காத்தான்குடி முகைதீன் தைக்காவினுள் மீண்டும் மதத் தீவிரவாதிகள் வெறியாட்டம்!

புனித அல்குர்ஆன் பிரதிகளை பாதுகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்!
பள்ளிவாயலின் கண்ணியத்தையும் பாழடித்தனர்!
‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரையும் தாக்கினர்!!

காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாசலில் இன்று காலையில் மீண்டும் மதத்தீவிரவாதிகள் உட்புகுந்து தமது வன்முறை ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைப் பள்ளிவாசலில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேற்றிவிடக் கூடாது என்பதற்காக புனித குர்ஆன் பிரதிகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு தாங்கள் குர்ஆன் ஓதுகிறோம் எனப் பாசாங்கு காட்டினர்.

இதனால் அப்பள்ளிவாசலில் இன்று காலை நடைபெற ஏற்பாடாகியிருந்த காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் சங்கைக்குரிய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அப்துர் றஸீத் PPSS கோயாத் தங்கள் மௌலானா (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் 15வது வருட மனாகிப் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று 15.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணிக்கு அப்பள்ளிவாசலுக்குச் சென்றிருந்த மேற்படி தரீக்காக்களின் தற்போதைய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அஹ்மது புகாரி PPSS அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்க முற்பட்டதாகவும், எனினும் உடன் சென்றிருந்த பெருந்தொகையான முரீதீன்களும், முஹிப்பீன்களும் தங்கள் மௌலானா அவர்களைச் சுற்றி வளைத்து மதத் தீவிரவாதிகள் அவர்களை நெருங்க விடாமல் பாதுகாத்ததாகவும் ‘வார உரைகல்’லுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றித் தகவல் அறிந்த ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் காலை 08.45 மணிக்கு அங்கு சென்றபோது பள்ளிவாசலுக்கு முன்பாக பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடபட்டிருந்தனர். மேலதிகப் பாதுகாப்புக்காக கெப்டன் ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான விஷேட அதிரடிப்படையினரும் அங்கு நிலை கொண்டிருந்தனர்.

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் பள்ளிவாசலுக்குள் சென்ற வேளையில், ஷெய்ஹு நாயகம் தங்கள் மௌலானா அவர்கள் பொலீசாரினதும், பாதுகாப்புத் தரப்பினரினதும் வேண்டுகோளுக்கமைய பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்த அப்பள்ளிவாசலின் விஷேட நிர்வாக சபைச் செயலாளர் அல்ஹாஜ் எச்.ஏ.ஏ. மொஹிதீன் ஜே.பி அவர்களின் வீட்டிற்கு முரீதீன்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிவாசல் முழுவதும் மதத்தீவிரவாதிகளே பெரும் கும்பலாகவும், ஆக்ரோஷத்துடனும் காணப்பட்டனர். பள்ளிவாசல் என்கிற கண்ணியம் ஒரு சதவீதமும் இந்த மதத்தீவிரவாதிகளின் செயற்பாட்டில் இருக்கவில்லை. பள்ளியில் இருந்த புனித அல்குர்ஆன் பிரதிகளை சினிமாப் பாட்டுப் புத்தகங்களைப்போல் அவர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு ‘நாங்கள் குர்ஆன் ஓதுகிறோம். எங்களைத் தடுக்க வேண்டாம்’ எனக் கோரஷாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

அதனை  ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் படம் பிடிக்க முற்பட்டபோது ‘நவமணி’ பத்திரிகையின் காத்தான்குடி நிருபர் எப்.எம். பர்ஹான் என்பவர் முன்வந்து ‘நீங்கள் இதனைப் படம் பிடிக்க வேண்டாம். உடனே வெளியேறுங்கள்’ என்று காட்டமான எச்சரிப்புடன் கூறினார்.

‘நீங்களும் ஒரு ஊடகவியலாளனல்லவா? எப்படி என்னை நீங்கள் படம்பிடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியும்? என்னை இவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு சொல்ல முடியும்?’ என பிரதம ஆசிரியர் அவரிடம் வினவிய வேளையில் அவருடன் கூட நின்ற மதத் தீவிரவாதக் கும்பலில் காணப்பட்ட றிபான் என்பவர் (இவர் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபைக் கட்டிடத் தொகுதியில் கம்பியூட்டர் திருத்தும் நிலையம் வைத்திருப்பவர்) பிரதம ஆசிரியரைத் திடீரெனத் தாக்கினார்.

இந்த எதிர்பாரத் தாக்குதலை பள்ளிவாசலினுள்ளேயே சற்று தூரத்தில் நின்று அவதானித்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. அமரசிங்ஹ  மற்றும் சிறு குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் திரு ரணசிங்ஹ ஆகியோரும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தரும் உடனடியாக தாக்கப்பட்ட பிரதம ஆசிரியரை நெருங்கி அவர் தொடர்ந்தும் தாக்கப்படாமல் பாதுகாத்தனர்.

இத்தாக்குதலினால் பிரதம ஆசிரியரின் மூக்குக் கண்ணாடி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது.

இத்தாக்குதல் குறித்து இன்று பிற்பகல் 02:00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பிரதம ஆசிரியரால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

பள்ளிவாசல் செயலாளரின் வீட்டுக்குச் சென்று நிலைமைகளை அவதானி;த்தபோது, ஷெய்ஹு நாயகம் தங்கள் மௌலானா அவர்கள் அங்கு தமது முரீதீன்களுடன் அமர்ந்திருக்கக் காணப்பட்டார்.

சற்று நேரத்தில் அங்கு றிபாய் மொலித் பாராயணம் செய்யப்பட்டது. அதையடுத்து கல்முனை பாத்திமதுஸ் ஸஹ்றா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஆர். சபா முஹம்மது நஜாஹி, காதிரி, ஜிஷ்தி அவர்களினால் வலிமார்களின் அகமியங்கள் குறித்து உரையாற்றப்பட்டது.

அவர் தனதுரையில், ‘தரீக்காக்கள் தோற்றுவிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் அத்தரீக்கா வழியில் மக்கள் ஆர்வம் கொண்டு இந்தளவு அமளி துமளிகளுக்கு மத்தியிலும் அவ்வழியில் உறுதியாகக் கால்பதித்து நிற்பது வலிமார்களின் அருளினாலேயாகும். இதற்காகவே இத்தகைய ஷெய்ஹுமார்கள் இன்று உலகளாவ முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.’

‘எமது வழிகாட்டல்களும், போதனைகளும் இத்தரீக்கா வழியில் வாழ்பவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டு கூறப்படுகின்றதே தவிர இவ்வழிமுறைகளைப் புரியாமல் எதிர்க்கின்றவர்களுக்காக எடுத்துரைக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அழ்ழாஹ்வின் அருட்பார்வை கிட்டுமாயின் நெல்லுக்குப் பாய்ச்சப்படும் தண்ணீர் புல்லுக்கும் பாய்ந்து அவையம் வளர்ச்சியடைவதுபோல் அத்தகையோரின் உள்ளங்களும் உண்மையின் பக்கம் திரும்பி வீடும்’ எனக் குறிப்பிட்டார்.

அவரது உரையைத் தொடர்ந்து இத்தைக்காப் பள்ளிவாசலின் விஷேட நிர்வாக சபை உறுப்பினரும், முன்னாள் காதி நீதிபதியும், இந்நாள் கிழக்குப் பல்கலைக்கழக ஆலோசனை சபை உறுப்பினருமான ‘பன்னூலாசிரியர்’ அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் அவர்களினால் தமிழ் மொழியில் பெருமானார் (ஸல்) அவர்களின் மீதான கஸீதா பாடப்பட்டது.

இதையடுத்து ஷெய்ஹு நாயகம் தங்கள் மௌலானா அவர்களினால் துவாப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு 1200 முஹிப்பீன்களுக்கு ‘தபர்ருக்’ வழங்கப்பட்டது. ஆண்களும், பெண்களும் வரிசையில் வந்து அவற்றைப் பெற்றுக் கொண்டபோது பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலீசாரும் படை வீரார்களும்கூட வெகுவாக ஆச்சரியப்பட்டனர்.

இதனிடையே பள்ளிவாயலை ஆக்கிரமிப்புச் செய்திருந்த மதத் தீவிரவாதிகளை பொலிசாரும், பாதுகாப்புப் படையினரும் பள்ளிவாசல் வளாகத்தை விட்டும் வெளியேறா வண்ணம் ஏற்கனவே காலை 10.30 மணி முதல் அங்கேயே முடக்கி வைத்திருந்ததுடன் பாதுகாப்புத் தரப்பினரால் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

‘நாட்டில் தீவிரவாதிகளின் கொட்டம் ஒழிக்கப்பட்டு சகல மக்கள் மத்தியிலும் சகஜவாழ்வு ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில் இவ்வாறான சமய அனுஷ்டானங்களையும், மக்களுக்கு அன்னதானம் வழங்குவதையும் தடை செய்யும் கேவலமான செயற்பாடுகளை இந்த ஊரிலேதான் எம்மால் காண முடிகின்றது. இவ்வாறான மதத் தீவிரவாதம் கொண்டவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எந்த வகையிலும் இந்நாட்டில் மீண்டுமொரு வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிப்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். பள்ளிவாசலுக்குள் குர்ஆன் ஓத வந்த நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு வெளியில் அன்னதானம் வழங்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்’ என பாதுகாப்புப் படை அதிகாரி கெப்டன் ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவுரை பகர்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இறுதியாக தபர்ருக் வழங்கும் நிகழ்வு இனிதே முடிவடைந்த பின் பள்ளிவாசலுக்குள் முடக்கப்பட்டிருந்த மதத் தீவிரவாதிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் இன்று அன்னதானம் வழங்க விடக்கூடாது என்ற அவர்களின் திட்டம் தவிடு பொடியானதால் அவர்கள் கையறு நிலையில் வெளியேறினர்.

இதேவேளை காத்தான்குடியில் இன்று நடைபெற்ற இந்த மதத்தீவிரவாதிகளின் வன்முறைச் செயற்பாடுகள் குறித்து இதுவரை எவரும் கண்டனங்களைத் தெரிவிக்கவில்லை என்பதும், அச்சத்தின் காரணமாகவே அரசியல்வாதிகளும். சமூக நிறுவனங்களும் அவ்வாறு வாய்மூடி அமைதி காத்து வருகின்றன என்றும் சூபி முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் சுவாமி விவேகானந்தர் அவர்களனின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டபோது விழுந்தடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விட்ட சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுமாறு வலியுறுத்திய இன சௌஜன்யத்தையும், மக்களின் சகவாழ்வையும் எதிர்பார்த்தவர்கள் இன்று காலையில் இம்மண்ணில் நடந்த அக்கிரமங்கள் குறித்து அமைதி காத்து வருவது இவர்களின் சுயரூபங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

  1. .அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் அந் நாதாக்களின் பொருட்டைக் கொண்டும் எங்களது இறுதி மூச்சுவரை அஹ்லுஸ் ஸுன்னஹ் வல் ஜமா’அஹ் என்னும் தூய கொள்கையில் நிலை பெறச் செய்வானாக ஆமீன் ஆமீன் யா றப்பல் ஆலமீன்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக