‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் முன்வரலாம்!

april-4_1917‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்பதுடன், இப்பத்திரிகையை வாராந்தம் தொடர்ந்து வெளியிடுவதற்கும் தகுதியுள்ளவர்கள் முன் வரலாம் என தற்போதைய பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றார்.
இப்பத்திரிகை 2009ம் ஆண்டு, காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்றினையடுத்து, பல்வேறு தேசியப் பத்திரிகைகளிலும் செய்தியாளராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருந்த புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வினால் எந்தவிதமான பாரிய முன்னேற்பாடுகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டது.

ஏழாம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியைக் கற்றுள்ள இவரால் இப்பத்திரிகை கடந்த எட்டு ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருவது காத்தான்குடியிலுள்ள பலருக்கும் ஒரு விதமான தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான உலமாக்களும், பட்டதாரிகளும், துறைசார் கல்விமான்களும், ஊடகவியலாளர்களும் வாழ்ந்து வரும் இக்காத்தான்குடிப் பிரதேசத்தில், ஏழாம் வகுப்பு வரைக்குமே கல்வி கற்ற ஒரு சாதாரணமான நபரால் இப்பத்திரிகையானது தொடர்ச்சியாக  வெளியிடப்பட்டு வருவது ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாகத்தான், இப்பத்திரிகையின் 100வது பதிவு வெளியீட்டு விழா, காத்தான்குடி இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றபோது, இப்பத்திரிகையினை காத்தான்குடியின் சமூக நிறுவனமாகக் கருதப்பட்டு வரும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பொறுப்பேற்று நடாத்துவதற்கு முன்வர வேண்டுமென்றும், அதற்கான அனைத்துப் பங்களிப்புக்களையும் தன்னால் வழங்க முடியுமென்றும் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரான புவி. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்கமாக தனதுரையில் வேண்டியிருந்தார்.

எனினும் இவ்வேண்டுகோள் தொடர்பில் சம்மேளனம் எந்தவிதமான கருத்தையும் இன்று வரைக்கும் தெரிவிக்கவில்லை.

Sammelanam-(New)சம்மேளனத்தில் சுமார் இருநூற்றுக்கும் அதிகமான சமய, சமூக, பொதுநல அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. ஊரிலுள்ள புத்திசாலிகள் எல்லோரும் அங்குதான் வாரந்தோறும் ஒன்றிணைந்து ஆப்பம் சாப்பிட்டு தேநீர் குடித்து இவ்வூரின் நலன்களில் கவனம் செலுத்தி செயற்பட்டும் வருகின்றனர்.

சட்டத்தரணிகள், உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் அதிகாரங்கள் உள்ளவர்கள், வர்த்தகர்கள், துறைசார் நிபுணர்கள் என்று ஒரு சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும் ஒன்றுபட்டு செயற்பட்டு வரும் இந்த சம்மேளனத்தில் தாராள பொருளாதார, பௌதீக வளங்களும், ஊடகமொன்றை வெளியிடும் செயற்பாட்டிற்கான ஏராளமான மனித வளங்களும் நிறைந்துள்ளன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அத்தகைய இப்பேரமைப்பில் ஒரு தகுதியும், தராதரமும் உடைய ஒருவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு இப்பிரதேச மக்களின் தேவைகளில் ஒன்றான உள்ளுர்ச் செய்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் ஒரு பத்திரிகை வெளியீட்டை சர்வ சாதரணமாகவும், சீராகவும் மேற்கொள்ள முடியும். ஆயினும் இவ்விடயத்தில் அவர்களில் எவருக்கும் அக்கறை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக, 100வது பத்திரிகை வெளியீடு வரைக்கும் மிகவும் கஷ்டத்துடனும், பலதரப்பட்ட நெருக்கடிகளோடும் தனியாளாக இருந்து செயற்பட்டு இப்பத்திரிகையை வெளியிட்டு வந்த பிரதம ஆசிரியரான புவி றஹ்மதுழ்ழாஹ்வையே தொடர்ந்தும் பிரதம ஆசிரியராக இருந்து இப்பத்திரிகையை வெளியிட்டு வர வேண்டுமென பிரமுகர்களும், ஊடக நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கமைய கடந்த வாரம் வெளியான 273வது பத்திரகை வரையும் அவரையே பிரதம ஆசிரியராகக் கொண்டு இப்பத்திரிகை வெளியிடப்பட்டு வருகின்றது.

M.S.M.-Noordeenஇவரது இப்பணி குறித்து காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நூர்தீன், பிரதேச முக்கியஸ்தர்கள் பலரிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, ‘மரணம் வரைக்கும் புவி றஹ்மதுழ்ழாஹ்வே இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து பணியாற்ற வேண்டும்’ என்ற அவரது எதிர்பார்ப்பையும் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வாரத்திற்கு முந்திய வாரம் இப்பத்திரிகையில் வெளியாகிய செய்தியொன்று தொடர்பில் கண்டனம் தெரிவித்திருந்த ஒரு அமைப்பினர், கடந்த வாரம் ‘இப்பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருப்பதற்கும், அதனை நடாத்துவதற்கும் புவி றஹ்மதுழ்ழாஹ்வுக்கு தகுதியில்லை’ என்று இணைய தளங்களில் அறிக்கை விட்டிருந்தனர்.

உண்மையில் புவி றஹ்மதுழ்ழாஹ்வுக்கு இப்பத்திரிகைக்கு மட்டுமன்றி எந்தவோர் பத்திரிகைக்குமே பிரதம ஆசிரியராக இருப்பதற்கு தகுதியில்லைதான்.

அதற்குப் பிரதான காரணம் அப்பதவிக்கான கல்வித் தகைமைகள் அவரிடம் இல்லாமையாகும்.

இதுவரைக்கும் இப்பத்திரிகையில் வெளிவந்த பல்வேறுபட்ட செய்திகள் தொடர்பாகவும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி நகர சபை, சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அவையெல்லாம் செய்திக்கான கண்டனங்கள் மாத்திரமே!

ஆனால் இப்போதுதான் முதல் தடவையாக புவி றஹ்மதுழ்ழாஹ், இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருப்பதற்கும், இப்பத்திரிகையை நடாத்துவதற்கும் தகுதியற்றவர் என்ற குரல் இப்பிரதேசத்தில் எழுந்திருக்கின்றது.

இதுவரை தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள் குறித்து ‘வார உரைகல்’ அலட்டிக் கொள்ளாதிருந்த போதிலும், இப்போது எழுந்துள்ள ‘இந்தப் பதவிக்கும், பணிக்கும் தகுதியற்றவர்’ என்ற உண்மைக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையிலதான் இப்பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருந்து பொறுப்புடன் இதனை வாராந்தம் தங்கு தடைகளின்றி வெளியிட்டு சந்தைப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த ஒருவரை வரவேற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் சம்மேளன மட்டத்தில் மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டிருந்த இவ்வேண்டுகோளை இன்று இப்பிரதேச மட்டத்தில் விரிவாக்கி தகுதியுள்ள எவரும் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்வரலாம்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக