காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரத் தவிசாளரை கிழக்கு முதலமைச்சர் பதவி நீக்க வேண்டுமென மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை!

‘காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரத் தவிசாளரினால் தன்னிச்சையான போக்கில் எடுக்கப்படும் சர்வாதிகார நடவடிக்கைகளால் இந்த ஊரும், ஊர் மக்களும் பாதிக்கப்படக் கூடிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதால் இவரைப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.’

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களிடம் இந்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாக அப்பள்ளிவாசல் நிர்வாகியொருவர் ‘வார உரைகல்’ லுக்கு தகவல் அளித்ததுடன் அக்கடிதத்தின் நகல் பிரதியையும் பத்திரிகைப் பிரசுரத்திற்காகக் கையளித்துள்ளார்.

‘காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச். எம். அஸ்பரின் அதிகார துஷ்பிரயோகங்களுக்காக அவரைப் பதவி நீக்கக் கோரிக்கை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலிருந்து தவிசாளராகப் பின் கதவினால் பதவியைப் பெற்றுக் கொண்டவர் தற்போது தனது அதிகாரத்தைப் பிழையான வழியில் துஷ்பிரயோகம் செய்து இவ்வூரின் பொது நிறுவனமான இப்பள்ளிவாசலைப் பழி வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது கவலை தரும் விடயமாகும்.

இப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான 100 வருடங்கள் பழமை வாய்ந்த சந்தையின் 11 கடைகள் வீதி அபிவிருத்தி என்ற பெயரில் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளிவாயலுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் பள்ளிவாயலைப் பராமரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வூரின் மிகப் பிரசித்தி பெற்ற வணக்கத்தலமாக மக்களால் மதிக்கப்படுவது காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளி வாயலாகும். இப்பள்ளிவாசல் புனித பிரதேசமாகவும் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவ்வூரின் இதயமாகக் கருதப்படும் குட்வின் சந்தியில் அமைந்துள்ள கடைத் தொகுதியும், சேர். ராஸீக் பரீட் மாவத்தையில் அமைந்துள்ள கடைத் தொகுதியும் நகரசபையின் தீர்மானம் இல்லாமலும், முன்னறிவித்தல் வழங்கப்படாமலும் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் சுருக்கமாக கீழே விபரிக்கப்படுகின்றது:

1. 15.10.2011ஆந் திகதியன்று பிரதான வீதியில் உடைக்கப்பட்ட 04 கடைகளும் மீளக் கட்டப்படும்போது இத்தவிசாளரின் சகோதரருக்கு தேவையற்ற வழியொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அத்திவாரக் கம்பிக் கூடுகள் இரவோடிரவாக வெட்டி அகற்றப்பட்டன.

2. 17.10.2011ம் திகதி இக்கடைகள் அரச காணியில் அனுமதியின்றிக் கட்டப்படுவதாக நகர முதல்வரால் தடையுத்தரவு இடப்பட்டது.

3. இதன் பின்னர் 14.11.2011ஆம் திகதியிடப்பட்ட கடிதப்படி சட்டவிரோதக் கடைகளை ஏன் அகற்ற முடியாது எனக் காரணங் காட்டுமாறு 07 நாள் அவகாசத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்காக 19.11.2011ஆம் திகதி பள்ளிவாயலினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

4. 28.10.2011ஆந் திகதியில் நம்பிக்கையாளர் ஒருவரை அச்சுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது.

5. தவிசாளரால் எச்சந்தர்ப்பத்திலும் கடைகளை அகற்றுவதற்கான இறுதி அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை.

6. 26.11.2011ஆம் திகதி பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும், கடைக் குத்தகைக்காரர்களுக்கும் அறிவிக்கப்படாமலும், நீதிமன்றத்தில் உத்தரவு பெறாமலும் கடைகளை அகற்றியது சட்டத்தை மீறும் செயலாகும்.

7. இக்கடைகளில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கூரையிலுள்ள ஓடுகளைக் கழற்றி கடைகள் உடைக்கப்பட்டன.

8. 26.11.2011ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை நாளாகும். இத்தினத்தில் கடைகள் உடைக்கப்பட்டதனால் பள்ளிவாயல் நிருவாகம் நீதிமன்றம் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான சனிக்கிழமை கடைகளை உடைத்ததே தவிசாளரின் கெட்ட எண்ணத்தைக் காட்டுகின்றது. விடுமுறை தினம் ஆகையால் நகரசபை ஊழியர்களுக்கு மேலதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகரசபைக்கு பண இழப்பும் ஏற்பட்டுள்ளது.

9. 24.11.2011 ஆம் திகதி பள்ளிவாசல் நிர்வாகம் முன்னறிவித்தல் எதுவுமின்றி தவிசாளர் கடைகளை உடைக்க முற்படுகிறார் என உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவித்தது. இதற்கு உள்ளுராட்சி உதவி அணையாளர் நகர முதல்வருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இவ்வறிவுறுத்தல்களையும் மீறியே தவிசாளர் கடைகளை உடைத்துள்ளார்.

எனவே, பள்ளிவாசல் கடைகள் உடைக்கப்பட வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானம் தவிசாளரால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானம் ஆகும்.

பள்ளிவாசல் இறைவனின் இல்லம். இச்சொத்துக்கள் பொதுச் சொத்துக்களாகும். இதனைப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகும். இவற்றை அழிப்பது இஸ்லாத்தினதும், ஏனைய சமயங்களினதும் பார்வையில் மிகப் பெரிய குற்றமாகும்.

இவ்வாறான சம்பவம் இவ்வூரில் நடைபெற்றதற்கு இவ்வூர் மக்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர். நீங்கள் இறைவனின் இல்லங்களை மிகக் கௌரவமாக மதிக்கின்ற ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எமது இக்கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என நம்புகின்றோம்.

அனுமதி பெற்ற கட்டிடத்தை அனுமதியற்ற கட்டிடம் என்று கூறி தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த கட்டிடத்தை உடைத்தது கவலை தருகின்ற விடயமாகும்.

உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் கிழக்கு மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள், ஊரின் அரசியல் பிரமுகர்கள் போன்றோர் இவ்விடயத்தில் சிந்தித்து செயற்படுமாறு கூறியும் அதைச் செய்ய நகரசபை தவறி விட்டது.

எனவே, நகர முதல்வருக்கு எதிராகத் தாங்கள் நீதியான விசாரணையை மேற்கொண்டு இப்பள்ளிவாயலுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு பொறுப்பு வாய்ந்த பள்ளிவாயல் என்ற அடிப்படையில் தங்களிடம் கேட்கின்றோம்.

தன்னிச்சையாக தவிசாளரினால் சர்வாதிகாரப் போக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்த ஊரும், மக்களும் பாதிக்கப்படக் கூடிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதால் இவரைப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் – என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Vaarauraikal  Vol: 213 Date: 24.02.2012-

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக