‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீதான தாக்குதல் மற்றும் விமர்சனங்களுக்கு ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் அல்பா நஸார் கண்டனம்!

-பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளும் பிரதம ஆசிரியரின் சேமநலன்களைக் கேட்டறிந்தனர்–

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ‘வார உரைகல்’  பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும்,

அன்றைய தினம் ஜும்ஆத் தொழுகைக்குப் பின் பிரதான வீதியில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ‘வார உரைகல்’ ஆசிரியரையும் சம்பந்தப்படுத்தி விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் ஜனாப். எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரதேச செயலகம் முன்பாக பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை நேரில் அவதானித்தவர் என்ற வகையில் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்களுக்கும் அவர் தமது அமைப்பின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இவ்விடயங்கள் தொடர்பாக ‘வார உரைகல்’ லுக்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

‘வார உரைகல்’ லில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் தமது மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையைப் பயன்படுத்தியே அவற்றை எதிர் கொள்ள வேண்டும்.

அவ்வாறின்றி 56 வயதைக் கடந்த ஒரு மனிதனை இருட்டிலும், தெருவிலுமாகத் தொடர்ந்தும் தாக்கி வருதானது நாம் பின்பற்றுகின்ற இஸ்லாத்தையும்,  மனிதாபிமானத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

இந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாகவே ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீது இவ்வாறான ஒரு தாக்குதலில் ஈடுபட்ட எம்.எச்.எம். உவைஸ் அவர்களுக்கு எமது ஒன்றியத்தின் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.

அவர் ஒரு டொக்டர். இச்சமூகத்தில் படித்த மதிப்புக்குரிய ஒருவர். அதேபோன்றுதான் ‘வார உரைகல்’ ஆசிரியரும் இச்சமூகத்தில் இடம் பெறும் அநீதிகள், அக்கிரமங்கள், உழல்கள், மோசடிகளுக்கு எதிராக தனது ஊடகம் மூலம் துணிவுடன் குரல் கொடுத்து வருகின்றவர். அவரையும் நாம் மதிப்புடன்தான் நோக்க வேண்டும். அவரும் எமது சமூகத்திற்கு இரண்டு பெண் டொக்டர்களை மிகக் கஷ்டத்துக்கு மத்தியில் உருவாக்கித் தரவுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வழக்கத்திற்கு நாம் மாற வேண்டுமே தவிர இன்னமும் காடைத்தனமான வழிகளில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இம்மண்ணில் மேற்கொள்வது எம்மைப் பொறுத்த வரைக்கும் ஒரு நாகரீகமான செயற்பாடாகத் தெரியவில்லை.

அது எமது சமூகத்திற்கும், நாம் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உகந்த வழியுமல்ல. படித்த மனிதர்களாவது இம்மண்ணில் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இத்தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் நூர்தீன் அவர்கள் இந்த ஊருக்கே ஒரு முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளார்.

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கும் அவருக்கும் இடையில் ஊடகத்துறை தொடர்பான கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்ற போதிலும் அவர் அவற்றையெல்லாம் பாராது இத்தாக்குதலால் கீழே விழுந்த பிரதம ஆசிரியரை ஓடிச் சென்று தூக்கி நிறுத்தியுள்ளதுடன் மறுநாள் பொலிஸ் நிலையத்திற்கும் சென்று இந்நிகழ்வு பற்றிய சாட்சியத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் நாம் அவரை வெகுவாகப் பாராட்டுகின்றோம். இவ்வாறான மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் எமது மண்ணில்  தோன்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதான வீதியில் நடைபெற்ற கண்டனப் பேரணிக்காக அதன் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த அவர்களது நோக்கங்களில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரையும் அவர்கள் சம்பந்தப்படுத்தி அதுதொடர்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் அவரையும், அவரது சொந்தப் பணத்தில் வாங்கிய ஆட்டோவையும் விமர்சித்திருப்பதற்கும்,

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது காட்சிப்படுத்தப்பட்ட சுலோக அட்டைகளில் அவரையும் சம்பந்தப்படுத்தி கேள்வி எழுப்பியிருப்பதற்கும் எமது ஐக்கிய மக்கள் ஒன்றியம் வன்மையான கண்ட னத்தைத் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாகவே நாம் அன்றைய தினத்தில் அக்கண்டன நடவடிக்கையில் ஈடுபடாமல் விலகியிருந்தோம்.

எதிர்காலத்திலாவது இவ்வாறு நடாத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஏற்பாட்டாளர்கள் மிகக் கவனமாக அவதானித்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

குறித்த விவகாரங்களில் சம்பந்தப்படாதவர்களையும் வலிந்து சம்பந்தப்படுத்தி அதனால் மேலும் மேலும் மனஸ்தாபங்களை நாம் தேடிக் கொள்ளக்கூடாது.

‘வார உரைகல்’ பத்திரிகை எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றது.

புனித றமழான் மாதத்தில் எமதூரில் அநியாயமாகத் தாக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறது.

மெத்தைப்பள்ளிவாசல் கடைகள் உடைக்கப்பட்ட போதும் துணிந்து கண்டனம் தெரிவித்தது.

சுவாமி விவேகானந்தரின் சிலை சேதப்படுத்தப்பட்ட சமயத்திலும் அது தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தது.

இப்படி அதன் பணி யாவருக்கும் பொதுவானதாக இருக்கும்போது அப்துர் றகுமானிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்திகள் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டுவது அபாண்டமானது.

சுலோக அட்டையில் தெரிவிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் நோக்கும்போது நாமும் அவரைப் பூஜிக்கின்றோமா?

மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாகமும் அவரைப் பூஜிக்கின்றதா?

அலியார் சந்தி முதல் அபாயா சென்டர் வரை நடைபெற்ற தாக்குதலின்போது தாக்குதலுக்குள்ளான அனைவரும் அவரைப் பூஜிக்கிறார்களா?

சம்மேளனத்தால் ஹஜ்ஜுக்குச் சென்று சிரமப்பட்டவர்கள் எல்லோரும் அவரைப் பூஜிக்கிறார்களா?

இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் சொந்தப் புத்தி என்பது கிடையாதா? என்றெல்லாம்  நாமும் கேட்க வேண்டியுள்ளது.

எனவே, ‘சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் ஊடகங்களில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களைத் தாங்கியவர்களாக, அவை சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்திக்க முயல்பவர்களாக இருக்க வேண்டும்’ என்ற எமது மாவட்ட நீதிபதி அவர்கள் தெரிவித்திருக்கின்ற முற்போக்கான கருத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்தித்து அதனுடைய அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு தங்களைத் திருத்திக் கொள்ள முன் வர வேண்டும்’ – இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேவேளை இச்சம்பவம் பற்றியறிந்த தேசிய காங்கிரஸின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நஸீர் ஜே.பி. அவர்களும் தனது அனுதாபத்தையும், தாக்குதல்தாரிக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதுவராலய அதிகாரிகளும் கடந்த 14ம் திகதி காலையில் இத்தாக்குதல் சம்பவம் பற்றியறிந்து பிரதம ஆசிரியருடன் தொடர்பு கொண்டு அது சம்பந்தமான விபரங்களையும், அவரது சேமநலன்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

-Vaarauraikal  Vol: 212  Cate: 17.02.2012-

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக