நோன்புப் பெருநாள் பஸார் களியாட்டத்தில்…

ஆண் -பெண் கலப்பு நடமாட்டம்!
பிரவேசச் சீட்டு விற்பனையில் கொள்ளை!!
12 வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்!!!

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்தில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினராலும், நகரசபை நிர்வாகத்தாலும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற நோன்புப் பெருநாள் பஸார் களியாட்ட நிகழ்வில் ஆண்களும், பெண்களும் சன நெரிசலுக்கு மத்தியிலும் கலப்பாகவும், கலகலப்பாகவும் நடமாடியதை பரவலாக அவதானிக்க முடிந்தது.

பெருநாள் தினத்திற்கு முந்திய தினம் மாலையில் பெய்த மழை காரணமாக இம்மைதானத்திற்குச் செல்லும் பாதைகளிலும், மைதானத்திலும் மழை நீர் தேங்கியிருந்தது புத்தாடைகள், புதுச் செருப்புக்கள் சகிதம் வருகைதந்த பலருக்கும் பெரும் அசௌகரியமாக இருந்தது.

கடற்கரை வீதியில் விளையாட்டு மைதான வீதிச் சந்தி தொடக்கம் சிறுவர் பூங்கா வரையும் பெரும் வாகனப் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது.

ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுடன் மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், வேன்கள், பஸ்கள் என பலதரப்பட்ட வாகனங்களும் இடையிடையே கட்டாக்காலி மாடுகளும் அடைத்துக் கொண்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

எதிர்காலத்திலும் இம்மைதானத்தில் பெருநாள் பஸார் களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதாக இருந்தால் கடற்கரை வீதியில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் சந்தி வரைக்கும் எந்த விதமான வாகனங்களையும் போக்குவரத்திற்காக அனுமதிக்கக் கூடாது என பலரும் விசனத்துடன் அபிப்பிராயம் தெரிவித்துக் கொண்டனர்.

இம்மைதானத்தில் நிறுவப்பட்டிருந்த கார்ணிவெல் களியாட்ட நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்ற பொதுமக்களுக்கு 50 ரூபா விலை அச்சடிக்கப்பட்ட பிரவேசச் சீட்டுக்களை 70 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக பலரும் ‘வார உரைகல்’ லிடம் வந்து முறையிட்டனர்.

இக்கார்ணிவெல் களியாட்டத்திற்குரிய அனுமதிச் சீட்டை 60 ரூபாவுக்கே பொதுமக்களுக்கு விநியோகிப்பதெனவும், அதில் 40 ரூபாவை கார்ணிவெல் நடாத்துனர்களுக்கும், 20 ரூபாவை நகரசபை நிர்வாகம் களியாட்ட வரியாகப் பெறுவதென்றும் கடந்த மாதம் நடைபெற்ற நகரசபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருந்ததை ‘வார உரைகல்’ ஏற்கனவே தனது வாசகர்களின் கவனத்திற்காகப் பிரசுரித்திருந்தது.

நகரசபைத் தீர்மானத்திற்கு முற்றிலும் மாற்றமாக களியாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப் ‘பெருநாள் தினக் கொள்ளை’ தொடர்பாக களியாட்ட மைதானத்திற்குச் சமூகமளித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜனாப் கே.எல்.எம். பரீட் அவர்களிடம் ‘வார உரைகல்’ நேரடியாகப் பொதுமக்கள் சகிதம் சென்று முறையிட்டபோது தான் அது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

எனினும் இப் ‘பெருநாள் தினக் கொள்ளை’ யில் இறுதி வரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. நகர சபைப் பிரதித் தவிசாளரே அங்கு முன்னின்று கூடுதல் கட்டணத்திற்கு அனுமதிச் சீட்டுக்களை விற்பனை செய்தார் என்றும் கூறப்படுகின்றது.

இதுதொடர்பில் இரு தினங்களின் பின் ‘வார உரைகல்’ மாகாண சபை உறுப்பினர் பரீட் அவர்களைச் சந்தித்து வினவியபோது, முதல் நாள் பெய்த மழை காரணமாக கார்ணிவெல் களியாட்ட நடாத்துநர்களுக்கு போதியளவு வருமானம் கிடைக்கவில்லையாதலால் அவ்வாறு கட்டண அதிகரிப்புச் செய்யப்பட்டதாக அவர் காரணம் கூறினார்.

வானத்திலிருந்து இயற்கையாக மழை பெய்தாலும் எமது மக்களின் தலைகள் மீதே 20 ரூபா சுமையாக இக்கொள்ளைக் கட்டணம் அறவிடப்பட்டதை பொதுமக்கள், பிரமுகர்கள் பலரும் கண்டித்தனர். எதிர்காலத்திலாவது இந்த அநியாய அறவீடுகளிலிருந்து எமது மக்களை மக்களின் பிரதிநிதிகள் (?) பாதுகாக்க வேண்டும்.

பெருநாள் பஸாருக்கு பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக ஒரு இணையதளத்தில் காணக் கிடைத்தாலும் களத்தில் அவ்வாறான நடைமுறைகள் எதுவும் காணப்படவில்லை.

இருபாலாரும் சர்வ சாதாரணமாக நெருங்கிக் கொண்டும், நெரிசலுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டும் நடமாடித் திரிந்ததையும், வாகனங்களில் அமர்ந்து சென்றதையும் காண முடிந்தது.

இந்த விடயத்தில் உலமாக்களும், தஃவா அமைப்புக்களும் மாற்று நடவடிக்கைகள் எதனையும் மேற்கொண்டதாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. பெருநாள் தினம்தானேயெனப் பெருமனது கொண்டார்களோ தெரியவில்லை.

இங்கு கார்ணிவெல் களியாட்டம் நடாத்துவதற்காக வருகை தந்திருந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரால் 12 வயதுச் சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இச்சம்பவம் பிரதேசவாசிகள் மத்தியில் பலத்த அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

இக்கார்ணிவெல் களியாட்ட நிகழ்ச்சிகளை காத்தான்குடி நகரசபையின் ஆளுந்தரப்பினரே ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தீவிர ஆதரவாளர்களே இந்நகரசபையின் ஆளுந்தரப்பாகவுள்ளனர்.

இந்நிலையில் சிறுவர் அபிவிருத்திப் பிரதியமைச்சரின் சொந்த ஊரிலேயே சிறுவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாமல் போனது குறித்து பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

முன்னரும் இந்நகரசபையின் நிர்வாகத்திலுள்ள சிறுவர் பூங்காவிற்குச் சென்ற சிறுவரொருவர் இப்பூங்காவிற்கு பொறுப்பாக்கப்பட்டிருந்த நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவர் சில காலம் தலைமறைவாக இருந்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரமும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக