சம்மேளன அறிவித்தல்: இன்னொரு பினாமியை உருவாக்குமா?

காத்தான்குடிப் பொதுமக்களுக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 05.03.2012ம் திகதியிட்டு ஒரு முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன் அதனை கடந்த வாரத்தில் வீடு வீடாகவும் விநியோகித்திருந்தது.

ஏற்கனவே காத்தான்குடி நகரசபைத் தவிசாளரால் முன்வைக்கப்பட்டு சம்மேளனத்தினால் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடை முறைப்படுத்துவதற்கு தயாரான வேளையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்பூட்டல் நடவடிக்கைகளால் கைவிடப்பட்டிருந்த ‘குப்பை கொட்டக் காணி வாங்கக் காசு வாங்கும் திட்டம்’ என்ற வேதாளமே மீண்டும் முருங்கை மரமேறி சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தலாக வீட்டுக்கு வீடு வந்துள்ளது.

நகரத்தில் தினமும் சேருகின்ற குப்பைகளைக் கொண்டு சென்று கொட்டுவதற்கு இப்பிரதேசத்தில் இடமில்லை என்றால் அரசாங்கத்திடம் காணியொன்றைத் தருமாறு கேட்டு  வழக்கொன்றைத் தாக்கல் செய்து தீர்வு காணுமாறு நகர சபையின் எதிர்க்கட்சியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எப்போதோ தெரிவித்திருந்த உருப்படியான ஆலோசனையைப் புறந்தள்ளி விட்டே இன்று வரையும் பதுங்கிப் பதுங்கி மக்களிடம் காசு சேர்த்து காணி வாங்குகின்ற யோசனைக்கு நமது நகரசபையின் ஆளுந்தரப்பு நிர்வாகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

உலக மகா வல்லரசாகிய அமெரிக்காவினது பிரேரணைத் தாக்குதலில் இருந்தே நமது இலங்கைத் தீவைக் காப்பாற்றித் தீர்வு காணும் மகா வல்லமை பொருந்திய அரசியல் சாணக்கியரைக் கொண்டிருக்கும் எமது மண்ணில், கேவலம் இக்குப்பைப் பிரச்சனைக்குத் தீர்வு காண பொதுமக்களின் பணம்தான் இன்னமும் இச்சிற்றரசுக்குத் தேவைப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது, அரசாங்கத்தைப் பாதுகாக்க நிராயுதபாணிகளான பொதுமக்களே சுலோக அட்டைகளுடன் வீதிகளில் இறங்கிப் போராடிய கையறு காதையையே மீட்டிப் பார்த்து நாம் எக்காளிக்க வேண்டியுள்ளது.

சம்மேளனத்தின் குறித்த அறிவித்தல் பிரசுரத்தில் அவர்கள் முன்நின்று காசு சேர்த்துக் கொடுப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டிருப்பதை ‘வார உரைகல்’ பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

‘நகரசபை தனது பணத்தைக் கொண்டு காணிகளைக் கொள்முதல் செய்ய முடியாதென சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’ என்பதுவே சம்மேளனம் தான் முன் நின்று பொதுமக்களிடம் காசு வாங்குவதற்கு தெரிவித்திருக்கும் காரணமாகும்.

இவ்வாறு சட்ட ஆலோசனை ஒன்றைக் கூறிய அந்த சட்ட அதிகாரிகளுக்கு ‘வார உரைகல்’ லினால் பொன்னாடைகளைப் போர்த்தி அவர்களைச் சூடேற்ற முடியாவிட்டாலும் சில பன்னாடைகளையாவது போர்த்தி அவர்களைப் பாராட்ட விரும்புகின்றது.

மக்களை மறதியாளர்கள் என்றும் மடையர்கள் என்றும் நினைத்துக் கொண்டு கால் நூற்றாண்டுகளாக சமூக அரசியலில் ஏமாற்றி வெள்ளி விழா கொண்டாடி வருவோர் இன்னமும் மக்கள் அதே ‘போதை’ நிலையில்தான் இருக்கிறார்கள் என எண்ணியவர்களாகத்தான் இவ்வாறான காரணங்களை எல்லாம் காலத்திற்குக் காலம் அவிழ்த்து விட்டு மக்கள் தலைகளில் மிளகாய் அரைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர் என்றே கருத வேண்டியுள்ளது.

நகரசபைப் பணத்தில் காணிகளைக் கொள்வனவு செய்ய முடியாது என்றால் ஏற்கனவே நகரசபைப் பணத்தில் எச்.ஐ. புரம் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் காணிகள் எல்லாம் யாரின் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டன என்பதையாவது நகரசபை நிர்வாகம் தெளிவுபடுத்துமா?

எச்.ஐ. புரம் பகுதியில் நகரசபைப் பணத்தில் ஏற்கனவே பல காணிகள் பல இலட்சம் ரூபாய் களில் வாங்கி இருக்கும்போது இப்போது மாத்திரம் அவ்வாறு வாங்க முடியாதென்று எப்போது சட்டம் இயற்றப்பட்டது என்பதையாவது அந்த சட்ட அதிகாரிகள் தெரிவிப்பார்களா?

நகரசபை நிர்வாகம் வரலாறு தெரியாதென நினைத்துக் கொண்டு சம்மேளனத்தை ஏமாற்ற முனைகின்றதா? அல்லது சம்மேளன நிர்வாகம் வரலாறும், சட்டமும் தெரியாதென நினைத்துக் கொண்டு மக்களை ஏய்க்க முயற்சிக்கின்றதா?

சம்மேளனம் எமதூரின் தாய் நிறுவனம். சகல பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களினதும் நலன் பேணும் தலைமை அமைப்பு. இவர்கள் அழ்ழாஹ்வுக்காக 500 ரூபாய் தாருங்கள் என்று கேட்டால் நமது மக்கள் மறுபேச்சின்றி தூக்கிக் கொடுத்து விட்டுப் போவார்கள்.

ஆனால் பொய்யான காரணங்களைச் சொல்லி நடைமுறைப் படுத்தச் சாத்தியமான திட்டங்கள் எதுவுமற்ற நகரசபைத் தவிசாளரின் ‘காணி வாங்கும்’ அல்லது ‘காணி விற்கும்’ யோசனைக்கு பணம் தாருங்கள் எனக் கேட்டு அழுவதுதான் மக்களை மந்தைகளாக்கும் செயல் எனக் கருதப்படுகிறது.

சரி, போகட்டும். எமது மக்களின் பணத்தைக் கொண்டே 60 இலட்சம் ரூபாவுக்கு சம்மேளனம் அந்த அடையாளப்படுத்திய காணியை வாங்கினால் அதை யாருடைய பெயருக்கு உரிமம் எழுதுவார்கள் என்பதையாவது அக்காணியை வாங்குவதற்குப் பணம் கொடுக்கின்ற இந்த மக்களுக்குச் சொல்வார்களா?

நகரசபையின் பெயரில் நன்கொடையாக எழுது வார்களா? அல்லது சம்மேளனத்தின் பெயரில் பொதுச் சொத்தாக எழுதுவார்களா? அல்லது சுனாமிக் காணிகளுக்குப் பிறந்தது போல் இக் குப்பைக் காணிக்கும் ஒரு பினாமியை இவர்கள் பிரசவிப்பார்களா?

சுனாமித் தாக்கம் ஏற்பட்டதன் பின்னர் வீட்டுத் திட்டங்கள் அமைப்பதற்காக சம்மேளனம் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள நம்மவர் களிடம் பணம் திரட்டியது.

அப்பணத்தில் காணிகளும் வாங்கப்பட்டன. அவ்வாறு வாங்கப்பட்ட காணிகளை, லலித் கொத்தலாவல போன்ற கோடீஸ்வரர்களின் வங்கிகளையே ஏப்பமிட்டு இழுத்து மூடச் செய்திருக்கும் எமது அரசியல்வாதி ஒருவரின் பினாமியாகச் செயற்படும் அன்பான மௌலவி ஒருவரின் பெயரில் எழுது வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இச்சமயத்தில் இக்காணிகளை வாங்குகின்ற திட்டத்திற்காக பெருமளவு நிதியைத் திரட்டிக் கொடுத்த நமது சகோதரர்கள் சிலர் ஏன் அந்த மௌலவியின் பெயரில் காணிகளை எழுத வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சம்மேளனத்தின் பிரதித் தலைவராகவுள்ள சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல்.அப்துல் ஜவாத் அவர்கள், சம்மேளனம் ஒரு பொது நிறுவனம் என்பதால் அதன் பெயருக்கு காணிகளை எழுத முடியாது என எழுத்து மூலமே பதிலளித்திருந்ததை ‘வார உரைகல்’ சம்மேளன நிர்வாகத்திற்கும், இவ்வூர் மக்களுக்கும் ஞாபகப்படுத்திச் சொல்ல விரும்புகின்றது.

ஒரு பொது நிறுவனத்தின் பெயருக்கு காணிகளை வாங்கி எழுத முடியாது என்ற புதுமையான சட்ட விளக்கத்தை நம்பிய அந்த நிதி திரட்டிக் கொடுத்த சகோதரர்களும் ஏதோ ஒரு நம்பிக்கையில் எவர் பெயருக்கு எழுதியென்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் மௌனமாகினர்.

கைக்கு காசு கிடைத்தாயிற்று. காணிகளும் வாங்கியாயிற்று. அன்பான மௌலவியின் திருப்பெயரில் காணிகள் உரிமமாக்கப்பட்டன. சில காணிகளில் வீட்டுத் திட்டங்கள் எழுந்தன. மீதிக் காணிகள் இன்றும் அழியாச் சொத்துக்களாக அவர் பெயரிலேயே உள்ளன. 

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாத அரசியல்வாதியின் ஆதரவாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டன.

வீட்டுத் திட்டம் அமைந்துள்ள காணிகள் எல்லாம் தனது சொந்தக் காணிகள்தான் என அந்த அன்பான மௌலவியும் உரிமை கோரி அதற்கான கோடிக்கணக்கான ரூபாய்களை நஷ்டஈடாகக் கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்.

அதற்கிணங்கி கையெழுத்திட மறுத்த பிரதேச செயலாரையும் இடமாற்றம் செய்தனர்.  நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த அவலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் ‘வார உரைகல்’ லின் பதிவேடுகளில் பக்கம் பக்கமாகப் பதிவாகி இருக்கும் கடந்த காலச் சமாச்சாரங்களாகும்.

இப்போதும் சம்மேளனம் அடையாளப்படுத்தியுள்ள காணியை வீட்டுக்கு வீடு 500 ரூபாவாக வசூல் செய்து 60 இலட்சம் ரூபாவுக்கு வாங்கினால் அதனை யார் பெயருக்கு எழுதுவது?

சுனாமியால் ஒரு பினாமி பிறந்ததைப் போல குப்பையிலும் இன்னொரு பினாமி அவதாரம் எடுக்குமா?

சொல்ல முடியாது. ‘குப்பையிலும் குன்றிமணி கிடைக்கலாம்.’ அந்த அதிர்ஷ்டம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-Vaarauraikal Vol:216  Date: 16.03.2012 –

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக