ஆதாரமில்லாமல் சம்மேளனக் குப்பை வசூல் குளறுபடியைச் சுட்டிக்காட்டவில்லை.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு எப்போதும் வக்காலத்து வாங்கும் காத்தான்குடி இன்போ இணையதளத்தில், நகரசபையின் திண்மக்கழிவகற்றும் காணிக் கொள்வனவுக்காக சம்மேளனமும் ஜம்இய்யதுல்உலமாவும் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய பணத்திற்கான கணக்கறிக்கை விபரம் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்ட பள்ளிவாசல்களின் பெயர் ரீதியாக கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

இக்கணக்கறிக்கையை உன்னிப்பாக அவதானித்த ‘வார உரைகல்’ அதில் குறிப்பிடப்பட்ட 25 பள்ளிவாசல்களாலும் திரட்டிய பணத்தொகையைக் கூட்டிப்பார்த்தபோது 86,000 ரூபா அதிக வரவாகக் காணப்பட்டது.

இதனால் நேற்று 21ம் திகதி வெளியான ‘வார உரைகல்‘ 228வது பதிவில் ‘சம்மேளனம் சமர்ப்பித்த குப்பை வசூல் கணக்கில் குளறுபடி’ எனும் தலைப்பில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டு சந்தேகமும், கேள்வியும் எழுப்பப்பட்டது.

இப்பத்திரிகைச் செய்தி வெளியானதன் பின்னர்தான் சம்மேளனமும், குறித்த இணையதளமும் தூக்கத்திலிருந்து விழிப்படைந்தது.

உடனடியாக இவ்விடயத்தில் இவ்விரு தரப்பும் கவனத்தைச் செலுத்தி ஆராய்ந்தபோதுதான் ரஹ்மா பள்ளிவாசல் மூலம் அறவிடப்பட்டு கையளிக்கப்பட்ட தொகையான 86,000 ரூபா தொகை குறித்த வக்காலத்து வாங்கும் இணையதளத்தின் பதிவேற்றும் நடவடிக்கையின்போது விடுபட்டிருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பில் அந்த இணையதளம் 21ம் திகதியன்று இரவே ‘திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான காணிக் கொள்வனவு பற்றிய சம்மேளன அறிவித்தல்: தவறுக்கு வருந்துகிறோம்’ என்னும் தலைப்பில் மேற்படி தவறு குறித்து செய்தி வெளியிட்டது.

அத்துடன் ‘இந்த விடயத்தில் சம்மேளனத்தைக் குற்றம் சாட்டி ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடப்படுவதாக..’ என்றும் இவ்விடயத்தை வெகுஜனப்படுத்திய ‘வார உரைகல்’ மீது ஒரு குண்டூசிக் குத்தையும் அந்த இணையதளம் குத்தியுள்ளது.

இத்தவறு சம்மேளனத்தின் பக்கமிருந்தோ அல்லது வக்காலத்து இணையதளத்தின் பக்கமிருந்தோ நிகழ்ந்திருக்கலாம். அதனைத் திருத்திக் கொண்டு இரு தரப்பில் எந்தத் தரப்பாவது ‘தவறுக்கு வருந்துகிறோம்’ என்ற அளவில் அறிக்கையிட்டிருக்கலாம்.

ஆனால் இவ்விடயத்தை அவதானித்து வெகுஜனமயப்படுத்தி செய்தி வெளியிட்டதை ‘ஆதாரமற்ற வகையில்..’ என்று ‘குப்புற விழுந்தும் மீசையில் மண்படவில்லை’ என்ற பாணியில் குறித்த வக்காலத்து இணையதளம் அதனுடைய மறுப்பில் தகாத வார்த்தைப் பிரயோகமொன்றைச் செய்திருப்பதை ‘வார உரைகல்’ வன்மையாகக் கண்டிக்கின்றது.

குறித்த வக்காலத்து இணையதள முகமூடி முகாமைத்துவம், கடந்த 15ம் திகதி இக்கணக்கறிக்கையைப் பதிவேற்றிய பின்னர் மீண்டும் ஒருமுறை அது சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளதா? அதில் எதுவும் விடுபட்டுள்ளதா? என்றெல்லாம் ஒரு முறை ஒப்பு நோக்கவில்லையா?

ஒரு நாளல்ல.. இரு நாளல்ல.. ஆறு நாட்களாக அந்த அறிக்கையை அவர்கள் திரும்பியும் பார்க்கவில்லையா? என நாம் கேட்க விரும்புகிறோம்.

சம்மேளனத்திலுள்ள நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும் பெரும் கல்விமான்கள், பட்டதாரிகள், சட்டத்தரணிகள் போன்ற புத்திஜீவிகளாவது அவர்களால் பிரசுரத்திற்காகக் கொடுக்கப்பட்ட இக்கணக்கறிக்கை சரியாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதா? என்று கடந்த ஆறு நாட்களாக அவதானித்துப் பார்க்கவில்லையா..?

வீடு வீடாகச் சென்று கதவு தட்டி 86,000 ரூபாவைச் சேர்த்து சம்மேளனத்திடம் கையளித்த றஹ்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினராவது கடந்த இக்கணக்கறிக்கையைப் பார்வையிட்டு இதில் தமது பள்ளிவாசல் பெயர் இடம்பெறாதது குறித்தும், நாம் கையளித்த 86,000 ரூபா என்னானது என்றும் ஒரு வார்த்தை சம்மேளனத்திடம் கேட்டாவது அவர்களை விழிப்படையச் செய்யவில்லையா?

குறித்த தவறு பதிவாகி ஆறு நாட்களாக யாருமே திரும்பிப் பார்க்காதிருந்த விடயத்தை ‘வார உரைகல்’ அம்பலப்படுத்தி கேள்விகளை எழுப்பியதன் பின்னர்தான் கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து கொட்டாவி விட்டெழுந்த சம்மேளனமும், இணையதளமும் தமது தவறைத் தவறென்று ஒத்துக் கொண்டு திருத்தத்தை வெளியிட்டு வாயைப் பொத்திக் கொண்டிருக்காமல் ‘ஆதாரமற்ற வகையில் செய்திகளை’ வெளியிட்டதாகவும் கொக்கரிப்புச் செய்திருப்பதுதான் நமக்கு பொல்லாத ‘சந்தோஷத்தை’ ஏற்படுத்தியுள்ளது.

வக்காலத்து வாங்கும் இணையதளத்தில் 15ம் திகதி வெளியிடப்பட்ட கணக்கறிக்கையே குறித்த ‘சம்மேளனத்தின் குப்பை வசூல் குளறுபடி’ச் செய்திக்கு போதுமான ஆதாரமாகும். இது போதுமா? இல்லை.. இன்னமும் வேண்டுமா??

கடந்த மார்ச் 17ம் திகதியன்று காத்தான்குடி மக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கிய இந்த நிதி வசூலிப்பு பற்றி மூச்சும் விடாமல் மறைத்து இருட்டடிப்புச் செய்த இந்த வக்காலத்து இணையதளம், இப்போது மாத்திரம் சம்மேளனம் வழங்கிய இக்குப்பைக் கணக்கறிக்கையைப் பெரிதாகத் தூக்கிப்பிடித்து தப்பும் தவறுமாகப் பதிவேற்றிவிட்டு இவ்விடயத்தில் தொடக்கத்திலிருந்தே சமூக அக்கறையுடன் அவதானம் செலுத்தி வரும் ‘வார உரைகல்’லை ‘ஆதாரமற்ற செய்தியாக..’ என்று சிண்டு முடித்திருப்பதுதான் கேலிக்கிடமாகவுள்ளது.  

    • nizam
    • மே 25th, 2012

    yes correct

    kattankudi inbo sammelanathukum hizbus’sheythanukum vakkalathu vangum oothukulal.

    naam yellorum oru kaalathil mariyathai veythiruntha pallivayalhal muslim niruvanangalin sammelanam hizbullah kerillavin kai bommai enbathu yarum arinthade!

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக