மட்ஃஜாமியுஸ்ஸலாம் இப்தார் விவகாரம்: ஜமாஅத்தார் கண்டனத்திற்கு வாசகர் விளக்கம்

கடந்த 10.09.2010 அன்று வெளியான ‘வார உரைகல்’ லின் 154ம் பதிவில் களம் வழங்கப் பட்டிருந்த ‘பள்ளிவாயலின் புனிதம் கெடுத்த இரண்டாம் இப்தார் நிகழ்ச்சி’ எனும் கண்டன அறிக்கையினை வாசித்தபோது பேரதிர்ச்சி அடைந்தேன். குறித்த ஆட்சேபனையைத் தெரிவித்த ஜமாஅத்தார்களின் தூர நோக்கற்ற சிந்தனையினைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அது அமைந்திருந்தது.

குறித்த கண்டன அறிக்கையில், இப்தார் நிகழ்வுக்கு மாற்று மத சகோதரர்கள் அழைக்கப்பட்டு பள்ளிவாயலினுள் வரவேற்கப்பட்டார்கள் என்கிற விடயத்துக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது.

ஓர் இப்தார் நிகழ்வில் தேவையற்ற ஆடம்பரங்கள் இடம்பெற்றது என்பதற்காக அதனைக் கண்டித்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ‘பள்ளிவாயலில் நடைபெறும் ஒரு நிகழ்வு முறையாகக் கலந்தாலோசிக்கப்படாமல் நடத்தப்பட்டது’ என்ற ஆட்சேபனை எழுப்பப்பட்டால்கூட அதனையும் ஏற்கலாம். ஆனால் ‘மாற்று மதத்தவர் எவரும் பள்ளிவாய லுக்குள் கால் வைக்கக்கூடாது’ என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்லின சமூகத்தில் சிறுபான்மையினராக வாழும் நாம் இஸ்லாமிய வரம்புகளை மீறாத வகையில் மாற்று மத சகோதரர்களின் உள்ளங்களில் எமது சமூகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காக எம்மால் முடியுமான எல்லா எத்தனங்களையும் மேற்கொள்ள வேண்டியது  அவசியமானது.

அது சிறந்ததொரு தஃவா முயற்சியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. மாற்று மதத்தவர்கள் எமது உரிமைகளில் கை வைக்காத வரை அவர்களுடன் நீதமாகவும் அழகிய முறையிலும் நடந்து கொள்ளுமாறு அல்குர்ஆனும் ஆர்வ மூட்டுகிறது.

‘மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாத மற்றும் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு, நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீதியாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான்.’ (அல்-குர்ஆன் 60:08)

இன நல்லுறவை ஏற்படுத்தவும் இஸ்லாத்தின் தூதை மாற்று மத சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லவும் இப்தார் நிகழ்வுகள் மிகச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. மாற்றுமத சகோதரர்களே ஆர்வத்தோடு இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அளவுக்கு நல்ல சமிக்ஞைகளும் கிடைக்கின்றன.

அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே நலன்புரி நிலையமொன்றில் எளிமையான இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை இதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்வது அளவுக்கெட்டாத நன்மைகளை அள்ளித் தருகின்ற செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் அதே சந்தர்ப்பத்திலேயே ஒன்றிரண்டு மாற்றுமத சகோதரர்களுக்கும் விருந்தளித்துக் கௌரவிப்பது ஒருபோதும் பாவமான செயலாக மாறாது. அதனூடாக விளைகின்ற நன்மைகளும் அனேகம் உள்ளன.

அண்மையில் மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வும் படித்த மாற்று மத சகோதரர்களின் மனதில் இஸ்லாத்தைப் பற்றிய நல்ல மன உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதை அதில் கலந்து கொண்ட உயர் உத்தியோகத்தர் ஒருவரின் நேரடியான வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

நம்மால் விருந்தளிக்கப்படுபவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொன்னால் அல்லது அவ்வாறு சொல்லக்கூடிய முஸ்லிமாக இருந்தால் மட்டும்தான் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நினைப்பது அறியாமையினதும் குறுகிய சிந்தனையினதும் வெளிப்பாடாகும்.

ஏனைய சமய வணக்கத்தலங்களில் இன ஐக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும் பள்ளிவாயல்களிலும் சமய வணக்க வழிபாடுகளை மட்டுமே நடத்த வேண்டும் என அடம் பிடிப்பது இஸ்லாமிய சமூகத்தில் மஸ்ஜித்களின் பணியினைச் சரியாகப் புரிந்து கொள்ளா மையினால் ஏற்படுகிற விளைவாகும்.

பள்ளிவாயில்கள் ஏனைய சமயத்தலங்களைப் போல் சமயச் சடங்குகளை மட்டும் நடாத்துகின்ற இடம் என்ற வரையறைக்குள் நிற்காது சமுகத்தின் எல்லா விவகாரங்களையும் கவனிக்கின்ற சனசமூக நிலையமாகவும் தொழிற்படுகிறது.

எனவே, முஸ்லிம்களால் நடத்தப்படும் இன ஐக்கிய நிகழ்வுகளை மார்க்க வரம்புகளை மீறா வண்ணம் பள்ளிவாயல்களிலும் நடாத்துவது என்பது பொருத்தமானதாகவே எமக்குத் தோன்றுகிறது.

நபியவர்கள் தம்மைச் சந்திக்க வரும் வெளி நாட்டுப் பிரதிநிதிகளை பள்ளிவாயலிலேயே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள். காபீர்களான ‘பனீ தக்கீஃப்’ கோத்திரத்தினர் தூதுவர்களாக மதீனாவுக்கு வந்தபோது அவர்களை மதீனா பள்ளிவாசலிலேயே நபி (ஸல்) அவர்கள் தங்க அனுமதி வழங்கினார்கள். பள்ளிவாயலின் புனிதத்துக்கும் தனித்துவத்திற்கும் மாசு ஏற்படுத்தும் ஒன்றை நபியவர்கள் செய்ய மாட்டார்கள்.

இஸ்லாமிய அறிஞரான காலித் அப்துல் காதர் என்பவர் தனது ‘Fiqh of Muslim Minorities’ எனும் நூலில் அந்நிய மத சகோதரர்களுடனான எமது உறவில் இடம்பெற முடியுமான  நடவடிக்கைகளைப் பட்டியலிடுகையில் அவர்களை எமது வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும் வரவேற்று உபசரிப்பதை முதன்மைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாக வெளியிடுபவர்கள் ஒரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். எம்மை அண்டி வாழும் மாற்று மதத்தவர்கள் எமது நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். குறிப்பாக எமது வெளியீடுகளை வாசிக்கின்றனர். எனவே இவ்வாறான ஆட்சேபனைகளும் கண்டனங்களும் அவர்களது மனதில் எம்மைப் பற்றி மட்டுமன்றி எமது புனிதமான மார்க்கத்தைப் பற்றியும் தவறான மனப் பதிவுகளை ஏற்படுத்தும்.

எமக்குக் கிடைத்துள்ள விலையிட முடியாத பாக்கியமான இஸ்லாத்தின் தூதை அப்பாக்கியம் கிடைக்காத மக்களிடமும் எடுத்துச் செல்வதுதான் எம் ஒவ்வொருவரினதும் தலையாய பொறுப்பாகும் என்பதை ஒரு பொழுதிலும் மறந்திடலாகாது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக