கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிப் பிரதேச செயலாளரும், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஏ.எம். மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (23.01.2012) திங்கட்கிழமை காலை முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். (முறைப்பாட்டு இலக்கம்: CIB -2  283/290

நேற்றைய தினம் (22.01.2012) காத்தான்குடி பொலிசாரின் வேண்டுகோளுக்கமைய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பகிரங்கமாக அச்சுறுத்தி எச்சரிக்கை செய்ததாக பிரதம ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேற்படி பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்த மேற்படி வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு தொடர்பான செய்தி குறித்து ஏற்கனவே அவ்வமைப்பின் முன்னாள் தலைவரான மாஹிர் ஹாஜியார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அந்த முறைப்பாடு தொடர்பாகவே பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பொலிசார் பிரதம ஆசிரியரைக் கேட்டிருந்தனர்.

அதற்கமைய நேற்று மாலை பொலிஸ் நிலையத்திற்குச் சமூகமளித்திருந்த பிரதம ஆசிரியரையே முன்னாள் தலைவர் மாஹிர் ஹாஜியார் தான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் என்றும், தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்களை வைத்தே இவரை அடித்து கையைக் காலை ஒடித்து ஆஸ்பத்திரிக் கட்டிலில் படுக்க வைத்து வைத்தியம் என்னால் முடியும் என்றும் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

ஏற்கனவே தன்மீது அவதூறாகச் செய்தி வெளியிட்டதாக அவர் செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் தம்மால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியாதெனத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி தனிப்பட்ட முறையில் சிவில் சட்ட விதிகளுக்கமைவாக அம்முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் தலைவர் மாஹிர் ஹாஜியாரிடம் பொலிசார் அறிவுறுத்தியதடன் அவரது முறைப்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக