பள்ளிவாயலின் புனிதம் கெடுத்த இரண்டாவது இப்தார்! -ஜமாஅத்தார் கண்டனம்-

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் கடந்த 02ம் திகதியன்று நடைபெற்ற ‘இஃப்தார்’ நோன்பு துறக்கும் நிகழ்ச்சி குறித்து அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் தமது ஆட்சேபனையை ‘வார உரைகல்’ லுக்குத் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக அவர்களின் ஆட்சேபனையில் தெரிவித்திருப்பதாவது:

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் நகர ஜூம்ஆப்பள்ளி கிழக்கு மாகாணத்தில் மிகவும் புகழ்பூத்ததொரு பள்ளிவாயலாகும். இந்திய வம்சாவளி ஆலீம்களால் முதன்முதலாக தராவீஹ் தொழுகையின்போது அல்குர்ஆனின் 30 பாகங்களையும் ஓதி தமாம் செய்யப்பட்டதன் காரணமாக இதன் புகழ் கிழக்கு மாகாணமெங்கும் பரவியது.

காத்தான்குடியிலிருந்தும் கண்ணியமிக்க ஓடக்கரை ஆலிம், அபதுல் கபூர் ஹாஜியார் ஆலீம் போன்ற பல பெரியார்கள் இப்பள்ளியில் தராவீஹ், தஸ்பீஹ் தொழுவதற்காக தோணிகளைப் பிணைத்து வாவியைக் கடந்து வந்ததாகவும், இவ்வாறே மூதூர் கிண்ணியா போன்ற தூரப் பிரதேசங்களில் இருந்தும் பல ஆலீம்கள் றமழான் மாதங்களில் இப்பள்ளிவாயலுக்கு வந்த சிறப்பித்தாகவும் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அவர்களின் உபதேசங்களில் இருந்து எம்மால் அறிய முடிகின்றது.

இவ்வாறான கண்ணியத்திற்குரிய இப்பள்ளிவாசலில் இந்திய ஆலிம்களின் நிர்வாக காலத்திற்குப் பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர்களான டிப் டொப் நூகுலெப்பை ஹாஜியார், எம்.சீ.எம். இஸ்மாயில் ஹாஜியார், எம்.எம்.ஈ. இப்றாஹீம் ஹாஜியார், முதலியார் சின்னலெப்பை, அவரது மகன் பாரூக் சின்னலெப்பை, நியூமர்ழியாஸ் அமீன் ஹாஜியார், சாபி சன்ஸ் ஜிப்ரி ஹாஜியார் போன்ற பலரும் மிக சீரான, நேர்த்தியான, கண்ணியமான நம்பிக்கையாளர்களாக இருந்து அல்லாஹ்வின் அமானிதத்தையும், அதன் புனிதத்தையும் பாதுகாத்தனர்.

ஆனால்,  இன்றைய நம்பிக்கையாளர்களோ பொலீஸ் உயர் அதிகாரி, இராணுவ உயர் அதிகாரி, மாநகர உயர் அதிகாரி, விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற அரச உயர் அதிகாரிகளுக்கு மிக நம்பிக்கையாளர்களாகச் செயற்படுவதாகவே ஜமாஅத்தார்களான நாங்கள் கருதுகின்றோம்.

இந்த அதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இவர்கள் போட்டுள்ள ஒரு வேஷமாகவே இவர்களின் நம்பிக்கையாளர் பதவிகளையும் இப்போது நாம் பார்க்கின்றோம்.

சென்ற வருடமும் இப்பள்ளிவாயலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சிக்காக ‘பாலூதா சிறப்பு இப்தார்’ என அழைப்பிதழ்கள் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டன. நம்பிக்கையாளர் சபையைக் கலந்தாலோசிக்காமல், பிரதம நம்பிக்கையாளர் என்ற கர்வத்தில் தனி மனித விருப்பத்தில் மாநகர முதல்வர், உயர் அதிகாரி களுக்கு இவ்வாறு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

நோன்பாளர்கள் அல்லாத அதிகமானவர்கள் இந்த ‘பாலூதா சிறப்பு இஃப்தார்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படியான அழைப்பிதழுக்கு நிர்வாக உறுப்பினர் இக்பால் ஹாஜியார் போன்ற பலரும் அப்போது எதிர்ப்புத் தெரிவித்திருந்தும் ஜமாஅத்தார்களுக்கும்கூட விருப்பமில்லாத ‘பாலூதா விருந்து’ கொடுத்ததன் மூலம் மாநகர முதல்வருக்கு இப்பள்ளிவாயல் பிரதம நம்பிக்கையாளர் செல்லப்பிள்ளை ஆனார் என்பது பலருக்கும் தெரிந்ததே!

நம்பிக்கையாள்களுக்கு மட்டுமல்ல, ஜமாஅத்தார்களுக்கும் அறவே விருப்பமில்லாத இவ்வாறான பார்ட்டியைக் கொடுத்து எம் பள்ளிவாசலின் புனிதத் தன்மையைக் கெடுத்ததன் மூலம் தனது தொழில் விருத்திக்காகவும், தனது செல்வாக்கு ஸ்திரத்திற்காகவும் உயர் அதிகாரிகளைச் சம்பாதித்துக் கொண்டவர் பிரதம நம்பிக்கையாளர் மாத்திரமே!

இந்தப் பார்ட்டி விவகாரத்தால் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் முறுகலும், முனங்கலும் தொடர்ந்தது.

இவ்வருடமும் தன்னிச்சையாகச் செயற்படும் பிரதம நம்பிக்கையாளர் முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு அல்லாஹ்வின் இல்லத்தில் இஃப்தார் விருந்தை மிகச் சிறப்பாக நடாத்தியிருக்கின்றார்.

இப்பள்ளிவாசலின் கண்ணியம் காக்கப்பட்டதற்கு ஒரு உதாரணத்தை இங்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

1990ம் ஆண்டு காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் சதாம் ஹூஸைன் கிராமப் படுகொலை போன்ற வன்முறைப் படு கொலைக் காலத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்புடன் புளியந்தீவு நகருக்குள் வாழ்ந்தவர்கள் இப்பள்ளிவாசலின் ஜமாஅத்தார்களான ஊர்வாசிகளே!

சிலர் புளியந்தீவுக்குள் இருந்தால் நம்மையும் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் வெளியூர்களுக்கு குடும்பத்துடன் சென்றார்கள்.

இருப்பினும் இக்பால், சாலி மாஸ்டர் போன்ற நம்பிக்கையாளர்களும் சுமார் 15 குடும்ப அங்கத்தவர்களும் பாதுகாப்பு நிமித்தம் இரவு வேளைகளில் இப்பள்ளிவாயலில் தங்கியிருந்தனர்.

அப்போதும் அவர்கள் உட்பள்ளியை மூடிவிட்டு வெளி விறாந்தாவிலும், மேல் மாடியிலும்தான் தங்கியிருந்தனர். தொழுகைக்கான பிரதான தளமாகக் கருதப்படும் உட்பள்ளி அந்த இக்கட்டான காலகட்டத்திலும் கண்ணியமாகப் பாதுகாக்கப்பட்டது. யாருமே உட்செல்ல முடியாதவாறு அது முற்றாக மூடப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைய நிர்வாகத் தலைவர் தனது வியாபாரத் தொலை நோக்க இலாபம் கருதி அரச உயர் அதிகாரிகளுக்கு, ஆண் – பெண் – அந்நிய மக்கள் எனப் பாராது, ஜூம்ஆப் பள்ளி என்ற கௌரவத்தைக் கொடுக்காது ஏதோ திருமண மண்டபம் – விருந்து மண்டபம் போன்று உட்பள்ளிவாயலுக்குள் ‘இஃப்தார்’ என்ற பெயரில் வருடத்திற்கொரு முறை பாலூதா விருந்து, சிற்றுண்டி விருந்தளித்து தனது செல்வாக்கையும், வியாபாரத்தையும் வளர்க்கும் போக்கைத் தொடர்ந்து வருகின்றார்.

இதனை இப்பள்ளிவாசலின் ஜமாஅத்தார்களான நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த வருடத்தோடு இந்தப் பள்ளிவாயலினுள் ‘பாலூதா விருந்து’ கொடுக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

பல் சமூக, பல் சமய ஒற்றுமையை புனிதமான இறை வழிபாட்டுத் தலங்களில் எந்த சமயத்தவரும் சமூகத்தினரும் ஏற்பாடு செய்வதில்லை என்பதையும் நாம் அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கிறிஸ்த வர்கள் அவர்களின் தேவாலயத்திலோ, இந்துக்கள் அவர்களின் கோயில்களிலோ, பௌத்தர்கள் அவர்களின் விகாரைகளிலோ இத்தகைய பல் சமய பல் சமூக இன ஐக்கிய உறவுப்பால நிகழ்ச்சிகளை நடாத்துவதில்லை.

அவர்கள் அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் அவர்களின் சமய வணக்க வழிபாடுகளை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒழுங்கிலிருந்து எமது பிரதம நம்பிக்கையாளர் மாத்திரம் முறை தவறுவது ஏனோ…?!

எமது பிரதம நம்பிக்கையாளரும், முஸ்லிம் வர்த்தகர் சங்கமும் சேர்ந்து புளியந்தீவு, சோனகர் வீதி, ஆமன் கோணர் வீதி, கோட்டைமுனையில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு, நோன்பாளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று அம்மக்கள் துஆச் செய்து  இருப்பார்கள். இந்த இஃப்தாரில் கலந்து கொண்டவர்களில் எத்தனை பேர் இவ்வாறு ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனக் கூறியிருப்பார்கள்?

100 வீதம் முஸ்லீம்கள் வாழ்கின்ற காத்தான்குடியில் அந்நிய மத ஆண் பெண்களும் கலந்துகொள்ளும் வகையில் ஜும்ஆப்பள்ளிவாயலொன்றில் இவ்வாறான ‘இஃப்தார்’ நிகழ்ச்சியொன்றை நடாத்த இயலுமா..?

எனவே, நம்பிக்கையாளர்களே..! உயர் அதிகாரிகளுக்கு நீங்கள் ‘இப்தார்’ ஏற்பாடு செய்ய வேண்டுமாக இருந்தால் அதை உங்களது இல்லங்களில் அல்லது வாடகை மண்டபங்களில் சிறப்பாகச் செய்யுங்கள். அதனை நாம் தடுக்கவில்லை. அதுவே உங்களுக்கும் சிறப்பு.

அல்லாஹ்வின் இல்லத்தை உங்களின் செல்வாக்குப் பிரசித்தம், வியாபார நோக்கு, எதிர்கால சுயகௌரவ நன்மைகளைக் கருத்திற் கொண்டு இவ்வாறான வேலைகளுக்குப் பயன்படுத்த இனியும் துணியாதீர்கள்! உங்கள் சிறப்பைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் இல்லத்தின் தனித்துவத்திற்கும், புனிதத்துவத்திற்கும் மாசு கற்பிக்காதீர்கள்!! இந்த வருட நிகழ்வே இவ்வாறான சுயநல செயற்பாடுகளுக்கான கடைசிச் செயற்பாடாக இருக்கட்டும் என நாமும் பிரார்த்திக்கின்றோம்!!!

சென்ற வருட ‘பாலூதா இப்தார்’ நிகழ்வைக் கண்டித்து துண்டுப்பிரசுரம் வெளியிட்டு எமது கண்டனத்தைத் தெரிவித்தோம்.

இவ்வருடம் எமது பிராந்தியப் பத்திரிகையான ‘வார உரைகல்’ மக்கள் ஊடகம் மூலம் உங்களின் இத்தகைய செற்பாடுகளுக்கு எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    • M.A.C.MOHAMED JAHANI
    • செப்ரெம்பர் 18th, 2010

    ஏம்.ஏ.சீ.முஹம்மது ஜஹானி
    அஷ;ஷஹீத் அஹமத் லெப்பை வீதி
    காத்தான்குடி.
    13-09-2010
    ஆசிரியர்
    வார உரைகல்
    காத்தான்குடி.

    அஸ்ஸலாமு அலைக்கும்
    கடந்த 10.09.2010 அன்று வெளியான வார உரைகல்லின் 154ம் பதிவில் களம் வழங்கப்பட்டிருந்த ‘பள்ளிவாயலின் புனிதம் கெடுத்த இரண்டாம் இப்தார் நிகழ்ச்சி’ எனும் கட்டுரையினை வாசித்தபோது பேரதிர்ச்சி அடைந்தேன். குறித்த ஆட்சேபனையைத் தெரிவித்த ஜமாஅத்தார்களின் தூர நோக்கற்ற சிந்தனையினைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அது அமைந்திருந்தது.

    குறித்த கண்டன அறிக்கையில்இ இப்தார் நிகழ்வுக்கு மாற்று மத சகோதரர்கள் அழைக்கப்பட்டு பள்ளிவாயலினுள் வரவேற்கப்பட்டார்கள் என்கிற விடயத்துக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது. ஓர் இப்தார் நிகழ்வில் தேவையற்ற ஆடம்பரங்கள் இடம்பெற்றது என்பதற்காக அதனைக் கண்டித்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ‘பள்ளிவாயலில் நடைபெறும் ஒரு நிகழ்வு முறையாகக் கலந்தாலோசிக்கப்படாமல் நடத்தப்பட்டது’ என்ற ஆட்சேபனை எழுப்பப்பட்டால் அதனையும் ஏற்கலாம். ஆனால் ‘மாற்று மதத்தவர் எவரும் பள்ளிவாயலுக்குள் கால் வைக்கக்கூடாது’ என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    பல்லின சமூகத்தில் சிறுபான்மையினராக வாழும் நாம் இஸ்லாமிய வரம்புகளை மீறாத வகையில் மாற்று மத சகோதரர்களின் உள்ளங்களில் எமது சமூகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காக எம்மால் முடியுமான எல்லா எத்தனங்களையும் மேற்கொள்ளவேண்டியது அவசியமானது. அது சிறந்ததொரு தஃவா முயற்சியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. மாற்று மதத்தவர்கள் எமது உரிமைகளில் கை வைக்காதவரை அவர்களுடன் நீதமாகவும் அழகிய முறையிலும் நடந்துகொள்ளுமாறு அல்குர்ஆனும் ஆர்வமூட்டுகிறது.
    ‘மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாத மற்றும் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்குஇ நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீதியாக நடந்துகொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான்.’ (அல்-குர்ஆன் 60:08)

    இன நல்லுறவை ஏற்படுத்தவும் இஸ்லாத்தின் தூதை மாற்று மத சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லவும் இப்தார் நிகழ்வுகள் மிகச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. மாற்றுமத சகோதரர்களே ஆர்வத்தோடு இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அளவுக்குஇ நல்ல சமிக்ஞைகளும் கிடைக்கின்றன. அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரேஇ நலன்புரி நிலையமொன்றில் எளிமையான இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமைஇ இதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்வது அளவுக்கெட்டாத நன்மைகளை அள்ளித்தருகிற செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும்இ அதே சந்தர்ப்பத்திலேயே ஒன்றிரண்டு மாற்றுமத சகோதரர்களுக்கும் விருந்தளித்துக் கௌரவிப்பதுஇ ஒருபோதும் பாவமான செயலாக மாறாது. ஆதனூடாக விளைகின்ற நன்மைகளும் அனேகம் இருக்கின்றன. அண்மையில் ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வும்இ படித்த மாற்று மத சகோதரர்களின் மனதில் இஸ்லாத்தைப் பற்றிய நல்ல மன உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதைஇ அதில் கலந்துகொண்ட உயர் உத்தியோகத்தர் ஒருவரின் நேரடியான வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நம்மால் விருந்தளிக்கப்படுகிற ஒருவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொன்னால்இ அல்லது அவ்வாறு சொல்லக்கூடிய முஸ்லிமாக இருந்தால் மட்டும்தான் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நினைப்பதுஇ அறியாமையினதும் குறுகிய சிந்தனையினதும் வெளிப்பாடாகும்.

    ஏனைய சமய வணக்கத் தலங்களில் இன ஐக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியே ஏற்றுக்கொண்டாலும்இ பள்ளிவாயல்களிலும் சமய வணக்க வழிபாடுகளை மட்டுமே நடத்த வேண்டும் என அடம்பிடிப்பதுஇ இஸ்லாமிய சமூகத்தில் மஸ்ஜித்களின் பணியினைச் சரியாகப் புரிந்துகொள்ளாமையினால் ஏற்படுகிற விளைவாகும். பள்ளிவாயில்கள்இ ஏனைய சமயத் தலங்களைப் போல்இ சமயச் சடங்குகளை மட்டும் நடத்துகிற இடம் என்ற வரையறைக்குள் நிற்காதுஇ சமுகத்தின் எல்லா விவகாரங்களையும் கவனிக்கின்ற சனசமூக நிலையமாகவும் தொழிற்படுகிறது. எனவேஇ முஸ்லிம்களால் நடத்தப்படும் இன ஐக்கிய நிகழ்வுகளைஇ மார்க்க வரம்புகளை மீறாவண்ணம்இ அங்கு நடத்துவது பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

    நபியவர்கள்இ தம்மைச் சந்திக்க வரும்இ வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பள்ளிவாயலிலேயே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள். காபீர்களான ‘பனீ தக்கீஃப்’ கோத்திரத்தினர்; தூதுவர்களாக மதீனாவுக்கு வந்தபோது அவர்களை மதீனா பள்ளிவாசலிலேயே நபி (ஸல்) அவர்கள் தங்க அனுமதி வழங்கினார்கள். பள்ளிவாயலின் புனிதத்துக்கும் தனித்துவத்திற்கும் மாசு ஏற்படுத்தும் ஒன்றை நபியவர்கள் செய்யமாட்டார்கள்.

    இஸ்லாமிய அறிஞரான காலித் அப்துல் காதர் தனது ‘Fiqh of Muslim Minorities’ எனும் நூலில் அந்நிய மத சகோதரர்களுடனான எமது உறவில் இடம்பெற முடியுமான நடவடிக்கைகளைப் பட்டியலிடுகையில் அவர்களை எமது வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும் வரவேற்று உபசரிப்பதை முதன்மைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாறான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாக வெளியிடுபவர்கள் ஒரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். எம்மை அண்டி வாழும் மாற்று மதத்தவர்கள் எமது நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். குறிப்பாக எமது வெளியீடுகளை வாசிக்கின்றனர். எனவே இவ்வாறான ஆட்சேபனைகளும் கண்டனங்களும் அவர்களது மனதில் எம்மைப்பற்றி மட்டுமன்றி எமது புனிதமான மார்க்கத்தைப் பற்றியும் தவறான மனப் பதிவுகளை ஏற்படுத்தும். எமக்குக் கிடைத்துள்ள விலையிட முடியாத பாக்கியமான இஸ்லாத்தின் தூதை அப்பாக்கியம் கிடைக்காத மக்களிடமும் எடுத்துச் செல்வதுதான் எம் ஒவ்வொருவரினதும் தலையாய பொறுப்பாகும் என்பதை ஒரு பொழுதிலும் மறந்திடலாகாது.

    இவ்வண்ணம்
    தங்களுண்மையுள்ள
    முஹம்மது ஜஹானி

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக