மட்டு. புளியம்போக்கர் தர்ஹாவில் நடைபெற்ற றிபாய் றாத்தீப் நிகழ்வு

மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் நொச்சிமுனை தமிழ்க் கிராமத்தில் மீன்பாடும் வாவியோரம் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் தர்ஹாவில் விஷேட றிபாய் றாத்தீப் மஜ்லிஸ் வைபவம் ஒன்று நேற்று 13.01.2012 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நபி (ஸல்)அவர்களின் குடும்ப வழித்தோன்றலில் காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் 09வது தலைமுறை ஷெய்ஹு நாயகமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அந்துரூதீவைச் சேர்ந்த ஷெய்ஹு நாயகம் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் முகம்மது புகாரீ .. நல்ல கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் தலைமையில் இச்சிறப்பு றாத்தீப் நிகழ்ச்சி நடந்தேறியது.

முன்னதாக இங்கு சமாதி கொண்டுள்ள சங்கைக்குரிய புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்து துஆப் பிரார்த்தனை செய்த பின்னர் மௌலவி எம்.வை.எம். றஸீன் றப்பானி தலைமையில் மஃரிப் தொழுகை இடம்பெற்றது. இதில் தங்கள் மௌலானா அவர்களும் பெருந்திரளான முஹிப்பீன்கள் முரீதீன்களும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து றாத்தீப் வைபவம் அங்கு ஆரம்பமானது.

இந்த தர்ஹாவைச் சுற்றிலும் தமிழ்ச் சமூகத்தினரே வாழ்ந்து வருகின்றனர். இனப்பிரச்சினையான காலங்களிலும் அவர்களே இந்த தர்ஹாவுக்கு எத்தகைய சேதங்களும் யாராலும் ஏற்படாத வண்ணம் பராமரித்து வந்தார்கள். அவர்களும் நேற்றைய தினம் இங்கு வருகை தந்து இந்த றாத்தீப் நிகழ்ச்சியை மிக்க மரியாதையுடன் பார்வையிட்டனர்.

இரவு 10 மணிக்கு இவ்வைபவம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக