அப்துர் றவூப் மௌலவியின் அரசியல் ஞானம் நமதூருக்கு உதவுமா? பகுதி: 01

புகழ் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!

காத்தான்குடியின் அன்றைய – இன்றைய அரசியல் கள நிலவரங்களைத் தொட்டுச் செல் லும் இத்தொடரில் மதிப்புக்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் றவூப் (மி;ஸ்பாஹி) அவர் களின் தலைமையிலான அரசியல் நடவடிக்கை களானது எவ்வாறு தோற்றம் பெற்றன? அவை இப்போது என்ன நிலைமையில் இருக்கின்றது? எதிர்காலத்தில் அவரது அரசியல் செயற்பாடு கள் எந்தளவுக்கு எமதூருக்கு உபயோகப்படும் என்பதைப் பற்றியே இத்தொடரில் ‘வார உரை கல்’ வாசகப் பெருமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் எவராலும் மறக்கப்பட முடியாத ஒரு தேர்தலா கும். முன்னாள் கல்வியமைச்சர் மர்ஹும் அல் ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியில் போட்டியிட, அவரை எதிர்த்து மர்ஹும் டாக்டர் அல்ஹாஜ் அகமத்பரீத் மீரா லெப்பை அவர்கள் ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட தேர்தல் அதுவாகும்.

அத்தேர்தலில் காத்தான்குடியின் 90 சத வீத மான மக்கள் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களையே ஆதரித்து நின்றனர். இத்தேர்தல் களத்திற்கு முன்னாள் பட்டின ஆட்சிமன்றத் தலைவர் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அகமது லெப்பை அவர்கள் தலைமை தாங்கினார்.

மறுபுறம் டாக்டர் பரீத் மீராலெப்பை அவர்களின் தரப்பில் காத்தான்குடி 05ம் குறிச்சி பதுறியா பள்ளிவாசல் (அப்போது அது ஜும்ஆப்பள்ளி வயால் அல்ல) தரப்பினரும், முன்னாள் காத் தான்குடி ஊர்காவற்படையின் பொறுப்பதிகாரி யான ஏ.எஸ் பதுர்தீன் தலைமையிலான குழு வினரும், ஊடகவியலாளர் ஏ.எல்.எம். பழுலுழ் ழாஹ், றசூல் மாஸ்டர், எம்.சீ. அமீனுழ்ழாஹ்,  மர்ஹும்களான ரி.எல். மாஸ்டர், கவிஞர் சபாஜீ போன்ற விரல் விட்டெண்ணக்கூடிய சிலருமே இவ்வூரில் அவருக்கு ஆதரவளித்தனர்.

அத்தேர்தலே நானும் களத்தில் இறங்கிப் பிரச் சாரம் செய்த எனது முதலாவது தேர்தலாகும். அத்தேர்தலில் இளைஞர்களை வழி நடாத்திய அஷ்ஷஹீத் ஏ.கே. அபூபக்கர் அவர்களினது தலைமையில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை ஆதரித்து வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், மேடை நாடகங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வந்தேன்.

அத்தேர்தலைப் போன்றதொரு தேர்தலை இன்று வரை நமதூர் சந்திக்கவில்லை என்று இப்போ தும் பலர் சாட்சியமளிப்பார்கள். அந்தளவுக்கு ஜனநாயகத்திற்கு எதிரான அத்தனை விதமான வன்முறைகளும், அடக்கு முறைகளும் இந்த புனிதமான இஸ்லாமிய மண்ணில் அன்றையத் தலைவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

2004 டிஸம்பர் 26ல் ‘சுனாமி’யைக் கண்டவர் கள் நாங்கள். அதற்கு முன்னரும் இவ்வூரைத் திணறடித்த சுனாமியொன்று வந்தது. அதுதான் இத்தேர்தலில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை எப்படியும் வெல்ல வைக்க வேண் டும் என்று பத்தாஹ் ஹாஜியார் என்பவரால் வாரி இறைக்கப்பட்ட ‘காசுச் சுனாமி’.

‘சிலோன் சீமான்’ என நம்மவரால் அழைக்கப் பட்ட மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எல்.எம். இஸ்மா யில் (ராசா ஹாஜியார்) என்பவர்தான் பத்தாஹ் ஹாஜியின் பணக் குதத்துக்குப் பொறுப்பாக இருந்தார். அவரூடாகவே இத்தேர்தல் விடயங் களுக்கு பணம் சப்ளை செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்புக்கு முன்ன தாகவே நமதூரில் ‘போனிக்கா பொம் பெக்டரி’ யொன்று அத்தேர்தல் காலத்தில் நிறுவப்பட்டது. சிறு பிள்ளைகள் விளையாடும் ‘பாவப் பிள் ளை’யில் கைக்குண்டுகள் மிகவும் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டன. ‘பணம் பாதாளம் மட்டும் பாயும்’ என்றுதான் சொல்லக் கேட்டிருப்பீர்கள் ஆனால் அந்தத் தேர்தலில் பத்தாஹ் ஹாஜியின் பணம் ஆகாயத்திலும் பாய்ந்தது. கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை மௌலானா கபுறடி மைதானத்தில் பென்னம் பெரிய தராசில் ஏற்றி வைத்து சில்லறைக் காசுகளால் நிறுத்துக் காட்டி இவர்களின் பண பலம் காட்டப்பட்டது.

அத்தேர்தலைப்பற்றி விரிவாக எழுதுவதென்றால் ‘ஹன்ஸீர்’ எழுதிய  ‘எங்கள் தலைவர் பதியுத் தீன் மஹ்மூத்’ என்ற பெருநூலையும் மிகைத்து விடும் அளவுக்கு எழுதலாம். மொத்தத்தில் நான் ஆதரித்த அணியாக இருந்தாலும் அத் தேர்தலில் எதிர்தரப்பு வேட்பாளரான மர்ஹும் டாக்டர் பரீத் மீராலெப்பை அவர்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் மிக மிக அதிகமாக இவ் வூரில் அன்றையத் தலைவர்களால் அரங்கேற் றப்பட்டன என்பதே கசப்பான உண்மையாகும்.

அப்போது காபந்து அரசாங்கமாகப் பதவியில் இருந்த ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு படுபாதகமாகவும், ஐ.தே.கட்சிக்கு அமோக வெற்றியாகவுமே  தேர் தல் முடிவுகள் வெளியாகின. எனினும் நமது மட்டக்களப்புத் தொகுதிக்கான தேர்தல் முடிவு மாத்திரம் தாமதமாகவே நமது ஊரில் மயான அமைதி நிலவியது. வாக்களிப்பு முடிந்த மறு நாள் மாலையே இத்தொகுதிக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

சுப்ஹானழ்ழாஹ்! அன்று இவ்வூர்த் தலைவர் களினதும், செல்வந்தர்களினதும் அதர்மமும் அக்கிரமங்களும் பகிரங்கமாகத் தோற்றுப் போயின! டாக்டர் பரீத் மீராலெப்பை அவர் களின் நேர்மையும், பொறுமையும் பிரகாசமாக வெற்றியீட்டியது.

வாக்களிப்புத் தினம் வரையும் இத்தொகுதியில் சட்டத்தையும், ஒழுங்கையும், ஜனநாயக விழுமி யங்களையும் தனது சுட்டுவிரல் அசைவாலும், தொலைபேசிக் கட்டளைகளாலும் கட்டுப்படுத்தி வந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் இக்காத் தான்குடி மண்ணிலிருந்து எவ்வழியால் எவ் வாறு சென்றார் என்ற விபரம் 34 வருடங்கள் கழிந்தும்கூட இன்னமும் தெரியவில்லை.

மேடைகள் தோறும் வீராவேசம் முழங்கிய பீரங்கிப் பேச்சாளர்கள் அனைவரும் ஊமை களாகி ஒளித்துக் கொண்டனர். தேர்தல் முடிவு கள் வெளியான பின்னரே டாக்டர் பரீத் மீரா லெப்பைக்கு ஆதரவாக இருந்த பலரும் பச்சைத் தொப்பிகளுடன் பசாருக்கு வந்தனர்.

வதந்திகள் அன்றையத் தந்திகளையும், இன் றைய ளுஆளு களை விடவும் வேகமாக கூட்டம் கூட்டமாக ஒளித்துக் கொண்டிருந்த எங்களை வந்தடைந்தன. அக்காலத்தில் இப்போது புழக் கத்தில் இருக்கும் செல்போன்கள் இருக்க வில்லை. அதனால் வாய் மூலத் தகவல்களே வேலித் துவாரங்களுக்குள்ளால் வந்தன. அவரைத் தாக்கினார்களாம்.. இவருக்கு அடித்தார்களாம்.. அந்த ஹாஜியாரின் வீடு உடைக்கப்பட்டதாம். இந்த முதலாளியின் கடை நெருப்பு வைக்கப்பட்டதாம்.. என்றெல்லாம் செய்திகள் வர வர நீலக் கட்சிக்காரர்களான எமக்கு வயிற்றில் அடிக்கொரு தடவை புளி கரைந்தது. பல வாரங்களுக்குப் பின்னரே ஊரில் சகஜ நிலை ஏற்பட்டது.

‘இதென்ன? அப்துர் றவூப் மௌலவியின் அரசியல் ஞானத்தை எழுதத் தொடங்கிய நான் 1977ம் ஆண்டுத் தேர்தல் காதையை இங்கு அவிழ்த்து வருகின்றேன்’ என்று நீங்கள் நினைக்கலாம்.

இலங்கையிலும் இந்தியா, சவூதி அரேபியா விலும் அறபுக் கல்வியைக் கற்றவராக  ஆசிரி யத் தொழிலாற்றி வந்த அப்துர்றவூப் மௌலவி யின் ஆத்மீக, அரசியல் துறைகளிலான எழுச் சிக்கு அத்தேர்தலும் ஒரு காரணமாக இருந்தது. அங்கிருந்து தொடங்கப்பட்டால்தான் இவ்வூரில் இருந்த சமய, சமூக, அரசியல் தலைமைகளின் அட்டகாசங்கள், அநியாயங்கள் வாசகர்களுக்கு வெளிச்சமாகும்.

மட்டக்களப்புத் தொகுதியின் தேர்தல் முடிவு நமதூரின் சமய, சமூக, அரசியல் களத்தில் தலைமை தாங்கி நின்ற அஷ்ஷஹீத் அகமது லெப்பை அவர்களைத் தலைகுனியச் செய்தது. அவரின் தலைமைத்துவப் பேரவையில் பிரதான ஆலோசகர்களாக இருந்த இவ்வூரின் பிரதான புள்ளிகளுக்கெல்லாம் அத்தேர்தல் முடிவானது தலையில் கொள்ளி வைத்ததாக ஆனது.

இவர்களை மட்டுமல்ல, இநநாட்டு வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியாக தடம் பதித்துள்ள ஜே.ஆர். ஜெயவர்தனாவைக்கூட பரீத் மீராலெப்பையின் வெற்றியானது வியப்படையச் செய்ததது. ‘எப்படிச் சாதித்தான் இந்தச் சின்னப் பையன்?’ என்று அவர் பல சிரேஷ்ட தலைவர்களிடம் வியந்த அவர் மிக கௌரவமாக கிராம அபிவி ருத்தி பிரதியமைச்சராக அவரை நியமித்தார்.

தேர்தல் முடிவுகளையடுத்து பெரிதும் சோர்ந்து போயிருந்த சேர்மன் அகமது லெப்பையும், அவரது சகாக்களும், ஜே.ஆரின் அரசாங்கத் தில் டாக்டர். பரீத் மீராலெப்பை  பிரதியமைச்ச ராகவும் நியமிக்கப்பட்டதையடுத்து மேலும் துவண்டு போயினர். அவர்களின் செல்வாக்கு மாவட்ட நிர்வாக மட்டங்களில் செல்லாக் காசா கியது. இனி இவ்வூரில் எவ்வாறு நாம் தலை நிமிர்த்தலாம் என்று இராப்பகலாக ஆங்காங்கே கூடி மந்திராலோசனை செய்து வந்தனர்.

அப்துர்றவூப் மௌலவி அவர்கள் பரீத் மீரா லெப்பையுடன் பிரியமாக இருந்து தேர்தலில் ஆதரவளித்த போதிலும், அவர் வெற்றியீட்டி  பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் கூட அவருடன் நெருக்கமாகி ஒட்டி உறவாடி அரசியல் செய்யவில்லை.

அக்காலப் பகுதியில் நாடறிந்த இளம் மார்க்கப் பிரசங்கியாகத் திகழ்ந்த அவர், இவ்வூரின் மூதறி ஞர்களில் ஒருவரான தனது தந்தை சங்கைக் குரிய மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட பதுறியாப் பள்ளிவாசலின் நிர்வாக விடயங்க ளில் மேலோட்டமான அவதானிப்புடன் மார்க்க நூல்களை எழுதுவதிலும், மேடைப் பிரசங்கம் செய்வதிலுமே கவனத்தைச் செலுத்தி வந்தார்.

அஷ்ஷஹீத் அகமது லெப்பை அவர்கள் அத் தேர்தலின் பின் மட்டக்களப்பிலிருந்த அவரது இளம்பிறை அச்சகத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்த போதிலும், சமூக நடவடிக்கை களிலும் முற்று முழுதாக ஒதுங்கிக் கொள்ளா மல் ஓரளவுக்கு ஈடுபாடு கொண்டவராகவே இருந்து வந்தார். இவ்வாறானதொரு கால கட் டத்தில்தான் அந்த சரித்திர முக்கியத்துவமிக்க மீலாத் விழா நமது மண்ணில் நடைபெற்றது.

அது 1979ம் ஆண்டு. ஜாமியுழ்ழாபிரீன் மீரா பள்ளிவாசல் சந்தைச் சதுக்கத்தில் மீலாத் விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் டாக்டர் பரீத் மீராலெப்பையும், சிறப்புப் பேச்சா ளராக அஷ்ஷஹீத் மௌலவி அல்ஹாஜ் எம். எஸ்.எம். பாறூக் (காதிரி) அவர்களும், கௌர வப் பேச்சாளராக மௌலவி அப்துர் றவூப் (மிஸ்பாஹி) அவர்களும் பங்கேற்றிருந்தனர்.

அக்காலத்தில் பிரபலமாக இயங்கிய ‘அஸ்லம் வீவிங் இண்டஸ்றீஸ்’ கைத்தறி ஆலையின் உரிமையாளரான அல்ஹாஜ் எம்.எல்.எம். காஸீம் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய பாறூக் மௌலவி அவர்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு சொப்பன ஸ்கலிதம் ஒரு போதும் நிகழ்ந்த தில்லை என்ற கருத்தை முன்வைத்திருந்தார். அவரையடுத்து உரையாற்றிய டாக்டர் பரீத் மீராலெப்பை அவர்கள் பாறூக் மௌலவி முன் வைத்திருந்த கருத்தை முற்றாக மறுத்து நபி (ஸல்) அவர்களும் நம்மைப்போன்ற ஒரு மனிதர் என்பதால் அவருக்கும் சொப்பன ஸ்கலிதம் ஏற்பட்டே இருக்கும் எனக் கூறினார்.

ஒரு மார்க்க அறிஞர் என்ற வகையில் பாறூக் மௌலவி அவர்கள் கூறிய அக்கருத்தை ஒரு வைத்தியர் என்ற வகையில் தான் மறுப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் மக்கள் மத்தியில் ஒர வகையான பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்விருவரும் கூறிய கருத்துக்களினால் அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்புக்கு மத்தியில் இறுதிப் பேச்சாளராகப் பேசுவதற்கு எழுந்த மௌலவி அப்துர் றவூப் மௌலவி ஒரு தீர்க்கமான பதிலை அளித்து விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அப்துர்றவூப் மௌலவி அவர்களும் அங்கு பேச எழுந்து பெருமானார் (ஸல்) அவர்களின் அருமை பெருமைகளைப் பற்றி விலாவாரியாக விளக்கினார். அவ்வாறு பேசிவந்த அவர், நபி (ஸல்) அவர்களுக்கும், அழ்ழாஹ்வுக்குமான தொடர்புகளைப் பற்றி விவரிக்கும்போதுதான் கால்நூற்றாண்டு காலமாக இக்காத்தான்குடி மண்ணைக் கலக்கி பலரது தலைகளையும் குழப்பிய சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தார்.

விழாவின் முடிவில் பாறூக் மௌலவிக்கும், பரீத் மீராலெப்பைக்கும் இடையில் எழுந்த நபி (ஸல்) அவர்களின் சொப்பன ஸ்கலிதம் தொடர்பான கருத்து முரண்பாடு காணாமல் போய் அப்துர் றவூப் மௌலவி கூறியிருந்த நபி (ஸல்) அவர்களுக்கும், அழ்ழாஹ்வுக்கும் இடையிலான தொடர்பு நிலைக் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதமாகியது.

இது தேர்தல் முடிவின் பின் மௌனித்திருந்த அஷ்ஷஹீத் அகமது லெப்பை அவர்களுக்கும் ஒரு துரும்பாகியது.           (தொடரும்)

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக