மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சி முஸ்லிம் பிரிவின் மாவட்ட அமைப்பாளராக எம்.எஸ்.எம். ஷாபி அவர்களை நியமிக்க வேண்டும்!

-ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழு பிரச்சாரச் செயலாளர் புவி கோரிக்கை-

Shafi-&-Kabeer-Hasim-12

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, கல்குடா மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் வாழும் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்களை இனிமேலும் தமிழர்களின் ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பதை ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடம் அனுமதிக்கக்கூடாது.

எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இம்மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவி, அதன் மாவட்ட அமைப்பாளராக ஐ.தே.கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி அவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவரை நியமிப்பதற்கு ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சராகவும் இவ்வரசாங்கத்தில் பங்கேற்றிருக்கின்ற கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் ஐ.தே.கட்சித் தலைமைப்பீடத்தினை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழு பிரச்சாரச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

V. Lingarasa UNP Manager

ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் வி. லிங்கராசா, ‘ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு செல்லுபடியற்றது’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையினைத் தொடர்ந்தே ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழு பிரச்சாரச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் இக்கோரிக்கையை முன்வைத்து, அது தொடர்பான அறிக்கையொன்றினை ஊடகங்களுக்கு இன்றைய தினம் (30.06.2016) அனுப்பி வைத்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

sarath-fonseka-unpகடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் கௌரவ பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களும், அவரது தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் அனைவரும் ஐ.தே.கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்று உத்தியோகபூர்வமாக இணைந்த போது, இரு தரப்பினருக்கும் இடையில் கனவான் அரசியல் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

shafi-kabeer-hasim-horz-1அந்த உடன்படிக்கையின் படி, ஜனநாயகக் கட்சியில் யார் யார் எந்தெந்தப் பதவி நிலைகளில் உள்ளனரோ அவரவர்களுக்கு ஐ.தே.கட்சியிலும் அதே பதவி நிலைகள் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி அவர்களையும் ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் மாவட்ட அமைப்பாளராக நியமிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, கல்குடா மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் வாழும் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்களை இன்னமும் இம்மாவட்ட அமைப்பாளராகவுள்ள ஏ. சசிதரன் மற்றும் மாவட்ட முகாமையாளர் வி. லிங்கராசா போன்றோரின் ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பதை ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடம் அனுமதிக்கக்கூடாது.

எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக மேற்கூறப்பட்ட மூன்று முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இம்மாவட்டத்தில் முஸ்லிம் பிரிவொன்றை வரையறுத்து நிறுவி, அதன் மாவட்ட அமைப்பாளராக ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி அவர்களை நியமிப்பதுடன், இம்முஸ்லிம் பிரிவுக்கான மாவட்ட முகாமையாளர் ஒருவரையும் ஐ.தே.கட்சித் தலைமைப்பீடம் நியமிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இம்மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி வெகுவாகக் குன்றியமைக்கு தற்போதுள்ள மாவட்ட அமைப்பாளர் ஏ. சசிதரன் மற்றும் மாவட்ட முகாமையாளர் வி. லிங்கராசா ஆகியோர் முஸ்லிம் பிரதேசங்களில் தமது செயற்பாடுகளை வியாபிக்க நடவடிக்கைகள் எடுக்காமையும் ஒரு பிரதான காரணமாகும்.

மேற்படி இருவரும் மட்டக்களப்பு நகரில் பெயரளவில் இருந்து கொண்டு, காலத்திற்குக் காலம் நடைபெறுகின்ற தேர்தல்களில் மாத்திரம் தமது பதவி அஸ்திரங்களைப் பிரயோகித்துக் காலங்கடத்தி வந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் ஐ.தே.கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் திருப்திகரமான தொடர்பாடல்களையோ, அவர்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் உள்வாங்கி அறிந்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதிலோ இவர்கள் அக்கறை காட்டவில்லை.

இதன் காரணமாகவே மேற்படி முஸ்லிம் பிரிவுகளில் வாழும் ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் குழு நிலையில் செயற்பட வேண்டிய தேவைகள் ஏற்பட்டன. இம்முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு சீரான மத்திய குழுக்களின் நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த இவர்கள் எள்ளளவும் முயற்சிகளை எடுக்கவில்லை.

காத்தான்குடி உட்பட ஏனைய பிரதேசங்களில் இயங்கி வருகின்ற மத்திய குழுக்கள் ஐ.தே.கட்சித் தலைமையகத்தினால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமானவை என்று ஊடகங்கள் மூலம் அறிக்கை விடுகின்ற மாவட்ட முகாமையயாளர் வி. லிங்கராசா, இச்சட்ட விரோதக் குழுக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?

இம்மத்திய குழுக்கள் இன்று நேற்றில் இருந்தா இப்பிரதேசங்களில் இயங்கி வருகின்றன? இச்சட்டவிரோத மத்திய குழுக்கள் தொடர்பில் இவரும், மாவட்ட அமைப்பாளர் ஏ. சசிதரனும் இதுவரை ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்களா?

1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் வெற்றியீட்டிய மர்ஹும் டாக்டர். பரீத் மீராலெப்பை அவர்களால் நிறுவப்பட்ட ஒரு மத்திய குழுதான், காத்தான்குடியில் செயற்பட்டு வருகின்ற ஐ.தே.கட்சியின் மத்திய குழுவாகும்.

அன்று டாக்டர். பரீத் மீராலெப்பை அவர்களின் முன்னிலையில் கட்சி ஆதரவாளர்களால் இம்மத்திய குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்;ட ஜனாப். கே.எம்.எம். அலியார் அவர்களே 39 வருடங்களாக இன்றளவும் செயற்பட்டு வருகின்றார் என்ற வரலாறை மாவட்ட முகாமையாளர் வி. லிங்கராசா தெரிந்து கொள்ள வேண்டும்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் கொத்தணி அமைப்பாளராக ஜனாப். எச்.எம்.எம். முஸ்தபாவும், மத்திய குழுவின் தலைவராக ஜனாப் கே.எம்.எம். அலியாரும் மிக நீண்ட காலமாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இயங்கி வந்துள்ளதுடன், இம்மாவட்டத்தில் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஒருவரை நியமித்துத் தருமாறு அமைச்சரும், ஐ.தே.கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான கௌரவ தயா கமகே அவர்களிடம் காத்தான்குடி மத்திய குழுவினூடாக எழுத்து மூலமும் கோரியிருந்தனர்.

அதற்கு கௌரவ அமைச்சர் தயா கமகே அவர்களும் அது குறித்து விரைவில் கவனத்திற் கொள்ளப்படும் என்று உத்தியோகபூர்வமாக பதிலும் அனுப்பியுள்ளார். காத்தான்குடி மத்திய குழுவும், கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவும் கட்சித் தலைமையகத்தினால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத செயற்பாட்டாளர்கள் என்பது கௌரவ அமைச்சர் தயாகமகே அவர்களுக்குத் தெரியாதா?

UNP-karbala-road-26.06.20152015.06.26ஆம் திகதியன்று காத்தான்குடியை அடுத்துள்ள பாலமுனை – கர்பலா வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வுக்கு அப்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த கௌரவ தயா கமகே அவர்கள் கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவும், ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவும் வேண்டிக் கொண்டதற்கிணங்கவே தனது சொந்த உலங்கு வானூர்தியில் பாலமுனை விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இது, இம்மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் அமைப்பாளராகவும், மாவட்ட முகாமையாளராகவும் பொறுப்பு வாய்ந்த பதவிகளைப் பெற்று பெயரளவில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்குத் தெரியுமா?

ஐ.தே.கட்சியின் அங்கீகாரத்தைப் பெறாத சட்ட விரோதமாகக் கட்சியின் பெயரால் செயற்படுவதாக இவர்கள் கூறும் கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவினதும், காத்தான்குடி மத்திய குழுவினதும் வேண்டுகோளை ஏற்று அவர் எப்படி இந்நிகழ்வுக்கு வருகை தந்திருக்க முடியும்?

மேலும் இந்த வீதிப் புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கான 7 மில்லியன் ரூபா நிதியையும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கௌரவ கபீர் ஹாசிம் அவர்களே ஒதுக்கியிருந்ததையும் இந்த மாவட்ட முகாமையாளர் அறவே அறிந்திருக்கவில்லை போலும்?

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி கூட்டரசாங்கம் அமைக்கப்பட்ட பின் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி இதே கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவினதும், காத்தான்குடி மத்திய குழவினதும் அழைப்பின் பேரில் அஞ்சல் விவகார மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்து, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றை இங்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தது கூட இம்மாவட்டத்தின் அமைப்பாளர் என்றும், முகமையாளர் என்றும் ஊடகங்களில் மாத்திரம் அத்தி பூத்தது போன்று அறிக்கை விடுகின்ற இவர்களுக்குத் தெரியுமா?

ஐ.தே.கட்சியின் அங்கீகாரத்தைப் பெறாத சட்ட விரோதமாககச் செயற்பட்டு வரும் மத்திய குழு என இவர்கள் கூறும் கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவினதும், காத்தான்குடி மத்திய குழுவினதும் வேண்டுகோளை ஏற்று கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் எப்படி காத்தான்குடிக்கு வருகை தந்திருக்க முடியும்?

Kamatchi-Gramam-2இம்மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற காமாட்சி கிராமம் வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவுக்காக வீடமைப்பு அமைச்சரும், ஐ.தே.கட்சியின் உப தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் வருகை தந்தபோது, ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவும், மத்திய குழுத் தலைவர் கே.எம்.எம். அலியாரும், ஆதரவாளர்கள் சகிதம் சென்றிருந்தது இந்த மாவட்ட முகாமையாளரின் கண்களுக்குத் தெரியவில்லையா?

ஏன் அவர் இந்தச் சட்டவிரோத அமைப்பாளரையும், மத்திய குழுத் தலைவர் மற்றும் ஆதரவாளர்களையும் அப்போது தடுக்கவில்லை? அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தினால் கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவுக்கும், மத்திய குழு நிர்வாகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கடிதங்களும், கட்சியின் சுற்றறிக்கைளும், தேர்தல் கால ஆவணங்களும் இவர்களிடம் இன்று வரைக்கும் பாதுகாப்பாகக் கோப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், எவ்வாறு இந்த மாவட்ட முகாமையாளரால் இவ்வாறு ஒரு கண்மூடித்தனமான அறிக்கையை பொறுப்பற்ற முறையில் ஊடகங்களுக்கு வழங்க முடியும்?

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறுகின்ற கட்சியின் செயற்பாடுகள் எதுவுமே அறியாத, தெரியாத வெறும் வாய்ப்பந்தல் வீரர்களான இவர்களின் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு இன்னமும் ஐ.தே.கட்சியின் இம்மாவட்ட முஸ்லிம் மக்கள் தயாராக இல்லை.

எமது முஸ்லிம் பிரதேசங்களுக்கான மாவட்ட அமைப்பாளர் ஒருவரையும், மாவட்ட முகாமையாளர் ஒருவரையும் ஐ.தே.கட்சி தலைமைப்பீடம் கௌரவ அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களுடன் செய்து கொண்ட கனவான் அரசியல் உடன்படிக்கைக்கமைவாக உடனடியாக நியமித்துத் தர வேண்டும்.

அப்போதுதான் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும், இம்மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் எம்மால் ஐ.தே.கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.

ஐ.தே.கட்சியின் மாவட்ட முகாமையாளராக இருக்கும் வி. லிங்கராசா, தற்போது தேசிய மர முந்திரிகைக் கூட்டுத்தாபனத்திலும் ஒரு பணிப்பாளராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

மாவட்ட முகாமையாளர் என்ற அடிப்படையில் அவருக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு அரச வேலை வாய்ப்புக்களையும் அவர் ஈரினங்களுக்கும் பிரித்து வழங்காமல் அவரது குடும்பத்து உறவினர்கள் இருவருக்கே வழங்கியுள்ளார்.

இப்படி சுத்த சுயநலத்துடன் செயற்படுகின்ற இவரால் எவ்வாறு இந்த மாவட்டத்தில் இணங்கியும், நெருங்கியும் வாழுகின்ற தமிழ் – முஸ்லிம் மக்களிடம் ஐ.தே.கட்சியின் எதிர்கால வளர்ச்சிச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்? -இவ்வாறு புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக