முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பாக 19ம் திகதி நடைபெறவுள்ள வக்பு சபை பிரதிநிதிகளின் கூட்டம் இறையச்சத்துடன் இடம்பெறுமா?

Meera-Jummah-Mosque-KKY-1காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்றை நியமப்பது தொடர்பாக ஆராயும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்கள வக்பு சபைப் பிரதிநிதிகளின் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

இப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு விவகாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்ற ‘வார உரைகல்’ இதுபற்றி அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கப் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.

இந்த அழ்ழாஹ்வின் இல்லத்திற்கு பொருத்தமானதும், தகுதி வாய்ந்ததுமான ஒரு நிர்வாக சபை அமைய வேண்டுமென்பதில் ஜமாஅத்தார் சங்கம் மிக்க அக்கறையுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் அழ்ழாஹ்வின் இல்லத்தைப் பராமரிப்பதற்கு தகுதியற்றவர்களை அரசியல் செல்வாக்கினூடாக நிர்வாக சபைக்குள் உட்புகுத்துவதற்கு எடுக்கப்பட்ட பலதரப்பட்ட முயற்சிகளையும் அவர்கள் அவ்வப்போது எதிர்த்தும், தடுத்தும் வந்துள்ளனர்.

இந்த வகையில் இப்பிரதேச அரசியல் பிரமுகரான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தீவிர ஆதரவாளராகவும், அவர் சார்ந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான முன்னாள் நிர்வாக சபைத் தலைவரையே மீண்டும் இப்பள்ளிவாசலின் நிர்வாக சபைக்குத் தலைவராக்குவதற்காக எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 16.12.2011 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் அப்பள்ளிவாசலில் நடைபெற்ற நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டபோது ஜமாஅத்தார்களின் பலத்த எதிர்ப்புகளின் காரணமாக தடைப்பட்டது.

கடும் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்த இக்கூட்டத்தையடுத்து ஜமாஅத்தார் சங்கம் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு நிர்வாக சபைத் தெரிவு விடயத்தில் அரசியல் செல்வாக்கைப் பிரயோகிக்காமல் சுதந்திரமாக ஜமாஅத்தார்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் நிர்வாக சபைத் தெரிவொன்றை மேற்கொள்ள இவ்விடயத்தில் தலையிட்டு உதவுமாறு கோரியிருந்தது.

இதேவேளை பழைய நிர்வாகத்தினருக்கும், ஜமாஅத்தார் சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இரு தரப்பினரின் புரிந்துணர்வுடன் ஒரு புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான முயற்சிகள் ஊர்ப் பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்டு பலசுற்றுப் பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்றன.

இதனடிப்படையில் பழைய நிர்வாக சபை சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம். சுபைர் மற்றும் ஜமாஅத்தார் சங்கத்தினர் சார்பில் காலஞ்சென்ற அப்துல் வஹ்ஹாப் மௌலவி ஆகிய இருவரையும் கூட்டுத் தலைவர்களாகவும், செலாளராக ஏ.ஜே.எம். அனீஸ் பொருளாளராக எம். பைரூஸ் ஆகியோரையும் கொண்டதான நிர்வாக சபையொன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேற்படி பதவி வழி உத்தியோகத்தர்கள் அடங்கலாக தலா பத்து நிர்வாகிகள் இருதரப்பினருக்கும், இப்பள்ளிவாசலுக்குட்பட்ட நான்கு தைக்காப் பள்ளிவாசல்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 4 நிர்வாகிகளும், இரு தரப்பிற்கும் பொதுவான நிர்வாகியாக டாக்டர். எம்.எஸ்.எம். ஜாபீர் என்பவரையும் கொண்டதாக 25 நிர்வாகிகளைக் கொண்ட நிர்வாக சபையொன்றை அமைப்பதை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிர்வாக சபைக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஆலோசனை சபையொன்றையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் இரு தரப்பாரும் உடன்பாடு கண்டிருந்தனர். இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக மஹல்லா வாசிகளுக்கு 17.02.2012ம் திகதி வெள்ளிக்கிழமை இப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகையின் பின் விஷேட துண்டுப் பிரசுரமொன்றின் மூலம் இந்த இணக்க நிர்வாக சபையைப் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பதெனவும் முடிவு காணப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் இப்பேச்சுவார்த்தைகளின்போது இணக்கம் காணப்பட்டிருந்த ஆலோசனைக் குழுவொன்று அமைப்பது தொடர்பாக கனவான் ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்வதற்கு பழைய நிர்வாகத்தினர் ஒத்துழைக்காததால் அம்முயற்சியும் கைகூடாமல் போனது.

இதனையடுத்து தேர்தல் ஒன்றின் மூலம் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜமாஅத்தார் சங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரை எழுத்து மூலம் கேட்டிருந்தது.

அதற்கமைய திணைக்களம் உத்தியோகபூர்வமாக வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு கோரியது. இரு தரப்பிலுமாக 54 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்ட திணைக்களம் 02.03.2012ல் தேர்தல் நடைபெறுமென அறிவித்திருந்தது.

எனினும் அன்றைய தினத்தில் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலுக்கான மறு திகதியும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக முதல் நாளான 01.03.2012ல் காத்தான்குடிக்கு வருகை தந்திருந்த திணைக்களப் பணிப்பாளரை ஜமாஅத்தார் சங்கத்தினர் சந்தித்தபோது, அம்மாத (2012 மார்ச்) இறுதிக்குள் தேர்தல் மூலமோ அல்லது இணக்கப்பாட்டின் மூலமோ நிர்வாக சபையொன்றை நியமிப்பதற்கு தான் ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.

இதனிடையே சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், 2012 ஏப்ரல் முதல் வாரத்தில் அவரது காத்தான்குடி அலுவலகத்தில் இருதரப்பு பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து அலுவலகக் கதவுகளைப் பூட்டிய நிலையில் ஜமாஅத்தார் சங்கத்தைச் சாராத அவரது அரசியல் ஆதரவாளர்கள் சிலரையும் உள்ளடக்கியதாக 31 பேரடங்கிய நிர்வாக சபையொன்றைத் தெரிவு செய்தார்.

பள்ளிவாசலில் அல்லாது அரசியல் அதிகாரத்துடன் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அத்தெரிவையும் ஜமாஅத்தார் சங்கத்தினர் வன்மையாகக் கண்டித்து நிராகரித்தனர்.

பள்ளிவாசல் நிர்வாக சபை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு என அழைப்புவிடுத்து கதவுகளைப் பூட்டிய நிலையில் நிர்வாக சபைத் தெரிவொன்றை அவர் மேற்கொண்டது முற்றிலும் பிழையான நடவடிக்கையும், அரசியல் அதிகாரத் திணிப்புமாகும் என அவர்கள் தமது நிராகரிப்புக்கான காரணத்தை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்ததோடு 11.04.2012ல் இம்முறைகேடு குறித்து அவர்கள் திணைக்களத்திற்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தினர்.

இறுதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தணைக்களத்தின் பணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் பகிரங்கத் தேர்தலொன்றின் மூலமே நிர்வாக சபையைத் தெரிவு செய்யும் நிலைமை ஏற்பட்டது. அதற்கும் இரு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைய ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்தலுக்கான மாற்றுத் திகதி 18.05.2012 என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வேட்பாளர்களும் ஜமாஅத்தார்கள் மத்தியில் தமது பிரச்சாரங்களைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர். இரு தரப்பினரின் நோக்கமும், நடவடிக்கைகளும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களை இப்பள்ளிவாசல் நிர்வாகிகளாக ஏற்றுக் கொள்வதற்கு உடன்பட்டதாகவே தேர்தல் தினம் வரை அமைந்திருந்தது.

பணிப்பாளர் நவவி உட்பட திணைக்கள அதிகாரிகள் பலரும் தேர்தல் தினத்தன்று இங்கு வருகை தந்தனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. ஜமாஅத்தார்களும் தமது வாக்குரிமையை உறுதிப்படுத்தும் மஹல்லா குடும்ப அட்டைகளுடன் வாக்களிப்பதற்காக பள்ளிவாசலுக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்த வேளையில் பழைய நிர்வாகத்தினர் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட சிலர் தேர்தல் நடாத்துவதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறினர். எனினும் ஜமாஅத்தார்கள் பலரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் மூலம் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இந்த விவகாரம் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

தேர்தல் அதிகாரியாக சமூகமளித்திருந்த பணிப்பாளர் நவவி அவர்களும் தான் தேர்தலொன்றை நடாத்துவதற்காகவே கொழும்பிலிருந்து இங்கு வந்திருப்பதாகவும், தேர்தல் நடாத்துவதற்கு இடையூறுகள் ஏற்படின் பொலீசாரின் உதவியுடன் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அனைவர் மத்தியிலும் உரையாற்றுகையில் உறுதியுடன் தெரிவித்தார்.

எனினும் சற்று நேரத்தின் பின் அவருக்கு ஒரு தொலைபேசித் தொடர்பு வந்தது. அதன் பின் அவர் தனது உறுதியான தேர்தல் நடாத்தும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வேட்பாளர்களாகப் போட்டியிட்ட 54 வேட்பாளர்களையுமே நிர்வாகிகளாக நியமிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இதனை ஜமாஅத்தார் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவிக்கப்பட்டபடியும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையிலும் தேர்தலே நடாத்த வேண்டும் என்பதை அங்கு வலியுறுத்தினர். வாக்களிக்கவென வந்திருந்த மஹல்லாவாசிகளும் இக்கோரிக்கையை ஆமோதித்தனர்.

எனினும் பணிப்பாளர் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதனால் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட இருதரப்பினருக்கும், ஜமாஅத்தார்களுக்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. ஜமாஅத்தார்கள் அல்லாத வெளிப்பிரதேசத்தவர்களும் பள்ளிவாசலுக்குள் குவிந்தனர்.

அமைதியை நிலைநாட்டவென அங்கு வந்திருந்த பொலீசார் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனால் நிலைமை மேலும் மோசமாகியது. ஜமாஅத்தார் சங்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் அரசியல் தரப்பு ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டுத் தாக்குதலுக்கும் உள்ளாகினர். இதையடுத்து பணிப்பாளரின் 54 வேட்பாளர்களையும் நிர்வாகிகளாக நியமிக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களாக ஜமாஅத்தார் சங்க வேட்பாளர்களும், மஹல்லாவாசிகளும் பள்ளிவாசலை விட்டகன்றனர்.

இதன்பின் பழைய நிர்வாகிகள் தரப்பில் அங்கு எஞ்சியிருந்த வேட்பாளர்கள் 34 நபர்களையும் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யும் இணக்கப்பாட்டுடன் பணிப்பாளரும் குழுவினரும் அங்கிருந்து சென்றனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்திற்கு ஒரு அறிக்கையை பின்னர் அனுப்பியிருந்தது.

அவ்வறிக்கையில் அன்றைய தினத்தில் எத்தகைய அசம்பாவிதங்களுமின்றி ஜமாஅத்தார்கள் ஆலோசனைக்கமைய 34 பேர் நிர்வாகிகளாக பணிப்பாளர் முன்னிலையில் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களையே அப்பள்ளிவாசலின் நிர்வாகிகளாக நியமிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை குறித்து சம்மேளனத்தின் வாராந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் விபரம் தெரிவிக்கப்பட்டபோது, அச்சபையின் உறுப்பினராக அப்போதிருந்த ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் அவ்வறிக்கை உண்மைக்குப் புறம்பாக வரைந்து அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்சேபித்தார். அவரது ஆட்சேபனையை வலியுறுத்தி பலரும் அங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே பணிப்பாளர் முன்னிலையிலும், சம்மேளன நிர்வாகம் சிபார்சு செய்து அனுப்பிய அவ்வறிக்கையின் அடிப்படையிலுமாக (ஜமாஅத்தார் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களையும் உள்ளடக்காத) பழைய நிர்வாகத்தினரையும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் ஆதரவாளர்களையும் உள்ளடக்கிய 34 நிர்வாகிகளை இப்பள்ளிவாசலின் நிர்வாகிகளாகச் செயற்படுவதை அங்கீகரிப்பது தொடர்பாக ஆராயும் வக்பு சபையின் கூட்டம் வரும் 19ம் திகதி புதன்கிழமை திணைக்களத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

பள்ளிவாசல் நலன்களில் தீவிர அக்கறையெடுத்து வரும் ஒரு ஜமாஅத்தார் சமூகத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டு, அரசியல் அதிகாரமுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உள்ளார்ந்த அரசியல் சுயலாபம் கொண்ட விருப்பத்திற்கும், அப்பள்ளிவாசலின் பழைய தலைவரான சம்மேளனத் தலைவரின் தந்திரமான செயற்பாடுகளுக்கும் அமைவாக சம்மேளனத்தினால் அனுப்பப்பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை உள்ளடக்கிய பிரஸ்தாப பரிந்துரை அறிக்கைக்கு அமைவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 34 நபர்களையும் இப்பள்ளிவாசலின் நிர்வாகிகளாக வக்பு சபை அங்கீகரிக்குமாயின் இப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகளும், ஜமாஅத்தார் சங்கமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மீதும், அதன் பணிப்பாளர் மீதும் இதுவரை காலமும் வைத்திருந்த நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டு விடும் என்பது நிச்சயமாகும்.

இப்பள்ளிவாசலின் ஜமாஅத்தார் சங்கத்தின் யாப்பில் 22 நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும் என்கிற விதி காணப்படுகின்ற நிலையில், அதற்கு முரணாக 34 பேரையோ அல்லது தேர்தல் இடம்பெறவிருந்த தினத்தன்று பணிப்பாளரால் சொல்லப்பட்டவாறு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த 54 வேட்பாளர்களையுமோ எவ்வாறு நிர்வாகிகளாக நியமனஞ் செய்ய முடியும்? என்றும் ஜமாஅத்தார்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் 19ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள வக்பு சபைக் கூட்டத்தில் இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபையொன்றைத் தெரிவு செய்வது தொடர்பில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்துள்ள இச்சம்பவத் திரட்டுக்களை வக்பு சபைப் பணிப்பாளர்கள் கவனத்திற் கொண்டு நீதியான முறையிலும், அழ்ழாஹ் திருப்திப்படக் கூடிய வகையிலுமாக மிகப் பொறுப்புடன் நன்கு சிந்தித்து தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் என்றே தாங்கள் எதிர்பார்ப்பதாக ஜமாஅத்தார் சங்கத்தினர் தெரிவித்தனர்.

எம்மைப் பொறுத்தவரை அழ்ழாஹ்வின் திருப்திக்காக அர்ப்பணிப்புடன் அவனது இல்லத்தைப் பராமரிக்கவும், நிர்வாகிக்கவும் கூடிய இம்மஹல்லாவில் வாழும் நல்ல சாலிஹான மனிதர்களை நிர்வாகிகளாக ஜமாஅத்தார்கள் தெரிவு செய்வதற்கு வக்பு சபைப் பணிப்பாளர்கள் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அது அரசியல் அழுத்தங்கள் அறவே இல்லாத நேர்மையான கலந்துரையாடல்கள் மூலமாகவோ அல்லது தேர்தல் ஒன்றின் மூலமாகவோ இடம்பெறுவதை நாம் வரவேற்று அவ்வாறு தெரிவாகும் நிர்வாகிகளுக்கு எமது பூரண ஆதரவையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இப்பள்ளிவாசலுக்கான நிர்வாகமொன்றை நீதியான முறையில் அமைத்துக் கொடுப்பதற்கு வக்பு சபை என்ற பொறுப்பில் அச்சபையின் பிரதிநிதிகள் கடமைப்பட்டுள்ளனர்.

அவர்களின் செயற்பாடுகள் இம்மையில் இப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகளாலும், மறுமையில் அழ்ழாஹ்வினாலும் கேள்விக்குட்படுத்தப்படும் வகையில் அமைந்து விடக்கூடாது.

அதிகாரம் அனைவருக்கும் அமானிதமாக அழ்ழாஹ்வினால் வழங்கப்படுவதாகும். அதனை உலகாதய நலன்கள் எதற்காகவும் எவரும் துஷ்பிரயோகமாகப் பிரயோகிக்க முற்படக்கூடாது. அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அது அழ்ழாஹ்வின் சாபத்திற்கும், கோபத்திற்கும் அவர்களை ஆளாக்கும் என்பதும் கண்கூடான நிச்சயமாகும்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக