.எச்.எம். அஸ்பர் என்பவரை எம்மைப்போன்ற ஒரு சமூக சேவையாளர் என்ற பார்வையுடனும் நன்னோக்கத்துடனும் ஒரு இளைஞர் வேட்பாளராக முன் நிறுத்தி அவரது வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டுழைத்து வெற்றியடையச் செய்து பூரிப்படைந்திருந்த சமயத்தில் எமது எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் நேர் மாற்றமாக அவர் ஒரு சராசரி அரசியல் வியாபாரியாகப் பாதை மாறிப் பயணித்து வந்துள்ள அவரது அரசியல் பயணத்தை இன்னமும் இம்மண்ணில் தொடரச் செய்யக் கூடாது என்பதே எமது ஒன்றியத்தின் அரசியல் பிரவேசத்திற்கான பிரதானமான அடிப்படை நோக்கமாகும்.

அந்த நோக்கத்திற்கான எமது நியாயமான காரணங்களை இக்காத்தான்குடிச் சமூகத்திற்கு பொறுப்புடன் எடுத்துச் சொல்லி நாங்கள் கடந்த 2006ம் ஆண்டில் செய்த தவறை இம்மண்ணின் மக்களான வாக்காளப் பெருமக்கள் மீண்டு மொருமுறை நாம் எதிர்நோக்கும் 2011 மார்ச் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலிலும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே தேர்தல் காலப் பாதுகாப்புக் கவசமாக இந்த ‘வேட்பாளர்கள்’ என்ற சீருடையை நாங்கள் அணிந்து கொண்டுள்ளோம்.

இதற்கு மாறாக நமது பிரதேசத்தைச் சேர்ந்த மரம் சார்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஒரு மரண வீட்டில் கூறியிருப்பதைப்போல ‘நஸாரும் இத்தேர்தலில் போட்டியிட விரும்பியிருந்தால் நாம் எமது கட்சியில் அவருக்கு இடமளித்திருப்போமே..’ என்று அவர்களது தொடரான அரசியல் வியாபாரப் பார்வையுடன் எங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துக் கூறியிருப்பதைப்போல் நாம் அவ்வளவு மட்டகரமான சிந்தனைகளுடன் இத்தேர்தல் களத்தில் கால் பதிக்கவில்லை என்பதையும் வாக்காளப் பெருமக்கள் பொறுப்புடன் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது இப்பிரதான நோக்கத்திற்கும் அப்பால், இப்பிரதேச வாக்காளப் பெருமக்களும் எனது அன்புக்குரிய நண்பர்களும் எமது கடந்த கால – சமகாலச் செயற்பாடுகளில் திருப்தி கண்டும், எதிர்காலத்திலும் நாங்கள் இவ்வாறே சமூகப் பற்றுடன் நேர்மை பிறழாமல் செயற்படுவோம் என்ற நம்பிக்கையும் கொண்டு அவர்களது பெறுமானம் மதிக்க முடியாத சாட்சியங்கூறும் வாக்குகளை எமது சுயேட்சைக் குழுவுக்கு அளித்தால் அதனை நன்றியுணர்வோடும், நன் மதிப்போடும் நாம் ஏற்றுக் கொண்டு அவ்வாறு அளிக்கப்படும் தூய்மையான வாக்குகள் மூலம் எமக்கும் இச்சபையில் அங்கத்துவம் கிடைக்குமாயின் அதை மிகப் பெரும் சமூக அமானிதம் என்றே நாம் கருதிச் செயற்படுவோம்.

எனது கடந்த வாரக் கருத்துக்களைப் படித்த எமது நண்பரான ஏ.எல்.எம். என்பவர் எம்மிடம் வந்து இவ்வாறு நமது நண்பர் அஸ்பருக்கு பாதகமாகப் பத்திரிகையில் பேட்டியளிப்பதைப் பற்றி கடந்த வாரம் என்னோடு விவாதித்தார்.

நான் எனது நண்பர்கள் முன்னிலையில் அந்த நண்பரிடம் தெளிவாகச் சொன்னேன்:

அஸ்பர் ஒரு அரசியல் வியாபாரி ஆகி விட்டார். அதன் மூலம் தவறான வழிகளில் எல்லாம் நிறைய சொத்துக்கள் சேர்த்து விட்டார். 2006ல் என்னைப் போல் நீங்களும்தான் ஊரெங்கும் முட்டி குலுக்கி காசு சேர்த்து அவரது வெற்றிக்காகப் பாடுபட்டீர்கள்.

ஆனால் எமது உள்ளங்களில் உறைந்து கிடந்த சமூக சேவை இலட்சியங்களை அவர் உதறித் தள்ளிவிட்டு  தனிப் பாதையொன்றைத் தெரிவு செய்து கொண்டு சென்று விட்டார்.

ஆனால் நானும், இந்த நண்பர்களும் இன்னமும் மக்கள் தொண்டர்களாகவே இம்மண்ணில் செயற்பட்டு வருகின்றோம். எமக்கு அல்லாஹ் ஆகுமாக்கிய வியாபாரத்தின் மூலம் ஹலாலாகச் சம்பாதிக்கின்றோம்.

எங்களின் உள்ளத்தில் நாளாந்தம் இருந்து வரும் மனைவி, மக்கள், தொழில் போன்ற சொந்த வாழ்க்கைச் சிந்தனைகளோடு சமூகம் பற்றிய சிந்தனையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் உங்களைப் போல வெறுமனே அரசியல் கோஷம் போட்டுக் கொண்டு திரிபவர்கள் அல்ல.

அஸ்பரும் நாங்களும் தனிப்பட்ட வகையில் இன்னமும் நண்பர்கள்தான். எமக்கு ஒன்றெனில் அவர் ஓடோடி வருவார். அவருக்கு ஏதுமென் றால் நாமும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

ஆனால் எமது நட்புறவுக்காக எம்மை நம்பி வாக்களித்த இந்தச் சமூகத்தை ஏமாற்றக் கூடாது. அது எமக்கு மட்டுமல்ல நம்மையெல்லாம் படைத்த அல்லாஹ்வுக்கே பொறுக்காது.

நாம் அன்று எமது நண்பரான அவரை இச்சமூகத்தின் முன்னிறுத்தி செய்துவிட்ட தவறுக்காக வருந்தி பிராயச்சித்தம் செய்யப் புறப்பட்டு இருப்பதுபோல அவரும் அவரது தவறை உணர வேண்டும். அதற்காக உள்ளம் வருந்தி பிராயச்சித்தம் தேட முனைய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் எல்லாக் காலமும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு இந்த அரசியல் வியாபாரத்தை இந்த மண்ணில் முன்னெடுக்க அவரும் முனையக் கூடாது. நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.

இவ்வாறான எமது நியாயமான விளக்கங்களைச் செவியேற்ற அந்த நண்பர் எங்கள் முன்பாகவே கண்ணீர் வீட்டு அழுதார். எமது இன்றையச் செயற்பாடுகளில் ஒரு நியாயம் இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார் போலும் இறுதியில் எதுவும் பேசாது மௌனமாகவே அவர் சென்று விட்டார்.

நாங்களும் மக்களுக்கான பணிகளை எம்மிடமுள்ள பொருளாதார – மன வளங்களுக்கு ஏற்ப இம்மண்ணில் செய்துதான் வருகின்றோம். அப்பணியை அரசியலுக்குள் சென்று அதிகாரம் ஒன்றைப் பெற்றுத்தான் செய்ய வேண்டுமென நாம் ஒருபோதும் விரும்பியதில்லை.

அண்மையில் ஆற்றுப் பெருக்கு ஏற்பட்டு குப்பைகள் எல்லாம் எமது மக்களின் வீடு வளவுகளுக்குள் புகுந்திருந்த சமயத்தில் நாமும் அவற்றை அள்ளி அப்புறப்படுத்திச் சுத்தப்படுத்தும் பணிகளில் எம்மை ஈடுபடுத்திக் கொண்டோம்.

அரசியல் அதிகாரத்துடன் தான் இந்த மண்ணில் நடமாட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நாம் இவ்வாறான பணிகளில் ஈடுபடவில்லை.

எமது செயற்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்ட சல்மா டீச்சர் அவர்கள் நாங்கள் மக்கள் பணி செய்த இடத்திற்கு வந்து எமது பணிகளைப் பார்த்துப் பாராட்டியதுடன் அவரால் முடிந்த உதவிகளையும் செய்வதற்கு முன் வந்தார்.

அப்போது நாம் அவருக்குச் சொன்னோம்: “டீச்சர்! நீங்கள் ஒரு சமூக சேவகியும்தான். அதேபோல் ஒர் அரசியல்வாதியும்தான். எங்களின் அரசியல் ரீதியான ஆதரவை நீங்கள் எதிர்பார்த்து எமக்கு உதவிகள் செய்ய வேண்டாம். சமூக சேவையில் நாம் யாருடனும் கூட்டுச் சேர்ந்து செயற்படுவோம். அவ்வாறு நீங்களும் சமூக சேவை எண்ணத்தோடு எமக்கும், இந்த மக்களுக்கும் உதவ விரும்பினால் நீங்கள் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம்” என்று எமது தெளிவான நிலைப் பாட்டை அவருக்கு எடுத்துரைத்தோம்.

அவரும் அதை ஏற்றுக் கொண்டு யுனிசெப் நிறுவனம் மூலமாகவும், வேறு வழிகளிலும் எமது மக்கள் பணிக்கு உதவி செய்தார். எமக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கினார். அப்பகுதிகளில் இருந்த விதவைகளுக்கு பணம் கொடுத்தார். அவற்றையெல்லாம் நாமும் எமது நண்பர் குழாமும் நன்றியுடன் ஏற்றோம்.

இதேபோல் பிர்தௌஸ் நளீமி அவர்களும் எமது மக்கள் பணியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு வந்தார். எமது பணியின் மகத்துவத்தை அறிந்த அவரும் எமக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி ஊக்கமளித்தார். அவரிடமும் எமது நோக்கத்தைப்பற்றி நாம் தெளிவாக விபரித்தோம்.

இந்த மக்கள் பணித் தொண்டின்போது எமது நண்பரான முன்னாள் நகரசபை உதவித் தவிசாளர் அஸ்பரும் அங்கு வந்தார். அவரிடமும் நான் நண்பர்கள் சூழ்ந்திருக்க இவ்வாறு கூறினேன்:

‘நீங்கள் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மையைச் செய்திருந்தால் அதன் பிரதிபலனை இவ்வுலகிலேயே பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அநியாயம் செய்திருந்தால் மறுமை நாள் வரை சஞ்சலத்துக்கு உள்ளாவீர்கள்.’

இவ்வாறு கூறிவிட்டு அவருக்கும் சமைத்த உணவுப் பார்சல் ஒன்றை எல்லோருக்கும் போல நாம் வழங்கினோம்.

எனினும், இவற்றையெல்லாம் அவதானித்த  நண்பர் ஏ.எல்.எம். அன்றிரவு 12:00 மணிக்குப் பின்னர் பிரதியமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று, நாங்கள் இவ்வாறெல்லாம் மக்கள் பணி செய்து மக்களினதும், பிரமுகர்களினதும் ஆதரவையும் அபிமானத்தையும் பெற்று வருகின்றோம். அதனால் நீங்கள் நாளை காலையில் அங்கு வரவேண்டும். அவர்கள் அங்கிருந்து ஓட வேண்டும் எனத் தப்பான வழியொன்றை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் விதைத்திருந்தார்.

பிரதியமைச்சர் அவர்களும் இந்தத் தவறான வழிகாட்டலின் பேரில் மறுநாள் காலை நாங்கள் பணி செய்திருந்த இடத்திற்கு அவரது ஆதரவாளர்களுடனும், பாதுகாப்புப் படையணிகளுடனும் திடீரென வந்திறங்கினார்.

சல்மா டீச்சரும், பிர்தௌஸ் நளீமியும் எங்களின் சமூகப் பணிகளை மெச்சி எமக்கு ஊக்கமும் உதவியும் அளித்ததைப்போல் பிரதியமைச்சர் அவர்கள் அங்கு நடந்து கொள்ளவில்லை.

தானே இக்குப்பைக் கழிவுகளை அள்ளும் பணிகளை ஏற்பாடு செய்ததுபோல் குப்பைகளை அள்ளியவராக அவருடன் வந்திருந்த படப்பிடிப்பாளர்களுக்கு போஸ் கொடுத்து படங்களைப் பிடித்துக் கொண்ட பின் அங்கிருந்து சென்றார்.

பிரதியமைச்சரின் இந்தப் போலித்தனமான போஸ் கொடுத்த செயற்பாடு என் உள்ளத்தை உடைத்தது போல் அங்கிருந்த எனது நண்பர்களினதும், குடியிருப்பாளர்களினதும் உள்ளங்களையும் வெகுவாக உடைத்துச் சுக்கு நூறாக்கியது.

நண்பர் ஏ.எல்.எம். அவர்களின் நேர காலம் பிந்திய இந்த ஆலோசனைக்கும், வழி காட்டலுக்கும் அதிக முக்கியத்துவமளித்துச் செயற்பட முன்வந்த எமது பிரதியமைச்சர் அவர்கள், இச்சமூகத்தில் அவலங்களுக்கு உள்ளான பல தரப்பட்ட விடயங்களைப்பற்றி எத்தி வைத்து அதற்கான உதவி உபகாரங்களைச் செய்யுமாறு அதே நண்பரிடம் நான் சொல்லியனுப்பிய வேளைகளில் எல்லாம் அவற்றை அந்த நண் பரின் நேர காலம் பிந்திய கருத்தெனப் பிரதியமைச்சர் அவர்கள் புறக்கணித்திருந்த பல சம்பவங்கள் எமது மனப் பதிவுகளில் ஆறாத் தழும்புகளாக இன்றும் இருக்கின்றன.

இவ்வாறான பல் நோக்குடைய அரசியல் சமூக வாதிகளுக்கு மத்தியில்தான் நாமும் முற்றிலும் மாறுபட்ட அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சிப் பயந்த ஒரு சமூக சிந்தனையுடன் இத்தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றோம்.

எங்களால் உங்களுடைய வீடுகளுக்கு வந்து ‘எங்களுக்கு வாக்களியுங்கள்.. எங்களுக்கு அதிகாரத்தைத் தாருங்கள்.. எங்களைப் பதவிக் கதிரைகளில் அமர்த்துங்கள்..’ என்றெல்லாம் கேட்க முடியாது.

கலர்கலரான ஸடீக்கர்களும், பேணர்களும், போஸ்டர்களும், அச்சடித்து அதிகமான ஏழைகளும், விதவைகளும், முதிர் கன்னிகளும், வறிய மாணவச் செல்வங்களும் நாதியற்று வாழும் இம்மண்ணில் அல்லாஹ்வுக்கு அறவே பொருத்தமில்லாத முறைகளில் ஆடம்பரமாகப் பணத்தை அள்ளியிறைத்து துஷ்பிரயோகம் செய்து போலித்தனமாக விளம்பரங்கள் செய்ய முடியாது.

கள்ள வாக்குகளால் வெற்றி பெறுவதற்காக தவறான வழிகளிலெல்லாம் நிவாரணப் பொருட்களைப் பெற்று வந்து அதில் எங்களுடைய ஸ்டீக்கர்களை ஒட்டி எங்களின் சொந்தப் பொருட்களைப்போல உங்களுக்கு கையளித்து வாக்களிக்குமாறு வாக்குறுதிகளும் வாங்க முடியாது.

அல்லாஹ்வை மறந்து அவனது மறுமை நாள் விசாரணைகளைத் துச்சமாகக் கருதி இந்த மண்ணின் மைந்தர்கள், அருமைச் சகோதரிகள் எவரும் எமது ‘வாள்’ சின்னத்திற்கு நேரே ஒரு கள்ள வாக்கையேனும் அளித்து எமது நோக்கத்திலும், செயற்பாட்டிலும் ஹறாத்தைக் கலந்து விட வேண்டாம் என மிக்க வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

உண்மையான ஈமான்தாரிகளாகவும், இஸ்லாமிய வழியில் வாழும் மக்களாகவும் நீங்கள் இருந்தால் எமக்கு மட்டுமல்ல யாருக்குமே அவ்வாறு கள்ள வாக்குகளை நீங்கள் அளித்து தவறான – ஹறாமான வழியில் ஒரு வெற்றியை எதிர்பார்க்க முனைய வேண்டாம் என்றும் நமது சத்திய மார்க்கத்தின் பெயரால் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அவ்வாறு கள்ள வாக்குகளை அளித்து ஒருவரையோ அல்லது ஒரு தரப்பினரையோ நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அந்த வெற்றி வெளிப் பார்வைக்கு பெரும் சாதனை போலத் தென்பட்டாலும் பின்னால் அவ்வெற்றியாளர் அல்லது அந்த வெற்றித் தரப்பு மூலம் நமக்கும், நமது மண்ணுக்கும் பாரிய சோதனைகளும், வேதனைகளும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படும் என்பதையிட்டு அஞ்சிக் கொள்ளுங்கள். எனவே அந்த ஹறாமான நடவடிக்கையில் இருந்து நீங்கள் ஒவ்வருவரும் உங்களைத் தடுத்துக் கொள்வதில் விழிப்பாக இருங்கள்.

எனக்கோ அல்லது எமது சுயேட்சைக் குழுவுக்கோ நீங்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக நானும் எனது நண்பர்களும் ஒரு போதும் உங்களில் எவரையும் கோபித்துக் கொள்ள மாட்டோம்.

நான் எப்போதும் இதே நஸாராகவும், எனது சமூக வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு உண்மையான நண்பனாகவுமே இந்த மண்ணில் வாழ்ந்து மரணிக்க விரும்புகின்றேன்.

(இன்னும் வரும்..)

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக