இளம் சாதனையாளருக்கு வாக்களிப்போம்!

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் ஒருவர் இவ்வாண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் தேசிய ரீதியான சாதனையொன்றை நிலை நாட்டியுள்ளார்.

கல்லூரியின் உயர் தர கணிதப் பிரிவு மாணவர் செல்வன் எம்.எச்.எம் மஸி இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் 13.73 மீட்டர்கள் பாய்ந்து ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த தேசிய மட்ட சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

இச்சாதனையைப் புரிந்ததன் காரணமாக கல்வியமைச்சு இவ்வாண்டுக்கான மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுள் முதன்மையாளராக இம்மாணவரைத் தெரிவு செய்து கௌரவப்படுத்தியுள்ளதுடன் இவ்வருடத்தின் பிரபல்யமான விளையாட்டு வீரரைத் தெரிவு செய்யும் போட்டிப் பட்டியலிலும் அவரது பெயரை இடம்பெறச் செய்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், 100 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் புதிய சாதனைகளுடன் முதல் இடங்களை வென்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.

அத்துடன் 17 வயதுக்குட்பட்ட சம்பியனாகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று இவ்வருடமும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் தன்னிலும் வயது கூடிய போட்டியாளர்களைப் பின்தள்ளி நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போட்டிகளில் வெற்றிபெற்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

கல்வியிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர் மஸி, கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சையில் தோற்றி மிகச் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றிருந்தார். தற்போது இவர் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

இவர் எதிர்காலத்தில் சர்வதேச மட்டங்களில் பிரகாசித்து எமது பாடசாலைக்கும், எமது மண்ணுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே காத்தான்குடி மாணவ ஆசிரிய சமூகத்தாரின் விருப்பும், எதிர்பார்ப்புமாகும். அதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது.

பிரிமா நிறுவனமும், DSI நிறுவனமும் அனுசரணை வழங்க கல்வியமைச்சு நடாத்தும் அகில இலங்கையின் பிரபல்யமான விளையாட்டு வீரரைத் தெரிவு செய்யும் வாக்களிப்புக்கான போட்டிக்கு இம்மாணவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையே அச்சந்தர்ப்பமாகும்.

தலா ஒவ்வொரு மாகாணங்களில் இருந்தும் ஒருவர் வீதம் ஒன்பது வீரார்கள் இப்போட்டியில் பங்கு பற்றுகின்றனர். அவர்களுள் சிறுபான்மை மக்களைப் பிரதிபலிக்கின்ற ஒரேயொரு முஸ்லிம் வீரர் நமது மாணவர் மஸி அவர்கள் மாத்திரமேயாகும்.

‘என்னை இவ்வருட இலங்கையின் பிரபல விளையாட்டு வீரராக நீங்கள் தெரிவு செய்தால் இன்ஷா அல்லாஹ் என்னால் இப்பாடசாலைக்கும், எமது ஊருக்கும், எமது மாகாணத்திற்கும், எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துத் தர முடியும்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்காக தனக்கு வாக்களிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதனடிப்படையில் இம்மாணவருக்கு தமது வாக்குகளையளித்து இவரை வெற்றி பெறச் செய்து இவரது விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க வேண்டியது நமது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

SMS மூலம் வாக்களிப்போர்: NSG (இடை வெளி) 05 (இடைவெளி) M.H.M.MAZY     (NSG  05  M.H.M. MAZY) என ரைப் செய்து 6797 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் ‘தினகரன்‘ பத்திரிகையில் வெளிவரும் இதற்கான கூப்பனில் இவரது பெயருக்கு நேரே புள்ளடியிட்டு
‘மிகப் பிரபல்யமான விளையாட்டு வீரர்’
கல்வி அமைச்சு,
இசுருபாய,
பத்தரமுல்ல’
  என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். வாக்களிப்புக்கான இறுதி நாள்: 28.09.2010 ஆகும்.

எமது மண்ணின் இளம் மகன் மஸி இந்நாட்டின் சிறந்த விpளையாட்டு வீரராக வெற்றி பெற நாமனைவரும் பிரார்த்திப்போமாக! அவருக்கு வாக்களிப்போமாக!

(தகவல்: ஆர். ஸிந்தாஹ் நவாஸ் – அல்மனார் அறிவியற் கல்லூரி – காத்தான்குடி)

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக