காத்தான்குடியில் மதத் தீவிரவாதிகளின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்! முகைதீன் தைக்காவில் நடைபெறவிருந்த வாராந்த ராத்தீப் நிகழ்ச்சிக்கு இடையூறு!! பொலீஸாரின் வேண்டுகோளுக்கமைய தைக்காவுக்கு நேற்றிரவு பூட்டு!!

காத்தான்குடியில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று 12.01.2012 வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள முகைதீன் தைக்காவில் வழமையாக நடைபெற்றுவரும் காதிரிய்யா றாத்தீப் நிகழ்வை நடாத்த விடாமல் காத்தான்குடியிலுள்ள மதத் தீவிரவாதிகள் குழுவொன்று இடையூறு செய்து குழப்பம் விளைவித்ததாக காத்தான்குடி லஜ்னதுல் காதிரிய்யஹ் வர்றிபாயிய்யஹ் தரீக்கா சபையினர் ‘வார உரைகல்’லிடம் தெரிவித்தனர். இதுபற்றி அத்தரீக்கா சபையினர் மேலும் தெரிவித்ததாவது:

மேற்படி தரீக்காவின் சங்கைக்குரிய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ்  ஷேஹ் முஹம்மது புகாரி PPSS நல்ல கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் தலைமையில் இந்த றாத்தீப் மஜ்லிஸ் பிரதி வியாழக்கிழமை இரவுகள் தோறும் தைக்காவின் வழமையான நிகழ்ச்சிகள் மற்றும் தொழுகை போன்ற வணக்கங்கள் யாவும் முடிவடைந்த பின்னர் தரீக்கா சபையைச் சேர்ந்த சூபி முஸ்லிம்களினால் நடைபெற்று வருவது வழக்கமாகும்.

எனினும், நேற்றிரவு குறித்த நேரத்திற்கு அத்தைக்கியாவினுள் பிரவேசித்த காத்தான்குடியைச் சேர்ந்த மதத் தீவிரவாதிகள் குழுவொன்று மேற்படி றாத்தீப் நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்குள் திடீரெனப் பிரவேசித்து குர்ஆன் ஓதுவதிலும், தொழுவதிலுமாக ஈடுபட்டனர்.

ஷெய்ஹு நாயகம் அவர்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலும் சில தீவிரவாதிகள் கால்களை நீட்டியவாறு அநாகரீகமான முறையில் அமர்ந்து கொண்டு குர்ஆன் ஓதத் தொடங்கினர்.

இதனால் தைக்காவினுள்ளும், அதன் வெளிச் சூழலிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தைக்காவுக்குள் மதத் தீவிரவாதிகள் உட்புகுந்துள்ளதால் ஷெய்ஹு நாயகம் அவர்களை தைக்காவுக்குச் சமூகம் தர வேண்டாம் என தரீக்கா சபையைச் சேர்ந்த சூபி முஸ்லிம்கள் சிலர் சென்று முன்னறிவிப்புச் செய்து அவர்களை அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே இருக்குமாறும் ஆலோசனை கூறினர்.

பின்னர் இக்குழப்ப நிலைமை குறித்து அயலவர்களினால் பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இரு தரப்பினரிடமும் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர். நிலைமை சுமூகமாக முடிவுக்கு வராததையடுத்து பொலிசார் பள்ளிவாசலை மூடி விட்டு அனைவரையும் கலைந்து செல்லுமாறும், நாளை (இன்று 13.01.2012 வெள்ளிக்கிழமை) பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் சமூகமளிக்குமாறும் அறிவுறுத்தி அமைதியை நிலை நாட்டினர்.

இதையடுத்து பள்ளிவாசல் மூடப்பட்டது. நாங்கள் ஷெய்ஹு நாயகம் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நடந்த தகவல்களைத் தெரிவித்தோம். – இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் நிகழ்வுகள், தொழுகைகள் அந்த நேரத்தில் இடம்பெறுவதுண்டா? என ‘வார உரைகல்’ கேட்டதற்கு ‘ வழமையாக இஷாத் தொழுகை ஜமாஅத் முடிந்த பின் பிந்தி வருபவர்கள் இரவு 9.30 மணியுடன் அங்கு வந்து தமது அமல்களை முடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். குறிப்பாக வியாழக்கிழமை இரவுகளில் இரவு 10 மணிக்கு இத்தைக்காவில் காதிரிய்யா றாத்தீப் நடைபெறும் என்பது இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமே’ என அவர்கள் பதிலளித்தனர்.

இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இப்பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மாம்புள்ளியர் ஒழுங்கையில் வசிக்கும் செய்யதகமது பதுர்தீன் என்பவரது தலைமையிலான குழுவினர் இந்த சூபி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும், அதுதொடர்பில் ஏற்கனவே காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த அச்சுறுத்தலை மையமாக வைத்தே கௌரவ மேல் மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் அவலி மௌலானா அவர்கள் கிழக்கில் சூபி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதனை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் வன்மையாகக் கண்டித்து மறுப்பறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

எனினும் இந்த மறுப்பறிக்கைகள் பொய்யானவை என்றும், காத்தான்குடியில் சூபி முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், உலமாக்கள், சம்மேளனப் பிரமுகர்கள் போன்ற பல தரப்பினருக்கும் இவ்வாறான தீவிரவாத முகமூடி நபர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளால் நிகழ்ந்த படு கொலைகள் என்பன நிகழ்ந்துள்ளதாக ‘வார உரைகல்’ கடந்த 06.01.2012ல் வெளிவந்த 206வது பதிவில் பகிரங்க அறிக்கையொன்றைப் பிரசுரித்திருந்தது.

இவ்வறிக்கை வெளியாகி ஒரு வார காலத்திற்pகுள்ளேயே மீண்டும் இந்த மதத் தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் இந்த மண்ணில் மீண்டும் பகிரங்கமாக அரங்கேறத் தொடங்கியுள்ளன. இதனை ‘வார உரைகல்’ மீண்டும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்வாறான பலாத்கார வழிகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க ஒரு போதும் முடியாது என்பதையும் ‘வார உரைகல்’ திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றது.

ஏற்கனவே இவ்வாறு பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு முடக்கப்பட்ட அப்துல்லா பயில்வான் அவர்களின் தரீக்கா நிகழ்வுகள், அப்துர் றவூப் மௌலவி அவர்களின் சுன்னத் வல் ஜமாஅத் நடவடிக்கைகள் எல்லாம் தற்போதும் இம்மண்ணில் கிரமமாக நடைபெற்றே வருகின்றன என்பதையும் ‘வார உரைகல்’ சுட்டிக்காட்டவும் விரும்புகின்றது.

இவ்வாறு யதார்த்தத்தையும், மத உரிமை மற்றும் மனித உரிமைகளையும் பற்றிச் சொல்வதற்காககவும், அதற்கெதிரான தவறான செயற்பாடுகளைக் கண்டிப்பதற்காகவும் அஷ்ஷஹீத் அகமது லெப்பை, அஷ்ஷஹீத் ஏ.கே. அபூபக்கர், அஷ்ஷஹீத் பாறுக் மெளைலவி, அஷ்ஷஹீத் வெளிச்சம் முகைதீன் இபுறாகீம், அஷ்ஷஹீத் ஏ.எல்.எம். பளீல் (பிரதேச செயலாளர்) போன்றவர்களின் வரிசையில் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரான என்னையும் இம்மண்ணில் கொலை செய்வது குறித்து நான் கவலைப்படவில்லை. ‘மண்ணில் பிறந்த மனிதன் எவனும் என்றோ எவ்வாறோ மரணித்தே தீர வேண்டும்’

ஏற்கனவே, ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரான என்னைக் கொலை செய்யப்பட வேண்டும் என காத்தான்குடியின் பிரபல தொழிலதிபரான அல்ஹாஜ் கே.எம். கலீல் (பிலால் ஹாஜியார்) என்பவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி மற்றும் காத்தான்குடி நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் போன்றவர்களிடம் பகிரங்கமாகக் கூறி ஆதரவு தேடி வருவதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

எது எவ்வாறாயினும், காத்தான்குடியில் சூபி முஸ்லிம்களுக்கு இத்தகைய மதத் தீலிரவாதிகளால் இன்னமும் இந்த மண்ணில் அச்சுறுத்தல்களும், இடையூறுகளும் இருக்கின்றன என்ற ஆளுநர் அலவி மௌலானா அவர்களின் கூற்று நேற்றைய இத்தைக்காக் குழப்பத்தினால் மீண்டும் பகிரங்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிகச் செய்திகள் எனது ஹயாத்திருந்தால் தொடர்ந்தும் பதிவேற்றப்படும். வாசகர்கள் ‘வார உரைகல். காம்’ உடன் இணைந்திருக்கவும்.

இன்று 13.01.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் கல்லடியில் அமைந்துள்ள புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் தர்ஹா ஷரீபில் ஷெய்ஹு நாயகம் அவர்களின் தலைமையில் றிபாய் றாத்தீப் நடைபெறும் என்றும், எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம்பவம் நடைபெற்ற காத்தான்குடி முகைதீன் தைக்கியாவில் சங்கைக்குரிய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அப்துர் ரஷீத் PPSS கோயா தங்கள் மௌலானா (ரஹ்) அவர்களின் 15வது வருட உறூஸ் நிகழ்ச்சிகள் நடைபெறுமென்றும் மேற்படி தரீக்கா சபையினர் அறிவித்துள்ளனர்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக