ஞானசார தேரரின் தீக்குளிப்பு மிரட்டல்! கைதானவர்கள் விடுதலை

mhual-1பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் எச்சரிக்கைக்கு அஞ்சியே அலுத்கம சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிராக அலுத்கம பிரதேசத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்களையும் விடுதலை செய்யா விட்டால் தீக்குளிக்கப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை காரணமாகவே அளுத்கம சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.

சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது என களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் வீ. இந்திரன் திட்ட வட்டமாக அறிவித்திருந்தார். எனினும், உயர் அதிகாரிகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்களை விடுதலை செய்ய நேரிட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பக்கச்சார்பின்றி கைது செய்யுமாறு காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பிரதிக் காவல்துறை மா அதிபர் இந்திரனுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

கைது செய்யப்பட்ட பொதுபல சேனா உறுப்பினர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதனை ஒப்புக் கொண்டிருந்ததாகவும், ஞானசார தேரரின் உத்தரவிற்கு அமையவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் சிலர் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை 12 மணித்தியாலத்திற்குள் விடுதலை செய்யாவிட்டால் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், சந்தேக நபர்களை விடுதலை செய்ய பிரதிக் காவல்துறை மா அதிபர் இந்திரன் இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து இந்திரனை விடவும் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரை அந்த பிரதேசத்தின் பொறுப்பதிகாரியாக நியமித்து சந்தேக நபர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது, சம்பவம் குறித்து பொதுமக்களிடம் உண்மைகளைக் கூறப் போவதாக இந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடும் வாக்குவாதத்தின் பின்னர் 13 பொதுபல சேனா இயக்க செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் இந்திரன் காவல்துறை மா அதிபரிடமும் முறைப்பாடு செய்த போதிலும் பயன் எதுவும் கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக