ஸகாத் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலுள்ள எம்.எச். முகம்மது மாஸ்டரை ப.நோ.கூ. சங்கத்தின் புதிய தலைவராக்க தேசிய பாதுகாப்பு நிதி மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்ட மர்சூக் அகமதுலெப்பை முயற்சி!

A.L.M.-MarzookA.H.Mohamed-J.Pகாத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை மீண்டும் மர்சூக் அகமட்லெப்பையின் வழிகாட்டலில் நடாத்திச் செல்ல வழியேற்படுத்தி நாசப்படுத்த வேண்டாம் என அச்சங்கத்தின் தலைவர் ஏ.எச். முகம்மது, இச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபருமான எஸ்.எல் ஏ. கபூரிடம் நேற்று 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாகத் தெரிவித்தார்.

காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்திற்கான புதிய இயக்குனர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக்கூட்டம் கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சங்கத்தின் பிரதான காரியாலய மண்டபத்தில நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. உசனார் மற்றும்  கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அ.இ.ம. காங்கிரஸிலிருந்து அமைச்சர் றவூப் ஹக்கீமின் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுக்கு கட்சி தாவிய இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட் லெப்பையும் சமூகமளித்திருந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றகீப் மௌலவி, மர்சூக் அகமட்லெப்பையை நோக்கி ஒரு எச்சரிக்கையான வேண்டுகோளை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

‘இச்சங்கம் கடந்த காலங்களில் உங்களின் செயற்பாடுகளால் பல்வேறு சீரழிவுகளைச் சந்தித்து வந்துள்ளது. எதிர்காலத்திலாவது இச்சங்கத்தை நல்ல முறையில் நடாத்திச் செல்வதற்கு நீங்கள் வழி விட்டு ஒதுங்கிக் கொண்டு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இவ்விடயத்தில் நீங்கள் அழ்ழாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். அதையும் மீறி இத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற காத்தான்குடி நகர சபைக்கு எதிரான முகைதீன் மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள நேரிடும்’ என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மர்சூக் அகமட்லெப்பை அப்பள்ளிவாசலின் தலைவராகவும், றகீப் மௌலவி அதன் நிர்வாக சபை உறுப்பினராகவும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே மர்சூக் அகமட் லெப்பை இத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Rauff-A.-Majeed-2இப்பொதுச் சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ.ல.சு. கட்சியின் அமைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான றவூப் ஏ. மஜீதும் அவரது ஆதரவாளர்கள் சகிதம் வருகை தந்திருந்ததுடன், அவரது சார்பில் சங்கத்தின் முன்னாள் தலைவரான எம்.ஐ.எம். தையூப் போட்டியிட்டார்.

இச்சங்கத்தின் முன்னைய நிர்வாகக் காலங்களில் பெரும் ஊழல் மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் எல்லாம் இடம்பெற்று வந்தன. அவற்றையெல்லாம் ஏனைய அச்சு மற்றும் இணையதள ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வந்துள்ள போதிலும் ‘வார உரைகல்’ துணிச்சலுடன் அவற்றை ஆதாரபூர்வமாக வெளிக் கொணர்ந்திருந்தது.

இதன் காரணமாக முன்னாள் தலைவர்களான எஸ்.எல்.ஏ. கபூர், எம்.எஸ்.எம். ஷாபி போன்றவர்கள் தமது பதவிகளைத் துறந்தும், பொதுச்சபையால் நீக்கப்பட்டும் வெளியேறியிருந்தனர்.

புதிய இயக்குனர் சபைத் தேர்தலில் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ. மஜீத் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் எம்.ஐ.எம். தையூப் 50 அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முதல் வெற்றியாளரனார்.

மேலும் இத்தேர்தலில் போட்டியிட்ட தற்போதையசங்கத் தலைவர் ஏ.எச். முகம்மது 48 வாக்குகளையும், எச்.எம்.எம். றியாழ் 43 வாக்குகளையும்,  எம்.எச். முகம்மது மாஸ்டர் 42 வாக்குகளையும், எம்.ஏ. அல்லாபிச்சை 40 வாக்குகளையும் பெற்றனர்.

அத்துடன் இளைஞர் அணியில் போட்டியிட்ட எம். றுமைஸ் 50 வாக்குகளையும், எம்.எம். பைசல் 48 வாக்குகளையும், மகளிர் குழுவில் போட்டியிட்ட எம்.எல். உம்மு ஹபீபா 8 வாக்குகளையும், எம்.ஐ. ஹில்மியா 7 வாக்குகளையும் பெற்று புதிய இயக்குனர் சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சங்கத்திற்கான புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான முயற்சிகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்களின் கடுமையான விமர்சனங்களுக்குட்பட்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட்லெப்பை, அக்கூட்டமும், இயக்குனர்கள் தெரிவும் நடைபெற்று முடிந்ததன் பின்னர் மீண்டும் இச்சங்கத்தில் தனது செல்வாக்கைப் பிரயோகித்து அவருக்கு வேண்டிய சம்மேளன முக்கியஸ்தரான எம்.எச் முகம்மது மாஸ்டர் என்பவரைத் தலைவராக்குவதற்காக இப்போது மறைமுகமாகச் செயற்பட்டு வருவதாக ‘வார உரைகல்’லுக்கு நம்பகமான தகவலொன்று கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஏ.எச். முஹம்மதுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சொன்னார்:

‘நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆறு இயக்குனர்கள் சமூகமளித்திருந்தனர். இச்சமயத்தில் முன்னாள் தலைவர் எஸ்.எல்.ஏ. கபூரும் இங்கு வந்திருந்தார்.”

“அவர் இயக்குனராகத் தெரிவு செய்யப்பட்டவரல்ல. என்றாலும் மர்சூக் அகமட் லெப்பையின் முகவராக அங்கு வந்தார். அவர் எம்.எச். முகம்மது மாஸ்டரை தலைவராக்குவதற்கு மர்சூக் அகமட் லெப்பை விரும்புவதாகச் சொன்னார். அதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் இணங்கியதாகத் தெரியவில்லை. நானும் அதற்கு இணங்கவில்லை.’

‘பொதுச்சபை உறுப்பினர்களில் அதிகூடுதலான 50 வாக்குகளைப் பெற்ற முன்னாள் தலைவர் தையூபை தலைவராக்குவதற்கே இயக்குனர்கள் பலரும் விருப்பமுடையவர்களாக உள்ளனர். இதற்கு முட்டுக்கட்டையாக மர்சூக் அகமது லெப்பை தலையிடுவது அவருக்கு அழகல்ல. இவ்வாறான மர்சூக் அகமட் லெப்பையின் பின் கதவால் ஒரு பொம்மைத் தலைவரை உருவாக்கி மீண்டும் இச்சங்கத்தில் அவர் செல்வாக்குச் செலுத்திச் சீரழிப்பதற்கு முயற்சிக்கும் நடவடிக்கைக்கு முன்னாள் தலைவர் கபூர் தூதுவராகச் செயற்படுவதும் விரும்பத்தக்க விடயமல்ல’

‘கூட்டுறவுப் பரிசோதகராகவும் கடமையாற்றிய அனுபவம் அவருக்குள்ளது. அதைக் கொண்டு அவர் அவரது தலைமைக் காலத்தில் இச்சங்கத்தை நல்ல முறையில் முன்கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அவரது அரசியலுக்கான களமாகவும், தளமாகவுமே இச்சங்கக் கட்டிடத்தையும், இங்குள்ள வளங்களையும் பயன்படுத்தினார். ”

“இதனால் சங்கம் நஷ்டத்திலும், கஷ்டத்திலுமாகியது. சங்கத்திற்கு பிரச்சினைகள் வந்த நேரத்தில் இதனை வழி நடாத்தவென முன்வந்து தலைவர் கதிரைகளை அலங்கரித்த பலர் அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாது வெளியேறினர். மிக நெருக்கடியான காலத்தில் நான் இச்சங்கத்தை தைரியமாகப் பொறுப்பேற்று இன்று வரைக்கும் இதன் கதவுகளை இழுத்து மூடாமல் இருக்கின்ற ஒரு சில பணியாளர்களினதும், பணிப்பாளர்களினதும் பங்களிப்புடன் செயற்படுத்திக் கொண்டு வந்துள்ளேன்.’ என அவர் கூறினார்.

மர்சூக் அகமட் லெப்பை தற்போது மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவராகவுள்ளார். அந்நிர்வாக சபையில் உப தலைவராக நகர சபை உறுப்பினர் றவூப் ஏ. மஜீத் இருக்கின்றார். உறுப்பினர்களாக றகீப் மௌலவி, முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.சீ.எம். மன்சூர் போன்றவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மர்சூக் அகமட்லெப்பை மீண்டும் இச்சங்கத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் பாதகமான முறையில் அவரது முகவராக எம்.எச். முகம்மது மாஸ்டரைத் தலைவராக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பில் அப்பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் மன்சூர் ‘வார உரைகல்’லிடம் நேற்று முன்தினம் தொலைபேசியில் கருத்துத் தெரிவிக்கும்போது, ‘மர்சூக் அகமட் லெப்பை மெத்தைப்பள்ளிவாசல தலைவர் பதவியிலிருந்து இந்த நிர்வாக சபையின் பதவிக் காலத்துடன் ஓரங்கட்டப்படுவார். அதற்கான நடவடிக்கைகளை அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் முனைப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே அவர் கூட்டுறவுச் சங்கத்தில் தனது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஒரு பொம்மைத் தலைவரை உருவாக்க முயற்சிக்கின்றார். இதனை நாம் வரவேற்கப் போவதில்லை. மேலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயக்குனர் சபைத் தேர்தலிலும் நான் போட்டியிடவில்லை’ எனச் சொன்னார்.

இச்சங்கம் பற்றி கருத்துத் தெரிவித்த நகர சபை உறுப்பினர் றவூப் ஏ. மஜீத், ‘இச்சங்கம் பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் உள்ளது. இதனை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்து மக்களுக்கான பயனுள்ள சேவைகளை வழங்க பல யோசனைகளை நாம் கொண்டிருக்கின்றோம். அதற்கு பொதுச்சபை உறுப்பினர்களில் அதிகமானவர்களின் நம்பிக்கையைப் பெற்ற தையூப் சங்கத்தின் தலைவராக வர வேண்டும். ஆனால் மர்சூக் அகமட் லெப்பை இவ்விடயத்தில் அவருக்குத் தேவையான ஒருவரைத் தலைவராக்குவதற்கு முயற்சிப்பதானது எமக்கு மிகவும் கவலையைத் தருகின்றது ‘ எனக் கூறினார்.

மர்சூக் அகமட் லெப்பை தற்போது மெத்தைப்பள்ளிவாசலைப் பிரதிநிதித்துவப்படுத்தி சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் சங்கத்தின் தலைவராக்க விரும்புகின்ற எம்.எச். முகம்மது மாஸ்டரும் சம்மேளனத்தின் பல்வேறு குழுக்களிலும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார்.

எனினும், கடந்த மாதத்தில் இவரது சம்மேளனம் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக பெரும் பெரும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமுள்ளன. அல்அமீன் வீதியில் வசிக்கும் பெண்ணொருவரின் திருமணப் பிணக்கு விடயத்தில் சம்மேளனத்தின் திருமண நல்லிணக்கக்குழு உறுப்பினர்களும், இவருமாக குறித்த பெண்ணுக்கு பெரும் பாதகமான முறையில் செயற்பட்டதாக கடந்த 23.12.2012ல் வெளியான ‘வார உரைகல்’ 242வது பதிவில் அப்பெண்ணின் அறிக்கை வெளியாகியிருந்தது.

‘சம்மேளனத் தலைவரின் மச்சான் என்பதற்காக பாரபட்சம் காட்டப்பட்டது! -ஹிலுறு காதியாரால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பெண் புகார்-‘ என்னும் தலைப்பிலான அப்பெண்ணின் அறிக்கை இணையதள வாசகர்களின் பார்வைக்காக இத்தளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.

இதேபோல், சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் குழுவினர் ஹிழுறியா மஹல்லாவில் வசிக்கும் ஏழைப் பெண்ணொருவருக்கு கடந்த வருட ஸகாத் நிதியாக 50,000 ரூபாவை ஒதுக்கி இருந்ததாகவும், அத்தொகையைக் கொடுப்பதற்கு இதே எம்.எச். முகம்மது மாஸ்டரையே சம்மேளனம் நியமித்திருந்ததாகவும், இவர் அப்பயனாளிப் பெண்ணிடம் 30,000 ரூபாவைக் கொடுத்து விட்டு 50,000 ரூபா கையளித்ததாக அதற்கான வவுச்சரில் – கொடுப்பனவு உறுதிப்பத்திரத்தில் – அப்பெண்ணின் கையொப்பத்தைப் பெற்று வந்து சம்மேளனத்தில் கணக்கு முடித்துக் காட்டியுள்ளதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு, நேற்று 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘வார உரைகல்’ 243வது பதிவில், ‘சம்மேளன கூட்டு ஸகாத் கொடுப்பனவில் மோசடி’ எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதனையும் இணையதள வாசகர்களுக்காக விரைவில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊழல் மோசடிகளுக்குப் பெயர் போன நிறுவனமாகத் திகழும் காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்திற்கு இவரைத் தலைவராக்கினால் என்ன நடக்கும் என்பதை இவ்வூரிலுள்ள சமய, சமூக, பொதுநல அமைப்புக்களின் பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.

இவரைத் தலைவராக்குவதற்கு முயற்சிக்கும் சம்மேளனத்தின் தலைவரும், மெத்தைப்பள்ளிவாசலின் தலைவரும், முன்னாள் நகர சபையின் தவிசாளரும், சங்கத்தின் தலைவருமாகிய மர்சூக் அகமட் லெப்பை என்பவரும் இப்பிரதேசத்தின் பெரும் மோசடி மன்னனேயாவார்.

இவர் தேசியப் பாதுகாப்பு நிதியாகத் திரட்டிய பெரும் பணத்தொகையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்காமல் அப்படியே தன் வயிற்றில் விழுங்கிக் கொண்ட ஒரு ஆசாமி;. மாத்திரமல்ல, இன்றைய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கையெழுத்தையே கள்ளத்தனமாகப் போட்டு காரியம் சாதிக்க முயன்ற ஒரு கிரிமினல்.

இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஒரு நல்ல மனிதரை தனது பிரதிபிம்பமாக சங்கத்தில் தலைவராக்குவதற்கு முற்படுவார்? என்பதையும் சங்கத்தின் புதிய தலைவரைத் தெரிவு செய்யவுள்ள மேற்படி நிர்வாகிகள் அழ்ழாஹ்வுக்குப் பயந்து சமூகத்தின் பொதுச் சொத்தொன்றைப் பாதுகாப்பதற்காக தமது தீர்மானங்களை எடுக்க வேண்டுமென ‘வார உரைகல்’ மிகத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றது.

நமது மண்ணில் ஜனநாயக வழியில் நடைபெறும் தேர்தல்களில் மக்களின் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுபவர்களைப் பின்னால் தள்ளி விட்டு அநியாயக்காரர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும், சண்டியர்களுக்கும் முன்னுரிமையளிப்பதனால்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க காத்தான்குடி நகரம் வெளியில் (பிரதான வீதியில்) சொர்க்கபுரி போலவும், உள்ளே மக்கள் வாழவே முடியாத ஊத்தைகளும், ஓட்டை உடைசல்களும், இருட்டும் நிரம்பிய நரகலான நரகமாகவும் இருந்து வருகின்றது.

நகர சபைத் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற எம்.ஐ.எம். ஜெஸீம் என்பவரைப் பிண்தள்ளி குறைந்த வாக்குகளைப் பெற்ற எஸ்.எச்.எம். அஸ்பரை இந்நகரின் தவிசாளராக்கியதன் மகிமையை கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே இப்பிரதேச மக்கள் நன்கு உணரத் தொடங்கி விட்டனர். இதே தவறு ப.நோ.கூ. சங்கத்திலும் இடம்பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட இயக்குனர்கள் இனிமேலும் இடமளிக்கலாகாது.

‘வார உரைகல்’லின் பார்வையில், ஜனநாயகத் தேர்தலொன்றின் மூலம் தீர்ப்பளித்துள்ள பொதுச்சபை உறுப்பினர்களின் வாக்குத் தெரிவு அடிப்படையில் 50 வாக்குகளைப் பெற்ற எம்.ஐ.எம். தையூப் தலைவராகவும், அவருக்கு அடுத்தபடியாக 48 வாக்குகளைப் பெற்ற இன்றைய தலைவர் ஏ.எச். முகம்மது உப தலைவராகவும் இயக்குனர்களால் தெரிவு செய்யப்படுவதே இத்தேர்தலில் வாக்களித்த அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களையும் கௌரவப்படுத்துவதாக அமையும்.

இச்சங்கத்தில் நம்பிக்கையுடன் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான கிளைக்குழு உறுப்பினர்களையும், அவர்களின் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பொதுச்சபை உறுப்பினர்களையும் புறந்தள்ளிவிட்டு வெறும் தனி மனிதனாகிய மர்சூக் அகமட் லெப்பை என்ற ஒருவருக்கு அடிமைப்பட்டு அவரால் முன்னிறுத்தப்பட்டுள்ள 42 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள எம்.எச். முகம்மது மாஸ்டர் என்பவரைத் தவைராக்குவது ஜனநாயகத்திற்கும், இக்காத்தான்குடிச் சமூகத்திற்கும் செய்கின்ற பாரிய துரோகமேயாகும்.

    • Safrad
    • ஜனவரி 1st, 2013

    Well done poovi sir

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக