விஷேட செய்தி: காத்தான்குடி குப்பை விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றது!

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் சேருகின்ற திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் திக்குமுக்காடி வரும் சர்வாதிகாரத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான நகரசபை ஆளுந்தரப்பு நிர்வாகம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் அனுசரணையோடு நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள திண்மக்கழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணியொன்றை பூநொச்சிமுனைப் பகுதியில் வாங்கவுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்து ஊரிலுள்ள குடும்பங்களிடம் தலா 500 ரூபா வீதம் பணம் அறவிட்டிருந்தது.

இவ்வாறு வீட்டுக்கு வீடு பணம் வசூலித்த பின்னர், அடையாளப்படுத்தியதாகக் கூறப்பட்ட அக்காணியை வாங்காமல் காத்தான்குடி 6ம் குறிச்சி அப்றார் பள்ளிவாசல் மஹல்லாவிலுள்ள அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையில் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியில் 13 காணித்துண்டுகளை வாங்கி ஏற்கனவே நிதியுதவியளித்த மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதியை அப்பட்டமாகவே மீறியது.

காத்தான்குடி 6ம் குறிச்சிப் பகுதியைக் குப்பைகள் கொட்டுவதற்குரிய இடமாக மாற்ற எத்தனிக்கப்படும் இத்திட்டத்திற்கு கொழும்பு நோலிமிட் ஸ்தாபனத்தினரும் ஐந்து இலட்சம் ரூபாவைக் கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே மார்ச் 17ம் திகதி பொதுமக்களிடம் பள்ளிவாசல் மஹல்லா ரீதியாக அறவிடப்பட்ட பணத்திற்குரிய மஹல்லா ரீதியான வசூல் விபரங்களை சம்மேளனம் விபரமாக அறிவிக்காமல், ‘வார உரைகல்’ செய்திக்கு பதிலளிக்கும் வகையில் ஒட்டு மொத்த வசூல் தொகையொன்றையே கடந்தம வாரம் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் அறிவித்தது.

இதனால் பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் தாம் வசூலித்துக் கொடுத்த தொகை சரியாகக் கணக்கில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதை அறியாமலும், அதுபற்றி சம்மேளன நிர்வாகத்திடம் வாய் விட்டுக் கேட்கவும் முடியாமலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறெல்லாம் வாங்கிய பணம் போதாதென்று  நாடளாவிய ரீதியில் வசூல் ஒன்றையும் திரட்டுவதற்காக நேற்று 14ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடியிலிருந்து சர்வாதிகாரமுள்ள தவிசாளரின் தலைமையில் ஒரு குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ‘வார உரைகல்’லுக்கு தகவல் கிடைத்துள்ளது.

காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், உதவித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம், சம்மேளன முக்கியஸ்தர் அஷ்ஹாபியா ஏ.எச்.எம். பஸீர், கதீப்மார் சம்மேளனத் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (முஸ்தபா மௌலவி), அக்பர் பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.எம். அமீர் அலி ஆகியோர் இவ்வாறு ஊரிலிருந்து இக்குப்பை வசூலுக்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தற்போது இவர்கள் மொனராகலையிலுள்ள காத்தான்குடி வர்த்தகர்களிடம் வசூல் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கையிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளிலும் குப்பைகள் சேருகின்றன. சேகரிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் அந்தந்த சபை நிர்வாகங்கள் பொறுப்புடன் கையாள்கின்றன. எந்தவொரு சபை நிர்வாகமும் இவ்வாறு தேசிய ரீதியாக குப்பைப் பிரச்சினைக்குத் தீர்;வு காண்பதற்காக இவ்வாறு நாடெங்கும் சென்று வசூல் திரட்டிய வரலாறு கிடையாது.

காத்தான்குடி 6ம் குறிச்சிப் பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென இப்பகுதிப் பொதுமக்களும், பிரமுகர்களும் கேட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான எதிர்கால விளைவுகள் குறித்து இவ்வசூல் குழுவில் இணைந்து வரும் உதவித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம், மற்றும் அக்பர் பள்ளிவாசல் தலைவர் அமீர் அலி ஆகியோரிடம் ‘வார உரைகல்’லும் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.

அதனை இவர்கள் உள்வாங்கிக் கொண்ட போதிலும் தற்போது இவ்வாறு மேலும் வசூல் செய்வதற்காக நகரசபை மற்றும் சம்மேளன முக்கியஸ்தர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக