முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதலை மன்னார் சர்வமதப் பேரவை கண்டிக்கிறது! ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு

DSC02591-60x60முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் முகமாக மன்னார் சர்வமதப் பேரவை; மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று புதன் கிழமை மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிங்கள பௌத்த தீவிரவாதக் குழுவான பொதுபலசேனா மற்றும் இவர்களின் ஆதரவாளர்களினால் இவ்வாண்டு யூன் மாதம் அளுத்கம, பேருவளை, வெலிபன்ன மற்றும் தர்கா நகர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் சம்பவங்களை மன்னார் சர்வமதப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தெகிவளை, குருநாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் முஸ்லிம் மக்களின் வீடுகள், வழிபாட்டுத் தளங்கள், வியாபார நிலையங்கள் போன்றவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

அழுத்கம மற்றும் வெலிபன்ன வன்முறைச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டும், 80 பேர் காயப்பட்டும் உள்ளனர்.

இச்சம்பவங்களோடு தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் பலர் உடனே விடுதலை செய்யப்பட்டதோடு பொதுபல சேனாவின் தலைவர்களும் அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்களும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அவர்கள் தமது வெறுப்பைத் தூண்டும் நடவடிக்கைகளையும், பௌத்த தீவிரவாத நிகழ்ச்சி நிரலையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் கல்லெறிக்கும், அழிவுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் தாக்குதலுக்கும் சேதத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையிலும் கலவரம் தொடர்ந்து கொண்டிருந்தது. கலவரத்தில் ஈடுபட்டிருந்தோரை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயற்சிக்காமல் பாதுகாப்புப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்பாவியான ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் போன்றோர் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பிரசன்னமாக இருந்த நிலையில் வன்முறைகள் தொடர்ந்ததையிட்டு நாம் ஆழ்ந்த வேதனையடைகிறோம்.

வன்செயல்களைத் தூண்டி விடவும், முஸ்லிம் மக்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தவும் வன்முறைக் கும்பல் தொடர்ந்தும் இப்பகுதிகளில் நிலை கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூன் மாதம் 19ஆம் திகதி காலை பாணந்துறையில் வீதியோரம் ஒன்றில் தாக்குதலுக்குள்ளான நிலையில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடற்காயங்களோடு காணப்பட்ட வண. வட்டரக்க விஜித்த தேரர் தொடர்பான சம்பவத்தின் மட்டிலும் எமது ஆழ்ந்த அக்கறையைச் செலுத்துகின்றோம். வண விஜித்த தேரர் பொதுபல சேனாவை பகிரங்கமாக விமர்சிப்பவராகவும், பல்சமய ஒற்றுமைக்காகக் குரல் கொடுப்பவராகவும் இருந்து வந்துள்ளார்.

இதனால் பொதுபலசேனாவினாலும் அதன் செயலாளர் கலகொடதேர ஞானசாரர் மற்றும் உறுப்பினர்களினாலும் பல தடவைகள் பொது நிகழ்வுகளின்போது கடந்த இரண்டு வருடங்களில் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். அடிக்கடி இடம்பெறும் இந்தக் கடுமையான அச்சுறுத்தலின் தன்மையை நோக்கும் போது பொதுபலசேனா அல்லது தேசியவாத மற்றும் தீவிரவாதக் கட்சிகளின் கட்டளையின் பேரில் அல்லது தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் இடம்பெற்றதோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்று காவல்துறைப் பேச்சாளர் கூறியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக (சுதந்திரமான தடயவியல் பரிசோதனையுடன் கூடிய) விசாரணையை மேற்கொள்ளுமாறு நாம் அரசாங்கத்தைக் கோரி நிற்கின்றோம்.

அரசியல் ஆதரவுடனோ அல்லது அரசியல்வாதிகளினாலோ இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் தாமே தமக்கு ஊறு விளைவித்துக் கொண்டதாக வாக்குமூலம் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான காவல்துறைப் பேச்சாளரின் கூற்றும் இப்படிப்பட்டதாக இருக்கலாம் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

அதே போன்று யூன் 21 ஆம் திகதி பாணந்துறையில் நோ லிமிற் என்ற ஆடையக காட்சியறை தீயில் எரிந்து முற்றாக அழிந்த நிலையில் இத் தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாகவும் முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம் மக்களின் வியாபாரத் தளங்கள் போன்றவை வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்கும், கொள்ளைகளுக்கும் இலக்கான சூழ்நிலையில் இந்தச் சம்பவம் ஒரு கும்பலின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

2013 மார்ச் மாதம் முஸ்லிம் ஒருவரின் பசன் பக் என்ற ஆடைக் களஞ்சியத்தில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்றதொரு இன்னுமொரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமையை நினைவுகூருவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும். இத்தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்குகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஈடுபட்டிருந்தமையை வீடியோ பதிவு ஆதாரங்களின் மூலம் அறியமுடிகிறது.

இவர்களில் சிலர் பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இச்சம்பவத்தைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினரின் கையாலாகத்தனத்தையிட்டு நாம் கவலையடைவதோடு, அப்படிப்பட்டதொரு நிலைப்பாட்டை இனியும் எடுக்காமல் இச்சம்பவம் தொடர்பாக பாகுபாடற்ற, சுதந்திரமான விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளை நாம் கோருகின்றோம்.

இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண்பது மிகவும் அவசரமான விடயம் என்றும், இது அதிகாரிகளின் மிக முக்கியமான கடமை என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம்.

வண. விஜித தேரர் தொடர்பான தாக்குதல் சம்பவம், நோ லிமிற் தீ விபத்துச் சம்பவம் போன்றவற்றிற்கான காரணங்களையும், விசாரணை முடிவுகளையும் சந்தேகததிற்கிடமின்றி தகுந்த ஆதாரங்களுடன் மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் முஸ்லிம் சமூகத்துடன் எமது ஒன்றிப்பை வெளிப்படுத்துவதோடு, தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தவர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கும், மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கும், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கும் உரிய நிவாரணத்தை வழங்கும்படியும் அரசாங்கத்தை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக