மட்/ மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அசையாமல் இருக்க வேண்டும்!

ZDE Ahamed Lebbeமட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாகவே இடமாற்ற வேண்டும் என்று ஏறாவூர் நகர சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டது குறித்து கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் தனது கடுமையான அதிருப்தியை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், ஏறாவூ ருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்றும், அது ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி கல்விக் கோட்டங்களுக்கும் உரித்தானதென்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்கள் மற்றும் கல்வித்துறை தொடர்பாகச் செயற்படுவதற்கே கிழக்கு மாகாண கல்வியமைச்சை அரசாங்கம் நிறுவியுள்ளதாகவும், இதில் உள்ளுராட்சி மன்றக் கட்டமைப்புக்குள் வரும் ஏறாவூர் நகர சபையோ அதன் தவிசாளர் அலிசாஹிர் மௌலானாவோ மூக்கினை நுழைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது எனவும் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் சாடியுள்ளார்.

இத்தனைக்கும் கிழக்கு மாகாண சபையும், ஏறாவூர் நகர சபையும் ஆளும் ஐ.ம.சு. முன்னணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சபைகளாகும்.

இவ்வாறு ஒரே கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இரு வேறு அதிகாரங்களைக் கொண்ட சபைகளிலுள்ள தவிசாளருக்கும், மாகாண அமைச்சருக்கும் இடையில் ஏன் இப்பாரிய கருத்து முரண்பாடுகள் இடம்பெற வேண்டும்?

ஏறாவூரில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகம் அமைந்துள்ளதால், அது ஏறாவூர் அரசியல்வாதிகளினதும், சமூகத் தலைமைகளினதும் கட்டுப்பாட்டுக்குள் அவர்களை திருப்திப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருப்பதாக மத்தி கல்வி வலயத்தின் அதிகாரிகள் கருத்து வெளியிடுகின்றனர்.

முன்னர் இவ்வலயத்தின் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றியவரும் இவ்வாறான ஏறாவூர் அரசியல்வாதிகளினதும், சமூகத் தலைமைகளினதும் விருப்பத்திற்கேற்ப செயற்பட்டு இவ்வெதிர்பார்ப்பை அவ்வூரில் வேரூன்றச் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள கல்விப்பணிப்பாளர் இந்த ஊர்வாத ஓரப் பார்வைக்கு அப்பால் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி என்ற தனது வலயச் செயற்பாட்டுப் பரப்பை பரந்த பார்வையில் நோக்கி நேர்மையாகச் செயற்படுவதன் எதிரொலியாகவே அவரை உடனடியாக இடமாற்ற வேண்டும் என்ற போர்க்கொடி ஏறாவூரிலிருந்து இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது அதுவும் மாகாணக் கல்வியமைச்சரின் அறிக்கையினால் மூக்குடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் சிலர் இந்த ‘இடமாற்றக் கோரிக்கைப்’ பொட்டலத்தை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்குச் சுமந்து வந்து இங்கு கடைவிரித்து விளம்பரப்படுத்தியதன் பின் ஓட்டமாவடி பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு இரு ஊர்ப்பிரமுகர்களாலும் காவடி தூக்கிச் செல்லபட்டதும், ஓட்டமாவடி பள்ளிவாசல் சம்மேளனப் பிரமுகர்கள் இவர்கள் கொண்டு சென்ற சரக்கின் நாற்றம் சகிக்க முடியாமல் முகத்திலறைந்தாற்போல் திருப்பி விட்டதும் ‘வார உரைகல்’ மூலம் வாசகர்கள் அறிந்த செய்தியாகும்.

புதிய கல்விப் பணிப்பாளராக அகமட்லெப்பை அவர்கள் பதவியேற்று இரண்டொரு மாதங்கள் கழிந்த நிலையில் காத்தான்குடி சம்மேளனம் அவருக்கு ஒரு வரவேற்பு அளித்தது.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை நமதூர் சம்மேளனத்தார் பலரும் பெரும் முகஸ்துதியாக அவரது மண்டையே விறைத்துப் போகும் அளவுக்கு ‘ஐஸ்’ வைத்துப் புகழ்ந்துரைத்தனர்.

அதனை அவதானித்த ‘வார உரைகல்’லும், ‘ஓஹோ.. இவரும் இவர்களின் முகஸ்துதி ராமாயணத்தில் அவிந்து போவாரோ?’ என நினைத்தது.

சம்மேளன சபையிலிருந்த பல அதிபர்கள் மலர்ந்த முகங்களுடன் ‘இவரையும் இங்கே வரவழைத்து கவிழ்த்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் இருந்தனர்.

புதிய கல்விப் பணிப்பாளர் நன்றி தெரவித்துப் பேசுவதற்கு எழுந்தார்.

கறாராகப் பேசினார். காத்தான்குடிக் கோட்டக்கல்வி வலயத்தில் இருந்துதான் கூடுதலான புகார்கள் தமக்கு வருவதாகச் சொன்னார்.

தான் கடமையில் எப்போதும் கண்ணாகவே இருப்பேன் என்றார்.

வர்த்தகர்களுக்கு அளவு கோல்களாக தராசுகளும், மீட்டர்க் கோல்களும் வழங்கப்பட்டுள்ளது போலவே அரச பணியாளர்களுக்கு நேரத்தை அழ்ழாஹ் அளவுகோலாக கொடுத்துள்ளான் என்றார்.

அதனைக் கொண்டே நம்மிடம் கேள்வி கணக்குக் கேட்பான் என அறிவுறுத்தினார்.

கடமை நேரத்தைப் பொடுபோக்குச் செய்வோர்மீது தான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

சபையிலிருந்த எல்லாத் தலைகளும் கழுத்தைத் தொங்கப்போட்ட நிலையில் அவரது உரையை உள்வாங்கிக் கொண்டிருந்தன.

அப்போதுதான் அகமட்லெப்பையை ‘வார உரைகல்’ புரிந்து கொண்டது.

காத்தான்குடி ஈன்ற ‘அகமது லெப்பை’க்குப் பின் இப்போது ஒரு நேர்மையான ‘அகமது லெப்பை’யை ‘வார உரைகல்’ கண்டது.

இதுதான் இன்றைய கல்விப் பணிப்பாளர் அகமது லெப்பை யார்? என்பதற்கு சுருக்கமான விளக்கமாகும்.

இதனை ஏறாவூர் நகர பிதா உட்பட காத்தான்குடித் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் அல்ஹிறா அதிபர் பதுர்தீன் இன்னும் அப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவுக்காக உலகெங்கும் வாழும் பழைய மாணவர்களிடமும், புதிய மாணவர்களுடைய பெற்றோர்களிடமும் வாங்கிய வசூல் தொகைக்கும், விழாச் செலவுக்கும் கணக்கு வழக்குச் சமர்ப்பிக்கவில்லை.

இன்றைய அல்ஹிறா அதிபர் சத்தார், பாடசாலை நேரத்திலேயே மாணவர்களை சீருடையுடன் ‘கிழக்கு மண்’ பேப்பரை விற்று வருமாறு காத்தான்குடிச் சந்தைக்கு அனுப்பி சரித்திரம் படைத்தவர்.

அல்ஹஸனாத் அதிபர், அபிவிருத்திச் சங்கப் பொருளாளராக இருந்த ஆசிரியையின் கை எழுத்தையே கள்ளத்தனமாக வைத்து இலட்சக்கணக்கில் பணம் பெற்றார்.

மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் SLA. கபூர்B.Com, பள்ளிவாசல் பணத்தை முறைகேடாக வாங்கி அவரது வீட்டை உடைத்துக்கட்டி அபிவிருத்தி செய்வதைப் போல் அரசாங்கப் பாடசாலையையும் அபிவிருத்தி செய்கிறார்.

அரையமைச்சர் ஹிஸ்புல்லா தனது அரசியல் அதிகார பலத்தினால் றிஸ்வி நகர் ஏழைச் சிறார்களுக்கு பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்த பாடசாலை வளாகத்தையே கபளீகரமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்.

1000 பாடசாலை அபிவிருத்திக்குள் உள்வாங்கப்பட வேண்டிய காத்தான்குடி மத்திய கல்லூரியை அவரது அரசியல் ‘பவரி’னால் ஒதுக்கித்தள்ளிட முற்பட்டார்.

அவரது ‘உம்முல் குறா’ அறபுப் பல்கலைக்கழகத்தினை அமைப்பதற்காக அன்வர் வித்தியாலயத்தையே அபகரிக்க முனைந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரேயொரு கோட்டக்கல்வி அலுவலகமான காத்தான்குடிக் கோட்டக் கல்விக் காரியாலயத்தையும், அங்கிருந்த தளர்பாடங்கள், கணனிகள், ஆவணங்களை எல்லாம் இப்போது இருக்கும் கோட்டக்கல்வி அதிகாரி சுபைர், அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆணைக்கமைய இரவோடிரவாக உடைத்தழித்து தனது ராஜ விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு இவ்வூரிலுள்ள அரசியல் வியாபாரிகளும், கல்வி அதிகாரிகளும், அதிபர்களும் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் ஆப்பாக வந்த  இந்த அகமது லெப்பை, வலயப் பணிப்பாளர் கதிரையில் இன்னமும் உட்கார்ந்திருப்பது என்பது இவர்களைப்போன்ற சமுதாய எத்தர்களுக்கு உண்மையில் பிடிக்காதுதான்.

எனினும் இவரை மக்களுக்குப் பிடித்திருக்கின்றது. மாணவர்களுக்குப் பிடித்திருக்கின்றது. நேர்மையாகக் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கெல்லாம் பிடித்திருக்கின்றது.

இந்தப் பிடிப்புகள் இன்னும் இறுக்கமாக வலயக் கல்விப்பணிப்பாளர் இன்னும் சில காத்திரமான நடவடிக்கைகளை இந்த வலயத்தில் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் குரலான ‘வார உரைகல்’ இவ்விடத்தில் வலியுறுத்த விரும்புகின்றது.

1. அரசியல் வியாபாரிகளின் வருகைக்காக மாணவ மாணவிகளை கொடும் வெயிலிலும், நடுத்தெருக்களிலுமாக மணிக்கணக்கில் கால் கடுக்கக் காத்திருக்கச் செய்கின்ற அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கு கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. வலயக் கல்வி அலுவலகத்தின், தொழில் நுட்ப உத்தியோகத்தரின் அறிக்கைகளும், அங்கீகாரமும் இல்லாமல் சொந்த வீட்டைக் கொத்திப்பிரட்டி திருத்தம் செய்வதைப் போல் அரசாங்கப் பாடசாலைகளிலும் கள்ளத்தனமாக திருத்த வேலைகள் செய்கின்ற அதிபர்களின் நடவடிக்கைகளுக்கும் ஆப்பு வைத்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. காத்தான்குடியில் அமைந்திருந்த கோட்டக் கல்வி அலுவலகமும், அங்கிருந்த பொருட்களும், ஆவணங்களும் எங்கே? எனக் கண்டறிய வேண்டும்.

4. பாடசாலை நேரங்களில் சொந்த வேலைகளிலும், சங்கம், சம்மேளனம் என்ற பொது அமைப்புக்களின் சாட்டிலுமாக வரவேட்டில் கையொப்பம் வைத்து விட்டு ஆள் மாறுகின்ற ஆசிரியர்கள் மீது கண்பதித்து காட்டமான நடவடிக்கைகளை எடுத்து அவர்களுடைய ‘ஹறாமான’ சம்பாத்தியத்தைத் தடுக்கவும் வேண்டும்.

இப்படி இன்னுமின்னும் பல நல்ல பணிகளை தற்போதுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டு அவரது மேலதிகாரிகளினதும், பொதுமக்களினதும், மாணவர்களினதும், நேர்மையான ஆசிரிய, அதிபர் சமூகத்தினதும் நன்மதிப்புக்களைப் பெற வேண்டும்.

அரசியல் வியாபாரிகளினதும், சமூகச் சுயநலவாதிகளினதும் அதிகாரம் நிறைந்த வெருட்டல், உருட்டல், பிரட்டல், பெட்டிசன்களுக்கு எல்லாம் ஏழாம் வகுப்புப் படித்தவனால் வெளியிடப்படும் இந்தப் பத்திரிகையே எட்டு ஆண்டுகளாகத் தாக்குப் பிடித்து இக்காத்தான்குடிப் பூமியிலிருந்து இன்னமும் வந்து கொண்டிருக்கும்போது, எம்மாம் படித்த கல்விப்பணிப்பாளர் அசந்து போகலாமா?

இந்த அரசியல் பாச்சாக்களின் ‘டாச்சர்’களையெல்லாம் அவர் கால் தூசிக்கும் கண்டுக்க வேணாம்!

அவர் கல்வித் தகைமைகளுடன் அந்த ‘சீட்’டுக்கு வந்துள்ளார்.

அப்படித்தான் இங்கேயும் அத்தி பூத்தாற்போல இரண்டாரு அதிபர்கள் அரசியல் வியாபாரிகளின் அதிகார இம்சைகளை எதிர்கொண்டு அசையாமல் உள்ளனர்!

அவ்வாறே மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அகமட ;லெப்பையும் சும்மா ‘கம்’ என்று அவர் கதிரையில இன்னும் உஷாராக இருக்க வேண்டும்!

இந்த அரசியல் வியாபாரிகளை மக்களான நாங்கள்தான் புள்ளடிகள் போட்டு இப்போது அவர்கள் இருந்து தீர்மானங்கள் எடுக்கின்ற கதிரைகளுக்கு அனுப்பியுள்ளோம்.

அவர்களின் சுயநலன்களுக்காக எமது பிள்ளைகளின் கல்வியில இன்னமும் விளயாடினால் அடுத்த தேர்தலில் இவர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பவும் தயங்க மாட்டோம்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக