PMGGயின் “புதிய நாளை” பத்திரிகை விநியோகத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் அச்சுறுத்தல்

-பத்திரிகைப் பிரதியை கிழித்து வீசியதாகவும் பொலிஸில் புகார்-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் இன்று வெளியிடப்பட்ட ‘புதிய நாளை’ விஷேட பத்திரிகை விநியோகத்தின்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (17.02.2012) மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி 06ம் குறிச்சி தாருஸ்ஸலாம் வீதியைச் சேர்ந்த அவ்வியக்கத்தின் சூறாசபை உறுப்பினர் ஜனாப். எம்.எஸ்.எம். சரீப் என்பவர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஜும்ஆத் தொழுகையின் பின்னரே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினரால் அங்கு இந்த அச்சுறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆத் தொழுகையின் பின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எதிராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரத் தவிசாளர் அஸ்பர் தரப்பினரால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது தெரிந்ததே.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான உண்மை நிலையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இன்று அவ்வியக்கத்தினால் இந்த விஷேட பத்திரிகை வெளியிடப்பட்டு அப்பள்ளிவாசல் முன்பாகவும், ஏனைய ஜும்ஆப்பள்ளிவாசல்கள் முன்பாகவும் அதன் சூறாசபை உறுப்பினர்களால் விநியோகம் செய்யப்பட்டது.

இவ்வாறு 01ம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் சூறாசபை உறுப்பினர் ஜனாப் எம்.எஸ்.எம். சரீப் அவர்களுடன் மற்றுமொரு சூறாசபை உறுப்பினரான ஜனாப் எம். ஜனூப் மற்றும் இயக்க ஆதரவாளர்கள் இப்பத்திரிகையை விநியோகித்துக் கொண்டிருந்தபோதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தீவிர அரசியல் ஆதரவாளர்களான எஸ்.ஏ. றஹீம் மௌலவி என்பவர் பத்திரிகைப் பிரதியொன்றை வாங்கிக் கிழித்து வீசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் அங்கு வந்த மாஜி பொலிஸ் உத்தியோகத்தரும், பிரதியமைச்சரின் உத்தியோகப்பற்றற்ற உள்ளுர் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டு வருபவருமான உன்னிச்சை றபீக் என்பவர் பத்திரிகைகளைப் பறித்தெடுக்க முற்பட்டதாகவும், எனினும் பொதுமக்களால் அவர் தடுக்கப்படவே சூறாதசபை உறுப்பினர்களைக் கடுமையாக அச்சுறுத்தி எச்சரித்து விட்டுச் சென்றதாகவும் இச்சம்பவத்தை அவதானித்தவர்கள் ‘வார உரைகல்’லுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த மாஜி பொலிஸ் உத்தியோகத்தர் ஏற்கனவே கிராம உத்தியோகத்தர் ஒருவரின் இல்லத்தின் மீது நடாத்திய வன்முறைத் துப்பாக்கிச் சூட்டு அனர்த்தம் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் பற்றி அறிந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் எம்.ஏ.சீ.எம். முஹ்ஸீன் அவர்களுடன் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு சற்று முன்னதாக இது குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இப்பள்ளிவாசலுக்கு கடந்த 2011.02.25ம் திகதி ‘வார உரைகல்’ பத்திரிகையை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஏழை மாணவன் ஒருவரிடமிருந்தும் இதே றஹீம் மௌலவி என்பவர்தான் 100 பத்திரிகைப் பிரதிகளைப் பறித்துச் சென்றிருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான தாக்குதல்களை ‘வார உரைகல்’ பத்திரிகை மீது மேற்கொள்ளுமாறு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் 2011.02.19ம் திகதியன்று காத்தான்குடியில் ஒலிபரப்பாகிய சட்டவிரோதமான கள்ள வானொலி அலைவரிசையொன்றின் மூலம் பொதுமக்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

இக்கள்ள வானொலி ஒலிபரப்பு சேவை குறித்தும், அதில் பிரதியமைச்சர் இவ்வாறெல்லாம் தனக்குப் பிடிக்காத வேட்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்து வருவதன் மூலம் பொதுமக்களை தவறான வன்முறை வழிக்குத் தூண்டி வருவது பற்றி காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்கள் 2011.02.25ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் அதன் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் முன்னிலையிலும் பிரஸ்தாபித்திருந்தார்.

இன்று வெளியிடப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இவ்விஷேட வெளியீட்டில் ‘ PMGG வெளிப்படுத்திய உண்மையும் பிரதியமைச்சர் தரப்பினரின் ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகளும்’ என்ற தலைப்பில் பின்வருமாறு விரிவான விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது:

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த (10.02.2012) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் பிரதான வீதியில் ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரக்கோரி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரப்பினரால் மொட்டைப் பிரசுரம் ஒன்று கடந்த வியாழக்கிழமை பின்னேரம் விநியோகிக்கப்பட்டது.

PMGG கடத்தல் நாடகமொன்றை பொய்யாக அரங்கேற்றி பிரதியமைச்சர் தரப்பினருக்கும், தமது மண்ணுக்கும் பாரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், அதற்காக PMGGயினர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனவும், இதனைக் கண்டித்து பொதுமக்கள் கறுப்புக் கொடிகளைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள முன்வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்கு முன்பாக பிரதியமைச்சர் தரப்பினரால் மற்றுமொரு துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

இதுவும்கூட பெயர் முகவரி எதுவும் குறிப்பிடப்படாத மொட்டைப் பிரசுரமாகவே இருந்ததோடு அதில் PMGGயைப் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அபாண்டங்களும் வழமைபோன்று முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்காக கடந்த (09.02.2012) வியாழக்கிழமை இரவே காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மின்கம்பங்கள் மற்றும் ஈச்சை மரங்களில் கறுப்புக் கொடிகளும், காற்றூதிப் பெருப்பிக்கப்பட்ட கறுப்பு பொலித்தீன் தொப்பைகளும் கட்டப்பட்டன.

குறித்த வியாழன் இரவு முதலாவது மொட்டைத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்ட போதிலும் வர்த்தகர்கள் எவரும் தாமாக முன்வந்து அவர்களின் கடைகளுக்கு முன்பாகக் கறுப்புக் கொடிகள் எதனையயும் கட்டவில்லை.  இவற்றைக் கட்டும் பணிகளில் நகரசபைத் தவிசாளர் உள்ளிட்ட பிரதியமைச்சர் தரப்பினர்களே நேரடியாக ஈடுபட்டிருந்தனர்.

மேலும், 10.02.2012 அன்று வெள்ளிக்கிழமையாதலால் வழமைபோன்று பிரதான வீதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் வழமைபோன்று வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்பட்டிருக்கும் சிறு கடைகள், தேநீர்ச்சாலைகள், உணவகங்கள் போன்றவை இக்கண்டனப் பேரணி விடயத்தில் எந்த விதமான கவனமுமின்றி (10.02.2012) வெள்ளிக்கிழமை காலையிலும் திறந்திருந்தன.

பாடசாலைகள், சந்தைகள், பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அனைத்தும் வழமைபோல் இயங்கின. உள்ளுர் முச்சக்கர வண்டிகளின் வாகனப் போக்குவரத்துக்களும் சீராகவே நடைபெற்றன.

ஆக, பிரதியமைச்சரின் முக்கிய ஆதரவாளர்களைத் தவிர பொதுமக்கள் மத்தியில் இக்கண்டனப் பேரணி குறித்து வழமையாக எழுகின்ற பேச்சு அலை எழுந்திருந்ததேயன்றி, அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல PMGGக்கு எதிரான உணர்வலைகள் எதுவும் பொதுமக்கள் மத்தியில் சிறிதும் காணப்படவில்லை.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜூம்ஆத் தொழுகைக்காக மெத்தைப்பள்ளிவாயலுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளிவாயலில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதனை ஒரு பொது(பெரு)மக்கள் ஆர்ப்பாட்டமாக காட்டுவதற்கு பிரதியமைச்சரின் தரப்பினர் போட்டிருந்த திட்டமும் கூட நிறைவேறவில்லை.

ஏனெனில் பெரும்பான்மையான பொதுமக்கள் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் பற்றி எதனையும் அலட்டிக் கொள்ளாமல் நேரடியாக தத்தமது வீடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் ஒரு சிறு தொகையினர் மாத்திரமே ஆர்ப்பாட்டக்காரர்களின் புதினங்களை பார்ப்பதற்காக பிரதான வீதியில் கூடி நின்றனர்.

ஆக, பிரதியமைச்சர் தரப்பினர் விடுத்த வேண்டுகோளையேற்று பொதுமக்கள் எவரும் அணி திரண்டு PMGGக்கு எதிரான இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஏந்தப்பட்ட சுலோகங்கள் அனைத்தும் PMGGயின் மீது அபாண்டமான பொய்களையும் பழிகளையும் சுமத்தும் வழமையான வக்கிரத்தனத்தினையே வெளிக்காட்டின.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக பொதுமக்களிடம் கையெழுத்துத் திரட்டும் முயற்சியொன்றை இவர்கள் மேற்கொண்ட போதிலும் அதுவும் பிசு பிசுத்துப் போனது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

முகவரி ஏதுமின்றி உரிமை கோரப்படாத துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்ற இவர்களின் கையெழுத்து வைக்கும் கோரிக்கையினை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

PMGGக்கு எதிரான ஒரு துண்டுப்பிரசுரத்தில் தானும் இதுகாலவரை முகவரி போட்டு உரிமை கோரும் வகையில் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திராணியில்லாத இந்தப் பிரதியமைச்சர் தரப்பினரின் கதையை நம்பி ஏன் நாம் எமது கையெழுத்துகளை வழங்க வேண்டுமென பொதுமக்கள் புத்திசாலித்தனமாகவே சிந்தித்து விலகிச் சென்றிருக்கின்றர்கள்.

இருப்பினும் பொதுமக்களின் கையெழுத்துப் போன்றவைகளை ஆயிரக்கணக்கில் மோசடியாக தாமாகவே கையெழுத்துக்களை வைத்து அதனை PMGGக்கு எதிரான பிரேரணையாக பல்வேறு இடங்களுக்கும் பிரதியமைச்சர் தரப்பினர் அனுப்பி வைக்கலாம் என்பதையும் இங்கு மறுப்பதற்கு இல்லை.

ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் வெள்ள நிவாரணம் தொடர்பில் பல இலட்சம் ரூபாய்களை அரச நிதியிலிருந்து மோசடியாகப் பெற்றுக் கொள்வதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களின் கையழுத்துக்களை திருட்டுத்தனமாகத் தயாரித்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் கடிதத் தலைப்பினையும் பயன்படுத்தி மோசடி முயற்சியில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவத்தினை நாமிங்கு மறந்துவிட முடியாது.

(இந்த மோசடி பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு PMGG இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமான முறைப்பாடொன்றையும் அனுப்பியிருக்கிறது.)

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நகரசபைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் தவிசாளர் வெள்ளைத் தாள்களில் காரணம் எதுவும் கூறாமல் அவர்களின் கையெழுத்துக்களை ஏறத்தாழ பலாத்காரமாகவே திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்கள்கூட PMGGக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் அவர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

பிரதியமைச்சர் தரப்பினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் அளவிற்கு PMGG செய்த தவறுதான் என்ன?

அவர்கள் குற்றஞ்சாட்டுவதுபோல் கடத்தல் நாடகமொன்றை PMGG அரங்கேற்றியதா? தமது மண்ணுக்கு தலை குனிவை ஏற்படுத்தும் வகையில் PMGG அப்படி என்ன தான் செய்தது..?

PMGG கடத்தல் நாடகமொன்றினைத் திட்டமிட்டு நடத்தியிருந்தால் அது தொடர்பான உண்மைகளை PMGGயே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன..?

பொய்யும் மோசடியும் நிறைந்த அரசியல் சூழலில் எச்சந்தர்ப்பத்திலும் உண்மையைப் பேசி சத்தியத்திற்காகக் குரல் கொடுப்போம் என்ற PMGGயின் வாக்குறுதியில் அது மாறு செய்திருக்கின்றதா..?

இந்த விவகாரத்தில் PMGG இன்னும் நிதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொண்டிருக்க முடியுமா..?

தமது ஆதரவாளர்களின் தவறுகளை மறைத்து குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நமது அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தமது உறுப்பினர் ஒருவரின் ஏமாற்று நடவடிக்கையை அம்பலப்படுத்தி அதனைக் கண்டித்து அதனால் நிகழ்ந்த தவறுகளுக்காக மன்னிப்புக்கோரிய PMGGயின் ஒழுக்க கட்டுக்கோப்பை எப்படிப் புரிந்து கொள்வது..?

நடந்து முடிந்த சம்பவங்களை அவதானித்துள்ள பெதுமக்கள் மத்தியிலிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளே இவைகளாகும்

நடந்தது என்ன?

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் PMGGயின் முன்னாள் உறுப்பினரான அஸாம் என்பவரிடமிருந்து  PMGGயின் முக்கிய சூறாசபை உறுப்பினர் ஒருவருக்கு குறுஞ் செய்தி ஒன்று கிடைக்கிறது.

அந்தச் செய்தியில், தான் மட்டக்களப்பில் வைத்து ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த முன்னாள் உறுப்பினர், தன்னை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வெளியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஆயுதமுனையில் அச்சுறுத்தி  அழைத்துச் சென்று ஏறத்தாழ அன்றிரவு 10.00 மணி வரை அச்சுறுத்தி விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், மொத்தமாக மூன்று பேர் தன்னை அச்சுறுத்தி விசாரித்ததாகவும் தெரிவித்திருந்தார். விசாரணையின்போது தான் சில சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவ்விசாரணைகளின்போது பிரதியமைச்சருக்கு எதிரான மற்றும் நகரசபையின் நடவடிக்கைகளை ஆராய்ந்து அம்பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளை PMGG கைவிட வேண்டும் என அச்சுறுத்தப்பட்டதாகவும், மேலும் கடந்த 26.01.2012 அன்று நகரசபையில் PMGG அம்பலப்படுத்திய டென்டர் மோசடி பற்றியே அதிகமாக விசாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எவருக்கும் அதிர்ச்சியைத் தரக்கூடிய அந்தத் தகவலை தெரிந்து கொண்ட PMGG சூறாசபை உறுப்பினர், அது தொடர்பாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென ஆலோசித்த வேளையில் அந்த முன்னாள் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயின் உடல் நிலை காரணமாக, இதனை பகிரங்கப்படுத்துவது பற்றி தான் தயங்குவதாகவும் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த அக்காரணத்தின் நியாயத்தினைப் புரிந்து கொண்ட சூறாசபை உறுப்பினர் சூறாசபை அமீர் உள்ளிட்ட மேலும் சில சூறா சபையின் முன்னணி உறுப்பினர்களோடு கலந்தாலோசித்தபோது, அவர்களும் நடந்த அச்சம்பவம் பற்றி குறித்த அவ்வுறுப்பினரிடம் தாங்களும் நேரடியாகக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அந்த முன்னாள் உறுப்பினருடனான விசாரணைகளும், அவரது எதிர்கால பாதுகாப்பிற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற கலந்தாலோசிப்புக்களும் அடுத்த நாள் (28.01.2012) மாலை 3.30 மணி வரை தொலைபேசி மூலமாகத் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன.

கடத்தப்பட்டதாக முறைப்பாடு தெரிவித்த அந்த உறுப்பினர் சூறாசபை உறுப்பினர்களிடம் தனித் தனியாகத் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவரது முறைப்பாடு தொடர்பில் சந்தேகிக்கும்படியான எதனையும் காண முடியவில்லை.

தனது தாயாரின் உடல் நிலையினைக் கருத்திற் கொண்டு இக்கடத்தல் சம்பவம் பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கோ அல்லது ஏனைய நடவடிக்கைகளில் இறங்குவதற்கோ தான் அதிகம் விரும்பவில்லை என அவர் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டதன் காரணமாக அதுபற்றி எந்த முறைப்பாடுகளையும் செய்வதில்லை என அப்போது சூறாசபை உறுப்பினர்களால் தீர்மாணிக்கப்பட்டது.

எனினும் அன்றிரவு அக்குறித்த உறுப்பினருடைய முக்கிய குடும்ப உறவினர்களுக்கு மாத்திரமாவது அந்தச் சம்பவத்தைத் தெரிவித்து அவர்களது அபிப்பிரயாயங்களையும் பெற்றுக் கொள்வது மிகவும் பொருத்தமானது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அது அப்படியிருக்க, அந்தக் குறித்த உறுப்பினரிடமிருந்து  மற்றுமொரு தொலைபேசி அழைப்பு கடந்த 28.01.2012 சனிக்கிழமை அன்று மாலை 05.45 மணியளவில் கிடைக்கிறது.

முதல் நாள் தன்னைக் கடத்தி அச்சுறுத்தியவர்களைப் போன்றவர்கள் தன்னை மீண்டும் மட்டக்களப்பில் வைத்து பின் தொடர்வதாகவும், அதனால் தான் அச்சம் கொண்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்திருப்பதாகவும், இதற்கு மேல் பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் தன்னால் இருக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

‘அப்படியானால் பொலிசில் முறைப்பாட்டைப் பதிவு செய்யுங்கள். நாங்கள் அங்கு வருகின்றோம்’  எனக் கூறிய சூறாசபை உறுப்பினர் மற்றும் இருவரையும் அழைத்துக் கொண்டு அன்று மாலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு குறித்த அந்த முன்னாள் உறுப்பினர் பொலிசாருக்கு நடந்த விடயங்களை விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். பொலிசாரும் நடந்த விடயங்கள் பற்றி சில தகவல்களை அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அவரது முறைப்பாடு எதுவும் அவ்வேளையில் பதியப்பட்டிருக்கவில்லை. அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அடுத்த நாள் காலை 8.00 மணியளவில் வந்து முறைப்பாட்டினைப் பதிவு செய்யும்படி அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அன்றிரவு அவசரமாகக் கூடிய PMGGயின் சூறாசபையின் முகாமைத்துவ உறுப்பினர்கள் அவ்வுறுப்பினரிடம் அந்தச் சம்பவம் பற்றிய விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டதோடு மேலதிக நடவடிக்கைகள் பற்ற்pயும் ஆராய்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை சூறாசபை கூட்டப்பட்டு அதுபற்றி ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைப்பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பிரகாரம் பொலிஸில் உடனடியாக முறைப்;பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஏனைய பாதுகாப்புத் தரப்பினருக்கும் அதுபற்றி தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், அத்தோடு ஊடகங்களுக்கும் அவ்விடயம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

இவ்விடயங்களைக் கையாள்வதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதனையடுத்து  குறித்த அவ்வுறுப்பினர் 29.01.2012 அன்று பொலிஸில் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்தார். தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஊடகங்களுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன.

இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு தொடர்ந்து பொலிஸாரை PMGG கேட்டுக் கொண்டிருந்தது.

ஆயினும் சில தினங்களுக்குப் பின்னர் அவர் வழங்கிய பொலிஸ் முறைப்பாட்டில் இச்சம்பவம் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்த நேரம் தொடர்பில் நேர் முரண்பாடான தகவல்களை குறித்த உறுப்பினரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்திருப்பதாகவும் PMGGக்கு தகவல்கள் கிடைத்தன.

இதனைத் பொறுப்புடன் கவனத்திற்கெடுத்துக் கொண்ட PMGG, அந்த உறுப்பினரின் நண்பர்கள் வழங்கிய முக்கிய தகவல்கள் தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியது.

அந்தவகையில் கடந்த 04.02.2012 அன்று குறித்த உறுப்பினரின் நண்பர்களிடமிருந்து கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்கள், அக்குறித்த உறுப்பினரின் பொலிஸ் முறைப்பாட்டில்  தெரிவிக்கப்பட்டிருந்த முக்கிய தகவல்களோடு பாரதூரமான முரண்பாடுகளைக் கொண்டிருப்பதனை உறுதிப்படுத்துவதாக இருப்பதனை PMGG சூறாசபை உணர்ந்து கொண்டது.

இதுபற்றிய உண்மைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக உடனடியாக அந்த உறுப்பினரை அழைத்து விசாரணைக்கு உட்படுத்திய PMGGயின் சூறாசபை பிரதிநிதிகள் குழு, அவரது கடத்தல் முறைப்பாடு தொடர்பில் முன்னர் தெரிவித்திருந்த நேரம் தொடர்பிலான தகவல்களும் இன்னும் பல விடயங்களும் ஆதாரபூர்வமற்றவை அல்லது சோடிக்கப்பட்டவை என்பதை நேரடியாக உறுதி செய்து கொண்டது.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது கிடைத்திருந்த அதிர்ச்சியான தகவல்களை சூறாசபைக்கு தெரியப்படுத்துவதற்காக கடந்த 05.02.2012 அன்று காலை 10.00 மணிக்கு அவசரமாக சூறாசபை கூட்டப்பட்டது.

பொய்யான தகவல்கள் மூலம் தனது உறுப்பினர் ஒருவரால் தாம் ஏமாற்றப்பட்டிருப்பது பாரிய அதிர்ச்சியினையும் ஆழ்ந்த கவலையினையும் எற்படுத்துவதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நூறு வீதம் நேர்மையாகவும் உண்மைத்தன்மையுடனும் நாம் நடந்து கொள்ள வேண்டும் என சகல சூறாசபை உறுப்பினர்களும் ஏகோபித்த கருத்தினைத் தெரிவித்தனர்.

தமது உறுப்பினர் ஒருவர் இவ்வாறான தகவல்களை முன்வைத்து சகலரையும் பிழையாக வழி நடாத்தியிருப்பது தொடர்பில் உடனடியாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளைத் தெளிவுபடுத்துவது எனவும் சூறாசபை தீர்மானித்தது.

மேலும் இவ்வாறு இயக்கத்தை மோசமாக வழி நடாத்திய குறித்த உறுப்பினரை உடனடியாக இயக்கத்தின் உறுப்புரிமையிலிருந்தும், சகல பொறுப்புக்களிலிருந்தும் நிரந்தரமாக நீக்குவதெனத் தீர்மானித்ததோடு பொலிஸாருக்கும் இதுபற்றி அறிவித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இவரின் இக்குற்றச்சாட்டுக்கள் காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சகல தரப்பினர்களிடமும் வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கோருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக நகரசபைத் தவிசாளர், நகரசபையின் ஆளுந்தரப்பினர்களிடம் மன்னிப்புக் கோருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அன்றைய தினம் அவசரப் பொதுக்கூட்டம் ஒன்றினை தனது மக்கள் அரங்கில் ஏற்பாடு செய்த PMGG இச்சம்பவம் தொடர்பான சகல உண்மைகளையும் பகிரங்கப்படுத்தி பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்தியது.

இதுதொடர்பான சகல தகவல்களும் 05.02.2012 அன்று Pஆபுபுயின் உத்தியோகபூர்வ இணையதளமான www.pmgg.org யில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய தேசிய ஊடகங்களிலும் இச்செய்திகள் வெளியாகியிருந்தன.

PMGG மேற்கொண்ட நடவடிக்கைகள் தவறாகுமா?

தமது உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த செய்தியைத் தொடர்ந்து  PMGG மேற்கொண்ட நடவடிக்கைகள் நியாயமானது என்பதனை நடுநிலையாக சிந்திக்கின்ற எவராலும் மறுக்க முடியாது.

ஏனெனில் கடந்த 6 வருடங்களாக ஊழல், மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள், அரசியல் அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிராக PMGG மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்கள் என்ன..?

அதன் காரணமாக PMGGக்கு எதிரான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், கபடத்தனமான நடவடிக்கைகள், வண்முறைகள் எப்படிப்பட்டவை என்பதனை நமது பிரதேச மக்கள் நன்கு தெரிந்த வைத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் PMGG உறுப்பினர்களுக்கு எந்த நேரத்திலும் எந்தத் தீங்கும் நடைபெறக்கூடிய அபாயம் இருக்கிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு யதார்த்தமாகும்.

இப்படியான ஒரு சூழலில் தமது உறுப்பினர் ஒருவரிடமிருந்து இவ்வாறானதொரு பாரதூரமான முறைப்பாடு கிடைக்கின்றபோது அதனை உதாசீனப்படுத்த முடியாது. எனவேதான் இந்த முறைப்பாடு பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.

இம்முறைப்பாட்டைத் தெரிவித்த குறித்த உறுப்பினரிடத்தில் தனித்தனியாக இச்சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டபோது அவர் வழங்கிய தகவல்களில் சந்தேகத்திற்கு இடமான முரண்பாடுகள் எதுவும் அப்போது தென்படவில்லை.

பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு அவர் ஆரம்பத்தில் தயங்கியபோது அவர் தெரிவித்திருந்த காரணம் நியாயம் என்பதால் அது அவர் முடிவுக்கே விட்டுவிடப்பட்டது. இறுதியில் அவராகவே முன்வந்து பொலிஸ் முறைப்பாட்டைச் செய்வதற்காக அவராகவே பொலிஸ் நிலையத்திற்கும் சென்ற பின்னரே அப்பொலிஸ் முறைப்பாட்டை செய்வதற்கான உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டன.

ஆக, 27ஆம் திகதி இரவு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளைச் செய்து ஆராய்ந்ததன் பின்னரே 29ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் ஊடகங்களுக்கும் அதுபற்றி அறிவிக்கப்பட்டது.

எனவே PMGG இவ்விடயம் தொடர்பில் நியாயமாகவும், நிதானமாகவும், பொறுமையுடனுமே நடந்து கொண்டுள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அத்தோடு இம்முறைப்பாட்டைத் தெரிவித்த குறித்த உறுப்பினர் கடந்த காலங்களில் PMGG தொடர்பான விடயங்களில் மிக அர்ப்பணத்துடன் செயற்பட்டவர் என்பதோடு அவர் பற்றிய பிழையான பதிவுகளோ அல்லது முறைப்பாடுகளோ அதுவரையில் PMGGயிடம் இருக்கவுமில்லை.

எனவேதான் அவர் தெரிவித்த முறைப்பாட்டை நம்பிக்கையுடன் பார்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை PMGGக்கு இருந்திருக்கிறது என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

PMGGக்கு ஏற்பட்ட சந்தேகம் அநியாயமானதா?

குறித்த அவ்வுறுப்பினர் மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்த தகவல்களின் அடிப்படையிலேயே இச்சம்பவத்தோடு நகரசபைத் தரப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சந்தேகம் தெரிவித்திருந்தது.

அவரை மட்டக்களப்பில் வைத்துக் கடத்திச் சென்றவர்கள் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு விடயம் பற்றியோ அல்லது எல்லைத் தகராறுகள் தொடர்பாகவோ விசாரித்ததாக குறித்த அந்த உறுப்பினர் தெரிவித்திருந்தால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்க முடியாது.

உதாரணமாக, மட்டக்களப்பில் வைத்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அல்லது நகர முதல்வர் அஸ்பர் அவர்களின் ஆதரவாளர் ஒருவரை ஆயுத முனையில் இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதாகவும், அவரிடம் ‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இலவசக் கொப்பி விநியோகத்திற்கு ஏன் ஹிஸ்புல்லா மண்டபத்தின் அனுமதி மறுக்கப்பட்டது.?’ என்றோ அல்லது ‘நல்லாட்சிக்கான மக்கள்  இயக்கத்திற்கு எதிரான பிரதியமைச்சரின் பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும்’ என்றோ  எச்சரிக்கப்பட்டதாக முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தால் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவர்களுக்கு எவ்விதமான சந்தேகம் ஏற்பட்டு இருக்குமோ அதேவிதமான நியாயமான ஒரு சந்தேகம்தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இவ்விடயத்தில் ஏற்பட்டது என்பதை பொதுப்புத்தி கொண்ட எவராலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் கடந்த 25 வருடகால அனுபவங்களையும் வரலாறுகளையும் மீட்டிப் பார்க்கின்றபோது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தவர்கள் அல்லது அரசியல் நடவடிக்கைகளில் இறங்கிய பலருக்கும்  எதிரான பல்வேறு தீங்குகளும் தாக்குதல்களும் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் இலகுவில் நம்மால் மறந்து விட முடியாது.

அந்த வகையில் பிரதியமைச்சரை எதிர்த்து 2000மாம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் அவரும், அவரது உதவியாளரும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்…

பிரதியமைச்சருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த கிராம சேவை உத்தியோகத்தரின் வீட்டின்மீது நடாத்தப்பட்ட தீ வைப்பு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் நடவடிக்கைகள்…

பிரதியமைச்சருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்களின் ஆதரவாளர்களுடைய வீடுகளின்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள்…

பிரதியமைச்சருக்கு எதிரான அரசியல் கட்சியின் ஆதரவாளர்மீது அசிட் வீசித் தாக்குதல் மேற் கொள்ளப்பட்ட சம்பவங்கள்…

கடத்திச் செல்லப்பட்டு கடற்கரையில் புதைத்து கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்…

கடைகளும் தொழில் நிலையங்களும் தீக்கரையாக்கப்பட்ட சம்பவங்கள் என்று பல சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது குறித்த PMGG உறுப்பினர் தெரிவித்த சம்பவத்தின் பின்னணியில் இருந்திருக்கக் கூடியவர்கள் யார் என PMGGக்கு ஏற்பட்ட சந்தேகம் நியாயமானது என்பதனை யாரும் ஏற்றுக் கொள்வர்.

PMGGயின் மீதான அநியாயக் குற்றச்சாட்டுக்கள்

பிரதியமைச்சர் தரப்பினர் இந்தக்கடத்தல் நாடகத்தை PMGGயே வேண்டுமென்று திட்டமிட்டு அரங்கேற்றி தம்மீது பழி சுமத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். இது அவர்களின் பொறுப்பற்ற அநியாயமான குற்றச்சாட்டேயாகும்.

ஏனெனில் தமது உறுப்பினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே PMGG நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதுடன், அவர் கூறியது பொய் என்பதையும் PMGGயே பின்னர் விசாரித்துக் கண்டுபிடித்து பகிரங்கப்படுத்தியது என்பதனை பிரதியமைச்சர் தரப்பினர் இலகுவாகவே மறந்து விட்டிருக்கிறார்கள்.

இந்த விபரங்கள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றப்பட்டதுடன், தேசிய ஊடகங்களிலும் அவை வெளிவரச் செய்யப்பட்டன.

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடியில் வெளிவந்த ‘வார உரைகல்’ பத்திரிகையும் அதன் பிரதான தலைப்புச் செய்தியாக ‘கடத்தல் நாடகமாடிய அஸாமுக்கு  Pஆபுபு கல்தா! காத்தான்குடி அரசியல் வரலாற்றில் தவறிழைத்த ஆதரவாளனுக்கு தண்டனையளித்த முதல் சம்பவம்! தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர முடி வெடுத்த PMGGயின் அரசியல் முன்மாதிரி!’ எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்ததும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், தனது இக்கடத்தல் குற்றச்சாட்டோடு PMGGக்கோ அதன் உறுப்பினர் எவருக்குமோ எவ்விதத் தொடர்பும் கிடையாது. இந்தச் சம்பவத்தை நானே திட்டமிட்டு மேற்கொண்டேன் என குறித்த உறுப்பினரே பகிரங்க மின்னஞ்சல் கடிதமொன்றின் மூலமாக சென்ற 15.02.2012 அன்று தெளிவுபடுத்தியிருப்பதோடு PMGG உள்ளிட்ட இதில் பாதிக்கப்பட்ட சகல தரப்பினர்களிடமும் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார் என்பதும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமுமாகும்.

எனவே, PMGGயே இதனைத் திட்டமிட்டுச் செய்திருக்குமேயானால் அவர்களே அதனை ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து இது பொய் முறைப்பாடு என்று அறிவித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன்போது அவர்கள் தெரிவித்திருந்த சந்தேகத்திற்காக எவரிடமும் வருத்தத்தையோ, பகிரங்க மன்னிப்பையோ கோரியிருக்க வேண்டியதும் இல்லை.

திட்டமிட்டு இந்தக் கடத்தல் நாடகத்தை PMGG தான் அரங்கேற்றியிருந்தால் இறுதி வரைக்கும் குறித்த அந்த உறுப்பினரைப் பயன்படுத்தி அவரது முறைப்பாட்டையே அடிப்படையாக வைத்து அது தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் அவர்கள் வலியுறுத்திக் கோரியிருக்கவும் முடியும்.

சமூகப் பொறுப்புள்ள நேர்மையான ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் அது அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மாறாக அவ்வியக்கத்தின் சூறாசபையிலுள்ள உறுப்பினர்களினது மனோஇச்சை, சுயகௌரவம் போன்றவற்றுக்கு இடமளிக்காது தமது உறுப்பினரொருவர் செய்த தவறை – பொய்யான முறைப்பாட்டை – இச் சமூகத்திற்குப் பகிரங்கமாக அம்பலப்படுத்தி உண்மையைத் தெளிவுபடுத்தியதுடன் அவரையும் தம் இயக்கத்திலிருந்து  வெளியேற்றியது.

PMGGயின் இந்த முன்மாதிரியான அரசியல் ஒழுங்கைச் சரிவரப் புரிந்து கொள்ளுகின்ற அளவுக்கு முதிர்ச்சியும், நேர்மையான மனோநிலையும் இல்லாததன் காரணமாகவே 10.02. 2012 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது கீழ்த்தரமான தமது அரசியல் பழிவாங்கல் நோக்கங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டது  என்பதனை நீதியாகச் சிந்திக்கக்கூடியவர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பிரதியமைச்சர் தரப்பில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ‘காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் உண்டு’ என்று PMGG குற்றம்சாட்டியதன் மூலமாகக் காட்டிக் கொடுப்பொன்றைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

PMGGக்கு எதிராக பிரதியமைச்சரினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் அறிவீனமான அபாண்டங்களின் வரிசையில் மற்றுமொரு அபாண்டமாகவே இதனையும் எடுத்துக் கொள்ள முடியும்.

ஏனெனில் PMGG இதுவரையிலும் வெளியிட்ட ஊடக அறிக்கைகள், செய்திகள், உரைகள் எதிலுமே அவ்வாறான ஒரு விடயத்தைப் பற்றி ஒருபோதும் குறிப்பிட்டிருக்கவேயில்லை.

இக்கடத்தல் விவகாரம் தொடர்பாக PMGGயை மேற்கோள்காட்டி இதுவரைக்கும் வெளியிட்ட PMGGயின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் ஏனைய ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்,  PMGGயின் ஊடக சந்திப்புக்களில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதற்கு சாட்சிகளாக இருக்கிறார்கள்.

PMGGயின் ஏனைய முறைப்பாடுகளும், பிரதியமைச்சர் தரப்பின் தொடர் மௌனங்களும்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த ஆறு வருட காலமாக இந்த சமூக அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியதிலிருந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களினதும், நகரசபை நிருவாகத்தினதும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள், மோசடி நடவடிக்கைகள், நிதிக் கையாடல்கள் மற்றும் பொய்யுரைப்புக்கள் தொடர்பில்  ஏராளமான குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாகவும், அதேவேளையில் பகிரங்கமாகவும் தெரிவித்தே வந்துள்ளது.

அவை தொடர்பில் மழுப்பலான நழுவல் போக்குகளையும், மௌனங்களையுமே தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற அவர்கள், இவ்விடயத்தில் மாத்திரம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பொய் கூறிவிட்டது என்று பெரிதாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலம் ஏற்கனவே அவர்கள் மீது எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்து வந்திருக்கின்ற ஏனைய அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் உண்மையானவை என அவர்கள் ஏற்றுக் கொள்கின்டிருக்கிறார்கள் என்பதையே இக்கண்டனப் பேரணியின் மூலமாக அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.

மறந்து விடக்கூடாத வரலாற்று உண்மை

இறுதியாக ஒரு வரலாற்றுண்மையை யாரும் இங்கு மறந்து விடக்கூடாது.

அதாவது கடந்த நகரசபைத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணை மூலம் தமக்குக் கிடைத்த இரண்டு நகரசபைப் பதவிகளையும் பொறுப்பேற்கின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் வீட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வைத்து உண்மையாகவும் நேர்மையாகவும் எவ்வித சுய இலாபங்களும் இன்றி மக்களுக்காகவே கடமையாற்றுவோம் என்ற சத்திய வாக்குறுதியுடன் தான் PMGG தமது பதவிகளைப் பொறுப்பேற்றது.

ஆனாலும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தரப்பினரோ பதவிப் பிரமாணம் மேற்கொள்வதற்கு பள்ளிவாசலுக்கு வருவோமென்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்துவிட்டு பின்னர் PMGG சத்தியப் பிரமாணம் செய்தது போன்ற நேர்மையான சத்தியப் பிரமாணமொன்றைச் செய்வதற்குத் திராணியற்றவர்களாக அங்கு காத்திருந்த பொதுமக்களையும், உலமாக்களையும் பள்ளிவாயல் நிருவாகத்தினரையும் ஏமாற்றிவிட்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவானவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

அல்லாஹ்வின் சந்நிதானத்தில் உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட PMGG எமது மக்களோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மைக்குண்மையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதிப்பாடு காரணமாக இக்கடத்தல் விவகாரம் தொடர்பான விடயத்திலும் கசப்பான உண்மைகளை, அவை தமக்குப் பாதகமாக அமையக்கூடும் என்ற எதிர் பார்ப்புக்கள் அதிகமாக இருந்த போதிலும்கூட அதனையும் உண்மைக்குண்மையாகவே வெளிப்படுத்தியிருக்கிறது.

அதேவேளையில், அல்லாஹ்வின் இல்லத்தில் வைத்து உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய திராணியற்று பின் கதவுகளால் ஒளித்தோடியவர்கள் இன்று PMGG வெளிப்படுத்தியிருக்கும் உண்மையை வைத்து பல அபாண்டமான பொய்களைச் சோடித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.

மேலும் PMGG முக்கியஸ்தர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமன பிரதியமைச்சரினால் உசுப்பபேற்றப்பட்ட ஆட்பாட்டக்காரர்கள் கத்தித் தீர்த்திருப்பதனையும் அவதானிக்க முடிந்தது.

எதற்காக PMGG உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்? குறித்த உறுப்பினரின் கடத்தல் விவகாரத்தில் தாமாகவே முனைந்து முயற்சியெடுத்து உண்மையைக் கண்டறிந்து ஊர் மக்கள், பொலிஸார் உட்பட சகல தரப்பினருக்கும் உண்மையைத் தெளிவுபடுத்தியதானது, இலங்கையின் எந்தச் சட்டத்தின்படி சட்டவிரோதமானது? இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை, அவர்களைச் சிந்திப்பதற்கு பிரதியமைச்சர் விடுவதாகவும் இல்லை.

‘உண்மையை உரைத்ததற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என்ற சட்டம் உலகில் எங்காவது இருக்கின்றதா? என வியந்தவர்களாகவே பொதுமக்கள் பலரும் இக்கண்டனப் பேரணியில் சம்பந்தப்படாது விலகிச் சென்று வீதியின் மறுபக்கத்தில் கூடி நின்றவர்களாக ஆட்பாட்டக்காரர்களின்  கூத்துக்களையெல்லாம் புதினம் பார்த்து விட்டு அன்று கலைந்து சென்றிருக்கிறார்கள்.

‘உரத்துக்கத்தினால்  பொய்யும் உண்மையாகி விடும்’ என்பது பிரதியமைச்சரினதும் அவரது சகாக்களினதும் நம்பிக்கையாக இருந்திருக்கக் கூடும்.

முடிவாக..!

பொய்களையே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடாத்திவரும் அவர்களினால் உண்மையின் மகத்துவங்களை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

PMGGக்கு எதிராக திட்டமிட்டு அவர்கள் நடாத்தி முடித்திருக்கும் இத்தனை நடவடிக்கைகளையும் பார்க்கின்றபோது முடிவாக ஒன்றை மாத்திரம் கூற முடியும்.

சத்தியத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என்ற தமது கொள்கைக்கு அமைவாகவும், மக்களோடு உண்மைக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற தமது வாக்குறுதிகளுக்கு ஏற்பவுமே இந்த விடயத்தில் PMGG நடந்து கொண்டுள்ளது.

எனவேதான் தமது உறுப்பினர் ஒருவரினால் தெரிவிக்கப்பட்ட கடத்தல் முறைப்பாடு தொடர்பில் தாமாகவே வலிந்து விசாரணைகளை PMGG மேற்கொண்டது.

அந்த விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள் தமக்குப் பாதகமானவைகள் மாத்திரமின்றி அவற்றை வெளிப்படுத்தினால் தமக்கு அது பல்வேறு சங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று நன்கு தெரிய வந்திருந்த போதிலும்கூட PMGG இறைவனுக்கு மாத்திரம் அஞ்சிப் பயந்து அவ்வுண்மைகளை அம்பலப்படுத்தியது.

அதுவரை நாளும் தமது இயக்கத்திற்காக இராப் பகலாக அர்ப்பணத்துடன் பாடுபட்டுவந்த அந்த உறுப்பினரக்கு எதிரான சகல ஒழுக்காற்று மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவரை அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் உடனடியாகவே நீக்கியதுடன் அவரது உறுப்புரிமையையும் நிரந்தரமாக இரத்து செய்தது.

தாம் கண்டறிந்த உண்மைகளை தமக்கேற்படப் போகுகின்ற சங்கடங்களைப் பற்றியெல்லாம் கருத்திற் கொள்ளாது அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்றின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாகவும், பொது மக்கள் சந்திப்பொன்றின் மூலம் உள்ளுரிலும் உடனடியாகவே பகிரங்கப்படுத்தியது.

மட்டுமின்றி நகரசபைத் தவிசாளர் மற்றும் ஆளும்தரப்பு உள்ளிட்ட அனைத்து பாதிக்கப்பட்ட தரப்பினர்களிடத்திலும் பகிரங்கமாகவே மன்னிப்பையும் கோரியது.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் பொலிஸாருக்கும் இந்தத் தகவல்களை உடனடியாகத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதுடன் அவர்களின் விசாரணைகள் அனைத்திற்கும் தாமும் முழு அளவிலான ஒத்துழைப்புக்களை அளிப்பதாகவும் தெரிவித்தது.

ஆக, மொத்தத்தில் தமது நேர்மையினையும்  உண்மைத்தன்மையினையும் சங்கடம் நிறைந்த இந்தச் சந்தர்ப்பத்திலும் PMGG மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.

PMGG இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறையினை உண்மையை மதிக்கின்ற, நேர்மையை நேசிக்கின்ற அத்தனை பேருமே உளத் திருப்தியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்கேமில்லை.

ஆனாலும், பொய் சொல்வதன் பாரதூரத்தை கணக்கில் எடுக்காமல் நம் மக்களை இத்தனை காலமும் மிகப் பிழையாக வழி நடாத்துகின்ற இவர்கள் இப்போது PMGG வெளிப்படுத்தியுள்ள உண்மைத் தன்மையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக, அதன் பெறுமானத்தை அறவே உணர்ந்து கொள்ள இயலாதவர்களாக மக்களை அதே வழிமுறையில் மீண்டுமொரு முறை பிழையாக வழி நடாத்த முற்பட்டு அதிலும்கூட தோல்வியையே கண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்றப் பதவிக் கதிரைக்காக தான் சத்தியம் செய்து நிறைவேற்றிய வாக்குறுதியினை முறித்து, பிரதேச ஒற்றுமையையும் சிதைத்துச் சீர்குலைத்து, தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய கட்சியையும் நீதிமன்றம் வரை இழுத்துச் சீரழித்த இவர்களினால் எப்படி PMGGயின் உண்மை வழிமுறைகளையும், அது கடைப்பிடித்தொழுகிவரும் நேர்மையின் மகத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்?

அதேபோல் ஊழல்கள், மோசடிகள், வன்முறைகள், கொலை முயற்சிகள் போன்ற பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து அடைக்கலமும், அவற்றையெல்லாம் மறைப்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் பதவி அந்தஸ்தும் கொடுத்து பாதுகாத்து வளர்த்து வருகின்ற இவர்களினால் PMGG நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ள சமூக அரசியல் தர்மத்தையும், சன்மார்க்க ஒழுக்கக் கட்டுக்கோப்பையும் புரிந்து கொள்ள முடியவே முடியாது என்பதிலும் ஆச்சரியமில்லைதான்!

ஆனால் கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே இவர்களுக்கு மாறி மாறி வாக்களித்து அதிகார அரியாசனங்களில் அமர்த்தி வைத்து அழகு பார்த்து தம் சமூகத்திற்குரிய அரசியல் உரிமைகளும், தாம் வாழுகின்ற பிரதேசத்திற்கான அபிவிருத்திகளும் கிடைக்காமல் ஏமார்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற எமது மக்கள் உண்மையாளர்களையும், பொய்யர்களையும் தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுகின்ற அளவுக்கு விழிப்படைந்து விட்டார்கள் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளும் நிதான நிலையில் இவர்கள் இல்லை என்பது துரதிஷ்டவசமான ஒன்றாகும்.

யா அல்லாஹ்! உண்மையின் மகத்துவத்தையும், ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும், தர்மத்தின் சிறப்பையும், நேர்மையின் உயர்வையும் புரிந்து கொள்ளுகின்ற பக்குவத்தை இந்த மனிதர்களுக்கு வழங்கி வழிகாட்டுவாயாக.!

இவர்களின் சகலவிதமான தீங்குகளில் இருந்தும் இந்த மக்கள் சமூகத்தையும் இவர்களின் எதிர்கால சந்ததியினரையும் நீ பாதுகாப்பாயாக.!

நம் அனைவரையும் சத்தியத்திற்காகவே உழைத்து அச்சத்தியத்தை நிலைநாட்டவும் இறுதி வரையிலும் அத்தத்துவத்தின் பாதையிலேயே நிலைத்து நிற்கவும் அருள் செய்வாயாக..!

    • rifan
    • பிப்ரவரி 18th, 2012

    saththiyam waalha!
    asaththiyam oliha!

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக