காங்கேயனோடை பெரிய பள்ளிவாசல் காணி மோசடியாளர்களுடன் செயலாளர் ஹிழுர் அதிபரும் சோரமானார்!

-15 வீடுகளுக்கும் 15 இலட்சம் பணத்திற்குமாக நிலைப்பாட்டை விற்றுவிட்ட நிர்வாகம்-

இலங்கையிலுள்ள ஈரான் நாட்டின் தூதுவர் மஹ்மூத் றஹீமி கோர்ஜி அவர்களுக்கு காங்கேயனோடை பெரிய பள்ளிவாசலுக்குரிய வக்பு செய்யப்பட்ட காணியை சட்டவிரோதமாகவும், மோசடியான முறையிலும் தாரைவார்த்த விவகாரத்தில் கடந்த வியாழக்கிழமை வரை பள்ளிவாசல் நிர்வாக சபையினதும், ஜமாஅத்தினர்களினதும் மானம், மரியாதையைக் காப்பதில் உறுதியாக இருந்த மேற்படி பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதான நிர்வாகிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தற்போது இம்மோசடிச் செயற்பாட்டாளர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிச் சோரம் போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 03ம் திகதி இப்பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுர அறிக்கையில், ஈரான் தூதுவரின் பெயருக்கு இப்பள்ளிவாசல் காணியை எழுதித் தாரை வார்த்த மோசடியான நடைமுறையை வன்மையாகக் கண்டித்திருந்த நிர்வாக சபையினர், தற்போது 15 இலட்சம் ரூபா பணத்திற்கும், 15 வீடுகளுக்குமாக இம்மோசடிக்காரர்களிடம் சோரம் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சட்டத்தரணி எம்.ஐ.எம். நூர்தீன் அவர்களால் மோசடியான முறையில் உறுதி எழுதப்பட்ட இப்பள்ளிவாசல் காணியைத் திரும்பவும் பள்ளிவாசலுக்கே எழுதித் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மௌலவி ஏ.எல். ஆதம் லெப்பை (பஹ்ஜி), செயலாளர் ஏ.எம். ஹிழுர் அதிபர், பொருளாளர் அஷ்ஷெய்க் அப்பாஸ் நளீமி ஆகியோர் தற்போது இவ்வீட்டுத் திட்டத்திலுள்ள 15 வீடுகளையும், 15 இலட்சம் ரூபாவினையும் பெற்றுக் கொள்வதற்கு இணங்கியுள்ளதாக அறியப்படுகின்றது.

ஏற்கனவே இக்காணியை மோசடியாக உறுதி எழுதிக் கொடுத்த பள்ளிவாசல் உப தலைவர் எஸ்.எச். பீர் முகம்மது என்பவரை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் விசாரணைக்குட்படுத்தியபோது, தான் தெரியாத்தனமாக இக்காரியத்தைச் செய்து விட்டதாகவும், இதற்குப் பகரமாக 15 வீடுகளையும், 15 இலட்சம் ரூபாவையும் பள்ளிவாசலுக்குப் பெற்றுத் தருகின்றேன் என்று கூறிய போதிலும் அதற்கு உடன்படாமல் நோட்டீஸ் அடித்து தமது உறுதியான நிலைப்பாட்டை தெளிவாகப் பொதுமக்களுக்கும் ஜமாஅத்தார்களுக்கும் தெரிவித்திருந்தனர் இப்பள்ளிவாசல் நிருவாகிகள்.
 
அத்தோடு ‘வார உரைகல்’ ஊடகத்திற்கும், இணையதளத்திற்கும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த சனிக்கிழமை மாலை செயலாளர் ஹிழுர் அதிபரின் வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணித்தியாலமாக அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் அதே 15 வீடுகளுக்கும், 15 லட்ச ரூபா பணத்திற்கும் இந்த நிர்வாகிகள் அடங்கிப் போனதன் மர்மம் தான் என்னவென காங்கேயனோடை மக்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.

காங்கேயனோடையில் ஏழை மக்களுக்கான இலவச வீட்டுத் திட்டம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுவரும் இந்த ஈரானிய வீட்டுத் திட்டத்தில் 15 வீடுகளை இப்பள்ளிவாசல் நிர்வாகிகளினால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கே வழங்குவதாகவும்,

பள்ளிவாசலுக்கு வழங்குவதென்று இணக்கம் காணப்பட்ட 15 இலட்சம் ரூபா பணத்தில் 7½ இலட்சம் ரூபாவை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்குவதாகவும், மீதித் தொகை 7½ இலட்சம் ரூபாவையும் பள்ளிவாசலால் சிபார்சு செய்யப்படும் 15 வீடுகளைப் பெறுவோரிடம் இருந்து தலா 50,000 ரூபா வீதமாகப் பெறுவதென்றும் கடந்த 18ம் திகதி சனிக்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்ததையில் பள்ளிவாசல் செயலாளரும், ஓய்வு பெற்ற அதிபருமான ஏ.எம். ஹிலுறு அதிபர் இணங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்படும் 15 வீடுகளைப் போலவே முகைதீன் பள்ளிவாசலுக்கும் வழங்கப்பட்டுள்ள 15 வீடுகளுக்கும் தலா 50,000 ரூபா வீதம் 7½ இலட்சம் ரூபாவுக்கான காசோலையொன்றும் பிரதியமைச்சரிடம் அப்பள்ளிவாசல் நிர்வாகிகளால் வழங்கப்பட்டதாகவும், அக்காசோலையையே பிரதியமைச்சர் சார்பில் பெரிய பள்ளிவாசலுக்குத் தருவதாகச் சொல்லப்பட்ட  7½ இலட்சம் ரூபாவுக்காக அவரால் வழங்கப்பட்டதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த சனிக்கிழமை மாலை அவசர அவசரமாக காங்கேயனோடைக்குச் சென்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மேற்படி 15 வீடுகளுக்கும், 15 லட்சம் ரூபாவுக்கும் ஏற்கனவே இணங்கியிருக்காத பள்ளிவாசல் செயலாளரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து தனிப்பட்ட முறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இரகசியமாகப் பேச்சு நடாத்தியதில் அவருக்கும், பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் மேலதிக நன்மைகள் பல வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தாங்கள் சந்தேகிப்பதாக காங்கேயனோடை பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தினர் கூட்டமைப்பு ‘வார உரைகல்’லுக்கு தெரிவித்துள்ளது.

பள்ளிவாசல் காணி சம்பந்தமாகப் பேசும் நோக்கத்துடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வந்தபோது அப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசலில் பகிரங்கமாக வைத்துக் கொள்ளாமல் செயலாளர் ஹிழுர் அதிபர் தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டது ஏன்? எனவும் ஜமாஅத்தார்கள் வினாவெழுப்புகின்றனர்.

இதிலிருந்து செயலாளர் தனது தனிப்பட்ட நலன்கள் சார்ந்த விடயங்கiளை இக்காணி விவகாரத்தைப் பயன்படுத்திச் சாதிப்பதற்கு திட்டமிட்டே முற்பட்டதாகவும், இவ்வாறான தனக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே அவர் ஆரம்பத்தில் இக்காணி விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பதைப்போல் நடித்து நிர்வாக சபையிலும், ஊடகங்களிலும் கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளார் எனவும், அவரது முனாபிக்தனமான நடவடிக்கை தற்போது ஊர் மக்களுக்கு அம்பலமாகியுள்ளதாகவும் ஜமாஅத்தார்கள் மேலும் தெரிவித்தனர்.

ஈரான் அரசாங்கத்தினால் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்படும் இவ்வீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்படுபவர்களிடமிருந்து தலா 50,000 ரூபாவை அறவிடுவது எந்த வகையில் நியாயம்? என காங்கேயனோடை பெரியபள்ளிவாசல் மற்றும் முகைதீன் பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு. தனபால சுந்தரத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மீள் குடியேற்ற அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன், ஈரான் நாட்டின் தூதுவர் மஹ்மூத் றஹீமி கோர்ஜி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற பலருக்கும் இவ்வாரத்தில் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வீட்டுத் திட்டத்திற்குப் பொறுப்பாகவுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பயனாளிகளிடமிருந்து காங்கேயனோடை பள்ளிவாசல் நிர்வாகங்கள் தலா 50,000 ரூபா வீதம் பணம் பெறுவதை எந்த வகையில் அனுமதிக்கின்றார்? எனவும் அவர்கள் வினாவெழுப்புகின்றனர்.

மேலும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இவ்வீட்டுத்திட்டத்தில் ஐந்து வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதிலொன்று, அண்மையில் பாலமுனையில் தவிசாளரினால் சகலகாலா வல்லமை பொருந்திய அரசியல்வாதிக்கு அன்பளிப்பாக எழுதப்பட்ட 16 ஏக்கர்  தென்னந்தோட்டத்துடன் ஊரார் காணி ஒரு துண்டும் சேர்த்து எழுதப்பட்டதாக ‘வார உரைகல்’ தனது 180வது பதிப்பில் குறிப்பிட்டிருந்த அக்காணிச் சொந்தக்காரருக்கு 12 லட்சம் ரூபா பணமும், ஒரு ஈரான் வீடும் தருவதாக இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ‘வார உரைகல்’லுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு ஏழை மக்களுக்காக ஈரான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படும் இவ்வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை 50,000 ரூபா பணத்திற்கு விற்பதும், பிரதியமைச்சர் போன்ற அரசியல் அதிகாரமுடயவர்களுக்கு வழங்குவதும் எந்த வகையில் நியாயம்? இதுதான் இவர்களின் மக்கள் சேவையா? எனவும் மக்கள் கேட்கின்றனர்.

பள்ளிவாசலுக்குரிய காணியை மோசடியான முறையில் உறுதி எழுதி அபகரித்த ஈரான் தூதுவர் மஹ்மூத் றஹீமி கோர்ஜி அவர்கள் எந்த வகையிலும் சட்டத்தின் பிடியில் அகப்பட்டு பாதிக்கப்படாமல் அவர் தப்பித்துக் கொள்வதற்கு நோட்டீஸ் அடித்தும், தெருவில் சத்தம் போட்டும், சண்டித்தனம் காட்டியும் பாடுபட்டு வரும் பலருக்கும் இவ்வீட்டுத் திட்டத்தில் சந்தோஷமாக சில வீடுகள் வழங்கப்படும் எனவும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட வீடுகளை வெளியில் 50,000 ரூபாவுக்கும், அந்தரங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கியஸ்தர்களுக்கு மேலும் சில ஆயிரங்கள் என்வலப் இனாம்களாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 03ம் திகதியன்று பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் வெளியிட்ட துண்டுப பிரசுரத்திலுள்ளபடி இவ்வீடுகளுக்கான பயனாளிகள் வெளிப்படையாகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும், உண்மையான ஏழைகளுக்கும், குமர்களைக் கொண்டுள்ள காணி மற்றும் வீடுகளில்லாத ஏழைகளுக்கே இவ்வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்பதையும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

எனினும், ஏழைகள் என்பதற்கு அப்பால் இப்பள்ளிவாசல் மஹல்லாவுக்கு உட்பட்ட சண்டியர்களுக்கும், தெருவில் நின்று சத்தம் போடும் அதிகாரவர்க்கத்தின் எடுபிடிகளுக்குமே தற்போது பள்ளிவாசல் நிர்வாகம் 50,000 ரூபாவை வழங்கும் நபர்களுக்கு முன்னுரிமையளித்து பயனாளிகள் பட்டியலைத் தயாரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இக்காணியை பள்ளிவாசலின் தலைவர் நானே எனக்கூறி சட்டத்தரணி எம்.ஐ.எம். நூர்தீன் அவர்களிடம் மோசடியான முறையில் உறுதியெழுதித் தாரைவார்த்த பள்ளிவாசலின் உப தலைவர் எஸ்.எச். பீர் முகம்மது என்பவர் தற்போது காங்கேயனோடையில் இருந்து தலைமறைவாகிச் சென்று பருத்தித்துறையில் நடமாடி வருவதாகக் கூறப்படுகின்றது.

மேற்சொல்லப்பட்ட தகவல்களின் உண்மை விபரங்களை அறிந்து கொள்வதற்காக பெரிய பள்ளிவாசல் செயலாளர் ஏ.எம். ஹிழுறு அதிபருடன் சென்ற சனிக்கிழமை இரவு முதல் தொலைபேசியில் தொடர்பு கொள்ள ‘வார உரைகல்’ பல தடவைகள் முயற்சித்த போதிலும் அவரது 077 70614310 ம் இலக்க தொலைபேசி தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

ஏற்கனவே ‘வார உரைகல்’ மேற்படி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போதெல்லாம் தொடர்பை ஏற்படுத்தி பல்வேறு தகவல்களையும் வழங்கி வந்த செயலாளர் ஹிழுர் அதிபர், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வைச் சந்தித்ததன் பின்னர் அவரது தொலைபேசியை இறுக மூடி வைத்திருப்பதும் அவரது நடவடிக்கையில் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

இதேவேளை, இக்காணி மோசடி விவகாரத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி மோசடியாளர்களின் துரோகத்தனமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வரும் ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக ‘ஆளுமை பெற்ற’வர்களின் அடிவருடிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றுகூடி ‘வெடில் வைக்கும் ஐடியா’ பற்றி ஆலோசித்த விடயம் கடந்த வாரம் வெளியான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கேயகோடையிலுள்ள சில ஆலவட்டம் தூக்கும் ஆசாமிகளும், அந்த ஆசாமிகளுக்கு ஆமா சாமி போடும் சில அடி வருடிகளும் கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பிரதம ஆசிரியரை முதலைக்கு இரையாக்கப் போவதாக பகிரங்கப் பிரசுரம் மூலம் அறிவித்துள்ளனர்.

முதுகெலும்பில்லாத அந்த ஒரு சில ஆலவட்டங்களும், ஆமா சாமிகளும் இந்த மொட்டை நோட்டீஸை அடிப்பதற்கே மண்முனைப்பற்றுப் பிரதேச முழு முஸ்லிம் மக்களையும் கொழுவி எடுத்து அப்பிரசுரத்தில் ‘இவ்வண்ண’மாகப் போட்டிருக்கும்போது, ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் தனித்து நின்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் தைரியத்தை பெரிதும் மெச்சுவதாக காங்கேயனோடை வாசிகள் பலரும் தெரிவித்தனர்.

இக்காணியை முறைகேடாகக் கையளித்தது ஊருக்கு நன்மையான விடயம்தான் என்றிருந்தால் ஏன் கடந்த 03ம் திகதி அப்பள்ளிவாசல் நிர்வாக சபையினர் அவ்வாறானதொரு பிரசுரத்தை வெளியிட்டிருக்க வேண்டும்?

அன்று தங்களுக்கு நியாயம் வேண்டும் எனக் குரல் எழுப்பி பிரசுரம் வெளியிட்டு ஊர் மக்களை விழிப்படையச் செய்த பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினர், இன்று தங்களுக்கு 15 வீடுகளும், 15 இலட்சம் ரூபாவும் கிடைக்கின்றது என்பதற்காக முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட உறுதி எழுதிய விடயத்தை முறையானதுதான் என அங்கீகரிக்கின்றார்களா?

அப்பிரசுரத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தெளிவான நிலைப்பாடுகள் எனக் குறிப்பிடப்பட்ட 4 அம்சங்களையும் 15 வீடுகளுக்கும், 15 இலட்சம் ரூபாவுக்காகவும் இப்போது காற்றில் பறக்க விட்டுள்ளார்களா? ஏழைகளுக்கும், வீடற்றவர் களுக்கும் என்ற நிலைப்பாட்டை இப்போது மாற்றிக் கொண்டு 50,000 ரூபாவுக்கு இவ்வீடுகளை விற்று வியாபாரம் செய்யத் துணிந்து விட்டார்களா?

பள்ளிவாசல் காணியை இவ்வாறு இரவோடிரவாக மோசடியாக எழுதித் தாரை வார்த்தது இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரும் மோசடியும், நம்பிக்கைத் துரோகமும் என கடந்த 03ம் திகதி வெளியிட்ட பிரசுரத்தில் தெளிவாகத் தெரிவித்திரு;த நிர்வாக சபையினருக்கு, 21 நாட்களுக்குள்ளாகவே அந்த மோசடியாளர்களுடனும், நம்பிக்கைத் துரோகிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஒட்டுறவாடி 15 வீடுகளையும், 15 இலட்சம் ரூபாவையும் பெற்றுக் கொண்டு இவ்விடயத்தை ‘கப்சிப்’பாக்கும் நிலைமை ஏன் ஏற்பட்டது?

எனவே, ‘வார உரைகல்’ ஆசிரியரை இந்தப் பேடிகள் முதலைக்கு இரையாக்குவதற்கு முன்னர் இவ்வாறான பள்ளிவாசல் பச்சோந்திகளையும், தமது சுயநலன்களுக்காகத் தீர்மானங்களையும், நிலைப்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும் தகிடுதித்தர்களையும் முதலில் முதலைக்கு இரையாக்கி ஊர் நிர்வாகத்தைச் சுத்தப்படுத்தட்டும். அதன் பிறகு புவியைப் பார்க்கலாம்.

கடந்த சனிக்கிழமை மாலை செயலாளர் ஹிழுர் அதிபர் அவர்களின் இல்லத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சென்று அவரைச் சந்தித்தபோது பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஏ.எல். ஆதம்லெப்பை (பஹ்ஜி), பொருளாளர் அஷ் ஷெய்க் அப்பாஸ் (நளீமி), செயலாளர் ஹிழுர் அதிபர் அவர்களின் மூத்த மருமகன் பரீட் மாஸ்டர், இளைய மருமகன் அஸ்மி, கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய நாகரீகத்துறை விரிவுரையாளர் முஜாஹித் மற்றும் எம்.ஐ.எம். பஸ்லான் ஆகியோரும் சமூகமளித்திருந்த தாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க, இப்பள்ளிவாசல் காணி விவகாரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புமாறுகோரி காங்கேயனோடையைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் கடந்த 21ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து விவரம் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது. இச்சந்திப்பின் இறுதியில் குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இச்சட்டவிரோதக் காணி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகத் தெரிவித்தனராம்.

-Vaara Uraikal Vol: 188 Date: 24.06.2011-

 

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக