பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்

Safai-1-600x330அளுத்கம,  தர்கா நகர,  பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இன்று அனைத்து உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்து கொண்டு சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

வழமையான சபை அலுவல்களைத் தொடர்ந்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் மேற்படி விடயம் தொடர்பில் கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து விசேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது முஸ்லிம்கள் மீது இன சுத்திகரிப்பு தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ள பொதுபல சேனா, ராவண பலய உள்ளிட்ட பேரினவாத தீவிர இயக்கங்கள் என்பன அனைத்து உறுப்பினர்களாலும் வன்மையாக கண்டிக்கப்பட்டதுடன் சில உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஏ. அமிர்தலிங்கம்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஏ. பஷீர், ஏ.ஆர். அமீர்,  ஏ.எல்.எம். முஸ்தபா,  எம்.எஸ். உமர் அலி,  ஏ.எம். பரக்கத்துல்லா,  எம்.ஐ.எம். பிர்தௌஸ்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் ரியாஸ்,  ஐ.தே.க. உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் ஆகியோர் இக்கண்டனப் பிரேரணை மீது உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கண்டனத் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடன் ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தூதுவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் நிஸாம் காரியப்பர் சபைக்கு அறிவித்தார்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக